அந்த வாரத்தில் நல்ல நாளாக பார்த்து கோயிலை செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்க பட்டது.

“நான் சொல்லித்தான் இந்த வேலையெல்லாம் இழுத்துகிட்டு அல்லாடுற, இனிமேட்டு விட்ருடா, சேகர்கிட்ட சொல்லி பார்க்க சொல்லிக்கிடுறேன்” என ருத்ரனிடம் சொன்னார் தாத்தா.

“ஐயாவுக்கு என் பொண்டாட்டி சொன்னதுல கோவமோ?” என விசாரித்தான் ருத்ரன்.

“வெசனப்பட என்ன இருக்குய்யா? ஆயி சொன்னது நெசம்தானே? நீ ஒருத்தந்தான் வூட்டுக்கு வாரிசா? எல்லாரையும் நெரந்து பார்க்க சொல்லியிருக்கணும், எம்மேலதான் தப்பு” என்றார் பெரியவர்.

“அப்படிலாம் வருத்தப் படாதீய ஐயா. கோயில் விஷயம் இப்ப மனசாரா செய்றேன் நான், என்னையவே செய்ய வுடுங்க” என உறுதியாக சொல்லி விட்டான் ருத்ரன்.

என்னவோ அவனுக்கு அவனது வாழ்வில் சிவா வந்த பிறகு கடவுள் மீது அலாதி பிரியம் ஏற்பட்டிருந்தது. அவரின் சித்தம் இல்லாமல் அவள் அவனிடம் வந்து சேர்ந்திருக்க மாட்டாளாம். தன் வாழ்வில் வளம் சேர்த்த இறைவனுக்கு அவனால் செய்ய முடிந்த சிறு தொண்டு!

பிறையின் அம்மா தன் தம்பிக்கு நெருக்கடி கொடுத்து வீடு கட்டும் வேலையையும் ஆரம்பிக்க வைத்திருந்தார். மனை போடும் விழாவுக்கு எல்லாம் வரவில்லை பிறை. அவளது மனக் காயம் ஆற நாளாகும்தானே?

சிவா தன் கணவன், மாமியார் தவிர மற்றவர்களுடன் அளவாகவே பேசினாள். அதிலும் கலை, பிறை, சகுந்தலை மூவருடனும் அறவே பேசுவதில்லை. ஒதுங்கிக் கொண்டாள். ருத்ரனே அப்படித்தான் இருந்தான். கோதை குடும்பம் மட்டும் விதிவிலக்கு.

சென்னையில் வசித்த சொக்கனும் கௌரியும் வாழ்க்கையை நடத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தனர். நாளுக்கு நாள் நிலைமை மோசமாக, சொந்த ஊருக்கே சென்று விடலாம் என முடிவு செய்தான் சொக்கன்.

கணவனின் முடிவை பரிசீலிக்கும் படி சொன்னாள் கௌரி. சொக்கனுக்கு சொந்தமாக ஊரில் குடிசை வீடு இருக்கிறது, அதை சொன்னவன், “வாடகை பிரச்சனை இல்லை, வய வேலைக்கு போனா கூட நாள் பொழுத ஓட்டிப்புடலாம். இங்குட்டு கெடந்தா சீக்கிரம் வாழ்க்கையவே வெறுத்து போயிடுவோம்” என்றான்.

“நம்மள வாழ விடுவாங்களா?” என பயந்தாள் கௌரி.

சொக்கனுக்கும் அந்தப் பயம் இருக்கிறதுதான், ஆனால் அப்படி நம்மை யாரும் கண்டு கொள்ளாமல் கூட போகலாம், தெரியாத ஊரில் அல்லல் படுவதற்கு சொந்த ஊரில் சில கஷ்டங்களை எதிர் கொண்டாவது வாழ முயற்சி செய்யலாம், போயிதான் பார்ப்போமே என்றான்.

கௌரியும் அரை மனதாக சம்மதம் சொன்னாள். ஊருக்கு கிளம்ப ஆயுத்தமாகி விட்டான் சொக்கன்.

