மொட்டவிழ்ந்த தேனரும்பே -17

அத்தியாயம் -17

சிவரஞ்சனியை அவளது வீடிருந்த சாலையின் முனையிலேயே  இறக்கி விட்டு சென்று விட்டது ட்ரக். வேக வேகமாக நடந்து வீட்டுக்கு வந்தவள் காலணிகளை  அவசர கதியில் கழற்றிப் போட்டு விட்டு உள்ளே நுழைந்தாள்.

நிறைய நபர்கள் கூடத்தில் நிறைந்து காணப் பட, அவளின் கண்கள் என்னவோ கணவனை தேடி வட்டமிட்டன. இருக்கை ஒன்றில் இறுகிப் போன முகத்துடன் அமர்ந்திருந்த ருத்ரனை கண்டு கொள்ளவும்தான் யார் யார் இருக்கிறார்கள் என்பதை பார்த்தாள் சிவா.

இன்னும் பிறையின் பிறந்த வீட்டினர் வந்திருக்கவில்லை. ருத்ரனின் அருகில் சேகர் அமர்ந்திருக்க, கலையின் அறையில் செங்கமலம் பக்கத்தில் இருந்தார் கோதை.

மூச்சு வாங்க நின்றிருந்த மனைவியை பார்த்த ருத்ரன், “என்ன புள்ள சீக்கிரம் வந்திட்ட, பஸ்ல வரலையா நீ?” என ஒன்றும் நடக்காதது போல விசாரித்தான்.

இல்லை என மறுப்பாக தலையாட்டியவள் மாமியாரை தேடினாள்.

வீட்டில் சமையல் நடந்திருக்கவில்லை, வயதானவர்கள் இருக்கிறார்களே, ஆதலால் நீர் மோர் தயாரித்து எடுத்து வந்த வள்ளி, மருமகளை கண்டதும், “இந்தா நீயும் குடி, உலையே வைக்கல வீட்டுல” என்றார்.

“உலை கொதிக்காட்டா என்ன, அதான் அம்புட்டு பேர் வயிறும் கொதிச்சு கெடக்கே!” என அங்கலாய்த்தார் பாட்டி.

“அட சும்மா கெடம்மா,  அதான் நான் பேசிட்டு இருக்கேன்ல?” என அம்மாவை அதட்டினார் சேகர்.

சிவா என்ன பேச்சு நடக்கிறது என சேகரை பார்க்க, மருமகளின் கையில் நீர் மோர் நிறைந்த சொம்பை கொடுத்தார் வள்ளி.

“அவன் கல்யாணத்துக்கு முன்ன வேறடா ருத்ரா, இப்ப ஒரு பொண்ணு அவனை நம்பி வந்திருக்கு, என்ன காரணம் சொன்னாலும் நீ கை நீட்டினது தப்புதான், ஒரு சாரி சொல்லிப்புடு, சகுந்தலாக்கா  மாமாவை எல்லாம் நான் சமாளிச்சிக்கிடுறேன்” என்ற சேகர்  மோரை பருகினார்.

சிவா தன் கணவனை பார்க்க, “அதெல்லாம் சொல்ல முடியாது சித்தப்பா, வரட்டும் அவங்க, யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்லை” என்ற ருத்ரன் மோரை பருகாமல் கீழே வைத்து விட்டான்.

தனராஜன் தன் தம்பியை ‘பார்த்தியா?’ என்பது போல பார்த்தார்.

“இப்படி சொன்னா எப்புட்றா? குடும்பம் ஒன்னா இருக்க வேணாம்னு நெனைக்கிறியா?” எனக் கேட்டார் சேகர்.

“அப்படிலாம் நான் நினைக்கல, ஆனா நினைக்கிறவக இங்குட்டு இருக்காகதான்” என்றான் ருத்ரன்.

கணவன் பக்கம் சென்ற சிவா, தன் கையிலிருந்த சொம்பை அவனிடம் நீட்டி, ‘குடிங்க’ என கண்களால் சொன்னாள்.

