“என்ன கேள்வி கேட்டா ரோடுன்னு பதில் சொல்றீங்க, அப்படி ஒன்னும் கடிச்சி தின்னுட மாட்டேன், பயப்படாதீங்க” என்றாள்.

“ஏட்டி அப்படியே தூக்கிட்டு போயிடுவேன் வீட்டுக்கு” என சொல்லி புல்லட்டில் இருந்து இறங்குவது போல பாவனை செய்தான்.

“ஏன் சிரம படுறீங்க, வான்னு கூப்பிட்டா நானே வர போறேன்” என சளைக்காமல் வாய் பேசினாள்.

அவன் விழிகள் பிதுங்க நிற்பதை பார்த்து ரசனையாக கண்கள் இரண்டையும் சிமிட்டி சிரித்தவள், டாடா சொல்லி விட்டு உள்ளே செல்ல நடந்தாள்.

“பேசி பேசியே என்னைய சுருட்டி இடுப்பு மடிப்புல அடக்கி வச்சுக்கிடுவா போல!” என முணு முணுத்துக் கொண்டேதான் சென்றான் ருத்ரன்.

வெளி வேலையாக பட்டுக்கோட்டை சென்று திரும்பிய ருத்ரன், மதியம் அரை மணி நேரம் தாமதமாகத்தான் சிவாவை அழைக்க வந்தான். அஞ்சலகத்தின் வெளிப்புறத்தில் அமர்ந்திருந்தவள் மலர்ந்த முகமாக வந்து வண்டியில் ஏறிக் கொண்டாள்.

வழியிலும் சரி, வீடு வந்த பிறகும் சரி ருத்ரன் கிண்டல் கேலி என எதுவும் மனைவியிடம் பேசவில்லை. ஆனால் அவனது பார்வை அவளை தொடர்ந்து கொண்டே இருந்தது. அதுவே அவளை பட படப்பாக்கியது.

மதிய உணவுக்கு பின் வெளியில் சென்று விட்டான் அவன்.

பொறி கிளற வேண்டும், விளக்கில் திரி போட்டு வைக்க வேண்டும், சற்று ஓய்வெடுத்து விட்டு கீழே வந்து விடு என மருமகளிடம் சொன்ன வள்ளி, “புதுப்புடவை ஏதாவது கட்டிக்கிட்டு வா ஆயி, விளக்கு வைக்கும் முன்ன அவனோட கோயிலுக்கு போய்ட்டு வந்திடலாம்” என்றார்.

காலையில் தலைக்கு ஊற்றிக் கொள்ள நேரம் இல்லாததால் இப்போது தலை குளித்து விட்டே கீழே வந்தாள் சிவா.

அம்மா முன்கூட்டியே சொல்லியிருந்ததால் ஐந்து மணிக்கெல்லாம் வீடு வந்து விட்டான் ருத்ரன். புடவை, நகை, பூ என அலங்கரித்து நின்றிருந்த மனைவியை ஏமாற்றாமல் கண்களால் பருகிக் கொண்டான். அத்தனை வாய் அடித்தவள் அவனது ரசித்த பார்வையை கூட எதிர்கொள்ள முடியாமல் நாணத்தால் திணறினாள்.

பக்கத்தில் உள்ள கோயிலுக்கு ஜோடியாக நடந்தே சென்றனர். ஊர்க் கண்கள் அவர்களையேதான் மொய்த்தன, சுற்றமே இருவருக்கும் தெரியவில்லை, தங்கள் துணையின் அருகாண்மையில் இருவருக்கும் மனம் பூரித்து கிடந்தது.

வீடு வந்தவள் மாமியார்களுடன் சேர்ந்து தீபங்களால் வீட்டை ஒளியூட்டினாள். மாட்டுத் தொழுவத்தின் முன்பும் சின்னதாக கோலமிட்டு அதைச் சுற்றிலும் விளக்குகள் வைத்தாள்.

தீப ஒளி அவள் முகத்தில் பட அவளின் தேஜஸில் நெஞ்சம் விம்ம அவளை பார்த்திருந்தான் ருத்ரன். காற்று வீச கைகள் கொண்டு தீபங்களை அணைய விடாமல் காக்க பார்த்தாள். நிறைய விளக்குகள் இருக்க, அவளால் எல்லா தீபங்களையும் எப்படி காக்க முடியும்?

விளக்குகளை காற்று அணைத்து விடாத படி அரணாக வந்து நின்று கொண்டான் அவன். கணவனை நிமிர்ந்து பார்த்தவள், “நாம போன பின்னாடி காத்துல அணைஞ்சா என்ன செய்யுறதுங்க?” எனக் கேட்டாள்.

தீவனம் இருக்கும் பெரிய டிரம் எடுத்து வந்து காற்று வரும் பக்கம் வைத்து விட்டவன், “இப்ப அணையாது புள்ள” என்றான்.

அவள் எழ முனைய, கை கொடுத்து உதவினான். அவன் முகம் பார்க்க முடியாமல் தடுமாறினாள்.

அவன் லேசாக சிரிக்கவும், “கிண்டல் செய்யாதீங்க” என சிணுங்கினாள்.

“நான் ஒரு வார்த்தை கூட பேசல புள்ள”

“அதான் பார்வையாலேயே ஓட்டுறீங்களே” என்றாள்.

“அநியாயமா பேசாத, நான் பாட்டுக்கும் செவனேன்னுதான் இருக்கேன், ஆமாம் நீயென்ன அடிக்கடி தலைய குனிஞ்சு தானா சிரிச்சுக்கிற, என்ன சங்கதி புள்ள?” என தீவிரமான தொனியில் கேட்டான்.

