அன்று போகி பொங்கல். வீட்டை கழுவி சுத்தம் செய்து என ஊர் மக்களே பர பரப்பாக இருந்தனர். நாளை பத்திலிருந்து பனிரெண்டு மணிக்குள் பொங்கல் வைக்கலாம் என ஊர்க் கோயிலில் மைக்கில் அறிவிப்பு செய்து கொண்டிருந்தார் தனராஜன். அந்த ஊரில் அனைவரும் ஒரே நேரத்தில்தான் வீட்டு வாசலில் சூரியனை பார்க்க பொங்கல் வைப்பார்கள்.
சிவாவுக்கு இன்றுதான் விடுப்பு, ஆகவே மேல் தளத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். கீழே எல்லாம் முன்னரே சுத்தம் செய்தாகி விட்டது. ஒதுங்க வைத்து விட்டால் வேலை செய்யும் பெண்மணி துடைத்துக் கொடுத்து விடுவார்.
தலையில் துண்டு வைத்து கட்டி, முகத்தில் கைக்குட்டையை முகக் கவசம் போல கட்டி, நைட்டியை ஏற்றி கட்டிக் கொண்டு நாற்காலியில் ஏறி நின்று மும்முரமாக ஒட்டடை தட்டிக் கொண்டிருந்தாள் சிவா.
கோயில் வசூல் பணம் வைக்க என வந்த ருத்ரனுக்கு மனைவியை பார்த்த உடனே சிரிப்பு வந்து விட்டது.
“போகின்னா இதெல்லாம் செய்யணும், அப்பதான் எனக்கு திருப்தி” என்றாள்.
“நீ செய்றத பார்த்தா சூரியன் அஸ்தமனம் ஆன பொறவும் முடிப்பியான்னு சந்தேகம்தான். நீ கீழ போய் வேற வேலை இருந்தா பாரு, இதை நான் பார்க்கிறேன்” என்றான்.
“ஏன் உங்களுக்கு வேற வெளி வேலை இல்லையா?” எனக் கேட்டாள்.
“இறங்குடி முதல்ல” என அவன் அதட்டவும் இறங்கி விட்டாள்.
பணத்தை பத்திரப் படுத்தியவன் வேகமாக சட்டையை கழற்றி விட்டு, துண்டை முண்டாசாக கட்டிக்கொண்டான். வேஷ்டியை மடித்துக் கட்டி அவள் கையிலிருந்த ஒட்டடைக் குச்சியை வாங்கிக் கொண்டான். அவனது உயரத்துக்கு தரையில் இருந்த படியே ஒட்டடை தட்ட முடிந்தது.
“அந்த பக்கம் பாருங்க, அந்த ஃபேன் ஒழுங்கா துடைங்கன்னா என்ன செய்றீங்க நீங்க?” என அவனை எதாவது குறை சொன்ன படி இருந்தாள் அவள்.
எரிச்சலாகி விட்டவன் அவளை பிடித்து இழுத்துக் கொண்டு போய் ஹாலின் வாயிலில் விட்டு, “போடி கீழ” என்றான்.
“இங்க வேலை முடிக்காம கீழ வர வேணாம்னு அத்தை சொல்லிட்டாங்க” என்றாள்.
“அப்ப வாயை மூடிக்கிட்டு நிக்கணும்” என்றான்.
இரு கைகளையும் அவன் கழுத்தை சுற்றி போட்டுக் கொண்டவள், “ரொம்ப கட்டளை போடாதீங்க நாட்டாமை!” என்றாள்.
“ப்ச் தள்ளு புள்ள” என்றான்.
“எக்ஸ்பெக்ட் பண்ணாம தனியா இருக்க டைம் கிடைச்சா… இந்த கில்மான்ஸ் எல்லாம் நீங்கதான் செய்யணும், அட்லீஸ்ட் என்னையாவது செய்ய விடுங்க” என்றாள்.
ஒட்டடைக் குச்சியை கீழே போட்டவன், “ம்ம்… என்ன செய்யணும் உனக்கு, செய்யுடி இப்போ” என்றான்.
“ஹா இப்படி அதட்டல் போட்டா விட்ருவேன்னு பார்த்தீங்களா?” என்றவள் ஒரு கையை மட்டும் அவனிடமிருந்து எடுத்து, தோள் வளைவில் இருந்த பனியனின் பகுதியை கையில் கையில் சுற்றி தன்னை நோக்கி அவனை இழுத்தாள்.
அவள் முகத்தில் லேசாக மோது பட்டு நின்றவன், என்னதான் செய்கிறாள் என எதிர்வினை ஏதும் ஆற்றாமல் அவளை பார்த்தான். அவனை ஒரு மார்க்கமாக பார்த்து, ஒரு கண்ணை மட்டும் சிமிட்டி உதடுகள் குவித்து முத்தமிட்டாள்.
எழுந்த சிரிப்பை நன்றாக அடக்கிக் கொண்டே, “அம்புட்டுதானா?” எனக் கேட்டான்.
