எப்படி சொல்வான், அந்தப் பெண்ணுக்கு அவன் பேசி அனுப்பியிருந்த செய்திகளை எல்லாம் அனைவர் முன்பும் ஒலிக்க விட்டு விட்டால் இன்னும் அசிங்கம் இல்லையா?
அடிபட்டு கிடந்த கலையரசனை தூக்க யாருமே முன் வரவில்லை. பசியில் குடலும் பிடித்து இழுத்துக் கொள்ள, மெல்ல தானே அமர்ந்து கொண்டவன், “என்னை மன்னிச்சிடுங்க, பிறை என் கூட வாழாம போன விரக்தியில புத்தி கெட்டு போய் இப்படி செஞ்சுப்புட்டேன். வெறும் பேச்சுவார்த்தை பழக்கம் மட்டும்தான், வேற தப்பெல்லாம் செய்யல நான்” என்றான்.
“என் வயித்துலயா வந்து பொறந்த?” எனக் கேட்ட செங்கமலம் தன் வயிற்றில் படார் படார் என அடித்துக் கொண்டு அழுதார். கோதையும் வள்ளியும் அவரைத் தடுத்து ஆறுதலாக பிடித்துக்கொண்டனர்.
பெற்ற தாயின் அழுகையில்தான் தன் செயலின் வீரியம் கலையரசனுக்கு உரைத்தது. அத்தனை அவமானமாக உணர்ந்தான். யார் முகத்தையும் பார்க்கும் திராணி இல்லாமல் கால்களை மடக்கி அதில் முகம் புதைத்துக் கொண்டான்.
அறைக்குள் ஓடிச் சென்ற பிறை படுக்கையில் விழுந்து தேம்ப ஆரம்பித்தாள்.
சகுந்தலைக்கு கலையை நினைத்து தாள முடியாத ஆத்திரம் ஒரு பக்கம். என் மகள் கண்ணீர் விடுகிறாள், அவளுக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கையை ஒன்றுமில்லாத வீட்டு பெண் வாழ்கிறாளே என சிவாவை பார்த்து பொறாமை இன்னொரு பக்கம்.
அனைவரின் முன்பும் தன் மகள் வாழ்க்கையை விட்டு கொடுத்து விடக்கூடாது என்ற வீம்பில், “ரெண்டு பேரும் திட்டம் போட்டு இப்படி ஆள் நெறைஞ்ச சபையிலே வச்சு கலையோட மூக்கறுத்துப்புட்டியளே!” எனக் கேட்டார் சகுந்தலை.
“எனக்கும் என் பொண்டாட்டிக்கும் அதுக்கான தேவை இல்லை” என்றான் ருத்ரன்.
“ஏன் இல்லை? உனக்கு என் பொண்ணு கிடைக்கல, ஆசைப் பட்ட இன்னொருத்தியும் கிடைக்கல, மனசுல அந்த கோவம். உன் பொண்டாட்டியை யாரும் இங்கே மதிக்கிறது இல்லை, பிறைய தூக்கி வச்சு கொண்டாடவும் அவளை பார்த்து இவளுக்கும் பொறாமை” என்றார் சகுந்தலை.
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என அருவருப்பாக பார்த்தாள் சிவா.
இது போன்ற பேச்சுக்கள் மீண்டும் மீண்டும் எழுவதில் ருத்ரன் மனதுக்குள் அயற்ச்சி ஏற்பட்டது. இனி யாரும் இப்படி பேசக்கூடாது என முடிவு கட்டியவன் அத்தையின் அருகில் சென்று அவரை கூர்ந்து பார்த்தான்.
சகுந்தலைக்கு பயம் முளை விட, ஓரடி பின்னால் எடுத்து வைத்து நின்றார்.
“பயப்படாதீய, பொம்பளை ஆள அடிக்கிற அளவுக்கு வளர்த்திடல என் அம்மா” என ருத்ரன் சொல்லவும், முகத்தை தோளில் இடித்து நொடித்துக் கொண்டார் சகுந்தலை.
“ஆமாம் நீங்க சொன்ன மாதிரி எனக்கு ரெண்டு முறை கல்யாணம் நின்னு போச்சு, ஒன்னு தட்டி போனா இன்னொன்னு நல்லதா நடக்கும்னு சொல்வாங்கல்ல? கடவுள் எனக்கு ரொம்ப உசத்தியா எதையோ நடத்தி கொடுக்கத்தான் அப்படி ரெண்டு தரம் தடங்கல் ஏற்படுத்தினாரு.
என் கைல கோமேதகம் இருக்க, விட்டுப் போன செல்லாக்காச பத்தி சிந்திச்சிட்டு இருப்பேன்னு நீங்களும் உங்க பொண்ணும் நினைச்சுகிட்டு இருக்கீயளோ? குடிசைல சாமி இருந்தா அது சாமி இல்லைனு ஆகிப்புடுமா? சாமி இருக்க எல்லா இடமும் கோயிலுதானே? ஏழ்மை பட்ட வீட்டுலேருந்து வந்ததால என் பொண்டாட்டி எந்த விதத்துலேயும் குறைஞ்சு போயிடல.
