அவள் முகம் திருப்பவும்தான் பகலில் நடந்தது நினைவு வந்து, சமாதானம் பேச வருவான். அவன் கையில் சிக்காமல் போக்கு காட்டி அவனை ஆட்டிப் படைப்பாள். அவள் தன்னிடம் வர மாட்டாள் என அவன் சுணங்கும் நேரம், தானாகவே வந்து பேசி விடுவாள்.
மனைவி ஆசைப்படுகிறாள் என ஊரடங்கிய பிறகு நாடாக் கட்டிலை ஹாலுக்கு வெளியே உள்ள இடத்தில் போட்டு அவளோடு படுத்திருப்பான்.
கறுத்த மச்சான், மிளகா பழம், சண்டி வீரன், டென்ஷன் பார்ட்டி என அவள் அவனை அழைக்கும் பட்டப் பெயர்களை கேட்டு விட்டு முறைப்பான்.
“எங்க எனக்கு இப்படி ஏதாவது பேர் வச்சு ஆசையா கூப்பிடுங்க பாப்போம்” என அவள் கேட்டால், “ஒன்னும் தோனலையே புள்ள!” என்பான்.
“எப்ப பாரு அதென்ன புள்ள? ஏன் எனக்கு பேரு இல்லை?” எனக் கேட்டு வம்பிழுப்பாள்.
அவனுக்கு என்னமோ அவளை அப்படி அழைக்கத்தான் வந்தது, அதுதான் பிடிக்கவும் செய்தது.
அதை சொல்லாமல், “எல்லாரும் சிவான்னு கூப்பிடுறாங்க, ஆம்பள பேர் போல இருக்கு” என அவனும் அவளிடம் வம்பு செய்வான்.
“அப்ப ரஞ்சனின்னு கூப்பிடுறது?” என அவளும் யோசனை சொல்வாள்.
“முழு பேர் சொல்லியாவது கூப்பிடலாம்ல?” என சிணுங்குவாள்.
“என்னடி ரோதனை பண்ற? அது உம்பேரு எம்புட்டு நீட்டமா இருக்கு, சின்னதா ‘புள்ள’ அப்படி சொல்லதான் எனக்கு வசதி” என சொல்லி அவளை வாட விட்டு, நிதானமாகத்தான் அவள் காதில் உதடுகள் உரச “சிவரஞ்சனி…” என முழுப் பெயரை சொல்வான்.
அவன் குரலில் தன் பெயரை கேட்கும் போதெல்லாம் நமக்கு அழகான பெயர் என புளகாங்கிதம் அடைவாள்.
பகலில் அவன் கோவம் கொண்டு ஏதாவது பேசியதற்கு இரவில்தான் விசாரணை செய்வாள். தவறென புரிந்து அவனும் என்ன சொல்வதென விழிப்பான்.
அன்று அப்படித்தான் அவனுக்கு சின்ன மனக் கசப்பு.
சித்தப்பாவின் தென்னந்தோப்பையும் ருத்ரன்தான் பார்க்கிறான் இல்லையா? அங்கே காய் இறக்கும் ஆட்களுக்கு ஒரு மரத்துக்கு இவ்வளவு என சம்பளம் பேசியிருந்தான்.
மகனோடு திடீரென அங்கு வந்த தனராஜன் “உன் தோப்புல கொடுக்கிற கூலிய விட, இங்குட்டு மட்டும் அதிகமா கொடுக்கிற, நீ தர்மவான்னு பேர் வாங்க என் காசுல கை வைக்கிறது சரி கிடையாதுல்ல ருத்ரா” என சிரித்துக் கொண்டே சொல்லி விட்டார்.
போன வாரம் வரை அவர் சொன்ன தொகைதான், இது இந்த வாரத்திலிருந்துதான் அமலுக்கு வந்திருக்கிறது. இனி அவன் தோப்பிலும் இதே சம்பளம்தான் வழங்க போகிறான். அரைகுறையாக விஷயத்தை தெரிந்து கொண்டு தன்னை இப்படி பேசியதில் அவனுக்கு மன வருத்தம்.
சற்று நேரத்தில் வேலை செய்த ஆட்கள் மூலமாகவே உண்மை நிலவரம் தனராஜனுக்கும் தெரிந்து விட்டது. ஆனால் ருத்ரனை பேசியது பேசியதுதானே.
மதியத்தில் சிவாவை அழைக்க ருத்ரன் வர, ஏதோ நினைவில் துப்பட்டாவை இழுத்து கட்டாமல் வண்டியில் ஏறி விட்டாள்.
“நெனப்ப எங்குட்டு வச்சிருக்கடி?” என சுள் என கேட்டு விட்டான். வழியிலும் சரி, வீடு வந்து சாப்பிடும் போதும் சரி ஒரு வார்த்தை பேசவில்லை.