ஒற்றை புருவத்தை மேல் உயர்த்தி, அவனை தலை முதல் கால் வரை துளைக்கும் பார்வை பார்த்தவள், இரண்டடி அவனை விட்டு தள்ளி நின்றாள்.
திரைப்படங்களில் முரட்டு கதாநாயகன் செய்வது போல ஒரு பக்கம் உதடு வளைத்து சிரித்து, இல்லாத மீசையை முறுக்கி விட்டு, நைட்டியை வேஷ்டி போல மடித்துக் கட்டி, கைப்பகுதியையும் மேலே உயர்த்திக் கொண்டாள்.
முஷ்டியை மடக்கி வாய்க்கு அருகில் வைத்து தன் சிரிப்பை கட்டுப் படுத்திக் கொண்டான் ருத்ரன்.
நெஞ்சை நிமிர்த்தி கால்களை அகட்டி அகட்டி வைத்து அவனை நோக்கி வந்தவள், “என்ன மச்சான் வர வர மினு மினுப்பு கூடிக்கிட்டே போவுது? ஆர்ம்ஸ் காட்டுறதும் கண்ணால கொக்கி போட்டு இழுக்கிறதும்… ஒரு பொண்டாட்டி எப்படி இயல்பா நடமாடுறது, கொஞ்சமாச்சும் அடக்க ஒடுக்கமா இருக்க வேணாம்? நாங்களும் நல்லவளாவே எம்புட்டு நேரம் நடிக்கிறது? கூச்ச நாச்சத்தை கூடைக்குள்ள போட்டு அடைச்சு வச்சிட்டு பக்கத்துல வாய்யா” என்றாள்.
மெல்ல சிரித்துக்கொண்டே, “எதுக்குடி?” எனக் கேட்டான்.
“பகல்ல கிளு கிளுப்பா ஒரு மேட்னி ஷோ ஓட்டத்தான்” என சொல்லி பார்வையால் அவனுக்கு படுக்கையறையை சுட்டிக் காட்டினாள்.
அவளுக்கும் பின்னால் எட்டிப் பார்த்தவன், “என்னம்மா ஏன் மாடியேறி வந்திருக்க? அப்படியே நின்னுட்ட என்ன சேதி?” எனக் கேட்டான்.
அதிர்ந்து போன சிவா திரும்பவே இல்லை. வேகமாக நைட்டியை இறக்கி விட்டு, கீழே கிடந்த ஒட்டடைக் குச்சியை கையில் எடுத்துக் கொண்டு அரக்க பறக்க ஓடிச் சென்று அறைக்குள் மறைந்தாள்.
சிரித்துக்கொண்டே அவன் உள்ளே வருவது தெரிந்தது. சும்மா சொன்னாரோ என்ற சந்தேகத்துடன் எட்டிப் பார்த்தாள். அங்கே யாருமே இல்லை எனவும் கணவனை முறைத்தாள். வேகமாக அவளை இழுத்து கட்டிக் கொண்டான்.
“போங்க, அத்தைதான்னு நெனச்சி பயத்துல… பாருங்க ஹார்ட் பீட் எப்படி எகிறிப் போச்சுன்னு?” என சொல்லி, அவன் கையால் தன் இதயத் துடிப்பை உணரச் செய்தாள்.
“மனுஷனை பாடு படுத்தவும் ஒரு அளவு இருக்கு புள்ள” என்றான்.
“அதெல்லாம் உங்களை நான் என்னவும் செய்வேன், உங்கள்ட்ட எனக்கு எதுக்கும் அளவு கிளவு கிடையாது” என சலுகையாக சொன்னாள்.
அவளின் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டவன், “என்னடி ஆச்சு உனக்கு?” எனக் கேட்டான்.
“சும்மா…” என்றவளுக்கும் சிரிப்பு வந்தது.
“விளையாட்டு பேச்சு போலவே மனசுல உள்ளதை எல்லாம் சொன்னியோ? பகல்ல கவனிக்கிறது இல்லனு குறையா புள்ள, ஹ்ம்ம் சொல்லு?” எனக் கேட்டவனின் பார்வையும் படுக்கையின் பக்கம் சென்றது.
“ஹையோ ஆள விடுங்க சாமி! தூசை தட்டுங்க, துணி குவிஞ்சு கெடக்கு அதை பார்க்க போறேன்” என சொல்லி விலகினாள்.
அப்படியே விட்டு விடாமல் அவளை கைக்குள் வைத்துக் கொண்டே, தன் உதடுகள் எட்டும் இடமெல்லாம் இதமாக ஒற்றி எடுத்து விட்டே அவளை விடுவித்தான். எம்பி அவனது நெற்றியில் இதழ் பதித்து விட்டே அவளும் அங்கிருந்து சென்றாள்.
அரை மணி நேரத்தில் தன் வேலையை முடித்து விட்டவன், கை கால்கள் கழுவிக் கொண்டு வந்தான். இரண்டு மூன்று நாட்களாக துணியே துவைக்காமல் சேர்த்து வைத்திருந்தாள் சிவா.