அவன் முறைக்க, முகத்தை கொஞ்சம் தீவிரமாக்கி கட்டளையாக சொன்னாள். அவன் முகத்தை திருப்பிக் கொள்ள, “அட குடிங்கன்னா கேட்க மாட்டீங்களா?” என அதட்டவே செய்தாள்.

உச்சு கொட்டிக் கொண்டே வாங்கி பருகினான். அவன் கீழே வைத்திருந்த மோரை எடுத்துக் கொண்டு மாமியார் பக்கம் சென்று நின்று அவளும் பருகினாள்.

“சுமூகமா முடிக்கணும்னு நான் நினைக்கிறேன் டா, நீ வேற மாதிரி யோசிக்கிற போல” என ருத்ரனை குற்றமாக சொன்னார் சேகர்.

“என்கிட்ட அடி வாங்கினவனே  ஏத்துக்கிட்டான் சித்தப்பா, அதுக்காக நான் மனசு வருந்தினாதானே மன்னிப்பெல்லாம் கேட்க முடியும்? ஒன்னா ஒரு வீட்ல வளந்த நாங்க, சிலது எல்லாம் அடிச்சு சொன்னாதான் புத்தியில உரைக்கும், அதான் சொன்னேன். அவனுக்கும் எனக்கும் உள்ள பேச்சுனு வச்சுக்கோங்க” என்றவன்,

 தனராஜனை சுட்டிக் காட்டி, “பொறவு சித்தப்பாகிட்ட பேசிக்கிறேன், அவரும் புரிஞ்சுப்பாரு. சிலது ஏன் செய்றேன் எதுக்கு செய்றேன்னு வெளிப்படையா சொல்ல முடியாது, புரிஞ்சுக்கோங்க” என்றான் ருத்ரன்.

“என்னத்தடா என்கிட்ட தனிமைல சொல்ல போற, இனியும் உன்னோட பேசுவேன்னு நினைச்சியா? அவன் என்ன பத்து வயசு பையனா என்ன? மாட்ட போட்டு அடிக்கிற மாதிரி அடிச்சிட்டு அவன் மேல அக்கறை உள்ளவன் கணக்கா பேசாத” என்றார் தனராஜன்.

“ஒரு நிமிஷம் வெளில வாங்க சித்தப்பா, உங்கள்ட்ட பேசணும்” என சொல்லி எழுந்தான் ருத்ரன்.

தனியாக தன்னிடம் மட்டும் மன்னிப்பு கேட்டு தப்பித்துக் கொள்ள பார்க்கிறான், அப்படியே விடுவதா இவனை என  தனராஜனுக்கு ஆத்திரம்.  ‘வர முடியாது, எதுவாக இருந்தாலும் இங்கேயே பேசு’ என சொல்லி விட்டார்.

நெற்றி சுருக்கி யோசித்த சிவாவுக்கு கலையை தன் கணவன் அடித்ததற்கான  காரணம் இப்படி அனைவர் மத்தியிலும் சொல்ல முடியாதபடி ஏதோ ஒன்று என்பது புரிந்தது.

மாமியாரின் காதில், “இவங்களுக்கு தெரியாம ஏதும் பணம் கிணம் எடுத்திருப்பாரோ அத்தை? கோயில் வசூல் பணம் வருதில்ல அதுல ஏதும் கை வச்சிட்டாரோ?” எனக் கேட்டாள்.

“என்னான்னு தெரியலையேடி, அப்படி செய்ய கூடியவனா கலை? அப்படியிருந்தா   அதை போய் ஏன் மறைக்கிறான் இவன்?” என வள்ளியும் ரகசியக் குரலில் மருமகளிடம் கேட்டார்.

