ருத்ரன் பொதுவாக இது போன்ற ஊராரின் சொந்த பிரச்சனைகளில் எல்லாம் தலையிட்டுக் கொள்ள மாட்டான். தாத்தாவுக்காக அவர்களை அமைதி படுத்த முனைந்தான். தம்பிக்காரன் சண்டையின் தீவிரத்தில் யாரென பாராமல் ருத்ரனின் கையை தட்டி விட்டான்.
சுள் என கோவம் ஏற, அவனது கையை முறுக்கி பிடித்து இழுத்து தள்ளி நிறுத்திய ருத்ரன், அண்ணன்காரனை பார்வையாலேயே அடக்கினான். தம்பிக்காரன் திமிறிக் கொண்டே ஏதோ பேச, அவனிடமிருந்து மதுவின் வாடை வந்ததை உணர்ந்தான் ருத்ரன்.
“இவன் ஒரு நிலையிலேயே இல்லை தம்பி, அப்பறம் எப்படி சொல்றது ஏறும்?” என்றார் ஒருவர்.
அருகில் கார்ப்பரேஷன் தண்ணீர் குழாய் உண்டு. காலை மாலை இரு வேளையும் அங்கு தண்ணீர் வரும். கோயிலுக்கும் அங்கிருந்துதான் தண்ணீர் பிடித்து பேரலில் நிறைத்து வைத்துக்கொள்ளப் படும். பிளாஸ்டிக் குடம் ஒன்றில் காலையில் வந்த தண்ணீர் பிடிக்க பட்டு அங்கேயே இருந்தது.
விரைந்து சென்று அந்த தண்ணீர் குடத்தை ஒற்றைக் கையால் தூக்கி வந்த ருத்ரன், தம்பிக்காரனின் தலையில் ஊற்றினான். பின்னர் காலி குடத்தால் அவனது காலிலேயே ‘டொம்’ என ஒரு அடி வைத்து, அந்தக் குடத்தை தூக்கிப் போட்டான்.
அப்பாவை அழைக்க வந்த சிவரஞ்சனியின் கால்களில் வந்து விழுந்தது அந்தக் குடம். “ஹையோ!” என சன்னமாக அலறி வாயில் கை வைத்தாள் அவள்.
“ஐயோ பாப்பா நீ ஏன் ஆயி இங்குட்டு வந்த?” எனக் கேட்டுக் கொண்டே சிவரஞ்சனியிடம் ஓடிச் சென்றார் அவளின் அப்பா உத்தமன்.
“முதல்ல ஆயியை இங்கேருந்து அழைச்சிட்டு போங்க” என யாரோ சொல்ல, மகளோடு நடையை கட்டி விட்டார் உத்தமன்.
அண்ணன் தம்பி இருவரையும் மாறி மாறி பார்த்த ருத்ரன், “கோயில் வாசல்ல நின்னு அடிச்சிக்கிட்டு நிக்கிறீயளே, அறிவில்ல?” என திட்டினான். அவனது கடுமையான முக பாவத்தில் அதற்கு மேல் சண்டையிடாமல் அவர்களும் விலகியே நின்றார்கள்.
பெரியவர் மீண்டும் நியாயத்தை சொல்ல, அதை ஏற்றுக்கொள்ளாத தம்பி, இந்த ஊர் பஞ்சாயத்து முறையெல்லாம் இப்போது செல்லுபடி ஆகாது, சட்டப் படி எனக்கு சொத்தில் பங்கு இருக்கிறது, கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.
“பார்த்துக்க டா, உன் அக்காளுங்க ரெண்டு பேருக்கும் கூட சொத்துல பங்கு இருக்கு, என்ன பண்ணணுமோ உன் அண்ணன் செஞ்சுபுடுவான்” என நக்கலாக சொன்னார் சதாசிவம்.
தம்பி இயலாமையோடு அந்தக் கூட்டத்தை பார்த்திருந்தான். அந்தப் பக்கத்தில் எல்லாரும் வீட்டு பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதில்லை. நகைகள் போட்டு சீர்வரிசைகளோடு பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்கவே செலவாகிறது, அதற்கு பின்பும் பிரசவம், பண்டிகை என்றால் சீர்வரிசை, வேறு நல்லது கெட்டதிற்கும் செய்முறை என சகோதரன்தான் செய்வான் என்பதால் தொழில் சொத்து எல்லாம் ஆண் வாரிசுகளுக்குத்தான்.
பெரும் பணக்காரர்கள் இந்த வகையில் வர மாட்டார்கள், அவர்கள் பெண்களுக்கும் சொத்துக்கள் கொடுத்தார்கள், ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் இப்படித்தான் வழக்கத்தில் இருந்தனர்.
அக்காக்கள் அண்ணன் சொல்வதைத்தான் கேட்பார்கள் என அந்த தம்பிக்கு தெரியும், கோர்ட் என சொல்லி விட்டானே தவிர, கேஸ் போட்டால் உடனே தீர்ப்பு வர போகிறதா என எண்ணியவன் பெரியவர்கள் சொல்வதற்கு கட்டுப் படுவதாக சொன்னான்.
நல்ல நாள் பார்த்து பத்திரம் பதிவு செய்து கொள்ளுங்கள் என சொல்லி அண்ணன் தம்பி இருவரின் கைகளையும் பிடித்து சேர்த்து வைத்து தட்டிக் கொடுத்தார் சதாசிவம்.
