“என்டர்டெயின்மெண்ட்டுக்கு  ஒரு விஷயம் செஞ்சா அப்பவும் அடிச்சுகிட்டு நிக்க வேண்டியது!” அலுத்துக் கொண்டு புறப்பட்டான் கலையரசன். அவன் விழாக் கமிட்டி தலைவர் ஆகிற்றே, பொறுப்பாக பெண்டிர் இடும் சண்டையை மத்திசம் செய்து வைக்க வேண்டுமே.

வாலிபர்கள் எல்லாம் உற்சாகமாக விழாவை எடுத்து கட்டி செய்தார்கள். ருத்ரன் எப்போதுமே இதில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டான். தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது மட்டுமே அவனது வாடிக்கை.

பிள்ளைகளுக்கு உண்டான போட்டிகளில் கூட ‘என் மவன்தான் முன்ன வந்தான், அவன் எம்மவன தள்ளி வுட்டான்’ என அங்கேயும் தகராறுகள் வரும். ஆனால் ஏதும் பெரிதாகாது, சம்பந்த படாதவர்களுக்கு இதெல்லாம் சுவாரஷ்யம்தான்.

உள்ளூர் பெண்களோடு வெளியூரிலிருந்து விருந்தினராக வந்திருக்கும் பெண்களும் சேர்ந்து இளம் வயது பெண்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். அவர்களின் முன் தங்களை நாயகனாக காட்டிக் கொள்ள வாலிபர்கள் செய்யும் வித்தைகள் அந்த விழாவை இன்னும் கலகலப்பூட்டும்.

அன்று கோயில் திட்டத்தில் அன்னதானம் நடக்கும். கலவை சாதங்கள் தயாராகி ஊரே ஒன்றாக கூடி சாப்பிடும். அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு அமைதியாக அங்கேயே இருந்து விட்டான் ருத்ரன்.

 நேற்று வரை ஊரில் பக்தி பாடல்களாக ஒலித்துக் கொண்டிருந்தது. இன்று நேர்மாறாக குத்தாட்டம் போட வைக்கும் திரையிசைப் பாடல்கள். அவ்வப்போது எந்த போட்டி நடக்கிறது, யார் பங்கேற்கிறார்கள், யார் வென்றார்கள் என்ற அறிவிப்புகளும் வந்து கொண்டிருந்தன.

ஒரே தீக்குச்சியில் அதிக மெழுகுவர்த்தி ஏற்றும் போட்டியில் சிவா பங்கேற்று இருப்பதாக அறிவிப்பு வரவும், ‘பார்டா!’ என மனதில் நினைத்துக்கொண்டான் ருத்ரன்.

இந்த போட்டிகள் எல்லாம் கோயில் பக்கம் உள்ள திடலில்தான் நடக்கும். சமைக்கும் இடத்திலிருந்து சற்று வெளியில் வந்தான் ருத்ரன். அவனை கண்ட ஊர் முக்கியஸ்தர்கள் “அட நம்ம சுப்பு சமையல்தானேப்பா, புது ஆள் கணக்கா அவனை நம்பாம அங்குட்டே நிக்காத, வாப்பா இங்குட்டு” என சொல்லி அறிவிப்பு சொல்லப்படும் மேடைக்கு அழைத்து சென்று விட்டனர்.

மற்றவர்கள் சொல்லும் செய்திகளுக்கு ம் போட்டுக் கொண்டே மனைவியை தேடி கண்டுபிடித்து விட்டான் ருத்ரன். அவளும் கணவனைத்தான் தேடிக் கொண்டிருந்தாள் போலும், அறிந்து கொண்டவன் அவளுக்கு கைப்பேசியில் அழைத்து பேசினான். இவன் பக்கம் திரும்பி கை காட்டினாள் அவள்.

வைதேகி ஏதோ சொல்லி அவளின் கையை பிடித்து வைத்துக்கொள்வதும் கோதை என்னவோ சொல்வதும் சுற்றி உள்ளவர்கள் சிரிப்பதும்  சிவா வெட்கம் கொள்வதும் என அனைத்தையும் பார்த்தான் ருத்ரன்.

பார்வையை அங்கிருந்து திருப்பிக் கொண்டவன் வேறு யாரிடமோ பேச்சு கொடுத்து சற்று நேரம் சிவாவை யாரும் கிண்டல் செய்து விடாத படி காப்பாற்றி விட்டான்.

கோதை அதிகப்படியாக பத்தொன்பது மெழுகுவர்த்திகள் ஏற்றியதாக அறிவிப்பு வந்தது. சிவாவின் முறை வரவும் ஆவலாக பார்த்தான் ருத்ரன்.

முதல் மெழுகுவர்த்தி ஏற்றும் போதே கணவனை பார்த்து விட்டுத்தான் ஆரம்பித்திருந்தாள். எண்ணிக்கை ஐந்து ஆகவும் ருத்ரன் இருக்கையின் நுனிக்கு வந்து விட்டான்.

ஒன்பது மெழுகுவர்த்தி  ஆகும் போதே தீக்குச்சி மிகவும் சின்னதாகி விட்டது. எங்கே அவளின் கையை சுட்டு விடப் போகிறதோ என நினைத்து அவன் பதட்டம் கொள்ள, “அங்குட்டுதான் போயி நின்னு ஆயிக்கு ஒத்தாசை பண்றது” என கிண்டல் செய்தார் ஒருவர்.

சிவாவே தீக்குச்சியை போட்டு விட்டாள். முகத்தை சின்னதாக்கி கொண்டு அவள் கணவனை பார்க்க, அவனோ கண்களால் ஆறுதல் சொன்னான்.

