இன்னும் தள்ளி அழைத்து போனவள், “இப்ப சொல்லுங்க” என்றாள்.
“ஐயாவும் ஆத்தாவும் கெறங்கி போயி கெடக்காங்க, நேரம் காலம் தெரியாம படுத்தி வைக்காத” என கடுப்பாக சொன்னான்.
அந்நேரம் பார்த்து அவனது கைப்பேசிக்கு ஏதோ அழைப்பு வந்தது. அவனது சட்டைப் பை புடைப்பாக இருப்பதை அப்போதுதான் கவனித்தாள் சிவா. அவன் தன்னுடைய கைப்பேசியை வெளியில் எடுக்கும் போது இன்னொரு கைப்பேசியையும் எடுக்க வேண்டியதாகி விட்டது.
கோயில் வசூல் பணம் வங்கியில் செலுத்தியது தொடர்பாக வங்கி மேலாளர் அழைத்திருந்தார். ஆகவே அழைப்பை நிராகரிப்பு செய்ய முடியாமல் ஏற்று பேசினான். கணவன் கையில் இருந்த மற்றொரு கைப்பேசியை பிடுங்கிக் கொண்டாள் சிவா.
மேலாளர் ஏதோ முக்கிய விவரங்கள் கேட்டுக் கொண்டிருக்க, மனைவியை முறைத்தவன் பேசுவதில் கவனம் வைத்து விட்டான்.
அந்தக் கைப்பேசி லாக் செய்யப் பட்டிருக்கவில்லை. திரையை திறந்தவளுக்கு மனம் நெருடலாக இருக்க, வாட்ஸ் ஆப் சென்று விட்டாள்.
கலை மாமா என போட்டு ஒரு எண் சேமிக்க பட்டிருக்க, அதில் முகப்பு படமாக கலையும் இருக்க, அதற்குள் நுழைந்தாள்.
ஐந்து நிமிடங்களில் நெஞ்சில் கை வைத்து அதிர்ந்து போனாள்.
அப்பாவிடம் வந்த பிறை, தவறு செய்தவரிடம் ஈ என பல்லை காட்டிக் கொண்டு பேசுகிறீர்களா? இதற்கா உங்களை வரச் சொன்னேன்? நான் சொல்கிறேன் அவர் செய்தது பாதகம், அதற்கு என் கணவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அத்தோடு நாங்கள் தனிக் குடித்தனம் போக ஏற்பாடு செய்து விடுங்கள் என்றாள்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசாதே, என் பெற்றோர் இந்த வீட்டை விட்டு வர மாட்டார்கள், இங்கு விட்டு எங்கு போவது இப்போது என மருமகளை சத்தம் போட்டார் தனராஜன்.
“அவங்கள யாரு வர சொன்னது, ஏன் வயசானவங்கள என் தலைல கட்ட பார்க்குறீங்களா? நானும் என் புருஷனும் மட்டும்தான் தனியா போறோம்” என மாமனாரிடம் சொன்னாள் பிறை.
அருகிலிருந்த கடைசி மருமகளிடம் என்ன பேசுகிறாள் பிறை எனக் கேட்டார் பாட்டி.
“ம்ம்… அது அவளை கட்டினவனை மட்டும் கூட்டிகிட்டு தனியா போறாளாம் உங்க பேத்தி, கூடவே கெழவன் கெழவிய எல்லாம் அனுப்பி வச்சி என் உசுரை வாங்காதீயன்னு சொல்லிட்டு இருக்கா” என்றார் கோதை.
“அடி பாவி சிறுக்கி! அப்படியா சொன்னா!” என வாய் பிளந்தார் பாட்டி.
“கூட வச்சுக்க மாட்டேன்னு உன்னையும் சேர்த்துதான் சொல்றா க்கா” மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்த செங்கமலத்திடமும் சொல்லி அவரையும் கரைய வைத்தார் கோதை.
பிறையின் அண்ணன் ‘அவசர படாதே, உன் கணவனை முதலில் விசாரிக்க வேண்டும்’ என தங்கைக்கு எடுத்து சொன்னான். அவள் தன் அண்ணனையே திட்டினாள்.
கோவம் கொண்ட பிறையின் அண்ணன், “மாப்ளன்னா எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்ண கூடாது, ருத்ரன் மாமா என்ன எப்படின்னு நமக்கு தெரியாதா? இவ புருஷன் என்னைய வெட்ட வந்தாலும் தங்கச்சிக்காகன்னு பொறுத்து போனேன். ருத்ரன் மாமாவை எல்லாம் பகைச்சுக்க முடியாதுப்பா, நல்லா சண்டை வாம்பை பெருசாக்கி திரும்பவும் இவளை நம்மூட்டுக்கு இழுத்துகிட்டு வந்திடாதீய… நல்லாருக்காது சொல்லிப்புட்டேன்” என சொல்லி தன் வீட்டிற்கே புறப்பட்டு விட்டான்.
கைப்பேசியில் பேசி முடித்த ருத்ரன், பட் என மனைவியிடமிருந்து கலையின் பழைய கைப்பேசியை பறித்துக் கொண்டு அவளை கோவமாக பார்த்தான்.
“என்னங்க இது?” என உச்ச பட்ச அதிர்ச்சியோடு கேட்டாள் சிவா.
“என்னடி பழக்கம் இது, கையில் இருக்கிறத புடுங்கி பார்க்கிறது?” என அவளிடம் சுள் என விழுந்தான்.
