வங்கியில் போட வேண்டியது, தோப்பில் பார்ப்பவர்கள், வயலில் பார்ப்பவர்கள் என வேலையாட்களுக்கு சம்பளம் தர வேண்டியது என்று எல்லாம் தனித்தனியாக எழுதி எடுத்து வைத்தவளும் கை சுத்தம் செய்து கொண்டு வந்தாள்.

அவன் தட்டிலேயே இன்னொரு பக்கம் அவளும் சாப்பிட ஆரம்பித்தாள்.

“சட்னிய நல்லா தொட்டு சாப்பிடு புள்ள” என்றான்.

“இப்படி சாப்பிட்டா நாலு வாய்ல எல்லா சட்னியும் முடிஞ்சு போவுங்க” என்றாள்.

“கூடுதலா செய்றதுக்கு என்ன புள்ள?” எனக் கேட்டுக் கொண்டே சாப்பிட்டான். அவன் மீசையில் ஒட்டியிருந்த உணவை தன் புறங்கையால் துடைத்து விட்டாள்.

திடீரென ஏதோ தோன்ற, “ஏன் புள்ள நல்லா படிச்சுப்புட்டு நல்ல வேலைல இருக்கவ நீயி, எப்படி என்னை புடிச்சு தொலைச்சுது உனக்கு?” எனக் கேட்டான்.

“அதென்ன அப்படி கேட்குறீங்க? உங்களுக்கு என்ன குறைச்சல்?”

“அடி அப்படி கேட்கல நான். உன்னை எம்பக்கம் இழுக்கன்னு ஏதும் செஞ்சதா நெனப்பு இல்லை, என்னத்த கண்ட என்கிட்ட? எனக்கே தெரிஞ்சுக்கணும் எப்படி உன்னைய மயக்கினேன்னு?”

“அதுக்கெல்லாம் எனக்கு பதில் தெரியாது. கல்யாணத்துக்கு முத நாள் என்னைய வுழுவாம நீங்க பிடிச்சப்போ உங்க மேல ஒரு இது ஸ்டார்ட் ஆச்சு. அப்புறம் நீங்க எது செஞ்சாலும் என்னவோ புடிக்கத்தான் செஞ்சுது. ஆரம்பத்துல வெடுக் வெடுக்குன்னுதான் பேசுவீங்க, ஆனாலும் உங்களை பிடிச்சது. படிப்பு வேலைக்கும் மனசுக்கு புடிச்சு போறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைங்க. அது ஒரு கனெக்ஷன். நம்மள அறியாத நமக்குள்ள அது வந்திடுச்சு” என்றாள்.

“என்னவோ சொல்ற, ஒரு கழுதையும் புரியலை” என்றவன் சாப்பிட்டு முடித்து எழுந்து கொண்டான்.

“போதுமா இன்னொன்னு சாப்பிடுங்க”

“எம்புட்டு ருசின்னாலும் அளவோட நிறுத்திக்கணும்” என சொல்லி சென்று விட்டான்.

சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு கீழே சென்றாள் சிவா. உன்னை வர வேண்டாம் என சொன்னேன்தானே என கடிந்து கொண்டார் வள்ளி.

பெரியவர்களுக்கு மனம் சரியிருக்காது என அவளுக்கு தெரியும். மாமியாரும் மனதளவில் தளர்ந்து போயிருப்பதை அறிவாள். அனைவருக்கும்  தோசை ஊற்றி சாப்பிடும் வரை அங்குதான் இருந்தாள்.

உயிரையே வைத்திருந்த பேத்தி வயதானவர்களை என் தலையில் கட்ட வேண்டாம் என சொன்னதில் மிகுந்த வேதனை கொண்டிருந்தார் பாட்டி. வெளியிலிருந்து வந்தவள் ஏச்சு பேச்சுக்களை மனதில் வைக்காமல் தன் வயிற்றை கவனிப்பதில் அவருக்கு மனம் குன்றிப்  போய் விட்டது.