அன்று ஞாயிறு, காலை உணவுக்குப் பின் தோப்புக்கு சென்று விட்டான் ருத்ரன்.

கறி எடுத்து சமைக்கிறேன், மதியத்துக்கு கொடுத்து விடுகிறேன், சாதம் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் என முன்னரே செய்தி சொல்லி விட்டார் கோதை. ஆகவே மதிய சமையல் செய்யும் வேலையும் இல்லை. சிவாவின் பெற்றோரும் விஷேஷம் ஒன்றில் பங்கெடுக்க அசலூர் சென்றிருந்தனர். சிவாவுக்கு பொழுதே ஓடவில்லை.

தனக்கு விடுப்பு இருக்கும் நாளில் கூட வீட்டில் இருப்பதில்லை என கணவன் மீது மனத் தாங்கல் ஏற்பட்டாலும், விவசாயிக்கு எது காலம் நேரம் என புரிந்து தன்னை தானே தேற்றிக் கொண்டாள்.

மருமகளின் சுணங்கிய முகத்தை கண்ட வள்ளிதான், “தோப்பையெல்லாம் நீ பார்த்தது இல்லைல ஆயி, ஒரு எட்டு போய்ட்டு வாயேன்” என்றார்.

அவளுக்கும் ஆசைதான், இப்போது எப்படி செல்வது என யோசித்தாள். கணவனை அழைத்தால் இன்னொரு நாள் எனதான் சொல்வான் என அவளுக்கு தெரியும். வேலையை விட்டு விட்டெல்லாம் ஓடி வர மாட்டான்.

வள்ளிக்கு மட்டும் மகனை பற்றி தெரியாமல் போகுமா, சேகரின் மகனுக்கு அழைத்து வரச் சொன்னார்.

“நீதான் பெரியம்மா மாடர்ன் மாமியா, என் அம்மாக்கும் இதெல்லாம் சொல்லி கொடு என்ன, பின்னால நமக்கும் யூஸ் ஆகும்ல?” என கிண்டல் செய்து விட்டுத்தான் சிவாவை பைக்கில் ஏற்றினான் கோதையின் மகன்.

“அட குட்டி கொழுந்தனாரே, சின்ன அத்தை என் மாமியாரையே தூக்கி சாப்பிட்ருவாங்க கவலை படாத. நீ பேசுறத பார்த்தா ஆளு கூட ரெடி போல” என சிவாவும் கிண்டலாக கேட்டாள்.

“எங்குட்டு அண்ணி! ஸ்கூல் படிக்கிறப்பவே கரெக்ட் பண்ணிடுறாய்ங்க, ஒரு புள்ளையும் சிங்கில் கிடையாது. நீங்கதான் பொண்ணு பார்த்து கட்டி வச்சாகனும்” என்றான் அவன்.

“நம்புற படி இல்லையே! அண்ணிகிட்ட மட்டும் சொல்லுறது” என சிவா கேட்க, பைக் ஓட்டிக் கொண்டிருந்தவன் வாயெல்லாம் பல்.

“அது சரி! எந்த பொண்ண நெனச்சு இவ்ளோ பூரிப்பு?” என சிவா கேட்க, “பொறவு சொல்றேன் அண்ணி, அண்ணன்கிட்ட வத்தி வச்சுப்புடாதீய, படிக்கிற வயசுல என்னடான்னு தோலை உரிச்சு விட்ருவாரு” என்றான்.

“ஆளாளுக்கு என் புருஷனை வில்லன் கணக்கா பேசக்கூடாது சொல்லிட்டேன்” என்றாள்.

“வில்லன்னு யாரு சொன்னது? அவரை பேசி மசிய வச்சாதான் என் காரியம் நல்ல படியா நடக்கும்? சும்மாவா அண்ணிக்கு டிரைவர் வேலை பார்க்குறேன், அவர் சுவிட்ச் உங்கள்ட்டல்ல இருக்கு” என அவன் சொல்ல, சிரித்து விட்டாள் சிவா.

