“நான் வரலைப்பா!” என பொய்யாக மறுத்தவளை குண்டு கட்டாக தூக்கிச் சென்று படுக்கையில் விட்டான். அவனுடைய நெற்றித் தழும்பில் உதடுகள் குவித்து முத்தமிட்டவள், அவனது உதடுகளை வருடி சுண்டி இழுத்தாள்.
“அப்படி ஏதும் சட்டமாங்க எஜமான்?” என்றவள் மீண்டும் அப்படியே செய்ய, அவளது சேட்டையை அடக்கி, அவளை மயக்கி, அவளுக்குள் காதலாக புதைந்து அவளுடன் ஒன்றிப் போனான்.
இப்படித்தான் பகலில் என்ன நடந்தாலும் இரவில் ராசியாகிக் கொண்டனர்.
இரண்டு நாட்களுக்கு பின், ருத்ரனும் சிவாவும் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவ்விடம் வந்தார் பாட்டி.
“ஏன்டாடாப்பா உன் சித்தப்பனோட நிலத்தையெல்லாம் பார்த்துக்கிட மாட்டேன்னு ஏதும் சொன்னியா என்ன? மவனை கூப்பிட்டு வச்சுக்கிட்டு எல்லா பக்கமும் அல்லாடிகிட்டு நிக்கிறானே, செத்த ஒத்தாசை பண்றதுக்கு என்னடா?” எனக் கேட்டார் பாட்டி.
பாட்டிக்கு சொல்லி புரிய வைக்கும் மன நிலையில் இல்லை ருத்ரன். இவராக கணித்து ஏதோ பேசுகிறார் என்பதால் தலையை மட்டும் அசைத்து வைத்தான்.
கணவனை இப்படி சொல்லவும் சிவாவால் தாள முடியவில்லை.
“நீங்க நினைக்கிற மாதிரிலாம் இல்லை ஆத்தா, இவருகிட்ட முழு பொறுப்பு கொடுக்க மாட்டேங்குறாங்க, அவுங்களும் சரியா பார்க்க மாட்டேங்குறாங்க” என்றாள் சிவா.
“நீ சும்மா இரு புள்ள, ஆத்தாகிட்ட விளக்கினா மட்டும் என்னாயிட போவுது?” என மனைவியை பேச விடாமல் செய்தான்தான் ருத்ரன். அவளும் அவன் முன்பு அமைதியாகவே இருந்தாள்.
ருத்ரனுக்கு ஏதோ அழைப்பு வர, சாப்பிட்டு முடித்திருந்தவன் கைப்பேசியில் பேசிக் கொண்டே மாடிக்கு சென்று விட்டான்.
“ஏட்டி என்னடி சொல்ற, முழு சேதியும் சொல்லு” என்ற பாட்டி, சிவாவை விடுவதாக இல்லை. அவளும் தோப்பில் நடந்த பேச்சை எல்லாம் அப்படியே சொல்லி விட்டாள்.
தனராஜன் வீட்டில்தான் இருக்கிறார் என அவளுக்கு தெரியவில்லை. என்ன சொல்கிறாள் என்பதையெல்லாம் பொறுமையாக கேட்ட தனராஜன் அவர்கள் முன் வந்து நின்றார்.
இல்லாதது எதையும் சொல்லி விடவில்லையே என சிவாவும் பயப்பட வில்லை. யார்தான் இவருக்கு புரிய வைப்பது, தான் பேசியாவது புரியட்டும் எனதான் நினைத்தாள். இன்னும் இவளை காணோமே என ருத்ரனும் கீழே வந்து விட்டான்.
“ருத்ரன் தப்பா என்னடா செஞ்சிப்புடுவான்னு இப்படி பேசியிருக்க, இம்புட்டு காலமும் அவன் துணையிருக்க போயிதான் உன் வண்டியும் ஓடிட்டு இருக்கு, நடக்கிற ஏதும் நல்லாயில்லை சொல்லிப்புட்டேன்” என மகனிடம் அங்கலாய்த்து விட்டு அகன்று விட்டார் பாட்டி.
சிவாவை முறைத்த தனராஜன், ருத்ரனின் இருப்பை கண்டுவிட்டு அவனிடம், “உன் சித்தியும் வாக்க பட்டு வந்து வருஷம் முப்பது ஆகுது, இப்ப வரை பதிவிசா இருக்கா, ஒரு நாளும் இப்படி அதிக பிரசங்கி வேலை பார்த்தது இல்லை, உன்னைய சொல்லணும், பொண்டாட்டிய விட்டு பேச சொல்லிட்டு இருக்க ஹ்ம்ம்?” என கோவமாக சொன்னார்.
