“ஐயைய அக்கா என்னதிது? அத்தைய பத்தி தெரியாதா? எதுக்கு சண்டை, வாங்க இங்குட்டு” என சமாதானம் சொல்லி ஓரகத்தியை உள்ளே அழைத்து சென்றார் செங்கமலம்.

தன்னிடம் இவ்வளவு கோவப்பட்டிராத மூத்த மருமகள் சென்ற திசையை தாடையில் கை வைத்து அதிசயித்து பார்த்த பாட்டி, வெற்றிலை பாக்கு பெட்டியை கையில் எடுத்துக் கொண்டு கொட்டகை பக்கம் நடையை கட்டி விட்டார்.

இந்த பேச்சு எனக்கு சரியாக புரியவில்லை, அத்தை ஏன் இவ்வளவு கோவப்பட்டார் என கணவனிடம் விசாரித்தாள் சிவா.

“ஒரு கழுதை கதையும் உனக்கு புரியாது, அம்மா சொன்ன படி செய்ற, யாருக்கும் ஏதாச்சும் எடுபிடி வேலை பார்த்தேன்னு தெரிஞ்சுது தொலைச்சு கட்டிடுவேன்” என அவனும் தன் பங்குக்கு அவளை திட்டி விட்டு சென்றான்.

‘தொலைச்சு கட்டுவாராம்ல? ராத்திரி வரட்டும், வச்சுக்கிறேன்’ என  கணவனை மனதிற்குள் கறுவிக் கொண்டாள் சிவா.

மாமியார் சொன்ன படியே தங்களுக்குரிய பொங்கல் கட்டிகளுக்கு மட்டும் கோலமிட்டு, அவளுடைய பொங்கல் பானைகளை மட்டும் தயார் செய்து கொண்டாள் சிவா. அப்படியே வீட்டில் எல்லா இடங்களிலும் மாக்கோலமும் போட்டாள்.

“முடியாம படுத்துக்க போற, விடு அம்மாட்ட நான் சொல்லிக்கிறேன்” என மனைவியின் அருகில் போய் மெதுவாக சொன்னான் ருத்ரன்.

“அட வருஷத்துல ஒரு தடவ செய்றது, எனக்கு பிடிச்சு போயிதான் செய்றேன்” என அவள் சொல்ல, அவளை பார்த்த படி அங்கேயே அமர்ந்து விட்டான்.

பிறையிடம் போய் ‘நீயும்  உனக்குரியது எல்லாம் செய்’ என சொன்னார்தான் செங்கமலம். எனக்கு இதெல்லாம் தெரியாது என ஒரு வரியில் முடித்துக் கொண்டாள் அவள்.

மாமியாரிடம் போய் நின்ற செங்கமலம், “உங்க பேத்திக்கு ஒன்னும் தெரியாதாம்? அவளுக்கு நான் செஞ்சு தரணுமா எல்லாம்? இதையெல்லாம் கேட்டுக்கிட மாட்டியளா அத்தை?” எனக் கேட்டார்.

நடு மருமகள் மட்டும் என்றால் அவர் தலையில் எளிதாக மிளகாய் அரைத்து விடுவார் பாட்டி. அப்படி ஆகி விடக்கூடாது என்பதாலேயே வேறு வேலை பார்ப்பது போல அங்கு வந்து நின்று கொண்டார் வள்ளி.

பேத்திக்கு முட்டு கொடுக்க வேண்டுமே. “அவ பெரிய படிப்பு படிச்சவ, ராஜாங்கமா வளந்தவ, சின்ன புள்ளதானே, போவ போவ எல்லாம் கத்துக்கிடுவா, மொத வருஷம் நாம செஞ்சு தந்தா போச்சு” என்றார் பாட்டி.

“அப்ப நீங்களே செய்யுங்க” என சொல்லி விட்டார் செங்கமலம்.

