மொட்டவிழ்ந்த தேனரும்பே -12

அத்தியாயம் -12

மாலையில் ருத்ரன் வீடு வந்த போது வீட்டில் ஒரே சண்டை.

கலையரசன் மது அருந்தி விட்டு வந்திருப்பான் போலும். சகுந்தலை இன்னும் இந்த வீட்டில்தான் இருக்க, மகளோடு சேர்ந்து கொண்டு  அவரும் மருமகனை திட்டியிருக்கிறார். அவன் பதிலுக்கு கோவமாக பேசியிருக்கிறான்.

தடுக்க போன செங்கமலத்தை பிடித்துக்கொண்ட சகுந்தலை “நல்ல மகனை வளர்த்து வச்சிருக்க, என் பொண்ணு வாழ்க்கையே போச்சு” என அவரிடம் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.

பெரியவர்கள் இருவரால் கூட ஏதும் செய்ய முடியவில்லை.

இதில் தான் போனால் சரியாக வராது என்பதால் தனராஜனை வரவழைத்து விட்டார் வள்ளி.

சகுந்தலை தன் தம்பியையும் விட்டு வைக்கவில்லை. தன் அப்பாவை பேசியதும் கலையரசனுக்கு ஆத்திரமாகி விட்டது. மாமியாரை வெளியே போ என சொல்லியிருக்கிறான்.

“என் பொறந்த வூடுடா இது” என்ற சகுந்தலை தன் கணவர் மற்றும் மகனை வரவழைத்து விட்டார்.

போதையில் இருந்த கலையரசனை அறைக்குள் போட்டு பூட்டி வைத்த தனராஜன், அக்காவின் கணவர் மற்றும் மகனிடம் சமாதானமாக பேசிக் கொண்டிருந்தார்.

“என்னத்த சொல்லுங்க மச்சான், எம் பொண்ணு வாழ்க்கை இது, வர சொல்லுங்க உங்க மகனை, ரெண்டு வார்த்தை நறுக்குன்னு கேட்டாதான் எனக்கு ஆறும்” என நின்றார் சகுந்தலையின் கணவர்.

பிறை அவளது அறையில் அழுது கொண்டு படுத்திருந்தாள்.

“அவனை திட்ட கண்டிக்க எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்குது மாமா, ஆனா இப்ப வேணாம், காலைல வாங்க” என அக்கா கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் தனராஜன். கலையை பார்த்தே தீருவேன் என அவர் அடமாக நிற்க, வேறு வழியில்லாமல் மகனை வெளியில் அழைத்து வந்து விட்டார் தனராஜன்.

“அவனை எதுக்கு கூட்டியாறீய, உள்ளுக்கவே இருக்க வைங்க, பொறவு பேசிக்கிடலாம்” என்றார் வள்ளி.

“மாமா இவனை பார்க்காம போவ மாட்டாரு அண்ணி, இருக்கட்டும் நாம இத்தனை பேரு இருக்கையில என்னாவ போவுது” என சாதாரணமாக சொல்லி விட்டார் தனராஜன்.

“வாய்யா வா, என் வூட்ல செல்லமா வளந்த பொண்ண ரகசியமா கல்யாணம் பண்ணிகிட்டேயே, ஊரும் ஒறமொறையும் மெச்ச அவ கூட நல்லா வாழ்ந்து வடிக்கிற! அசிங்கமா இல்லை உனக்கு?” என கலையரசனிடம் கோவமாக கேட்டார் பிறையின் அப்பா.

பொறுப்பில்லை, வீட்டுக்கு நேரத்துக்கு வருவதில்லை என பிறையின் அண்ணனும் கோவமாக பேசினான்.

இதற்கு மேல் தான் என்ன பேசுவது, அவர்கள் கேட்பதில் நியாயம் உள்ளதே என தலையிட்டுக் கொள்ளவில்லை வள்ளி.

பேச்சுக்கள் அதிகமாகவும் தனராஜனுக்கு அவமானமாக இருந்தது. மகனின் முதுகில் அடித்து இப்படி கொண்டு வந்து நிறுத்தினாயே என்னை என திட்டினார்.

அப்பாவிடமிருந்து விலகி நின்ற கலை, “உங்கூட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி என்னத்தய்யா பிரயோசனம்? அவ எங்கூட வாழறதே இல்லை, எனக்கு பொண்டாட்டியாவே இல்லை அவ, அப்புறம் என்ன இதுக்கு நேரத்துக்கு வூட்டுக்கு வரணும் நான்? முதல்ல உங்க மகளுக்கு புத்திமதி சொல்லுங்கய்யா” என நடுசபையில் நாகரீகம் இல்லாமல் கணவன் மனைவியின் தனிப்பட்ட விஷயத்தை சொல்லி விட்டான்.

அறையிலிருந்த பிறைக்கும் இது காதில் விழ, அவமானம் தாள முடியாமல் வேகமாக அறைக் கதவை அடைத்து விட்டாள்.

பிறையின் அண்ணனுக்கும் கலைக்கும் பேச்சுவார்த்தை முற்றிப் போய் கைகலப்பாகி விட்டது.