“சிவா… ஆயி… எல்லாம் ரெடிம்மா” என சொல்லிக் கொண்டே உத்தமன் வரவும் கணவன் மனைவி இருவரும் மௌனமாகி விட்டனர்.
சாப்பாடு இருந்த பையை மனைவியின் கையில் கொடுத்து புல்லட்டை எடுத்தான் ருத்ரன். இரண்டு நிமிடங்களில் வீடு வந்து விட்டனர். சிவா இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்கவில்லை.
உள்ளே செல்லும் முன், “இத பத்தி மூச்சு விடக்கூடாது சொல்லிப்புட்டேன், அதிகப்படியா ஏதாவது செஞ்ச மிருகம் ஆகிடுவேன்” என எச்சரிக்கை செய்தான். சிவா பதிலே பேசவில்லை.
வள்ளி வேகமாக வெளியே வந்து, “எம்புட்டு நேரம்டா?” என கடிந்து பையை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினார்.
இன்னும் அமைதியாகவே இருந்த மனைவியின் தோளைப் பிடித்து உலுக்கிய ருத்ரன், “ஏட்டி உங்கிட்டதான் பேசிட்டு இருக்கேன்” என்றான்.
சிந்தனை கலைந்தவள், “உண்மை தெரியாட்டா அவரை எப்படி மாத்துறதுங்க? உங்க அத்தை பொண்ணு வாழ்க்கை என்னாகிறது?” எனக் கேட்டாள்.
“சித்தப்பாட்ட மட்டும் சொல்லிக்கிடலாம், வேற யாருக்கும் தெரிய வேணாம்”
“இதுல பிறையும் மாற வேண்டியது இருக்கு, உள்ளதை உள்ள படி சொல்லிடலாம்”
“கலை பிறை மட்டுமில்லை புள்ள, கல்யாணம் ஆகாத வயசுப் பொண்ணு ஒன்னோட வாழ்க்கையும் இதுல இருக்கு, அந்த பொண்ணு பேர் வெளில வரக்கூடாது, நான் பார்த்துக்கிடுறேன்னு சொன்னா கேட்டுக்கணும், நீ செவனேன்னு இரு” என கண்டிப்போடு சொன்னான்.
“வேற தப்பு தண்டா ஏதும் ஆகலையேங்க?” எனக் கவலையோடு கேட்டாள்.
காலையில் அந்தப் பெண்ணின் அம்மா தன்னிடம் வந்து பேசியதை சொன்னவன், “அந்த அளவுக்கு போயிருந்தா இந்நேரம் அவன் உடம்புல உசுர் தங்கியிருக்காது” என்றான்.
“ம்ம்ம்… ஜெயிலுக்கு போங்க, நான் அழுது வடிஞ்சுக்கிட்டு கெடக்கிறேன்” என கோவப்பட்டாள்.
“என்னடி இப்போ உன்னை சமாதானம் செஞ்சிட்டு நிக்கணுமா நான்?” என கடுப்படித்தான்.
இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருந்த வேளையில் உள்ளே, கோதையும் வள்ளியும் மாமனார் மாமியாருக்கு சாப்பாடு எடுத்து வைத்து கொடுத்தனர்.
பிறையின் பெற்றோர், சேகர், கோதை தம்பதியினர் அவர்கள் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுத்தான் இங்கு வந்திருந்தனர். தனராஜன் தனக்கு ஏதும் வேண்டாம் என சொல்லி விட்டார்.
சாதத்தில் தயிர் போட்டு பிசைந்து கலைக்கு எடுத்து சென்றார் கோதை.
“அந்தாளு சம்சாரத்தோட பொறந்த வீட்டு சாப்பாடு ஒன்னும் இவருக்கு வேணாம்” என கோவமாக சொன்னாள் பிறை.
“இந்தாடி அடி வாங்கி வீங்கிப் போய் கெடக்கான், செத்த நேரத்துல மயக்கம் போட்டாலும் போட்ருவான், சிவா வூடுன்னு பார்க்காம, ஓட்டலு சாப்பாடுன்னு நெனச்சுக்க” என அதட்டினார் கோதை.
“நான் ஜுஸ் போட்டு கொடுத்துக்கிறேன், இத கொடுக்க கூடாதுன்னா கூடாதுதான்” என அடம் பிடித்தாள் பிறை.
செங்கமலம் தன் மகனை பாவமாக பார்க்க, “ஜுஸ் போடுறவ முன்னாடியே செஞ்சிருக்கணும், இம்புட்டு நேரம் எதுக்கு காத்து கெடந்த?” என கோவப் பட்டார் கோதை.
“இப்ப போய் போடுறேன்” என பிறை சொல்ல, “அவ வச்சதுதான் சட்டமா? இம்புட்டு வருஷம் ஆகியும் இன்னும் மாமியா மூஞ்சு பார்த்து நடந்துக்கிடுறோம் நாம, அவ கெடக்கா, புள்ளைக்கு ஊட்டுக்கா சாதத்தை, களைச்சு போய் கெடக்கான்” என்றார் கோதை.
செங்கமலமும் ஒரு கவளம் சாதத்தை மகனுக்கு ஊட்ட செல்ல, ஆத்திர மிகுதியில் மாமியாரின் கையை தட்டி விட்டு தட்டையும் பறித்து விட்டெறிந்தாள் பிறை.
உள்ளே வந்த ருத்ரனின் காலடியில் போய் விழுந்தது தட்டு.