“அது… வம்பாடு பட்டு ஒரு கறுத்த மச்சானை வழிக்கு கொண்டு வந்திருக்கேன், அந்தாளு என்னடான்னாக்கா எனக்கே கிறுக்கு புடிக்க வச்சிட்டாரு”

“இவ ரொம்ப சேப்பு! ஏதோ மொச்சை கொட்ட கணக்கா கண்ணும் முந்திரி பழம் கணக்கா மூக்கும் இருக்க போய் பார்க்கிற மாதிரி இருக்க, பெரிய இவ மாதிரி என் நெறத்த குத்தி பேசாதடி” என்றான்.

“போதும் போதும் மூக்கும் முழியுமா இருக்கேன்தானே? பண்ணையாருக்கு கிளியோபாட்ரா வேணுமாக்கும்? நாங்க அழகு இல்லைனா வேற எவ இவரு கண்ணுக்கு அம்சமா தெரியுறாளாம்?” என நொடித்தவள், வெள்ளையன் காளையை பார்த்து, “உங்க ஆளுக்கு என்னைய பார்த்தா ரசிக்க தோணல, இங்கேயே உன் பக்கத்துல கட்டிலை போட்டு ம்ஹூம் கட்டாந்தரையில தனியா படுத்துக்க சொல்லு” என்றாள்.

அவளின் முழங்கையை பிடித்து தன்னிடம் நெருக்கமாக நிறுத்தியவன், “நான் ரசிகக்கலைன்னு கண்டியா நீ? இன்னிக்கு உன்னால வீடு மட்டுமா வெளிச்சமா கெடக்கு, என் மனசும்தான் புள்ள” என்றான்.

அவனது கன்னத்தில் கை வைக்க போனவள் தயக்கமாக கையை பின்னுக்கு இழுத்தாள். அவளின் கையை தானே இழுத்து தன் கன்னத்தில் பதித்துக் கொண்டவன், “தீப சுடர் எம்புட்டு அழகோ அப்படி அழகு புள்ள நீயும்” என உணர்வுப் பூர்வமாக சொல்லி, கண்களை மூடிக் கொண்டான்.

சில நொடிகள் அந்த தருணத்தை அனுபவித்துக் கொண்டவர்கள் கை கோர்த்துக் கொண்டுதான் வீட்டுக்கு வந்தார்கள். மற்றவர்கள் இருக்கவும் அழகாக விலகிக் கொண்டார்கள்.

சாப்பிட்டு முடித்து மாடிக்கு வந்த அடுத்த நொடி, சிவாவை அணைத்துப் பிடித்துக் கொண்டான் ருத்ரன். அவனுடன் ஒன்றிக் கொண்டவளை அள்ளிக் கொண்டு போய் படுக்கையில் விட்டான்.

ஆசையும் காதலுமாக அவன் அவளை நெருங்க, வாயாடிக்கு வார்த்தையும் வரவில்லை, வெட்கத்தையும் துறக்க முடியவில்லை. அவன் தன் உரிமையை நிலை நாட்ட முயல, அவனுக்கு அடிபணிய மறுத்து மிரண்டாள்.

“எல்லாம் வாய் பேச்சுலதான் வில்லாதி வில்லி, செயல்ன்னு வந்தா பம்முற,  பயப்படாத புள்ள” என சொல்லி அவளின் நெற்றியில் ஆறுதலாக முத்தமிட்டான்.

அவளின் நெற்றி சுருக்கமும் வேக மூச்சுகளும் தளராத உடலும் அவனை முன்னேற விடவில்லை.

அவள் முகத்தருகில் அவன் முகம், இதழ் விரித்து புன்னகை செய்தவன் அவளின் தலை கோதி கொடுத்து, “என்னாச்சு, புடிக்கலியா புள்ள?” எனக் கேட்டான்.

“என்ன?”

“என்னைய புடிக்கலியா இல்லை நான் நடந்துக்கிறது புடிக்கலியா?”

“முத தடவன்னா அப்படித்தானே இருக்கும், அதையெல்லாம் கேள்வியா கேட்குறீங்க, அதான் புடிக்கல” என்றவள், கண்களை மூடி அவன் முகத்தை தன் நெஞ்சில் பதித்துக் கொண்டாள்.

சில நொடிகள்தான் அவளின் மிரட்சி எல்லாம், பின் தன்னையே மறந்து அவனிடம் மயங்கி விட்டாள்.

வெளிப்பார்வைக்கு முரட்டு மனிதனான அவன் காதல் பெருகி சித்தம் பித்தாகும் நேரத்திலும் கூட, பெண்மையை கையாள்வதில் எத்தனை மென்மையானவன், தன் இணையின் உணர்வுகளை மதிப்பதில் எந்தளவு மேன்மையானவன், கொண்டவளை ஆட்கொண்டு எப்படி கொண்டாடுபவன் என்பதையெல்லாம் சிவரஞ்சனி மட்டுமே அறிந்து கொண்ட ரகசியங்கள் ஆயின.

அவள் ஏற்றி வைத்திருந்த தீபமெல்லாம் காற்றின் ஜதிக்கு ஏற்ப நடனம் ஆடிக் கொண்டிருக்க, அவளோ அவனுடன் இரண்டறக் கலந்து போனாள்.

புது மண்ணில் நட்டு வைத்த தளிர் செடி உறுதியாக பற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் நேசத்தை அரும்புகளாக முளை விடவும் ஆரம்பித்தது.