“வெளில எம்புட்டு வேலை கெடக்குனு தெரியுமா? மனுஷன் அவசரம் புரியாம செஞ்சதையும் செஞ்சுப்புட்டு மூக்க தூக்குறியா?” இன்னும் கோவம் குறையாமல்தான் கேட்டான்.

“அப்படி என்ன அவசரங்கிறேன்? எனக்கு லீவுன்னு தெரியாது, கூட இருந்தா என்னவாம்? லேட்டா போனீங்கன்னு எவன் சீட்டை கிழிக்க போறான்? ஒத்த ஆளா மல்லுக்கட்டிகிட்டு நிக்கிறவளுக்கு செத்த ஒத்தாசை பண்ணவோம்னு இல்லாம நெருப்பு கோழி மாதிரி நிக்கிறீங்க…” என்றாள்.

“இப்ப ஒட்டடை அடிச்சு கொடுக்கலையா?”

“என்ன… செஞ்சத சொல்லி காட்டுறீங்களா? உங்களை…” என்றவள் குவளையில் சோப்பு தண்ணீர் எடுத்து அவன் மீது நன்றாக ஊற்றி விட்டாள்.

முழுதும் ஈரமாகி விட்ட சட்டையை குனிந்து பார்த்தவன் அவளை கோவமாக பார்க்க, “இத கழட்டி கொடுத்திட்டு வேற மாத்திகிட்டு போங்க, நான்தானே எல்லாத்தையும் துவைச்சு போடுறேன், எனக்கில்லாத கவலை உங்களுக்கென்ன?” என சர்வ சாதாரணமாக சொன்னாள்.

“அடிங் உன்னைய…” என்றவன் அவள் பக்கத்தில் வந்து, வாளியில் இருந்த தண்ணீர் முழுவதையும் எடுத்து அவள் மீது ஊற்றி விட்டான்.

அவளின் தலை நனையவில்லை, மற்றபடி உடல் முழுதும் ஈரம் சொட்டியது. கைகளை உதறி தண்ணீரை அவன் மீதே தெளித்து விட்டவள், “இத இதைத்தான் எதிர்பார்த்தேன், வாங்க அப்படியே துணிய துவைச்சு காய வச்சிட்டு போவீங்களாம்” என்றாள்.

“உனக்கு வீட்டு வேலை செஞ்சு தரதான் இருக்கேனா நான்? பொழப்ப பார்க்காட்டி சோத்துக்கு சிங்கி அடிக்க வேண்டியதுதான்” என்றவன் நனைந்த துணியை கழட்டி அவளிடம் கொடுத்து விட்டு துண்டை கட்டிக் கொண்டு குளிக்க சென்று விட்டான்.

அவள் ஈர உடையிலேயே நின்று கொண்டு துணி துவைத்துக் கொண்டிருந்தாள்.  குளித்து வந்தவன், “ட்ரெஸ் மாத்திட்டு செய்” என்றான்.

“துவைச்சிட்டு குளிக்கத்தான் போறேன், இருக்கட்டும், நாளைக்கு பொங்கல் வச்சுக்கிட்டு அப்படி என்னதான் மாங்கு மாங்குனு வேலை பார்க்க கிளம்புறீங்க? என்ன சொன்னாலும் கேட்கிறது இல்லை, நேரத்துக்கு சாப்பிட வந்திடுங்க” விளையாட்டை எல்லாம் கை விட்டு பொறுப்பாக சொன்னாள்.

“எம்புட்டு நேரம்டி ஈரத்துல இருப்ப, சொன்னா கேட்டுக்கிற பழக்கம் உங்கிட்ட தான் இல்லை” என்றவன் அவளை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான். விட சொல்லி அவள் மிகவும் முரண்டு செய்ய, தூக்கிக் கொண்டு போய் ஹாலில் விட்டான்.

தரையெல்லாம் ஈரம். எங்கே வழுக்கி விட போகிறதோ என நினைத்து மடிக்காமல் நாற்காலியில் அவள் போட்டு வைத்திருந்த காய்ந்த துணிகளில் கைக்கு சிக்கிய போர்வையை எடுத்து தரையில் விரித்து விட்டான். .

அவளுக்கு ஆடை மாற்றி விடுகிறேன் என ஆரம்பித்தவன்தான் வெளியே செல்லும் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாகிப் போனது.

ஒரு மணி நேரம் கழித்து வேறு நைட்டி அணிந்து கொண்டு,  ஈர உடைகளை கையில் எடுத்துக் கொண்டு அவள் வெளியேற, அவனோ உடல் அயர்வில் ஹாலில் அவன் போட்டு வைத்த போர்வையின் மேலேயே நன்றாக உறங்கிப் போயிருந்தான்.

முதல் வேலையாக மாமியாருக்கு அழைத்தவள்,  இங்கே வேலை முடிய தாமதம் ஆகும், தரையை கூட நானே துடைத்து விடுகிறேன், ஆளெல்லாம் அனுப்ப வேண்டாம் என சொல்லி விட்டாள்.

அவள் எல்லாம் துவைத்து காய வைத்துக்கொண்டிருக்க, எழுந்து வந்தான் ருத்ரன்.

“இன்னுமாடி வேலை ஆவல?” எனக் கேட்டவனை ‘ரொம்ப நல்லவரு நீங்க!’ என்பது போல பார்த்தாள்.

“நான் ஒழுங்கா என் சோலி கழுதைய பார்க்கத்தான் கெளம்பினேன், நீதான் புள்ள” என அவளை காரணம் சொன்னான்.

“இப்ப மட்டும் வேலைக்கு அவசரம் இல்லை, போங்க போர்வை எல்லாம் எடுத்திட்டு வந்து இங்க போட்டுட்டு தலைக்கு ஊத்திக்கோங்க” என்றாள்.

