விவசாயத்தை விட்டால் எனக்கென்ன தெரியும், அழகு சொட்டும் உருவம் இல்லை, ரசனை சொட்டும் பேச்சும் வராது, எந்த பெண்ணுக்குத்தான் என்னை பிடிக்கும் என்பது போன்ற எண்ணங்கள் அவனுள், ஆள் புழங்காத இடத்தில் அடையும் தூசு போல படிந்து விட்டது.
வலுக் கட்டாயத்தால் என்னை திருமணம் செய்து கொண்ட சிவாவும் வேறு வழியின்றி தன்னோடு வாழ்கிறாள் போல நினைத்து விட்டான்.
சிவா அவனுடன் பழகுவதை கொஞ்சம் ஊன்றி கவனித்திருந்தால் அவளுக்கு தன்னை பிடிக்குமோ என சந்தேகமாவது அவனுக்கு வந்திருக்கும். எங்கே… அவன்தான் அவளை நிமிர்ந்து பார்ப்பதை கூட விட்டு விட்டானே.
சகுந்தலையின் பேச்சை தீவிரமாக எடுத்துக் கொண்டு, அவனை பாதிக்க விட்டு விட்டான் என்பதை விளங்கிக் கொண்டாள் சிவா. அவனிடம் அமர்ந்து பேச வேண்டும் என அவள் மெனெக்கெட, அதற்கு இடம் கொடுக்க மறுத்து கடு கடுப்பாகவே அவளிடம் நடந்து கொண்டான்.
அவனது நடத்தை அவளை வேதனை படுத்தினாலும் ‘இதுவல்ல அவர்’ என தனக்கு தானே சொல்லிக் கொண்டு மனம் துவண்டு விடாமல் தன்னை வைத்துக்கொண்டாள் சிவா.
இந்த நிலையில் எந்த விதத்திலும் அவனுக்கு பிடிக்காததை செய்து அவனது வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள விரும்பாதவள், தன் பெற்றோரிடம் கைப்பேசியில் பேசுவதோடு நிறுத்திக் கொண்டாள். அக்காவை அவர்கள் கவனித்தால் போதும், அதற்கு அம்மாவை தயார் படுத்த வேண்டும் எனவும் நினைத்திருந்தாள்.
அன்று மதியம் அஞ்சலகத்திலிருந்து சிவாவை அழைத்துக் கொண்டு வீடு வந்தான் ருத்ரன்.
சாப்பிடுவதற்கு தவிர வாயே திறக்கவில்லை ருத்ரன். அவள் மட்டும் “வயல்ல இன்னிக்கு வேலை இருக்கா?”, “பேங்க்ல பணம் போடணும்தானே, ஆச்சா?” என கேள்விகளாக கேட்டு, அவனது “ம்”, “ம்ஹூம்” என்ற பதில்களை பெற்றுக் கொண்டிருந்தாள்.
ஒரு கட்டத்தில் “நொய் நொய்ங்காத” என எரிச்சலாக சொன்னான்.
“என்னால பேசாம இருக்க முடியாது, பதில்தான் பேச முடியாது, எம்பேச்சை காதுல வாங்கிக்க கூட கசக்குதா உங்களுக்கு?” என சற்றே கோவமாக கேட்டாள். ஆமாம் கோவமாகத்தான், மென்மையான அணுகுமுறை எல்லாம் இனி வேலைக்கு ஆகாது என முடிவு செய்து விட்டாள்.
அவளின் கடின பாவத்தில் இவன் கொஞ்சம் அடங்கிப் போனான். அங்கேயே அமர்ந்து விட்டான். மதிய நேரத்தில் எப்போதாவது ஓய்வுக்கு மாடிக்கு செல்வான், வேலை இருந்தால் மாடி ஏறாமலே வெளியில் கிளம்பிடுவான். இன்று என்னவோ மனம் சோர்வாக இருந்தது.
உழைத்துக் கொண்டே இருப்பவனுக்கு எதிலும் சுவாரஷ்யம் இல்லையோ என தோன்றியது. இப்போது அவளின் கோவத்தில் தன்னிடம் உரிமை கொள்கிறாளோ என அவனை எண்ண வைத்திருக்க, அவனுக்கு அவளுடன் இருக்க வேண்டும் போலிருந்தது. சற்று முன் அவளை பேசி விட்டதில் அப்படியே அமர்ந்திருந்தான்.
சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை உள்ளே எடுத்து வைத்தவள், “மேல வரலையா? வேலை இருக்கா? நீங்களும் ரெஸ்ட் எடுத்திட்டு போலாம்ல?” என்றாள்.
‘நீ வருகிறாயா, உனக்காகத்தான் காத்திருந்தேன்’ என்பதை அவளிடம் சொல்லாமல் மாடிக்கு நடந்தான்.
“பாதி சேதிய இவரை மோந்து பார்த்து நானாவே கண்டு பிடிச்சுக்கணும் போல” என அவள் புலம்பியது அவனுக்கும் கேட்டது.
“காவா(கால்வாய்) கணக்கா வாயை பாரு!” என அவனும் அவளை பாராமல் சொல்லிக் கொண்டே படிகளில் ஏறினான்.
“அந்த வாய் இல்லைனாலும் உங்ககிட்ட பொழப்பு ஓட்டின மாதிரிதான்!”