“அதுவாதான் அத்தை இருக்கணும், திருட்டு வேலை பார்த்தத போய் எல்லார் முன்னாடியும் சொன்னா தம்பிக்கு அவமானம்னு நினைக்கிறாங்க போல, பிறை திரும்பவும் கோச்சுக்கிட்டு போயிடும்னு யோசிக்கிறார்” என சிவா சொல்ல, இருக்குமோ என வள்ளியும் நினைத்தார்.

ஆக மொத்தம் மாமியாருக்கும் மருமகளுக்கும் அடித்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை, ஆனால் அவன் சொல்லாமல் இருப்பதற்கான காரணத்தை கணித்து விட்டனர்.

“அவங்க தனியா கூப்பிடுறாங்கன்னா முக்கியமான சேதியா இருக்கலாம், என்னன்னுதான் கேளுங்களேன் மாமா” என தனராஜனிடம்  சொன்னாள் சிவா.

அவள் தலையிட்டு பேசி யாரும் அவளை ஏதும் சொல்லி விடக்கூடாது என நினைத்த ருத்ரன், திரும்பிப் பார்த்து மனைவியை முறைத்தான்.

தனராஜன் ஒரு நிலையில் இல்லை, இவள் என்ன எனக்கு சொல்வது என்ற அகங்காரம், “உன்னை யாரும் இங்குட்டு கூப்பிடல ஆயி, தள்ளியே நில்லு” வெடுக் என சொல்லி விட்டார்.

சிவா ஒன்றும் சளைக்கவில்லை, “நீங்க கூப்பிட்டு ஒன்னும் நான் வரலை மாமா, எல்லாரும் குத்தம் சொல்லி உட்கார வச்சிருக்கிறது என் புருஷனை, அவர் பக்கத்துல நான் நிக்கிறேன், அவர்கிட்டருந்து தள்ளி போக சொன்னா சரியில்லைதானே, அவரே அப்படி சொல்ல முடியாது” என்றாள்.

“மேல போ நீ!” என மனைவியை அட்டினான் ருத்ரன்.

“நீ அமைதியா இரு ஆயி, நாங்கதான் பேசிட்டு இருக்கோம்ல?” என்றார் சேகர்.

“நீங்களாவது சொல்லுங்க மாமா, இவங்க ஏதோ பெரிய மாமாகிட்ட தனியா சொல்ல கூப்பிடுறாங்க, அஞ்சு நிமிஷம் பேசிட்டு வர சொல்லுங்க, சபையிலே சொல்ல முடியாத விஷயமா கூட இருக்கலாம். என் புருஷனுக்கு கோவம் தலைக்கு ஏறிச்சுனா அப்புறம் எதையும் யோசிக்க மாட்டாங்க, நடு கூடத்துல போட்டு உடைச்சிடுவாரு, அதுக்கப்புறம் வந்து அவரை தப்பு சொல்ல கூடாது”  என்றாள் சிவா.

இவளுக்கு என்ன தெரியும், ஏன் இப்படி பேசுகிறாள் என ஆச்சர்யத்தோடு மனைவியை  ஏறிட்டான் ருத்ரன்.

“ஆம்பளைங்க பேசிக்கையில  வூடால பூந்து அவ என்னத்தடி பேசிட்டு இருக்கா? தள்ள சொல்லு அவளை”  என்றார் பாட்டி.

“செத்த முன்ன உங்க பேத்தி பேசையில ‘புருஷனுக்கு ஏத்துகிட்டு பொண்டாட்டி பேசத்தான் செய்வா’ன்னு சொல்லலை நீங்களும் உங்க மகனும்? ஊரு உலகம் முன்ன என் புள்ள கையால  தாலி வாங்கி புல் ரைட்ஸோட முன் வாச வழியா  உள்ள வந்தவ என் மருமவ, அவளை பேசக்கூடாதுன்னு யாரும் சொன்னா பொல்லாதவ ஆகிப்புடுவேன் பார்த்துக்கிடுங்க” என சத்தம் போட்டார் வள்ளி.