ஏக்கர் கணக்கில் உள்ள தென்னந்தோப்பில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மரங்களிலிருந்து மட்டும் காய் இறக்கிக் கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் இறக்கிய காய்களை உறித்துக் கொண்டிருந்தனர். எல்லாம் முடிய மாலையாகி விடும்.

“வாய் மட்டும்தான் ஓயாம கதை பேசுது, கை தேங்கியில்ல நிக்குது, ஆவட்டும் ஆவட்டும்!” என சத்தம் போட்டுக் கொண்டிருந்தான் ருத்ரன்.

சிவாவை தள்ளியே இறக்கி விட்டு கிளம்பி விட்டான் கோதையின் மகன்.

கணவன் எங்கே என விசாரித்து நடந்து வந்து கொண்டிருந்தாள் சிவா.

அவள் அவனை பார்க்கும் முன் அவளை பார்த்து விட்டவன் மனைவியை நோக்கி விரைந்து வந்தான். கணவனை கண்டதும் அவளின் முகம் மலர்ந்தது.

“என்ன புள்ள என்ன சேதி?” என சிறு பதற்றத்தோடுதான் கேட்டான்.

“ஹையோ எதுக்கு பதறிப் போறீங்க, போர் அடிச்சது,  அதான் இந்த வாரம் சினிமா அழைச்சிட்டு போறேன்னு சொன்ன என் புருஷனை என்னான்னு  கேட்க வந்தேன்” என்றாள்.

“இந்த வாராம்னுதானே சொன்னேன், நாளைக்கு சாயங்காலம் போலாம். நெசமா அதானே, வேற ஒன்னுமில்லையே?”

“வேற என்ன? இதான் தோப்பா?” என கண்களை சுழற்றினாள்.

“ஆமாம் புள்ள, இப்ப சுத்தி பார்க்க முடியாது, காய் இறக்குறாவோல்ல, வேற பக்கம் போலாம்னா இங்குட்டு விட்டுட்டு வர முடியாது, நான் இல்லைனா வேலைய பார்க்காம ஏச்சுப்புடுவாக” என்றான்.

“நான் ஒன்னும் தோப்ப சுத்தி பார்க்க வரலை” அவனை கண்களால் விழுங்கிக் கொண்டே இதழ்களில் அடக்கப் பட்ட சிரிப்புடன் சொன்னாள்.

“பொறவு என்ன என்னைய சுத்தி பார்க்க வந்தியாக்கும்? என்னத்தடி என்னை பார்க்கணும், நேத்து ராத்திரி கூட…”

“ஹையோ பேச்சை பாரு” என கண்டித்து அவனை அடக்கினாள்.

கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டு அவளை அமரச் சொன்னான்.

நீர் நிறைந்த இளநீர் பறிக்க சொல்லி, சீவி அவளுக்காக எடுத்து வந்தான். அவள் பருகியதும் பொறுப்பாக அந்தக் காயை வெட்டி வழுக்கையை எடுத்து அவளுக்கு சாப்பிட கொடுத்தான்.

மரம் ஏறுபவர்களை வேடிக்கை பார்த்தவள், “எப்படி சர்ரு சர்ருன்னு ஏறுறாங்க? பயமா இருக்காது?” என வியப்பாக சொன்னாள்.

“அதெல்லாம் பழகிட்டா என்ன பயம்? நானே ஏறுவேன்” என்றவனை நம்பாத பார்வை பார்த்தாள்.

“அடி நெசதுக்கும்தான் புள்ள, ஏறிக் காட்டவா?” எனக் கேட்டு நகரப் போனவனை விடாமல் பிடித்துக்கொண்டாள்.

“இப்ப சொன்னதுதான் அதெல்லாம் செய்ய கூடாது. இடைல பழக்கம் விட்டு போச்சுதானே? ஏதாது ஆச்சுன்னா!” என்றவளின் கண்களில் பயம் தெரிந்தது.

லேசாக நகைத்தவன், “உட்காரு, அங்குட்டு போய்ட்டு வாரேன்” என சொல்லி காய் உறிக்கும் இடம் வந்து விட்டான்.