அந்த நேரம் பார்த்துதான் வீடு வந்தான் ருத்ரன். என்ன சண்டை என புரியா விட்டாலும் இருவரையும் விலக்கி விட்டான்.

கலையை தனராஜன் பிடித்துக்கொள்ள, பிறையின் அண்ணனை ருத்ரன் பிடித்துக்கொண்டான்.

திமிறி விலகிய கலை வேகமாக உள்ளே சென்று விட்டான். சில நொடிகளில் கையில் அரிவாளோடு வெளியே வந்தவன் பிறையின் அண்ணனை நோக்கி ஆவேசமாக சென்றான்.

ருத்ரன் தன் பின்னால் பிறையின் அண்ணனை பாதுகாப்பாக நிறுத்தி, தம்பியிடம் அரிவாளை கீழே போடும் படி அதட்டிக் கொண்டிருந்தான்.

கலை நிதானத்தில் இருந்திருந்தால் கண்டிப்பாக அண்ணன் பேச்சுக்கு கட்டுப்பட்டிருப்பான், தலைக்கேறியிருந்த போதை அண்ணன் மீதான பயத்தை தூர விரட்டியிருந்தது. பிறையின் அண்ணனை காயப்படுத்தி விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான்.

தம்பியின் கன்னத்தில் அறைந்து அவன் கையில் இருந்ததை பிடுங்கி சிவாவை பார்த்தான் ருத்ரன். அவள் வேகமாக ஓடி வந்து கணவனிடமிருந்து அரிவாளை பெற்றுக் கொண்டு உள்ளே சென்று ஒளித்து வைத்தாள்.

பிறையின் அண்ணன் கலையை அடிக்க வர, ஒரு கையால் அவனைப் பிடித்து சோபாவில் தள்ளிய ருத்ரன், கலையை இழுத்துக் கொண்டு போய் சித்தப்பாவின் அறையில் விட்டு கதவை மூடினான்.

மகளின் அறைக் கதவை தட்டிப் பார்த்த சகுந்தலை, அவள் திறக்காமல் போகவும் என்னவோ செய்து கொள்ள போகிறாள் என சத்தம் போட்டார்.

பிறையின் அண்ணன், அப்பா இருவரும் கதவை காலால் உதைத்து பிறையின் பெயரை சொல்லி சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர்.

செங்கமலம் வள்ளியின் கையை பிடித்துக்கொண்டு பயத்தோடு அழ, “யாரு உம் மருமவ ஏதும் செஞ்சிக்கடுவாளா? சும்மா பயம் காட்டுறா, நீ செவனேன்னு இரு” என அதட்டினார் வள்ளி.

“கதவை உடைச்சு போடுய்யா” என பேரனின் கையை பிடித்துக்கொண்டு அழுதார் மங்களத்தம்மாள்.

அதற்குள் கதவை திறந்து விட்டாள் பிறை. இனி இங்கு இருக்க மாட்டேன் என அவள் சொல்ல, அவளின் பெற்றோரும் மகளை தங்களுடன் அழைத்துச் செல்லவே பார்த்தனர்.

இங்கிருந்து பிறை சென்று விட்டால் இந்தப் பிரச்சனையை சரி செய்யவே முடியாது, விடியட்டும், அவனை நான் கண்டிக்கிறேன் என்றார் தனராஜன்.

மனைவியோடு ஒழுக்கமாக வாழ லாயக்கு இல்லை, அதைக் கேட்டால் சொந்த மச்சானை வெட்ட வருகிறான்,  அவனை சரி செய், பிறகு என் மகளை அனுப்புவது பற்றி யோசிக்கிறேன் என சொல்லி விட்டார் சகுந்தலை.

“அடியே நாளைக்கு கார்த்திகை தீபம், அவ வாக்கப் பட்டு வந்த மொத வருஷம், வூடான வூட்டுல வெளக்கேத்த இங்குட்டு இருக்க வேணாமாடி?” என்றார் பாட்டி.

“இவ வாழ்க்கையே அவிஞ்சு கெடக்கு, இதுல உன் வீட்ல தீபம் ஏத்துறதுதான் குறை! போம்மா அங்குட்டு” என்ற சகுந்தலை, கணவரை பார்த்து, “என்னங்க வேடிக்கைங்கிறேன்? காரை எடுக்க சொல்லுங்க” என்றார்.

பிறையை அழைத்துக் கொண்டு அவளின் குடும்பத்தினர் சென்று விட, மங்களத்தம்மாள் ஒரே அழுகை. தாத்தாவும் தளர்ந்து அமர்ந்து விட்டார்.

செங்கமலம் அழுது புலம்பியதை வைத்து சண்டை எப்படி வந்தது என கணித்துக் கொண்டான் ருத்ரன். சிவாதான் இரவு சமையலை பார்த்தாள்.

உணவு தயாரானதும் தாத்தாவையும் பாட்டியையும் சாப்பிட வைத்து படுக்க அனுப்பி வைத்தான் ருத்ரன்.