“ஆமாம்ங்க நல்ல புள்ளதான் நான்” என்றவள், அவன் தட்டில் வெண்டைக்காய் பொரியல்  மட்டும் வேகமாக தீர்வதை பார்த்து இன்னும் கொஞ்சம் எடுத்து வைத்தாள்.

“ஏய் கேட்காம எதுக்கு எடுத்து வைக்கிற?” என இரைந்து விட்டான். நொடியில் அவளுக்கு கண்கள் எல்லாம் கலங்கி விட்டன.

எப்போதும் வயிறு முட்ட சாப்பிட மாட்டான், உணவை வீணாக்குவது அவனை பொறுத்த வரை கொலை குற்றத்துக்கு சமம். விளைவிப்பவன் ஆகிற்றே. இப்போது சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் அவள் காய் வைக்கவும் சினந்து விட்டான்.

அவள் மூக்கை உறிந்து அழுகையை உள் இழுத்துக் கொள்ள, “எம்புட்டு ருசியா இருந்தாலும் புடிச்சதா இருந்தாலும் அளவை மீறி சாப்பிட முடியாது என்னால, நீ பாட்டுக்கும் எடுத்து வைக்கிற?” எனக் கேட்டான்.

“கல்யாணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகுது, உங்களை பத்தி கொஞ்சம் கொஞ்சமாதான் தெரிஞ்சுக்கிறேன், பொல்லாத செயலை செஞ்ச மாதிரி பேசுறீங்களே! வேணாம்னா சாதாரணமா சொல்லுங்க” என்றவள் அந்த வெண்டைக்காயை தன் தட்டுக்கு மாற்றிக் கொண்டாள்.

அவளை சமாதான படுத்தவெல்லாம் முயலவில்லை. சாப்பிட்டு எழும் போது, “வேற சோலி கெடந்தா பொறவு பார்க்கலாம், செத்த நேரம் கட்டைய சாஞ்சு எந்திரி” என ஒன்றுமே நடக்காதது போல சொன்னான்.

அவள் அவனை நோக்கி முகத்தை வெட்டி திரும்பினாள்.

“ஆஅஹ்ன்… சர்தான், இந்த வெட்டு வெட்டுற, கழுத்துல சுளுக்கு  விழுந்தா தெரியும் சங்கதி” என சொல்லிக் கொண்டே இருக்கையில் அமர்ந்து விட்டான். வேண்டும் என்றே மேலே செல்லாமல் இருந்து விடுவாளோ என அவனுக்கு யோசனை.

ஆனால் அதிக நேரமெல்லாம் கோவத்தை தூக்கி சுமக்காமல் இயல்பாகி விட்டாள். மாடிக்கு செல்ல போனவளிடம் விடை பெற்றுக் கொண்டுதான் வெளியில் புறப்பட்டு சென்றான்.

இரவில் இன்னும் தனித்தனி உறக்கம்தான். சேர்ந்து உறங்க இருவருக்குமே தடை இல்லை, அதை யார் முன் எடுப்பது என்பதில்தான் தயக்கம். அடுத்தவர் மற்றவருக்கு விருப்பம் இல்லையோ என தவறாக புரிந்து கொண்டிருந்தனர்.

அடுத்த நாளில் காலையில் எழுந்து சிவா கீழே செல்லும் போதே, நானே அழைத்து செல்கிறேன் என்பதை சொல்லி விட்டான். “தினமுமா?” என அவள் கேட்க, “ஏன் அதுல உனக்கு ஏதும் சௌகர்ய குறைச்சலா?” எனக் கேட்டான்.

“பஸ்ல போறது வாறதுதான் அசௌகர்யம்”

“எனக்கு கஷ்டம்னு யோசிக்கிறியா?”

“என்ன கஷ்டம் உங்களுக்கு? பஸ்ல போனாதான் கால் மணி நேரம், பைக்ல போனா வெறும் பத்து நிமிஷம், எந்த முதலாளிகிட்ட வுழுந்து கும்பிட்டு பெர்மிஸன் வாங்க போறீங்க? நீங்களே வழியக்க வந்து சொல்றீங்களேன்னு திகைச்சு போய் கேட்டேன், உடனே ஆயிரெத்தெட்டு கேள்வி கேட்காதீங்க. பொண்டாட்டிக்கு செய்ய வேண்டியது உங்க கடமைதானே? செய்ங்க” என்றாள்.

“இம்புட்டு பேச அலகு வலி எடுக்காதா புள்ள உனக்கு?”

“ஏன் உங்களுக்கு காது வலிக்குதா?” என அவள் கேட்டதற்கு பதிலே சொல்லவில்லை அவன்.

தினம் கணவன் கொண்டு போய் விடுவதும் அவனே அழைத்து வருவதும் என நெரிசல் இல்லாமல் சொகுசாக சென்று வருவது சிவாவுக்கு ஆனந்தமாக இருந்தது.

காலையில் நேரம் போதாத காரணத்தால் மாலையில்தான் தன் துணிகளையும் கணவனின் துணிகளையும் துவைத்து போடுவாள். கீழே வாஷிங்மெஷின் இருந்தாலும் கையில் துவைத்தால்தான் அவளுக்கு திருப்தி. ஒரு முறை கேட்டவன்  உன் இஷ்டம் என விட்டு விட்டான்.

