தானே தண்ணீர் சூடு செய்து மருமகளின் கையில் கொடுத்த வள்ளி, “அவன்கிட்ட எதையும் சொல்லிட்டு இருக்காத, இன்னும் நொந்து போவான். அவனை பத்தி யாருக்கு என்ன கவலை, நாமதான் அவனை குறிச்சு ரோசிக்கணும்” என சொல்லி அவளை மேலே அனுப்பி வைத்தார்.
“நல்லா வருவடா நீ!” என மகனை இடித்துரைத்த பெரியவர் வெளியேறி விட்டார்.
“என்னடி நடக்குது இங்குட்டு, ஒரு மண்ணும் காதுல விழுந்து தொலைய மாட்டேங்குது” என மங்களத்தம்மாள் கேட்க, யாரும் அவருக்கு பதில் தரவில்லை.
“மாமா, அவுங்களுக்கு ஏதாவது பொறுப்பான வேலைய கொடுங்க” என்றாள் பிறை.
“செத்த நேரம் சும்மான்னு இரு ஆயி” என தனராஜன் கடுப்பாக கூறவும், முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அறைக்கு சென்று விட்டாள் பிறை.
‘இந்த அரை வேக்காட்டு பிறையை கட்டிக் கொள்ளாமல் என் மகன் பிழைத்துக் கொண்டான்’ என நினைத்துக்கொண்டே யாரையும் ஏறிட்டு பாராமல் தனது அறைக்கு சென்று விட்டார் வள்ளி.
மாமியார் சொன்னது போலவே ருத்ரனிடம் எதையும் சொல்லிக் கொள்ளவில்லை சிவா. வீட்டு வேலைகள் செய்யவெல்லாம் சிவா அஞ்சவில்லை.
காலை வேலைகளை முடித்து விட்டு வேலைக்கு சென்றால் வீடு திரும்ப மதியம் மூன்று மணியாகி விடும். மதிய சமையல் செய்யவில்லை என அதை வைத்து குறை பேசுவார்களோ என யோசனையாகி விட்டாள். அதனால் வேலையை விட சொல்ல கூறினால் என்ன செய்வது என்ற பயமும் எழுந்தது.
“என்ன புள்ள யோசனை?” என ருத்ரன் கேட்கவும், அந்த இக்கட்டான சூழல் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து ஒன்றுமில்லை என சொல்லி விட்டாள்.
சற்று நேரம் கழித்து கீழே சென்று விட்டாள். இரவு சமையல் என்ன செய்ய என மாமியாரிடம் கேட்டு நின்றாள்.
“நானே சொல்ல நினைச்சேன் சிவா. வீட்ல நடந்த பேச்சை பார்த்தியா? காலைக்கும் ரவைக்கும் செத்த ஒத்தாசை செஞ்சிபுடு ஆயி, மதியானம் நான் பார்த்துக்கிறேன். ஆனா அந்த சின்ன சிறுக்கி உன்னை ஏதும் சொன்னான்னு வச்சுக்க, வுட்டுட்டு தேடாத, எம்புட்டு மருவாதி தெரிஞ்சவளா இருக்கான்னு பார்த்தியா?” என்றார்.
“அவங்கள்ட்ட எல்லாம் நான் பேச்சே வச்சுக்கல அத்தை, இட்லியும் தக்காளி சட்னியும் வைக்கவா?” எனக் கேட்டாள் சிவா.
“ஆத்தாடி இப்பவே செய்ய கிளம்பிட்டியா? உனக்கும் உடம்பு முடியலைதானே? நாளைக்கு செய்யலாம்” என்றார் வள்ளி.
சிவா கேட்கவில்லை, நன்றாக இருப்பதாக சொல்லி சட்னி இப்போதே செய்து வைத்து விடுகிறேன் என ஆரம்பித்து விட்டாள். செங்கமலமும் உடன் வந்து நிற்க, வள்ளி அவரை முறைத்தார்.
“என்னை ஏங்கா அப்படி பாக்குறீய? அவர் ஏதோ புத்தி பிசகி பேசிப்புட்டாராம், வுடுங்க அந்த பேச்சை” என சமாதானமாக சொன்னார் செங்கமலம்.
“அதை வுடுறேன்டி, நாலு நாள் முன்ன கல்யாணம் ஆனவ சமைக்க வந்து நின்னுட்டா, உன் மருமவளுக்கு எப்ப அந்த எண்ணம் வருமாம்?” எனக் கேட்டார் வள்ளி.
எந்நேரமும் கைப்பேசியில் ரீல்ஸ் பார்ப்பதும் டிவி முன் இமை கொட்டாமல் பார்த்து கிடப்பதும் பிறையின் முழு நேர வேலை. பகுதி நேரமாக ஒப்பனைகள் செய்து கொண்டு அம்மா, தோழிகள் என கைப்பேசியில் உரையாடுவாள். சொல்லித் தந்து அம்மா வளர்க்கவில்லை, மாமியாரோ பேசத் தெரியாத அப்பிராணி, ஆகவே கலையரசனுக்கு ஏற்ற ஜோடியாக சிறந்து விளங்கினாள் பிறை.
“பூண்டு துவையல் கொஞ்சம் செய்யலாம் அக்கா” என்ற செங்கமலம், பூண்டுகளை உரிக்க சொல்லி வள்ளியிடம் தந்தார்.
