மழை நேரம் என்பதால் புல்லட் எடுக்காமல் கார் எடுத்துக் கொண்டு வாசலில் இருந்தான் ருத்ரன். பின்பக்கம் ஏறப் போனவளை தடுத்து, “கதவ தொறந்து விடுய்யா” என சத்தமாக மகனிடம் சொன்னார்.
“என்னம்மா ஆச்சு உனக்கு, அமைதியா இரு” என சொல்லிக் கொண்டே மனைவிக்கு கதவை திறந்து விட்டான்.
கார் கிளம்பும் முன், “போற வழில மறக்காம பூ வாங்கி கொடுய்யா” என மகனிடம் சொல்ல மறக்கவில்லை வள்ளி.
கையோடு மகளுக்கு அழைத்து, “உன் அண்ணன் உன் அண்ணியை கூட்டிகிட்டு வெளில போயிருக்கான் டி, வாழ்ந்திடுவான் டி எம்மவன்” என பரவசமாக சொன்னார். வைதேகியும் அப்படியாம்மா, இருவரையும் சேர்த்து வைத்து போட்டோ எடுக்க சொல்லி எனக்கு அனுப்பியிருக்கலாம்தானே என குறை பட்டுக் கொண்டாள்.
சிவாவின் கைப்பேசியை உடைத்து விட்டான் இல்லையா, அதை வாங்கித் தந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் ருத்ரனிடம். ஆனால் சிவா விடவில்லை. “நாடியம்மன் கோயிலுக்கு போங்களேன்” என அவளே சொல்லி அழைத்து செல்ல வைத்து விட்டாள்.
அர்ச்சனைக்கு சாமான் வாங்கும் போது அவளே பூ வாங்கி வைத்துக்கொண்டாள். அவனுக்கு அதெல்லாம் வரவில்லை, எப்படியும் அவர் பணம்தானே, யார் வாங்கினால் என்ன என சாதாரணமாகவே எடுத்துக் கொண்டாள்.
மழை லேசாக தூறல் போட, கோயிலில் கூட்டமும் இல்லை. தரிசனம் முடித்துக் கொண்டவள் அங்கிருந்த நாகலிங்க மரத்தின் அருகில் நின்று சற்று நேரம் பார்த்திருந்தாள். அவளுக்கு அந்த வித்தியாசமான பூவை காண்பது பிடிக்கும். அவளோடு நிற்காமல் மரத்தை சுற்றி முடித்தவன் கைக்கடிகாரத்தை பார்த்தான். நேரமாகிறது எனும் தோரணையில் இடுப்பில் கைகள் வைத்து முறைத்தான்.
கண்களை சுருக்கி கெஞ்சலாக அவனை பார்த்தாளே தவிர, பயந்து கொண்டு அவனிடம் ஓடவெல்லாம் இல்லை. பொறுமையாகத்தான் சென்றாள். பிரகாரம் சுற்றி முடிக்கவும் விழுந்து வணங்கி விட்டு போகலாம் என்றான்.
“கொஞ்ச நேரம் உட்காரலாமே” என்றவள் அவனது பதிலுக்கு காத்திராமல் தூணில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.
‘அலும்ப பாரேன்!’ என மனதில் சொல்லிக் கொண்டேதான் அவனும் அமர்ந்தான்.
“திருவிழா சமயத்துல எவ்ளோ கூட்டமா இருக்குங்க, இப்ப அம்மனை நல்லா பார்க்க முடிஞ்சது. என் இஷ்ட தெய்வம் இந்த அம்மன்தான்” என்றாள்.
“ம்ம்… வேண்டுகிட்டத எல்லாம் நடத்தி கொடுத்திட்டாங்களா உன் அம்மன்?” எனக் கேட்டான்.
“அது எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கு, யாருக்கும் சொல்ல மாட்டேன்” என்றாள்.
“நீயே வச்சுக்க, மதியானம் நான் தோப்புல இருக்கணும், என் பொறுமைய ரொம்ப சோதனை செய்யாம எந்திரி” என்றான்.
“சரியான குடு குடுப்ப!” என சின்ன குரலில் சொன்னாள்.
“என்ன?” என அவன் கேட்க, ஒன்றுமில்லை என வேகமாக தலையாட்டி வைத்தாள்.