தனித்தனி குடும்பம் என முடிவாகி விட்ட போதும் தாத்தா பாட்டி என் பொறுப்பில்தான் என தீர்மானமாக சொல்லியிருந்த பேரன் குறித்து பெருமையாக நினைத்துக் கொண்ட பாட்டி, அப்படிப்பட்ட உயர்வான பேரனின் மனைவி இவள் என சிவாவையும் பார்த்தார். இனி பாட்டியிடமிருந்து சிவாவை குறித்த குத்தல் பேச்சுக்கள் வராது என நம்பலாம்.

எல்லாம் ஒழித்து போட்டு விட்டு சிவா மேலே வர, ருத்ரனோ நாடாக் கட்டிலை வெளியில் போட்டு படுத்திருந்தான். நைட்டிக்கு மாறி சிவாவும் கணவனிடம் வந்தாள்.

பங்குனி மாதம் என்பதால் பகலில் நல்ல வெயில். அது தென்னை மரங்கள் நிறைந்த பகுதியாதலால் இரவு நேரத்தில் வெட்கை தெரியாத படி வெளியில் நல்ல காற்று இருக்கும்.

வானில் அரை வட்ட நிலா, ஒளிரும் நட்சத்திரங்கள், தலை கோதும் இதமான காற்று, பயம் தராத இருள், பக்கத்தில் காதல் மனைவி என ருத்ரனின் மனம் மயங்கியது.

ஒரு காலை தொங்க போட்டு இன்னொரு காலை கட்டிலில் மடித்து வைத்து கணவனின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டாள் சிவா. அவன் தலை அவளின் மடிக்கு மாறிக் கொண்டது.

அவனது தோளை தட்டிக் கொடுக்க ஆரம்பித்தாள். அவள் இல்லாத போது கீழே அனைவரிடமும் தான் பேசியதை அவளிடம் பகிர்ந்து கொண்டான். மாமியார் மூலமாக தெரிந்து கொண்டவைதான் என்ற போதும் அவன் வாய் மொழியாகவும் கேட்டுக் கொண்டாள்.

“சரியாதானே புள்ள பேசியிருக்கேன்?” எனக் கேட்டான்.

“இல்லைனு சொன்னா என்ன செய்ய போறீங்களாம்?”

“போடி, சரியாதான் பேசியிருக்கேன். இல்லைனா திட்டியிருப்ப”

“அப்புறம் எதுக்கு டவுட் படுறீங்க? இப்பவாவது பேசினீங்களே!” என்றவள், உங்க சித்தப்பா தனியா போனதும் இந்த வீட்டை புதுசு பண்ணி கட்ட போறீங்களா என்ன?” எனக் கேட்டாள்.

“அப்படி ஏதும் யோசனை இல்லை புள்ள, ஏன் உனக்கு புதுசா கட்டணுமா?”

“நான் கேட்டா கட்டி கொடுத்திடுவீங்களா?”

“பொறவு? வாய் வார்த்தைக்கு கேட்டேன்னா நினைச்ச? நீ ஆசை பட்டா செஞ்சிபுடலாம்”

“அதுக்கு கேட்கல. அதெல்லாம் நீங்க ஐயா ஆத்தான்னு முடிவு பண்ணுங்க. ஆனா எப்படி இருந்தாலும் மாடி இப்ப இருக்கிறத மாத்திடக் கூடாது. எல்லா இடமும் ரூம் கட்டி விட்ராம இப்படி வானத்தை பாக்க இந்த இடம் இப்படியே வேணும் எனக்கு” என்றாள்.

“அப்ப வீடு இப்படியே இருக்கட்டும். ஐயா ஆத்தா காலத்துக்கு பொறவுதான் வீட்ட மாத்தி கட்டுறது எல்லாம், உன்னை கலக்காமலா செஞ்சிட போறேன்? அப்ப சொல்லு புள்ள” கண்களை மூடியிருந்த படியேதான் சொன்னான்.

“என்ன ஏதோ வலுவான யோசனை போல, உள்ளுக்க கண்ணாமுழி ரெண்டும் ஆட்டம் போடுது” எனக் கேட்டாள்.