தான் வாழ்க்கை நல்லா இல்லாதவன்தான் அடுத்தவகளை கண்டு பொச்சரிப்பு படணும், என் பொண்டாட்டி என்னைய உசுரா தாங்குறா, செத்து இன்னொரு சென்மம் எடுத்தாலும் அவ நெனப்பு என்னை விட்டு போவாது!
உடம்புல பாதி நெஞ்சத்துல கொஞ்சமும்னுதானே சாமிகளே அவங்க மனைவிமாருக்கு இடம் கொடுத்திருக்காங்க? நான் என் மொத்தத்தையும் அவகிட்ட கொடுத்து வச்சிருக்கேன், யாரை பாத்தும் பொறாமை பட எனக்கும் அவளுக்கும் எந்த அவசிய…” கண்களால் உறுத்து விழித்தவன் ‘இல்லை’ என்பதை கையை மறுப்பாக ஆட்டிக்காட்டி சொன்னான்.
வள்ளி தன் கண்களை துடைத்துக் கொண்டு மகனை கனிவாக பார்த்தார். கொம்புதானே கொடிக்கு ஆதரவாக இருக்க முடியும், இங்கே கொடி ஒன்று கொழு கொம்பை தாங்கி நிற்கிறது என மருமகளைப் பற்றி பெருமையாக நினைத்தார்.
அனைவரையும் பொதுவாக பார்த்து, “யாரும் கிளம்பிடாதீய, பேச வேண்டியது இருக்கு” என்ற ருத்ரன் மனைவியை பார்த்தான்.
உண்மையை சொல்லி விட்டதால் கணவனின் முகத்தை சங்கடமாக பார்த்தாள் சிவா.
“இங்குட்டு இருக்காதன்னு சொன்னா கேட்டியா? என்ன பேச்சு பேசுறாக, ஒழுங்கு மருவாதியா வாடி!” என அதட்டி மனைவியின் கையை பிடித்துக்கொண்டு மாடி ஏறி விட்டான் ருத்ரன்.
மனைவியுடன் தனிமை கிடைக்கவுமே, “எம்புட்டு சொன்னேன்டி உன்கிட்ட?” என கோவமாக கேட்டான்.
அவள் முகத்தை உர் என வைத்துக்கொண்டாள்.
“நான் வர்ற வரை இங்குட்டு விட்டு நவரக் கூடாது, உனக்கு வந்து வச்சிக்கிறேன் கச்சேரிய” என சொல்லி கீழே சென்று விட்டான்.
கலையை தன் ஆத்திரம் தீர போட்டு அடித்திருந்தார் தனராஜன். சேகர்தான் அவர்களை விலக்கி விட்டிருந்தார்.
“அவனை செத்த நேரம் ஏதாவது ரூமுக்குள்ள போட்டு வைங்களேன்” என கோதை தன் கணவரிடம் சொல்ல, சேகரும் அப்படியே செய்தார்.
ருத்ரன் வரவும் அவன் கையை பிடித்துக்கொண்டு அழுதார் பிறையின் அப்பா.
“அவன் செய்கால் தப்புதான் மாமா, வரம்பு மீறி போகலையேன்னு நெனச்சிப்போம். இம்புட்டு ஆன பொறவு இனி தப்பா ஏதும் செய்ய மாட்டானா இருக்கும். சித்தப்பா கண்டிச்சு வைப்பாக” என ஆறுதலாக சொன்னான் ருத்ரன்.
“நீ கூட உத்தேசமாதான் சொல்ற ருத்ரா. ஒரு காரண்டியா அவன் செய்ய மாட்டான்னு சொல்ல மாட்டேங்குறியே, ஒத்த பொண்ணு ருத்ரா…” என்றார் பிறையின் அப்பா.
அவன் எந்த தவறும் செய்ய மாட்டான் என உறுதி தந்த தனராஜன் ‘நீயும் சொல்’ என்பது போல சேகரை பார்த்தார்.
ஏதாவது சொல்லி, ‘நீதானே சொன்னாய், இப்போது என்ன செய்கிறான் பார்’ என நாளை தன்னிடமே வந்து நிற்பார்கள் என்பதால் அந்த உத்திரவாதத்தை எல்லாம் தரவில்லை சேகர்.
யார் அந்தப் பெண்? என கேள்வி எழவும் சொல்ல மறுத்த ருத்ரன், “அந்த பொண்ணு கலைகிட்ட இனி வராது, அவன்கிட்டேயும் யார் என்னன்னு கேட்டுக்கிட வேணாம், அத்தோட விடுங்க” என்றான்.
“அதெப்படி வுடுறது அந்த சிறுக்கி எவன்னு சொல்லு முச்சந்தியில நிறுத்தி நாறடிச்சிடுறேன்” என்றார் சகுந்தலை.
ஆவேசமாக எழுந்து மனைவியிடம் சென்ற பிறையின் அப்பா சகுந்தலையின் முடியை கொத்தாக பற்றி அடிக்க பார்த்தார்.