காரில் செல்கையில், “முத முத வெளில கூட்டிட்டு வந்திருக்கீங்க? நாலு இடம் கூட்டிட்டு போவீங்கன்னு பார்த்தா மதியானம் ஊருக்கு ரிட்டர்ன்ன்னு சொல்றீங்க?” எனக் கேட்டாள்.
அவள் தன்னிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறாள் என அறியவுமே மகிழ்ச்சியாக உணர்ந்தான். ஆனால் முகத்தில் எதுவும் வெளிப்படவில்லை, ஏதும் சொல்லவும் இல்லை.
நல்ல விலை உயர்வான கைப்பேசியாக பார்த்து தேர்வு செய்தான். எளிமையானதாக போதும் என அவள் மறுத்த போதும், “வாங்கிக் கொடுத்தா வாங்கிக்கோயேன்” என்றான்.
சிவாவின் கழுத்தில் கிடந்த புது மஞ்சள் கயிறு அவர்கள் இப்போதுதான் திருமணம் ஆனவர்கள் என்பதை காட்டிக் கொடுத்தது. கடைப்பையன் ‘என்னடா இந்தாளு இப்படி பேசுகிறார்?’ என சிவாவை பாவமாக பார்த்தான்.
“என்னப்பா? “ என அவனிடமும் ஒரு அதட்டல் போட, “ஒன்னுமில்ல ஸார்” படபடத்தான் அந்தப் பையன்.
தன் கணவன் பேசுவதே இப்படித்தான் என இந்த ஐந்து நாட்களில் பழகியிருந்தாள் சிவா. ஆகவே அவன் பேச்சுக்கெல்லாம் சுணங்கி விடாமலும், அலட்டிக் கொள்ளாமலும் “இதுல பிளாக் இல்லாம வேற கலர்ல இல்லையா?” என விசாரித்தாள்.
இப்போது இல்லை, நாளை வந்தால் கிடைக்கும் என்றான் கடைக்காரன்.
“கலர்ல என்ன புள்ள இருக்கு, நாளைக்கு வேலைக்கு போவணும்ல நீ, கைல ஃபோன் இல்லாம இருப்பியா? என்னாலேயும் நாளைக்கெல்லாம் அலைய முடியாது” என்றான் ருத்ரன்.
“விசாரிக்கத்தான் செஞ்சேங்க, இதுவே வாங்கிக்கலாம்” என அவள் சொல்லி விட, அதையே வாங்கிக் கொடுத்து விட்டான்.
அங்கிருந்து புறப்பட்டதும், “கோதை அத்தை பணம் கொடுத்து புடவை வாங்கிக்க சொன்னாங்களே, எனக்கொன்னும் அவசரம் இல்லை, வாங்கியாச்சான்னு அவங்க கேட்பாங்க, உங்களுக்கும் திரும்ப வர முடியாதுன்னு சொல்றீங்க” என்றாள்.
வானத்தை பார்த்தவன், “நல்ல மழை புடிக்கும் போல புள்ள, நெஜமா தோப்புல வேலை இருக்கு. அடுத்த வாரம் பார்த்துக்கலாம்” என்றான்.
“ஒரு ஃபோன் வாங்க புதுப்புடவை நகைன்னு… ஃபோன் கூட நீங்க செலக்ட் பண்ணினதுதான், இதுக்கு நீங்களே வந்திருக்கலாம், நான் எதுக்கு?” எனக் கேட்டாள்.
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு சாலையில் கவனம் வைத்தான். தன்னை ஆவலாக ஒரு பார்வை கூட அவன் பார்க்கவில்லை என அவளுக்கு ஏமாற்றம். வெளிப்படையாக சொல்லத் தெரியாமல் இப்படி ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.
அவளுக்கு தன்னை பிடிக்கும் என்பதே அவனுக்கு தெரியாது, காய்ச்சலில் அவளிடம் நெருக்கம் காட்டியது கூட அவளுக்கு பிடிக்கவில்லை, பயந்து விட்டாள் எனதான் எண்ணிக் கொண்டிருக்கிறான். அதில் எங்கேருந்து அவளை ரசித்தெல்லாம் பார்ப்பான்?
அவளை வீட்டில் விட்டவன் வேகமாக மதிய உணவை முடித்துக் கொண்டு புல்லட்டில் கிளம்பி விட்டான்.
“என்னடி அதுக்குள்ள வந்துட்டீய?” என மருமகளிடம் கேட்டார் வள்ளி.