கோதையும் இன்னும் இருவரும் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வந்தது.

“இப்படி வெட்ட வெளில வைக்கிற போட்டியா இது?” என உடன் இருந்தவர்களிடம் குறை சொன்னான்.

“உன் சம்சாரம் தோக்கவும் நொட்டம் சொல்லாத ப்பா, ஜெயிச்சவகளும்  இங்குட்டுதான் மெழுகுவத்தி ஏத்தினாவோ?”  எனக் கேட்டவரை பார்த்தவன், “அவ்வோளுக்கு எல்லாம் காத்து அடிக்கல, அதிஷ்டத்துல ஜெயிச்சிட்டாவோ” என்றான்.

“சரி சரி வுடப்பா, உன் சம்சாரமும் ஜெயிச்சதாவே வச்சுப்போம்” என ஒரு பெரியவர் சொல்ல, மற்றவர்கள் கொல் என சிரித்து வைத்தனர்.

மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டியில் கலந்து கொண்டவர்களில் கலையும் கேசவனும் கூட இருந்தனர். பாதியிலேயே கேசவன் காலை தரையில் வைத்து விட்டான். வென்று விட்ட கலை தன் மனைவியை பார்க்க, அவளோ முகத்தை தோளில் வெட்டி இழுத்துக் கொண்டாள். கடுப்பாகி விட்டான் அவன்.

சுடர் வந்து சற்று நேரம் வேடிக்கை பார்த்திருந்து விட்டு  வீட்டுக்கு சென்று விட்டார். உத்தமன் ஏதாவது செய்ய வேண்டுமே என சமையல் செய்யும் இடம் வந்தார். அங்கே ருத்ரன்தான் பார்க்கிறான் என்பது அவருக்கு தெரியவில்லை.

இடையில் சமையலை பார்வையிட வந்த ருத்ரன் மாமனாரை பார்த்து விட்டு ‘வாங்க’ என்பது போல தலையசைத்தான்.  அவர் மடித்து கட்டியிருந்த வேஷ்டியை இறக்கி விட்டு பவ்யமாக  “வாங்க தம்பி” என்றார்.

அவரை அமர சொல்லி நாற்காலி எடுத்து போட்டான் ருத்ரன்.

“இங்குட்டு நான் பார்த்துக்கிறேன் தம்பி, நீங்க போய் வேடிக்கை பாருங்க, ஆயி கூட எதெதிலேயோ சேர்ந்திருக்கு” என்றார் உத்தமன்.

மாமனாருடன் அவனால் சகஜமாக இருக்க முடியவில்லை, ஆகவே மீண்டும் மேடைக்கே வந்து விட்டான்.

உறியடிக்கும் போட்டியில் கலந்து கொண்ட ஒருவன் முதல் அடியிலேயே பானையை உடைத்து விட்டான். அவன் நண்பர்கள் உற்சாக குரல் எழுப்ப, அவன் பார்வையோ வேறெங்கோ மொய்த்தது. அங்கே ஒரு இளம் பெண்ணை மற்ற இளம் பெண்கள் கேலி கிண்டல் என ஒரு வழி செய்து கொண்டிருந்தனர்.

இதை கவனித்த மேடையில் இருந்த பெரியவர்களில் ஒருவர் அதை சுட்டிக் காட்டி பேசி,  “சந்து பொந்துக்குள்ள எல்லாம் வித விதமா கதை ஓடுதப்பா” என்றார்.

 சிரித்துக் கொண்ட ருத்ரன், ‘எங்க என் ஆளு’ என எண்ணிக் கொண்டே,  தன் மனைவியை தேடி அவளை கண்டும் கொண்டான். இவனையே பார்த்திருந்தவள், ‘என்ன பார்வை எங்கெங்கோ செல்கிறது?’ என சாடையில் கேட்டு பார்வையில் மிரட்டினாள்.

‘உன்னைத்தான்டி எல்லா இடமும் தேடினேன்’ என்பதை அவளிடம் சொல்ல முடியாமல்  முறைத்து வைத்தான்.

 “அண்ணனை வீட்டுல  பார்க்குறது போதாதா  அத்தாச்சி, இங்குட்டு வச்சுமா?” என சிவாவை கிண்டல் செய்தான் ஒரு இளைஞன்.

இள வட்டக் கல் ஒன்று அங்கே கிடந்தது. அந்த போட்டியெல்லாம் இப்போது நடப்பதில்லை.

“வாய் நல்லா பேசுற, இந்த கல்ல தூக்கி காட்டி உன் அத்தை பொண்ணை இம்ப்ரெஸ் பண்ணு” என பதில் பேசினாள் சிவா.

“ஆம்பளைங்கதான் இம்ப்ரெஸ் பண்ணனுமா அத்தாச்சி, நீங்க பண்ணுங்க” என்றான் அவன்.

“பொம்பளைக தூக்க இல்லடா இது” என்றார் நடு வயது பெண் ஒருவர்.

பேச்சு இன்னும் வளர்ந்தது. இறுதியில் அந்த பையன், “நூறு எண்ணுறேன், அண்ணன் அத்தாச்சிய மூனு தடவையாவது திரும்பி பார்த்திடுவாரு, அவரு லவ்வுக்கு அத்தாச்சி இந்த கல்ல தூக்கி மரியாதை செய்யணும்” என வம்பாக சொன்னான்.

கோதை சிவாவை பார்த்து என்னடி எனக் கேட்க, “அதெல்லாம் பொது இடத்துல அப்படிலாம் பார்க்க மாட்டாங்க” என்றாள்.

“அதையும் பார்த்திடுவோம்!” என்ற கோதை, “சரிதான் டா” என சொல்லி விட்டார்.