மொட்டவிழ்ந்த தேனரும்பே -1

அத்தியாயம் -1

மதியம் மூன்று மணி, ஏதோ சத்தம் கேட்டு அந்தப் பக்க மக்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து எட்டிப் பார்த்தனர்.

முருகன் கோயில் வாசலில் பத்து பதினைந்து நபர்கள் இருக்க, யாரோ இருவருக்கு நல்ல வாக்குவாதம். மத்தியஸ்தம் செய்கிறோம் என அந்த இருவரை சுற்றி இன்னும் சிலர், அதுதான் இப்படி சத்தம்.

அக்கம் பக்க பகுதிகளில் இருந்த ஆண்கள் கோயில் நோக்கி படையெடுக்க, பெண்கள் எல்லாம் வீட்டு வாசலில் வாயிலில் நின்றோ, ஜன்னல் வழியாகவோ, அல்லது முனையில் இருந்த மாடி வீட்டில் ஏறி நின்றோ வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தனர்.

பட்டுக்கோட்டையிலிருந்து இருபது நிமிட வாகன பயணத்தில் இருக்கும் கிராமம் அது. பள்ளிக்கூடம், மருத்துவமனை என வசதிகள் ஏதும் கிடையாது. ஊரில் உள்ள அனைவரையும் அனைவருக்கும் தெரியும்.

பங்காளிகள் இருவருக்கு சொத்து பிரிப்பதில் பிரச்சனை, சமீபத்தில்தான் அவர்களின் தந்தை உயிர் நீத்திருந்தார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் இப்படி ஊர்க் கோயிலின் பக்கத்தில் இருக்கும் மரத்தடியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேசித் தீர்த்துக் கொள்வது இவர்களின் வழக்கம்.

தன் தம்பியை படிக்க வைத்து என்னை படிக்க வைக்கவில்லை, ஆகவே வீடு எனக்குத்தான் என சொல்லிக் கொண்டிருந்தான் அண்ணன். கலைக்கல்லூரியில் சில ஆயிரங்கள் கட்டி படிக்க வைத்ததற்கு சொத்தில் குறைப்பதா என தம்பி ஆவேசம் கொண்டான்.

குடும்பநிலை ஒத்துழைப்பு தராத காரணத்தால் படிப்பை நிறுத்தி விட்டு சின்ன வயதிலேயே அப்பாவோடு விவசாயம் பார்க்க வந்து விட்டான் உன் அண்ணன். நீ தனியாக சென்ற போது பெற்றோரை இறுதி வரை காப்பாற்றி கரை சேர்த்தான்,  சகோதரிகளுக்கும் நல்லது கெட்டது அவன்தான் செய்கிறான், வீடு அவனுக்கு சேர்வதுதான் நியாயம், ஒரு குறிப்பிட்ட தொகையை பணமாக தருவான், அதை வாங்கிக் கொண்டு வீட்டை  உன் அண்ணனுக்கே விட்டுத் தந்து விடு என நியாயம் சொன்னார் ஊர் பெரியவர் சதாசிவம்.

எண்பது வயதில் இன்னும் நடை உடையாக இருக்கிறார் பெரியவர். முழங்கால் வரை ஏற்றிக் கட்டிய வேஷ்டி, சட்டையின்றி வெறும் உடம்பில் தோளில் வழியும் துண்டு, புஷ்டியான நரைத்த மீசை, கழுத்தில் ஒற்றை உத்திராட்சையுடன் கூடிய கயிறு என இருந்தார்.

அதிகமாக பேசியதில் அவருக்கு இருமல் வர, “வீட்டுல இருங்கன்னு சொன்னா கேட்கிறியளா? அண்ணனுக்கு தெரிஞ்சா என்னையைத்தான் வைவாரு” என்றான் சொக்கநாதன். பெரியவரின் வீட்டில் வேலை செய்பவன்.

“என்கிட்ட வக்கணையா பேசினது போதும், போ அடிச்சிக்கிறவனுங்களை பிரிச்சி விடுடா” என சொக்கனை ஏவினார் பெரியவர்.

“நல்லா சொல்வியளே! கண்ணு மண்ணு தெரியாம மோதிக்கிறாய்ங்க, நடுவால நான் புகுந்தா என் மண்டைய உடைச்சிடுவாய்ங்க” என்றான் சொக்கன்.

தோளில் கிடந்த துண்டை எடுத்து அவனை அடித்த பெரியவர், “நிறுந்துங்கடா எலேய் சொல்லிட்டு இருக்கேனுல்லடா… நிறுத்துங்க!” என சத்தம் போட்டார். அப்படியும் அந்த சண்டை நிற்கவில்லை.

வெளி வேலையாக பட்டுக்கோட்டை சென்றிருந்த ருத்ரேஷ்வரன் வீட்டை சமீபிக்க, மினி பஸ் வந்து நின்றது. இந்த நேரம் இந்த பேருந்தில் வழக்கமாக ஒருத்தி கண்டிப்பாக இறங்குவாள். அவள் சிவரஞ்சனி, பக்கத்து ஊரிலிருக்கும் அஞ்சல்நிலையத்தில் வேலை பார்க்கிறாள்.

இரண்டு மணிக்கே அவளின் வேலை முடிந்து விடும், இரண்டே முக்காலுக்குத்தான் இந்த பேருந்து வரும் என்பதால் காத்திருந்து அதிலேயே வருவாள்.