“அவங்களுக்கு வேலை இருக்காம் அத்தை” என சொல்லி புடவை மாற்ற சென்று விட்டாள்.
அன்றைய இரவும் தனித் தனியான உறக்கம்தான். என்ன அவளுக்கு முன் நாடாக் கட்டிலில் அவன் படுத்து விட்டான்.
அடுத்த நாள் ருத்ரன் எழும் நேரத்துக்கே எழுந்து கொண்டவள் காலைக் கடன்களை மட்டும் முடித்துக் கொண்டு, நைட்டியை கலைந்து விட்டு மாற்றுக்கு கட்டும் புடவையை அணிந்து கீழே சென்று விட்டாள். ருத்ரனும் வெளிக் கிளம்பி விட்டான்.
காலை சமையல் வேலை ஆரம்பித்திருக்க, என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டு செய்ய ஆரம்பித்தாள் சிவா.
“இந்தாடி குளிக்காம கொள்ளாம வந்து நிக்கிற?” எனக் குறை பேசினார் மங்களத்தம்மாள்.
“வேலை முடிச்சிட்டு போய் குளிச்சுப்பேன் ஆத்தா, வேலைக்கு போகணும்ல?” என்றாள் சிவா.
“எம்புட்டு சம்பளம் வாங்குறேன்னுட்டு வேலைக்கெல்லாம் போற? நம்ம வூட்ல பொம்பளைக எல்லாம் வூட்லதான் இருப்பாக, நீயும் இரு” என்றார் பாட்டி.
“அரசாங்கத்து வேலை ஆத்தா, கஷ்ட பட்டு வாங்கினேன்” என சிவா சொல்லிக் கொண்டிருக்க, “பொம்பள புள்ள கைல ஒரு வேலை இருக்கிறது நல்லதுக்குதான். அவ பொழப்ப எதுக்கு கெடுக்க பாக்குறீய? கொட்டகைல நீங்க இல்லாம வேலை சரியா நடக்காது, அங்குட்டு போங்க” என சொல்லி மாமியாரை அப்புறப் படுத்தி விட்டார் வள்ளி.
தன் மாமியாரை நினைத்து சிவாவுக்கு மிகுந்த சந்தோஷம். இவரின் துணை இருந்தால் இந்த வீட்டில் எந்த சிக்கலும் இருக்காது எனவும் நினைத்துக் கொண்டாள்.
எட்டே காலுக்கு பேருந்து வரும், அதை விட்டால் ஒன்பது மணிக்கு மேல்தான். ஏழரை ஆகி விட, வள்ளியே தயாராகச் சொல்லி அவளை அனுப்பி விட்டார். வேகமாக குளித்து வந்தவள் சுடிதார் அணிந்து பர பரப்பாக தயாராகிக் கொண்டிருக்க, ருத்ரன் வந்து விட்டான்.
கைப்பையில் தேவையானது எடுத்து வைத்துக்கொண்டவள், “நான் சாப்பிட்டு கிளம்புறேன்ங்க” என சொல்லி அவன் அடுத்து பேசும் முன் கீழே விரைந்து விட்டாள்.
ருத்ரன் குளித்து விட்டு சூரிய நமஸ்காரம் செய்யும் போது அவள் வழக்கமாக செல்லும் பேருந்து வந்தது. நல்ல கூட்டமான பேருந்தில் ஏறியவள் உட்கார இடமில்லாமல் நின்று கொண்டிருக்க, பேருந்து புறப்பட்டு விட்டது.
கால் மணி நேர பயணத்தில் அஞ்சலகம் வந்து விடும்தான், ஆனாலும் அவனுக்கு என்னவோ போலானது. மதியம் கூட பேருந்துக்காக முக்கால் மணி நேரம் காத்திருந்துதான் அவள் ஏறி வர வேண்டும் என்பதை நினைத்துக்கொண்டேதான் சாப்பிட்டு புறப்பட்டான்.
சரியாக இரண்டு மணிக்கெல்லாம் நினைவாக சிவாவை அழைத்து வரலாம் என கிளம்பி விட்டான் ருத்ரன். அலுவலக நேரத்திற்கு சென்றால் மகளிடம் எப்படி பேச முடியும் என, ஒரு மணிக்கு மேல்தான் மகளை சந்திக்க சென்றிருந்தனர் சிவாவின் பெற்றோர்.