திருப்பி பேசி விட ருத்ரனுக்கு அரை நொடி போதும். தன் மனைவியின் முன் அவருக்கு இன்னும் தலையிறக்கம் ஆகி விட வேண்டாம் என கருதி அமைதியாகவே நின்றான்.
மேலே வந்த பிறகு, “அவர் வீட்ல இருக்க விஷயமே தெரியாதுங்க” என ஆரம்பித்தாள் சிவா.
“ஆத்தாகிட்ட என்ன சொன்ன?” என கேட்டவனிடம் உள்ளதை சொல்லி விட்டாள்.
“நான்தான் ஏதும் பேசாதன்னு சொன்னேன்ல, அதென்ன என் பேச்சை கேட்க கூடாதுன்னு இருக்கியா?” என அவளை திட்டினான்.
“உங்களை என்ன வேணா பேசுவாங்க, சும்மாவே இருக்கணுமா நான்?”
“அவ்ளோ ஈஸியா போச்சா உங்களுக்கு? இப்படி இருந்தா இன்னும் உங்க தலைல மொளகா அரைப்பாங்க, உழைக்கிறத கூட விடுங்க, அதை மெச்சிக்க கூட மாட்டேங்கிறாங்க, போதாதுக்கு உங்களை தப்பா வேற நெனப்பாங்களா? இப்ப கூட உங்க சித்தப்பா அவரு மேல தப்பே இல்லைங்கிற மாதிரி பேசிட்டு போறாரு, ஒன்னும் கேட்டுக்காம நிக்கிறீங்களே” என ஆதங்கமாக கேட்டாள் சிவா.
“சும்மா எல்லாத்துக்கும் விளக்கம் வெங்காயம்லாம் சொல்லிட்டு இருக்க முடியாது, இதெல்லாம் உன்கிட்ட சொன்னேன்ல என்னைய சொல்லணும்”
“என்கிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லுவீங்களாம்?”
“நொச நொசன்னு ஆரம்பிச்சிட்டியா நீ? நெல்லரைக்கிற மெஷின் கணக்கா… ச்சே காது நோவுது, நீ பேசிட்டே இரு, நான் வர்றேன், அலுத்து சலிச்சு வர்றவனை செத்த நேரம் நிம்மதியா இருக்க வுடுறாளா பாரு!” என்றவன் நிற்காமல் சென்று விட்டான்.
மோசமாக திட்டியிருந்தால் கூட தாங்கிக் கொண்டு சாவகாசமாக சண்டையிட்டிருப்பாள். அவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதை அனுதினமும் நினைப்பவளை போய், நிம்மதியாக இருக்க விடவில்லை என குற்றமாக சொன்னதும் அவள் மனம் காயப்பட்டு விட்டது.
இரவு வீடு வந்தவனிடம் பேசாமல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் சிவா.
எதையும் நியாயம் கேட்க வேண்டும் என்பதற்காக இவளிடம் நான் சொல்லவில்லையே, மனதின் பாரத்தைதானே இவளிடம் இறக்கி வைத்தேன், அதைப் போய் எதற்கு வெளியிடுகிறாள் என அவனுக்கு கோவம். வழக்கத்துக்கு மாறாக அவளை சமாதானம் செய்யாமல் அமைதியாக படுத்து விட்டவன் விரைவாக உறங்கியும் விட்டான்.
ரகசியங்களை வெளியில் சொல்லக்கூடாது என சிவாவுக்கும் தெரியும், இதொன்றும் அப்படியில்லை, வேலை செய்பவர்கள் முன்னிலையிலேயே தனராஜன் அப்படி பேசியிருக்க, இந்நேரம் ஊரில் இதைப் பற்றி பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். வீட்டு ஆட்களுக்கு மட்டும் இப்போது தெரியவில்லை.
மாமியாரை விட்டால் கணவன் பக்கம் பேசவென ஆட்கள் கிடையாது, பெரியவர்கள் யாருக்கென பார்ப்பது என மழுப்பியே பேசுவார்கள், நானும் வாயை திறக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்திருப்பதா, அதை ஏன் இவர் தவறாக நினைக்க வேண்டும்.
தனராஜன் சொல்வது போல குடும்ப விஷயங்களில் பெண் தலையிடாமல் இருந்தால்தான் அவள் பண்பானவளா? என் கணவனின் நல்லது கெட்டது எல்லாம் என்னைத்தானே பாதிக்கிறது, எனக்கில்லாத உரிமையா? ஒற்றை ஆளாக உழைத்து தேய்பவருக்கு தனியாக ஊதியமா வழங்குகிறார்கள், சம்பளம் இல்லாத வேலைக்காரரா இவர்? நான் பேசத்தான் செய்வேன் என்பது சிவரஞ்சனியின் நிலைப்பாடு.