அந்த வாரம் ஓடியதே தெரியவில்லை. சுற்றுலாவுக்கு சென்றிருந்த கலை ஊர் வந்த பிறகும் கூட பிறைநிலா இங்கு வந்து சேரவில்லை. அவன் மீதுள்ள கோவத்தில் பிறந்த வீட்டிலேயே இருந்தாள்.

தாய் மாமன்கள் வீடுகளுக்கும் தங்கையின் வீட்டிற்கும் மனைவியுடன் விருந்துக்கு சென்று வந்த ருத்ரன், சகுந்தலை அத்தையின் வீட்டுக்கு செல்ல வேண்டுமா என யோசித்தான். அவனுக்கு முன் வள்ளியே அங்கு போக வேண்டாம் என சொல்லி விட்டார்.

மங்களத்தம்மாள் தான் தன் மகளை மதிக்கவில்லை என புலம்பிக் கொண்டிருந்தார்.

“சிவாவை குறைச்சலா நினைக்கிறா பிறை, அவ அம்மா மட்டும் சும்மா இருக்க போறாங்களா? என் புள்ளைங்கள ஏதாவது பேசிபுட்டா திரும்ப வராது மாமா, அங்குட்டு அனுப்பல மாமா” என தன் மாமனாரிடம் சொல்லி விட்டார் வள்ளி. தன் மகளை பற்றி தெரிந்து பெரியவரும் சரியென ஒத்துக் கொண்டு விட்டார்.

மனைவி வீட்டில் இல்லாததால் எல்லாம் கவலை கொள்ளவில்லை கலை. நல்லது என நண்பர்களுடன் சிறப்பாக கொட்டம் அடித்து விட்டு, தன் விருப்பம் போல் வீடு வந்தான். மகனுக்காக தனராஜன் தம்பதியினர்தான் பிறையின் வீட்டுக்கு போய் பேசி அவளை அழைத்து வந்தனர். இரண்டு நாட்கள் மகளுடன் இருக்கிறேன் என சகுந்தலையும் புறப்பட்டு வந்து விட்டார்.

மாடிப் படியில் சகுந்தலையும் திண்ணை ஒட்டில் மங்களத்தம்மாளும் அமர்ந்து  புரணி பேசிக் கொண்டிருந்தனர். ஊர்க் கதையெல்லாம் முடித்து அவர்களின் குடும்ப கதைக்கு வந்தனர்.

பிறைக்கு நல்ல வாழ்க்கை அமையவில்லை என சொன்னார் சகுந்தலை.

“அவளே கெடுத்துக்கிட்டா, ஒன்னுமில்லாத வீட்டுல பொறந்தவளுக்கு அடிச்சிட்டுது யோகம்!” என்றார் மங்களத்தம்மாள்.

  தன் மகளை ருத்ரனுக்கு கட்டி வைக்கத்தான் சகுந்தலைக்கும் விருப்பம். இப்போது அது நடக்கவில்லை என்பதால் தன் மகளை விட சிவாவுக்கு நல்வாழ்வு அமைந்து விட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆகவே, “பிறைய சொல்லி என்ன பண்ண? அவனை யாருக்கு புடிக்கும்? ஏன் அவன் பொண்டாட்டியோட அக்காவே அவனுக்கு பயந்து ஓட்டம் எடுக்கலியா? பிறை செல்வாண்டியமா வளந்தவ, என் பொண்ணுக்கு மட்டுமில்ல எவளுக்கும் அவனை கண்டா பிடிக்காது, என்னவோ வேறு வழியில்லாம காசு இருக்கேன்னு இவ கட்டியிருப்பா” என்றார் சகுந்தலை.

“அவனுக்கு என்னடி குறைச்ச? வாய் இருக்குன்னு ஏதாவது பேசாத, உன் அண்ணிக்காரி காதுல வுழுந்துச்சு உன் குடுமிய ஆஞ்சிபுடுவா”என்றார் பாட்டி.

மாடியின் மேல் படியில் நின்றிருந்த ருத்ரனுக்கு இந்தப் பேச்சுக்கள் நன்றாகவே விழுந்தன. அருகில்தான் சிவாவும் அமர்ந்திருந்தாள். கீழே உள்ள இரு பெண்மணிகளிடமும் அவளால் ஏதும் பேசிவிட முடியாது, தன் மாமியார் அங்கு இல்லாமல் போனாரே திருப்பிக் கொடுக்க என ஆதங்கப் பட்டுக் கொண்டாள்.

அந்த நேரம் எந்த விதமான உணர்வுகளையும் ருத்ரன் காண்பித்திருக்கவில்லை. ஆனால் அதன் பிறகு அவனது செயல்களில் அவளால் வேறுபாட்டை புரிந்து கொள்ள முடிந்தது. அவனது இயல்பு தொலைந்து போயிருந்தது. சிவாவுடன் இன்னும் நெருங்கியிருக்கவே இல்லை, அதற்குள் இருந்த தூரத்தை அதிக படுத்தி விட்டது போல உணர்ந்தாள்.