பட்டென கண்களை திறந்தவன், “சத்தியமா சொல்றேன் புள்ள, உன் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு எதை பத்தியும் நெனைக்க பயந்து வருது. அந்தளவு அம்புட்டையும் படிக்கிற” என்றான்.

“அப்படியா?”

“இல்லாமலா மதியானம் அந்த பேச்சு பேசின? இப்ப கூட என்ன யோசனைனு உனக்கு தெரியுமோன்னு சந்தேகமாதான் இருக்கு”

“ஆமாம் பங்குசந்தை பத்தியா யோசனை இருக்க போவுது? வயலு தோப்பு மாடு கன்னுன்னு நெனப்பீங்க. இன்னிக்கு புதுசா நம்ம குடும்பத்து ஆளாள ஒரு பொண்ணு பாதிக்க பட்ருச்சே, பொண்ணோட பாவம் வந்து சேர்ந்துகிட்டேன்னு நெனச்சிருப்பீங்க” என்றாள்.

அவள் மடியிலிருந்து வேகமாக எழுந்து அமர்ந்தவன், “ஒப்புரானா! ஏட்டி அப்படியே சொல்லுறடி!” என்றான்.

அவனை பிடித்து இழுத்து மீண்டும் தன் மடியில் போட்டு அமுக்கியவள், “நகையும் சதையும் தோக்குற அளவுக்கு உங்க கூட இழஞ்சு கெடந்திருக்கேன். மூச்சு விடுற வேகம் வச்சே நீங்க கோவமா சந்தோஷமா கவலையா எப்படி இருக்கீங்கன்னு கணிச்சு சொல்லிடுவேன்” என கர்வமாக சொன்னாள்.

“எனக்குத்தான் உன்னை பத்தி ஒன்னும் தெரியலை புள்ள” என நிஜமாகவே கவலை பட்டான்.

“அப்படினு நீங்களா நெனச்சுக்கிறீங்க, உங்களுக்கும் என்னை தெரியும். நீங்களே உணர்ந்துக்கல, அப்படி உணர சந்தர்ப்பம் வாய்க்கல” என்றாள்.

“ம்ம்… அதுகூட நீ சொல்லித்தான் எனக்கு தெரியுது. என்னமோ சொல்ற, நானும் நம்புறேன். ஆனா அந்த பொண்ணோட அம்மா அழுதது மனசை பிசையுது புள்ள. என்ன எப்படி உதவன்னுதான் தெரியலை” என்றான்.

“இப்பவே ஏதாச்சும் செஞ்சா அந்த பொண்ணு யாருன்னு நாமளே காட்டி கொடுத்த மாதிரி ஆகிடும். இப்போதைக்கு பண உதவி செய்யுங்க, கொஞ்ச நாள் போவட்டும், யோசனை பண்ணி வேற ஏதாவது செய்யலாம்” என சமாதானமாக சொன்னாள்.

சரியென்றவன் தள்ளிப் படுத்து அவளையும் படுக்க சொன்னான்.

ஒற்றைத் தலையணையில் இருவரும் தலை வைத்து நெருக்கமாக படுத்துக் கொண்டனர்.

அரும்பு மொட்டு விட்டு அதுவும் மலர்ந்தது போல அவர்களின் நேசம் மணத்துக் கிடந்தது.

விடியற்காலையே அவளை எழுப்பி விட்டு விட்டான். வழக்கம் போல் அவர்களின் வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர்.

வள்ளி மகளுக்கு அழைத்து எல்லாம் சொன்னார். கலை மீது கோவம் கொண்ட வைதேகி இனியாவது அண்ணன் நிம்மதியாக இருக்கட்டும் என்றாள்.

இரண்டு நாட்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த கலையை அவனது அப்பாதான் வெளியில் கிளப்பிக் கொண்டு சென்றார். செய்த தவறு யாரின் கண்களையும் சந்திக்க முடியாமல் அவனை பாடு படுத்தியது. தவறுக்கு வருந்துகிறவன் இனியாவது ஒழுக்கமாக இருப்பான் என நம்பிக்கை கொண்டு மனதை தேற்றிக் கொண்டார் தனராஜன்.