அப்போது அமைதியாக இருந்து விட்டவள் இதோ இப்போது அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டு, அவனது தாடையை இறுக்கமாக பிடித்துக் கொண்டே, “நெனப்ப எங்க வச்சிருப்பேனாம்? என்ன கேள்வி அது?” என கேட்டாள்.
தன்னை வலிக்க செய்யும் அவளின் கையை விலக்கி விட்டவன், “அப்படியா கேட்டேன், வேற ஏதோ நெனப்புல நான்தான் இருந்திருப்பேன், விடுடி” என்றான்.
“அப்படி என்னவாம் மூட் அவுட் என் ஜமீந்தாருக்கு?” என விசாரித்தாள்.
மனதை அழுத்திக் கொண்டிருந்ததால் காலையில் நடந்ததை அவளிடம் சொல்லி விட்டான். கலைக்கு விவசாயத்தில் நாட்டமில்லை, மகனை வேறு ஏதும் செய்ய வைக்க சித்தப்பா விருப்ப படவில்லை, நான் ஒரு முறை எடுத்து சொல்ல போய் என் மேலேயே அவருக்கு அதிருப்தி என அனைத்தையும் பகிர்ந்து கொண்டான்.
அவர்களை நினைத்து அவளுக்கு கோவமாகி விட, “பேசாம அவுங்க பொறுப்புலேயே எல்லாத்தையும் விட்டுட்டு உங்க வேலைய மட்டும் பாருங்களேன்” என்றாள்.
“மூனு மாசம் அவங்க பார்த்தா போதும் ஒன்னும் உரு சேராது, திரும்ப என்கிட்டதான் வந்து நிப்பாங்க. உதவாமலும் இருக்க முடியாது, இப்படித்தான் நாலு நாள் முன்ன களை எடுக்கிறப்ப எல்லாம் கலை பார்த்துப்பான்னு சொல்லி விட்டாரு, நானும் என்ன ஏதுன்னு போயி பார்த்துக்கல.
பத்து ஆளு வேலைக்கு நின்னாவோ, ஆனா ஏழு ஆள் வேலைதான் நடந்திருக்கு, இவன்கிட்ட கேட்டா ஆளுங்க வேலை பார்த்திட்டுத்தான் இருந்தாவோன்னு சொல்லுறான். உடையவன்தானே கூட நின்னு வெவரமா வேலை வாங்கணும்?அது கூட பரவாயில்லை வேலைதான் மந்தாமச்சு.
முந்தாநாளு மடை திறந்து விட்ருக்கணும், இவன் செய்யவே இல்லை, நல்ல நேரத்துக்கு நான் வேற வேலையா அங்குட்டு போவ, அதை பார்த்தேன், அப்புறம் ஆளுங்க வச்சு செய்ய வச்சேன். கண்ணு முன்னால பயிறு பாழாகுறதை எப்படி வேடிக்கை பார்க்க?” என வேதனையாக கேட்டான்.
“இவ்ளோ செய்ற உங்களை என்ன வேணா பேசுவாங்களா? எவ்ளோ காலம் பொறுத்து போவீங்க? உங்க குணத்துக்கு ஒரு கட்டத்துல பெருசா வெடிச்சிடுவீங்க, அப்ப எல்லாமே சிக்கலா போயிடும்” என்றாள் சிவா.
“ப்ச், இன்னிக்கு சாயந்தரமே என்கிட்ட வந்து தெரியாம பேசிப்புட்டேன்னு சொன்னாரு சித்தப்பா, ஆனாலும்… நான் சொன்னதெல்லாம் கம்மி, இப்படி சின்ன சின்னதா நெறைய நடந்திருக்கு. என்னமோ போ” என சலித்தான்.
ஒரு நாளில் பேசி தீரும் பிரச்சனை கிடையாது, இன்று இந்தப் பேச்சை இத்தோடு நிறுத்துவது நலம் என நினைத்தாள்.
“ரொம்ப சலிப்பு வருதே சூரருக்கு, தப்பாச்சே” என சொல்லி, அவன் முகத்தை தன்னை நோக்கி திருப்பினாள்.
“நீ இழுக்கிற வேகத்துக்கு என் கழுத்து சுளுக்க போவுது, பதுக்க செய்யேன்” என்றான்.
“என்ன ஆசாமி நீங்க, பொண்டாட்டி கை பட்டா ஜிவ்வுனு இருக்குனு கதை வுடனும், இப்படி குறை பட்டுக்க கூடாது” என்றாள்.
அவள் பக்கமாக நன்றாக திரும்பி படுத்துக் கொண்டவன், “இந்த நாடா கட்டிலு தாங்காது, இங்குட்டு வச்சு உசுப்வி விடாத என்னை, உள்ளுக்கு போலாமா?” எனக் கேட்டான்.