“எனக்கென்ன செய்ய தெரியாதா, இல்லை முடியாதா?” என்ற மங்களத்தம்மாள் அந்த வயதிலும் பேத்திக்காக எல்லாம் அவரின் கைகளாலேயே செய்தார்.

“நல்லா வாழ்ந்து சலிச்சவக… அவுக கையால  எல்லாம் செய்றாக. இனியாவது எம்பையன் வாழ்க்கை செழிக்க இருக்கும்ல க்கா?” என கலக்கத்தோடு கேட்டார் செங்கமலம்.

“எல்லாம் சின்ன புள்ளைக தானேடி, வயசு கூடினா புத்தியிலேயும் தெளிவு பொறக்கும், வெசனபடாத” என வள்ளியும் ஆறுதல் சொன்னார்.

அடுத்த நாளில் எல்லா வீடுகளிலும் பொங்கல் வைக்க தயாராக இருந்தனர். தலைப் பொங்கல் வைக்க இருந்த தம்பதிகள் சற்று பரபரப்பாகவே காணப் பட்டனர்.

வரிசையில் மாமனார் வைத்துக் கொடுத்த புது வேஷ்டி சட்டையில் கம்பீரமாக தயாராகியிருந்தான் ருத்ரன். சிவாவின் மனம் உற்சாகத்தில் இருந்ததாலோ என்னவோ பொலிவு கூடிக் காணப்பட்டாள்.

சூரியனை வேண்டிக் கொண்டு பொங்கல் கட்டிகளை வாசலில் வைத்து அடுப்பு அமைத்த ருத்ரன், காய்ந்த விறகுகளை அடுப்புக்குள் வைத்தான்.  நெருப்பு மூட்டி பொங்கல் பானைகளை  அடுப்பில் எடுத்து வைத்தாள் சிவா.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஒன்றை அடுத்து ஒன்று என இரண்டு பானைகளும் பொங்கி வழிந்தது.

“எம்புள்ளைங்க வாழ்க்கையும் இப்படி பொங்கி பூரிக்கணும் ஐய்யா!” என மேல் நோக்கி கையெடுத்து கும்பிட்டு வணங்கினார் வள்ளி.

பிறையும் கலையும் வைத்த பொங்கல் பானைகள்  நன்றாக பொங்காமல் நான்கு பக்கமும் சொட்டு சொட்டாக  வடிந்தது.

“அழுது வடியுதே பானை!” என நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தார் செங்கமலம்.

மங்களத்தம்மாளுக்கு முகம் விழுந்து விட்டது. “கொஞ்சம் போல பாலை ஊத்து” என வள்ளி சொல்ல, செங்கமலமும் அப்படியே செய்தார். பின் அந்த பானைகளும் பொங்கி வந்தன.

கள்ளம் இல்லாத ஒருத்தியை குறையாக நினைக்க, பேத்தி மீது உயிர் வைத்திருக்கும் தானே எல்லாம் செய்தும் இப்படி ஆகி விட்டதே என பாட்டிக்கு பெருத்த அதிர்ச்சி. யாரும் ஏதும் விகல்பமாக சொல்லவில்லை என்ற போதும் அவருக்கே  மனம் குத்தியது. வாயே திறக்கவில்லை, ஓரமாக போய் அமர்ந்து விட்டார்.

வழிபாடெல்லாம் சிறப்பாக முடிந்தது. பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டனர் ருத்ரன் சிவா இருவரும். செங்கமலம் தன் மருமகளை பார்க்க, “உங்க பையன் எப்பவோ ஃபிரெண்ட்டை பார்க்கன்னு போயிட்டாரு” என கடுப்பாக சொன்னாள் பிறை.

தனராஜன் கைப்பேசி வாயிலாக தன் மகனை திட்டி  வரவழைத்தார். செங்கமலமும் வள்ளியும் அவனுக்கு புத்திமதி சொன்னார்கள்.

