வேகமாக செயல்பட்ட ருத்ரன் மாமாவை பிடித்து இழுத்து வந்து மீண்டும் ஹாலிலேயே அமர வைத்து, “பெரிய மனுஷன் செய்ற வேலையா மாமா?” என அவரை கண்டித்தான்.
“எப்புடி பேசினா பார்த்தீல்ல ருத்ரா? குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வைக்கிறேங்கிறா” என்றவர் மனைவியை பார்த்து, “உம்பொண்ண வாயை குறைச்சுகிட்டு ஒழுங்கா அவன் கூட குடும்பம் பண்ண சொல்லு. அவளா தேடிகிட்ட வாழ்க்கைதானே?” என்றார்.
ருத்ரன் இதில் எல்லாம் தலையிட்டுக் கொள்ளவில்லை. தன் கைமீறி விஷயம் வெளிப்பட்டு விட்டது. இனி தன்னையே குறை கூறினாலும் பரவாயில்லை. கலை பிறையின் வாழ்க்கை பற்றி சம்பந்த பட்டவர்களும் பெரியவர்களும் தீர்மானித்துக் கொள்ளட்டும் என இருந்து கொண்டான்.
வெகு நேரம் கலை, பிறை பற்றிய பேச்சுதான் ஓடியது. பசியில் தனராஜனுக்கு வெள வெளப்பு வந்து விட அவரை சாப்பிட வைத்தனர். அப்படியே வள்ளியும் செங்கமலமும் சாப்பிட்டனர். மகளுக்கு ஊட்டி விட்டு சாப்பிட செய்தார் செங்கமலம்.
கலையின் மீது கோவம் இருந்தாலும் அவனுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயத்தில் கஞ்சியாக கரைத்து அவனை குடிக்க வைத்து விட்டு வந்தார் கோதை.
ருத்ரனுக்கு பசியே இல்லை. ஆனால் மனைவி இன்னும் சாப்பிட வில்லையே என நினைப்பு ஓடிக் கொண்டிருந்தது. மருமகளை அப்படியெல்லாம் விட்டு விட மாட்டார் வள்ளி, ஆனால் நடந்த களேபரத்தில் அவர் ஓய்ந்து போயிருக்க, சிவா சாப்பிடவில்லை என்பதை அவரால் நினைக்க முடியவில்லை.
ருத்ரனே தட்டில் பரிமாறிக் கொண்டு செல்ல, அப்போதுதான், “ஐயோ மறந்தேன் பாரு அவளை, என்கிட்ட கொடு” என எழுந்தார் வள்ளி.
நானே செல்கிறேன் என சென்று விட்டான் ருத்ரன்.
“உன் மனசுக்கு உனக்கு நல்ல மவன், அதை விட தங்கமான மருமவ தங்கச்சி” என வள்ளியிடம் சொல்லி பெருமூச்சு விட்டார் பிறையின் அப்பா.
“நீங்க சாப்பிடீங்களா?” எனக் கேட்டுக் கொண்டே வாங்கினாள்.
“ம்ம்…” என அவன் சொல்ல, “எங்க உங்க கண்ண பார்த்தா சாப்பிட்ட மாதிரியே தெரியலையே” என்றாள்.
“ஏட்டி உன் கண்ணுக்கு என் குடலு ஈரலு அம்புட்டும் தெரியுமா என்ன?” எனக் கேட்டுக் கொண்டே நிற்காமல் நடந்து விட்டான்.
ருத்ரன் வரவும் கிளம்புவதாக சொன்னார் பிறையின் அப்பா. மகளையும் அழைத்துக் கொண்டுதான் செல்கிறாராம், கொஞ்ச நாள் இருவரும் பிரிந்து இருக்கட்டும் என பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்.
“இம்புட்டு நாளும் ஒன்னா இருந்தாச்சு இனிமேட்டும் அது சரியா வரும்னு படல” என்றான் ருத்ரன்.
மகனால் வேதனை பட்டுக் கொண்டிருந்த தனராஜனுக்கு ருத்ரனின் விலகலை தாங்க முடியவில்லை. மகன் பொறுப்பெடுத்துக் கொண்டதாக நினைத்த போது அண்ணன் மகனை துச்சமாக நினைத்தார்.
இப்போது தன் மகனின் இழி செயல் தெரியவும் இன்னும் தளரும் போது ருத்ரனை விட்டால் நமக்கு ஆதரவு இல்லை எனும் பயத்தில், “நெறைய உன்னை சங்கட படுத்திப்புட்டேன்தாய்யா ருத்ரா, அதுக்காக இம்புட்டு பெரிய முடிவு எடுக்க வேணாம்யா” என்றார்.