“எத்தன வருஷம் என்கூட பொழச்சி கெடந்திட்டேன்னு இம்புட்டு பேச்சு பேசுற?”
“சொச்ச வருஷம் எல்லாம் உங்க கூடத்தானே பொழச்சாகணும்?” பொய்யாக சலித்தாள். அது அவனது உள்ளத்தை குத்தி விட்டது.
“அம்புட்டு அலுப்பு சலிப்பா இருந்தா போயிட்டே இரு, எவ கால்ல கைல வுழுந்தும் குடும்பம் பண்ணனும்னு எந்த அவசிய மசுரும் இல்லை எனக்கு!” என இரைந்தான்.
“என்ன பேச்சு பேசுறீங்க? உங்க நாக்கு என்ன தேள் கொடுக்கா? பேசாம கிளம்புங்க” என்றவள் அவனுக்கு முன் நடந்து, “செவனேன்னு இல்லாம ரெஸ்ட் எடுக்க வாங்கன்னு கூப்பிட்டேன்ல… என்னைய சொல்லணும். என்னமோ மனுஷன் புல்லட்டை எடுத்துக்கிட்டு வந்து எனக்காக வாறதும் போறதும் பார்த்திட்டு, ‘ஆஹா நம்ம புருஷன் நமக்காக இருக்காரே!’ன்னு சந்தோஷ பட்டுட்டேன், இல்லடி சிவா அவ்ளோ சீன் இல்லை உனக்குன்னு ரெண்டு வரி பேச்சுல உணர்த்திட்டாருல்ல. புது பொண்டாட்டிகிட்ட பேசுற பேச்சை பாரு!” பட்டாசாக வெடித்து தள்ளினாள்.
அவசரக்காரன் இடுப்பில் ஒரு கை வைத்து, மறு கையால் நெற்றியை பிடித்துக்கொண்டான்.
கைப்பையை நாடாக் கட்டிலில் வேகமாக போட்டவள், “விளையாட்டு பேச்சு எது வினையான பேச்சு ஏதுன்னு வித்தியாசம் தெரியாது இவருக்கு? ஊருக்குள்ள பெரிய மனுஷன்னு பேரு, வூட்டுக்குள்ள சின்ன புத்திய காட்டுறாரு. என் கை கால்ல வுழுந்து குடும்பம் பண்ணுங்கன்னு நான் என்னமோ கெஞ்சிகிட்டு நிக்கிற மாதிரி!” விடாமல் பேசிக் கொண்டே மாற்றிக் கொள்ள நைட்டியை எடுத்து கதவை அடைத்தாள்.
நாடாக் கட்டிலில் அமைதியாக அமர்ந்து விட்டான் ருத்ரன்.
ஆடை மாற்றிக் கொண்டு கதவை திறந்தவள், கழட்டிய ஆடையை கையில் எடுத்துக் கொண்டு அவனை கடந்து சென்றாள்.
“வந்த அன்னிக்கு கீழ வுழுவாம கையை புடிச்சதுல மயங்கிப் போனீல்லடி சிவா? உன்னை சொல்லணும்!” என சொல்லிக் கொண்டே அவள் குளியலறை நடக்க, சட்டென நிமிர்ந்து அவள் சென்ற திசையை வெறித்துப் பார்த்தான்.
வாளியில் தண்ணீர் நிறைத்து காலையில் கழட்டிப் போட்டிருந்தது, இப்போது கையில் எடுத்து சென்றது என அனைத்தையும் முக்கி வைத்தாள்.
நேற்று துவைத்த துணியெல்லாம் பால்கனியில் காய்ந்து கொண்டிருந்தது, எல்லாம் அரை ஈரமாக இருக்க, எடுத்து வந்து வெயிலில் போட்டுக் கொண்டே, “வெளில போறப்பல்லாம் பள பளன்னு புடவையும் தக தகன்னு நகையும் போட்டுத்தான் அலங்கரிச்சி வுடுறாங்க, எங்க ஒரு பார்வை எம்பக்கம் திரும்பணுமே… ம்ஹூம்” என்றாள்.
நான் பார்க்க வேண்டுமென அலங்கரித்துக் கொள்கிறாளா என்ற யோசனையோடு தாடையை தடவிக் கொண்டான் ருத்ரன்.
அவனுடைய அழுக்கு ஆடைகள் தனியாக ஊறிக் கொண்டிருக்க, அந்த வாளியை தர தரவென இழுத்துக் கொண்டே, “என்னிக்காவது இவரு மனசு எம்பக்கம் திரும்பும்னு நான்தான் காத்து கெடக்கேன், ஐயாவுக்கு என்ன நெனப்புன்னே தெரியலையே, அவருக்கு ஏத்தவ நான் இல்லைனு நெனப்பு இருக்குமோ? இருக்கும் இருக்கும்!
என் கை கால புடிச்சு ஒன்னும் குடும்பம் பண்ண வேணாம் சாமி, பொண்டாட்டி மனச படிக்க வேணாம்? ஹஹான் அதெல்லாம் தெரிஞ்சா அப்படி பேச சொல்லுமா?” விட்டு விளாசினாள்.
நிஜமாக தனக்கு என்னவானது என்றே அவளுக்கு தெரியவில்லை, அவனிடம் கோவமாக பேச வேண்டும் என்பது திட்டம்தான் என்றாலும் டோஸ் அதிகமாகவே இருந்தது, மூச்சு விடாமல் பேசினாள்.