மனைவியிடம் வந்த கலை எங்கேயாவது வெளியில் போய் வரலாம் என கூப்பிட்டான். ஆரம்பமே என்னை கண்டு கொள்ளாமல் மற்றவர்கள் சிபாரிசு செய்த பிறகு என்னிடம் வருகிறாயா எனக் கேட்டு சண்டை போட்டாள் பிறை.

டிவியை போட்டுக் கொண்டு அமர்ந்து விட்டான் கலை. கைப்பேசியை எடுத்துக் கொண்டாள் பிறை.

கோதை, சேகர் இருவரும் பிள்ளைகளோடு வந்து விட்டு சென்றனர். சிவா ஒரு எட்டு தன் பெற்றோரை பார்த்து வந்தாள்.

தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு என ஆடைகள், பழம், இனிப்பு, பணம் என வைத்து பைகள் போட்டிருந்தான் ருத்ரன். நிறையவே இருக்கும். பொங்கல் வாழ்த்து சொல்ல வரும் எளியவர்கள் அனைவரும் பையுடன்தான் செல்வார்கள்.

மனைவியை அவளின் இஷ்ட தெய்வத்தின் கோயிலுக்கு அழைத்து சென்றான் ருத்ரன். அப்படியே அன்று வெளி வந்திருந்த புதுப் படத்தையும் பார்த்து விட்டு இரவுக்குத்தான் வீடு திரும்பினார்கள்.

அடுத்த நாள் மாட்டு கொட்டகையை அலங்காரம் செய்து மாடுகளையும் குளிப்பாட்டி திலகமும் மாலையுமிட்டு அலங்கரித்திருந்தனர்.

அன்று ஊர்க் கோயிலில் பொதுவாக ஒரே பொங்கல்தான் வைப்பார்கள். எல்லா மாடுகளையும் அதன் உரிமையாளர்கள் அங்கு அழைத்து வந்து விடுவார்கள். மாடுகளுக்கு பொங்கல் ஊட்டி முடித்த பிறகு, மாடுகளுடன் ஊரை சுற்றி நடக்க வைத்து மீண்டும்  அவரவர் தொழுவத்தில் சேர்ப்பார்கள்.

இளசுகள், சிறுவர்கள் என ஆடிக் கொண்டு கோலாகலமாக நடக்கும் ஊர்வலம்.

மதியத்திற்கு  அசைவம் சமைத்து வீட்டு சாமியை வழிபடுவார்கள். தெருவில் ஒருவரை காண முடியாது, எல்லாம் வயிறு புடைக்க சாப்பிட்டு உறங்குவார்கள்.

அடுத்த நாள் காணும் பொங்கல்தான் இன்னும் சிறப்பு. விழாவை காண, கலந்து கொள்ள என வெளியூரிலிருந்து கூட உறவுக்காரர்கள் வந்து விடுவார்கள். வைதேகியும் குடும்பத்தோடு பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள்.

சூரியன் உதயமாகும் முன் போட்டிகள் ஆரம்பித்து விட்டன. சிறு பிள்ளைகளுக்குதான் நிறைய விளையாட்டு போட்டிகள் இருக்கும். வாலிபர்கள், பெண்கள், தம்பதிகள் என அவர்களுக்கும் ஒருசில போட்டிகள் நடைபெறும்.

கோலப் போட்டிக்காக பெயர் கொடுத்திருந்தார் செங்கமலம். கோதை, சிவா இருவரும் உதவ நல்ல அழகாக வந்திருந்தது அவரது கோலம்.

ஏதோ இடத்தில் ‘என் வாசலை தொடுகிறது உன் கோலம்’ என சொல்லி இரண்டு பெண்களுக்கு இடையே சண்டையாம். வேறொரு வீட்டில் போடப்பட்டிருந்த கோலத்தில் ஆடு அசிங்கம் செய்து விட்டது என சொல்லி அந்த வீட்டுக்காரிக்கும் ஆட்டை வளர்ப்பவளுக்கும்  வாய்த் தகராறாம்.