“கேட்டதுக்கு பதில் சொல்லிடாத” என சலித்துக் கொண்டார் வள்ளி.
ருத்ரன் இரவு சாப்பாட்டுக்கும் கீழே வரவில்லை, பிறையை பார்க்க அவனுக்கு பிடிக்கவில்லை, சிவாதான் உணவை மேலே எடுத்து சென்றாள்.
கலையரசன் அவனது நண்பர்களுடன் பச்சைமலை பக்கத்துக்கு சுற்றுலா செல்கிறானாம். இங்கு மழையில் நசநசவென இருப்பதால் கடுப்பாக இருக்கிறதாம். இன்று இரவே கிளம்புகிறேன் என அம்மாவுக்கும் மனைவிக்கும் தகவல் சொன்னான்.
கட்டிய மனைவியுடன் நான்கு இடங்களுக்கு செல்ல துப்பில்லை, ஊர் சுற்ற திட்டமா என கேட்டு பிறை சண்டையிட, கண்டு கொள்ளவே இல்லை கலையரசன். எதற்கும் லாயக்கு இல்லை, வெட்டி ஆஃபிசர், துப்பில்லாதவன் என வாய்க்கு வாய் அவள் பேசுவதில் அவள் மீதான ஆசையெல்லாம் எப்போதோ அவனை விட்டு அகன்று விட்டது.
நீ பாட்டுக்கும் ஏதாவது பேசிக் கொள் என்ற ரீதியில் தனக்கான துணிகளை எடுத்து வைத்துக்கொண்டான். நண்பன் ஒருவனின் கார் அவனை அழைக்க வரவும் ஏறிச் சென்று விட்டான். எல்லாம் அவனுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். எப்போதாவது இருவர் அல்லது மூவர் ஒன்று கூடி பொழுதை கழிப்பார்கள். ஆனால் எப்போதும் அதில் ஒருவன் கலையாக இருப்பான்.
இங்கு தனியாக என்ன செய்வது என கேட்டு தன் அப்பாவை வரவழைத்து தன் பிறந்த வீட்டுக்கு புறப்பட்டு விட்டாள் பிறை.
தனராஜனுக்கு விவரம் தெரிய வரவும் அவன் கிளம்பும் போதே என்னிடம் ஏன் சொல்லவில்லை என மனைவியிடம் கோவப்பட்டார்.
“உங்கள்ட்ட சொல்லிருப்பான்னு நினைச்சேங்க” என அவரின் மனைவி சொல்ல, “நல்ல புள்ளைய பெத்து வச்சிருக்க” என கடிந்து கொள்ள மட்டும்தான் அவரால் முடிந்தது.
இரவில் நாடாக் கட்டிலை அறைக்குள் போட போனான் ருத்ரன்.
“இதென்ன தினம் அங்கேருந்து இங்க, இங்கேருந்து அங்கன்னு மாத்திட்டே இருப்பீங்களா?” எனக் கேட்டாள் சிவா.
அவளை ஊன்றிப் பார்த்தான். பின் ஒன்றும் சொல்லாமல் அறையிலிருந்த படுக்கையிலேயே படுத்து விட்டான். தன்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே என நினைத்தவள் நாடாக் கட்டிலில் படுத்து விட்டாள்.
எட்டிப் பார்த்தவன் இங்கே படுக்காமல் ஏன் அங்கே போனாள் என கோவமானான். ஆனால் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை அவளிடம். தன்னை அழைப்பான் என எதிர்பார்த்து அவளும் அப்படியே உறங்கி விட்டாள்.
அடுத்த நாள் விடியற்காலையே எழுந்து விட்டான் ருத்ரன். சிவா விழித்த போது பால்கனியில் நின்று குளிர்ச்சியான சூரியனை வணங்கிக் கொண்டிருந்தான். அவள் தயாராகி வந்ததும், “வெளில போய்ட்டு சீக்கிரம் வந்திடுவேன், பட்டுக்கோட்டை போகணும், ரெடியா இரு” என சொல்லி புறப்பட்டு விட்டான்.
வயல், தோப்பு, கோயில் வசூல் விவகாரம் என எல்லாம் முடித்து பத்து மணி போல வீடு வந்தான் ருத்ரன். காலை சாப்பாட்டு நேரம் தவறி விட்டது, மாத்திரை போட வேண்டாமா என கடிந்து கொண்டார் வள்ளி.
“ஏதாவது சொல்லிட்டே இருக்கணும் உனக்கு?” என மட்டும் சொன்னான். சிவா பரிமாற, சாப்பிட்டு முடித்தவன், “ரெடியா இருக்கியா போலாமா?” எனக் கேட்டான். அவளும் ஆம் என்றாள். மாமியாரிடம் முன்னரே தகவல் சொல்லியிருந்தாள்.
“இப்படியே போவியா? இன்னும் புதுப் பொண்ணுதான் நீயி, ஊருல எல்லாரும் பார்க்க மாட்டாக, வேற நல்ல புடவையா கட்டு, ரெண்டு நகையை எடுத்து போடு” என மருமகளை ஏவிய வள்ளி, “பூ வாங்கியாந்தா என்னடா? மழைல எப்பவும் வர்ற பூக்கார ஆத்தாவையும் காணோம்” என மகனிடம் சொன்னார்.