உடனே இவர்கள் வம்பு செய்து கொள்ளாமல் இருக்க போகிறார்களாக்கும் என மனதில் மட்டுமே நினைத்துக்கொண்டான் ருத்ரன். அவனுக்கு இப்படி பஞ்சாயத்தில் எல்லாம் பெரிதாக ஈடுபாடு இல்லை.
காலம் நவீனமாகி விட்டது, யார் இதையெல்லாம் மதிக்கிறார்கள், எல்லாம் நேர விரயம், வேறு வேலை இல்லையா நமக்கு? என்பதுதான் அவனது எண்ணம்.
“இந்த வருஷம் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யணும் ருத்ரா” என ஆரம்பித்தார் ஒரு பெரியவர்.
கலைய நினைத்த கூட்டம் அப்படியே நின்று ஆலோசனை செய்ய ஆரம்பித்து விட்டது.
இளவட்டங்கள் ஒன்றிணைந்து கும்பாபிஷேக வேலைகளை ஆரம்பிப்பார்கள் என அறிவித்தார் சதாசிவம். பேரனுடன் கலந்து பேசாமலேயே ருத்ரன் எல்லாம் பொறுப்பாக பார்த்துக் கொள்வான் என உறுதியும் தந்து விட்டார்.
தாத்தாவை எதிர்த்து பேச மாட்டான் என்றில்லை, ஊரார் முன் மரியாதை குறைவாகி விடுமே என அந்த நேரம் அமைதி காத்தான் ருத்ரன். கூட்டம் கலைய ஆரம்பிக்கவும் தாத்தாவை புல்லட்டில் அமர சொன்னான்.
இதோ இருக்கிற வீட்டுக்கு நடக்க முடியாதா என்னால் என கேட்ட பெரியவர் சொக்கனின் தோளை பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டார்.
புழுதியை கிளப்பிக் கொண்டு மண் சாலையில் புல்லட்டை விட்டான் ருத்ரன்.
“ம்க்கும் யார் வீட்டு காசுல? ஆத்தா விட்டுட்டுத்தான் வேடிக்கை பார்க்கும்” என்றான் சொக்கன்.
அதென்னவோ உண்மைதான், சதாசிவத்தின் மனைவி மங்களத்தம்மாள் கால் காசை கூட கணக்கு பாராமல் எடுக்க மாட்டார். அவரை எதிர்த்துக் கொண்டு பெரியவர் செய்ய வேண்டும் என்றாலும் திண்டாடத்தான் வேண்டும்.
ஒரு காலத்தில் ஊர் காரியங்கள் அனைத்தையும் இந்தக் குடும்பம்தான் பார்த்துக் கொண்டது.
அந்த ஊரிலேயே சுதந்திர காலத்துக்கு முன்பே மாடி வீடு கட்டி வாழ்ந்தவர்கள் என்ற பெருமை அவர்களுக்கு உண்டு. பெரியவரின் மூத்த மகன் தலையெடுத்த காலத்தில் என்னவோ இயற்கை சீற்றம் படுத்தி வைத்து விட, விவசாயம் நன்றாக அடிபட்டு விட்டது.
விவசாயத்தை விட்டு விட்டு வேறு தொழில் செய்யலாம் என ஆரம்பித்து நிறைய நட்டப் பட்டு போனார்கள். கவலையில் நாற்பது வயதிலேயே மாரடைப்பில் இறந்து போனார் ருத்ரனின் அப்பா.
சாதாசிவத்தின் இளைய மகன்களும் அண்ணனால்தான் இப்படியாகி விட்டது என குறை சொன்னார்களே ஒழிய, எப்படி சரி செய்வது என்பதை பார்க்கவில்லை.
நஷ்ட கணக்கை அண்ணனுக்கு அர்ப்பணித்து விட்டு மிச்ச சொத்துக்களை பங்கு போட்டு கேட்டனர். சதாசிவம் ஒத்துக் கொள்ளவில்லை, சொத்துக்களை எப்போது பிரிப்பது என்பது என் முடிவு என சொல்லி விட்டார்.
பதினைந்து வயதில் ருத்ரன் தாத்தாவுடன் இணைந்து கொண்டான். பள்ளி முடித்து வீடு வந்த பத்து நிமிடத்திற்குள் எல்லாம் தாத்தாவை தேடிக் கொண்டு சென்று விடுவான். பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு தொலை தூரக் கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றவன் விவசாயத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.
நட்டமாகிய அடுத்த ஐந்து வருடக் காலத்தில் ஓரளவு மீளச் செய்து விட்டார் சதாசிவம். ருத்ரனுக்கு இருபத்தைந்து வயதான போதுதான் சொத்துக்களை பிரித்துக் கொடுத்தார்.
பூர்வீக வீட்டிலேயே பெரியவரின் முதல் மகனின் குடும்பமும் இரண்டாவது மகனின் குடும்பமும் வசிக்க, மூன்றாவது மகன் மட்டும் தனியாக சென்று விட்டார்.
இன்னும் இரண்டு நாட்களில் ருத்ரனுக்கும் அவனது அத்தை மகள் பிறைநிலாவுக்கும் நிச்சயம் செய்ய இருக்கிறார்கள்.
அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தார் வள்ளிக்கண்ணு.
மங்களத்தம்மாளுக்கு தன் மூத்த மகள் வயிற்றுப் பேத்தி பிறைநிலா என்றால் அத்தனை உயிர். இரண்டு வருடங்களுக்கு முன்பே ருத்ரனுக்கு பெண் பார்க்கலாம் என வள்ளி ஆரம்பித்த போது, பிறை இன்னும் படிப்பை முடிக்காததால் காலத்தை கடத்தி விட்டார் பாட்டி.