ருத்ரன் வீட்டு மாடியில் நின்று பார்த்தால் காலையில் இவள் ஏறிச் செல்வதும் முன்மாலையில் இவள் இறங்குவதையும்  நன்றாக காணலாம். சிவரஞ்சனியின் அம்மா பிறந்த ஊர் இது. அவர் மண முடித்து சென்ற ஊரில் பிழைக்க முடியாமல் ஆறு மாதங்களுக்கு முன்புதான் இந்த ஊருக்கே வந்து விட்டனர். ஆகவே ருத்ரனுக்கு இவளுடன் பெரிதாக பழக்கம் இல்லை. பேசியது கூட கிடையாது.

அவனை கண்டாலே அவளுக்கு சற்று பயமாகத்தான் இருக்கும். இந்த விஷயத்தில் அவளையும் குறை சொல்ல முடியாது. நெடு நெடு என நல்ல உயரம், கருத்த தேகம், உழைப்பால் முறுக்கேறியிருந்த உடற்கட்டு, இளம் பருவத்தில் ஏற்பட்ட தகராறில் நெற்றியில் நிரந்தரமாக தங்கி விட்ட தழும்பு, அடுத்தவரை முறைத்துக் கொண்டே இருப்பது போன்ற முக வெட்டு என ஆளும் அப்படித்தான் இருப்பான்.

சாலை குறுகியது என்பதால் தன் புல்லட்டை மெதுவாக செலுத்தினான் ருத்ரன். சிவா உறங்கி விட்டாள் போலும்,   நிறுத்தம் வந்ததை நடத்துனர் சொல்லவும்தான் பதறிப் போய் எழுந்தாள். அவள் கடைசிப் படியில் இருக்கும் போதே விசில் ஊதப் பட்டு விட, தடுமாறி இறங்கினாள் சிவா.

முன்பும் இரண்டொரு முறை தன் வீட்டு மாடியிலிருந்த படியே ருத்ரன் கவனித்திருக்கிறான், இந்த புதிய நடத்துனருக்கு பயணிகள் இறங்கும் வரை பொறுமையே கிடையாது. இப்போதும் அப்படி நடக்க, பேருந்தை மறித்து நிற்க வைத்து விட்டான்.

“கால் இடறி அந்தப் பொண்ணு விழுந்தா என்னத்துக்கு ஆகுறது? அப்படி என்ன அவசரங்கிறேன்? ஊர்ல உன் பஸ் ஓடணுமா இல்லையா?” என கோவப்பட்டான் ருத்ரன்.

‘எப்பவுமே இப்படித்தான்’ என பேருந்தின் உள்ளே இருந்தும் சில பயணிகள் குரல் கொடுத்தனர்.

தெரியாமல் நடந்து விட்டது, ஓனரிடம் சொல்லி விடாதீர்கள் என ஓட்டுனரும் நடத்துனரும் ருத்ரனிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டனர்.

அவனது எச்சரிப்பை ஏற்றுக் கொண்டு பேருந்தை எடுத்தான்  ஓட்டுனர்.  “எம்மேலதான் தப்பு, அது… அசந்து தூங்கிட்டேன், ம்ம்… தேங்க்ஸ்” என்றாள்  சிவரஞ்சனி.

“கா மணி நேர பயணத்துல தூக்கமா! ம்ம்…நல்லாருக்கு” என கிண்டலாக சொன்னவன் மேற்கொண்டு அவளை பேச விடாமல் புறப்பட்டு விட்டான்.

இவனிடம் நான் உதவி கேட்டேனா? விடியற்காலை வரை உறங்காமல் நான் வேலை பார்த்தது இவனுக்கு தெரியவா போகிறது? என்னவோ இந்த ஊருக்கே இவன்தான் அதிபதி மாதிரியான தோரணையில் பேச்சை பாரு! என மனதிற்குள் பொரிந்தவளை கோயில் பக்கத்திலிருந்து வரும் சத்தம் ஈர்த்தது.

அந்த நேரம் அவளுக்கு அழைத்த அவளின் அம்மா, “உன் அப்பா கோயிலு பக்கமா போயிருக்காரு. சுகர் உள்ள மனுஷன் இன்னும் மதியானத்துக்கு சாப்பிடல. வாறப்ப அவரை கூட்டியாந்திருடி” என்றார்.

ருத்ரனின் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சந்தின் கோடியில்தான் கோயில். சத்தம் கேட்டு அவனும் சிவாவுக்கு முன் புல்லட்டிலேயே கோயில் நோக்கி சென்றான்.

சண்டை போட்டுக் கொள்ளும் சகோதரர்களை  அமைதியாக்க தன் தாத்தா  அல்லாடிக் கொண்டிருப்பதை கண்டவனுக்கு அவர் மீது நல்ல கோவம்.

உடலுக்கு ஏதாவது நோவு வந்து மாதம் இரு முறை மருத்துவமனை செல்ல வேண்டியதாக இருக்கிறது. இதில் இந்த ஊர் நியாயம் எல்லாம் இவருக்கு எதற்கு என அவரை மனதில் திட்டியவன், ‘எதற்கடா இவரை இங்கு அழைத்து வந்தாய்?’ என சொக்கனை முறைத்தான்.

“நான் எம்புட்டோ சொல்லிட்டேன், ஐயா கேட்கலை ண்ணா” என்றான் சொக்கன்.

“ஐயா என்ன சத்தம் போடுறீய, அமைதியா நில்லும்” என தாத்தாவிடம் சொன்னான் ருத்ரன்.

“வந்தியா ருத்ரா? அவனுவள என்னன்னு பாரு” என்ற பெரியவர் அங்கிருந்த மரப் பெஞ்சில் அமைதியாக  அமர்ந்து விட்டார்.