“இல்லை சித்தப்பா, மறுக்காம ஏத்துக்கிடுங்க. ஐயாவும் ஆத்தாவும் கடைசி வரை என் பொறுப்புதான், அவுகள யாருகிட்டேயும் வுட மாட்டேன். உங்களுக்கு இந்த வூடு வேணும்னாலும் சரி, இல்லை வேற புது வீடு வேணும்னாலும் சரி உடம்படுறேன். தள்ளி இருக்கிறதாலதான் சேகர் சித்தப்பாக்கும் எனக்கும் இடையில எல்லாம் சரியா போயிட்டிருக்கு, நாமளும் அப்படியே இருந்துக்கிடுவோம்” என அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டான்.
தாத்தாவுக்கும் சரியென பட அமைதியாக இருந்து விட்டார். பாட்டிதான் அழுது கூப்பாடு போட்டார். யார் சொல்லியும் கேட்கவில்லை. ருத்ரனே அவரிடம் போனான்.
“சின்னதிலேயே அப்பா இல்லாம நான் நின்னப்ப கை கொடுத்து தூக்கி விட்டவக ஐயா. அதுக்காக நான் உங்களுக்கு கடமை பட்டவங்கிற மாதிரியே நெறைய விஷயத்துல அழுத்தம் கொடுத்துப்புட்டீய. நானும் அதுதான் சரின்னு இருந்துகிட்டேன்.
எனக்குன்னு சுய மதிப்பு இருக்கனும்னு என் கல்யாணத்துக்கு பொறவுதான் தெரிஞ்சுக்கிட்டேன். அடுத்தவக பார்வையில நான் எப்படி தெரியுறேங்கிறது விட என் பார்வைல மொத நான் உசத்தியா தெரியணும். செத்த முன்னாடி எப்படியெல்லாம் பேச்சு போச்சுன்னு உனக்கு தெரியாது ஆத்தா.
ஓடியாடி ஓஞ்சு போய் கூட்டுக்கு திரும்பும் போது மனசுல நெருடல் இருக்க கூடாது. என் பொண்டாட்டியோட நிம்மதியா வாழணும்னு நினைக்கிறேன், ஏதும் தடுத்து பேசாத ஆத்தா” என எடுத்து சொன்னான்.
பாட்டியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளை விட்டுத்தள்ளு, உன் முடிவுதான் சரி என சொல்லி விட்டார் பெரியவர்.
செங்கமலம் வள்ளியின் கையை பிடிக்க, “போதும்டி… என் புள்ள பட்டதெல்லாம் போதும். கோதை தள்ளி இல்லை அப்படியே நாமளும் இருந்துக்கிடுவோம்” என சொல்லி விட்டார் வள்ளி.
சித்தப்பாவின் பண்ணையத்தையும் இனி பார்க்க முடியாது என அப்போதே அறிவித்து விட்டான் ருத்ரன். சேகர் சித்தப்பா ஏதாவது யோசனை உதவி என்றால் இவனிடம் கேட்டு பெற்றுக் கொள்வார், அப்படி எதாவது செய்கிறேன், மற்ற படி எந்த பொறுப்பையும் என்னால் பார்க்க முடியாது என தெளிவு படுத்தி விட்டான்.
தனராஜன் மனம் விம்ம தலையாட்டிக் கொண்டார்.
அழுகையை நிறுத்தியிருந்த பிறை அம்மா வீடு செல்ல தயாராகியிருந்தாள். இந்தப் பேச்சுக்கள் ஏதும் அவளின் கவனத்தில் பதியவே இல்லை. அவளின் மனம் வேறு விதமான போராட்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவள் காட்டான் என நினைத்திருந்தவன் மனைவியை எந்த இடத்தில் வைத்திருக்கிறான், காதலித்து மணந்தவன் மனதில் தனக்கு என்ன இடம் என்ற கேள்வி அவளது மூளையை குடைந்து கொண்டிருந்தது.
“இந்த பழைய வூடு எதுக்கு எம்பொண்ணுக்கு, இங்குட்டு வாழ வந்துதான் ஒன்னும் விடியல. வேற புதுசா கட்டி அதுல குடி வை” என தம்பியிடம் சொன்னார் சகுந்தலை.
ருத்ரனுக்கு அதில் உடன்பாடுதான். பெரியவர்களை இறுதி காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு அகற்ற முடியாது. வள்ளிக்கும் கணவரின் நினைவுகளை வழங்கும் இடம் இது.
பிறையின் பெற்றோர் மகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டனர்.
அனைவருக்கும் தேநீர் போட்டு வழங்கி விட்டு கோதையும் கணவரோடு புறப்பட்டு விட்டார்.
கணவன் வந்து கோவமாக பேசும் போது அவரை எப்படி சமாளிப்பது என யோசித்துக் கொண்டே நடை போட்டுக் கொண்டிருந்தாள் சிவா.
அதில் ருத்ரன் வந்ததை அவள் கவனித்திருக்கவில்லை. அவன் மார்பில் தலை மோதி திகைத்துப் போய் அவனை பார்த்தாள்.
இரு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு கண்களில் கோவம் கொப்புளிக்க மனைவியை பார்த்தான் ருத்ரன்.