“செத்த முன்னதான் குளிச்சேன், எத்தன தடவ?” என அலுத்துக் கொண்டான்.

“அதெல்லாம் ‘என்னடி இம்புட்டு சிலு சிலுன்னு இருக்க?’ன்னு கேட்டு எம்மேல பாயுறப்போ இருந்திருக்கணும்” என்றாள்.

“ஊருக்குள்ள என்னையவே விரட்ட ஒரு ஆளு இருக்குன்னா நீதான் புள்ள அது, செத்த முன்னாடி நடந்தது கூட நீ ஆசைப்பட்டதுதான், பிளான் பண்ணி  நானா உன்கிட்ட வர்ற மாதிரி வரவச்சிட்டு எல்லாம் நான்தான்னு என்னையவே பழி சொல்ற, நடத்து நடத்து” என்றான்.

“ஆமாமாம் நாங்க ஆசை பட்டதுதான் நடந்துச்சு, இவருக்கு ஆசையும் இல்லை மோகமும் இல்லை. உண்மையை ஒத்துக்க எனக்கொன்னும் உங்களை மாதிரி வெக்கம் இல்லை, தெரிஞ்சுதா? அடுத்த முறை சுதாரிப்பா இருந்துக்கிறேன், வீரரு பக்கத்துல வரும் போது என்ன சங்கதின்னு  பார்த்துக்கிறேன்” என்றாள்.

அவள் பேசுவதை எல்லாம் அவன் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. இவன் நெருங்கி வந்தால் முடியாது என அவள் ஒரு நாளும் மறுத்ததே கிடையாது.

அழுக்கான போர்வையையும் துவைக்க போட்டு விட்டு, தலைக்கு குளித்து விட்டு கீழே சென்று விட்டான்.

“என்னதான் அம்புட்டு வேலையோ, சாப்பிட நேரம் ஆகலையாடா?” என மகனிடம் சத்தம் போட்டார் வள்ளி.

“ஆச்சு ஆச்சு, வந்திடுவா” என மட்டும் சொன்னான். அவனை சாப்பிட அழைத்த போது அவள் வரட்டும் என சொல்லி தொழுவத்தில் நடக்கும் வேலைகளை பார்வையிட சென்று விட்டான்.

எல்லாம் முடித்து சாப்பிட அமரும் போது  மாலை நான்காகி விட்டது.

மூன்று செங்கற்கள் வைத்து மண் குழைத்து பூசி, வெயிலில் காய வைத்து பொங்கல் கட்டி தயாரிப்பார்கள். இதே போல் ஐந்து கட்டிகளை சேர்த்து வைத்தால் இரண்டு அடுப்புகள் உருவாகி விடும். இந்த அடுப்பில்தான் பொங்கல் வைப்பார்கள்.

இரண்டு மருமகள்கள் இருப்பதால் பத்து பொங்கல் கட்டிகளை வள்ளியும் செங்கமலமும் சேர்ந்து தயார் செய்திருந்தனர்.

 அவற்றை சாணத்தால் மொழுகி கோலமிட்டு வைக்க வேண்டும்.  சிவாவை செய்ய சொன்னார் செங்கமலம். அவளும் சரி என்றாள்.

“உனக்கு மட்டும் செஞ்சுக்க, எம்பேத்திக்கு அவளே செஞ்சுக்குவா” என்றார் பாட்டி.

பொங்கல் வைக்கும் போது அது பொங்கி வரும் விதத்தை வைத்து தம்பதியினரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றெல்லாம் பெரியவர்கள் கணிப்பார்கள். பானையை சுத்தம் செய்வது, அதற்கு இஞ்சி மஞ்சள் கொத்து அணிவிப்பது என எல்லாமே நல்ல மனதுடன் செய்யப்பட வேண்டும், இல்லையென்றால் ஏதாவது அபசகுணமாக நடந்து விடும் என மூட நம்பிக்கையும் கொண்டிருந்தனர்.

 பிறையை குறித்து சிவா எதிர்மறையாக ஏதாவது நினைப்பாள், அல்லது அவள் வசதியான வீட்டு பெண் என பொறாமை உள்ளத்தோடு செய்வாள் என்பது பாட்டியின் நினைப்பு. சிவாவுக்கு அது புரியவில்லை என்றாலும் மற்றவர்களுக்கு நன்றாகவே புரிந்தது.

பாட்டியின் மோசமான எண்ணத்தில் ருத்ரனின் தாடை இறுகிப் போனது.

வள்ளியோ, “இந்தாடி இப்ப சொல்றதுதான், உன் அடுப்பு உன் பானை அதை தவிர எதையும் தொடக் கூடாது. எவளுக்கும் வேலைக்காரியா என்ன நீயி? அவ அவ வேலைய அவ அவ வந்து பார்த்துக்கிடுவா. செக்குக்கும் சிவ லிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியலைன்னா அது அவங்க குத்தம், நமக்கென்ன வந்துச்சு?” என சத்தமாகவே மருமகளிடம் சொன்னார்.

“ஏட்டி என்னையவா சாடை பேசுற?” கோவமாக கேட்டார் பாட்டி.

“எங்குட்டு சாடையா பேசினேன்? நேராத்தான் சொன்னேன் அத்தை, உங்க பேத்திய நீங்க இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு கொஞ்சுங்க, இல்லை தலைல தூக்கி வச்சுக்கிட்டுத்தான் ஆடுங்க, அது உங்க விருப்பம்.  அதுக்காக என் மருமவள குறைச்சு பேசினீயளோ வுட்டுட்டு தேட மாட்டேன் சொல்லிப்புட்டேன்” என சொல்லிக் கொண்டே முந்தானையை உதறி சொருகினார் வள்ளி.