Advertisement

பகுதி – 08

அடுத்த சில தினங்களில் முகூர்த்த புடவை, தாலி மெட்டி” என இரு குடும்பத்தாரும் ஒன்று சேர்ந்து வாங்க கடைவீதிக்கு வந்தனர்.

முகூர்த்தப் புடவை எடுப்பதில் இருந்து தனது ஆணாதிக்கத்தை தொடங்கி இருந்தான். தேர்வு செய்த புடவையை பல காரணங்களைச் சொல்லி எடுக்க விடாமல் தடுத்தான். அதுவும் தனக்கு பிடித்த மாதிரி புடவை தான் எடுக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்தான். அவன் நினைத்ததையே சாதித்தான்.

ஆர்விகா எதுவும் பேசமுடியாமல் அமைதியாக கிளம்பினாள்.

ஏண்டா இப்படி பண்ற. முகூர்த்தப்புடவை அந்த பொண்ணு இஷ்டத்துக்கு இருக்கட்டுமே.

அதெல்லாம் முடியாதும்மா. பாக்குறது நான் தானே. எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கணும்.

“கல்யாணம் முடியட்டும். உனக்கு அப்புறம் இருக்குடா” என வானதி மகனை முறைக்க.

யாஷ்மிதனோ, “அப்புறமா தான் எல்லாருக்கும் சேர்த்து இருக்கு” என்றான்.

அப்போது ஆர்விகாவிடமிருந்து அவனுக்கு மெசேஜ் வந்தது. எடுத்துப் பார்த்ததும் யாஸ்மிதனுக்கு பயங்கர கோபமாக வந்தது.

“இவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்” என நினைத்தவன் மீண்டும் அந்த குறுஞ்செய்தியை ஒரு முறை வாசித்தான்.

“எல்லாரும் இருந்தாங்கன்னு மட்டும்தான் அமைதியா வந்தேன் இந்த அடக்குமுறை, ஆணாதிக்கம் எனக்கு சுத்தமா பிடிக்காது. எப்பவும் இப்படியே அமைதியா இருப்பேன்னு நினைக்க வேண்டாம் யாஷ். கொஞ்சம் உங்கள மாத்திக்க ட்ரை பண்ணுங்க. இல்லனா பொண்ண பிடிக்கலனு கல்யாணத்த திருத்திடுங்க” என அனுப்பியிருந்தாள்.

‘நான் எதுக்கு மாறனும். நீதான் மாறனும். பொண்ணுங்க எப்பவுமே ஆணுக்கு கீழதான் இருக்கணும். பாக்கலாம் நான் அடங்கிப் போறேனா? இல்ல ஒன்னு அடக்க போறேனானு. இதுக்கு பிறகு கல்யாணத்த நிறுத்த மாட்டேன்டி. நீயா? நானா? பார்க்கலாம்’ என நினைத்தவன், “அதுக்கு வாய்ப்பு இல்லை. எனக்கு மனைவியாவரப்போற பொண்ணு எனக்கு அடங்கி போற பொண்ணா தான் இருக்கணும் அருக்காணி மேடம்” என நக்கலாக மெசேஜ் அனுப்பினான்.

அதையும் பாக்கலாம். சேலன்ஞ்க்கு நான் ரெடி. ஒரு சின்ன திருத்தம்.

என்ன?

“என் பேரு அருக்காணி இல்ல. ஆர்விகா” என அவள் மெஸேஜ் அனுப்ப.

“அடங்கிப் போக கொஞ்சம் பிராக்டிஸ் பண்ணிட்டு வாங்க மேடம்” என மெசேஜ் அனுப்ப.

“என்னோட கேரக்டர் தெரியாம வார்த்தையை விடாதீங்க யாஷ். மெஸேஜ் பண்ற மனநிலைல நான் இல்ல. பை” என மெசேஜை நிறுத்தினாள்.

‘இவ என்ன சொல்றது. நாம இதுக்கு மேல மெசேஜ் அனுப்ப கூடாது’ என நினைத்துக் கொண்டு, தனது வேலையைத் தொடங்கினான்.

அடுத்த சில தினங்களில் பத்திரிக்கை உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுக்கப்பட்ட திருமணத்திற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்தேறியது.

வீடு மொத்தமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தது. அரண்மனை போல வீடு இருந்ததால் திருமணம் மணமகன் வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“விருந்துகள் மிகவும் பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டிருந்தது. யாஷ்மிதனின் நண்பர்களோ உனக்கு சரியான ஜோடி இவங்க தான்” என அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது. மணமகனாக யாஷ்மிதன் மணமேடையில் அமர்ந்திருக்க. மணப்பெண் அலங்காரத்தில் ஆர்விகா அழைத்து வரப்பட்டு மணமேடையில் வந்து அமர்ந்தாள்.

“பொன்னால் செய்த சிற்பம்” என காணப்பட்டாள். வர்ணிக்க வார்த்தையே இல்லை. அத்தனை அழகோவியமாக இருந்தாள்.

“இவ்வளவு அழகா இருக்கறதால தான் இவளுக்கு திமிரும் அதிகமா இருக்கோ” என நினைத்தான்.

கெட்டிமேளம் கொட்ட ஆர்விகாவின் சங்கு கழுத்தில் மங்கலநாண் பூட்டப்பட்டது. செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தும் முடிந்தது. பெரியோர்கள் நல்லாசியுடன் திருமணம் நிறைவாக நடந்து முடிந்தது. மணமகள் வீட்டிற்கு முதலில் அழைத்து சென்றனர்.

ஆர்விகா வீட்டிற்கு வந்ததும் தனது அலங்காரத்தை முதலில் கலைத்துவிட்டு நகைகளை கழட்டி விட்டு சாதாரணமாக ஒரு செயின் மட்டும் கழுத்தில் போட்டுக்கொண்டாள்.

இதென்னடி கோலம். கல்யாணம் முடிஞ்சி இன்னும் ஒரு நாள் கூட ஆகல. ஒழுங்கா இன்னும் ரெண்டு செயின் ஆரம் எதாவது எடுத்து போடு. இப்படியே மாப்ள வீட்டுக்கு அனுப்பினா எங்களுக்கும் மரியாதை இல்ல. அவங்களுக்கும் கௌரவம் இல்ல.

அம்மா. சும்மா கத்தாதிங்க. நான் கிளம்பும் போது போட்டுட்டு போறேன்.

ஆர்விகாவை முறைத்து விட்டு வளர்மதி நகர. அங்கு வந்த வள்ளி பாட்டி ஆர்விகாவை பார்த்தபடி தயங்கி நிற்க.

என்ன பாட்டி அப்படி பாக்கற.

அருக்காணி நான் இப்போ சொல்ற வார்த்தைய நல்லா மனசுல வாங்கிக்கோ.

சொல்லு பாட்டி.

“நீ என்னத்த மனசுல நெனச்சு இந்த கல்யாணத்த பண்ணிக்கிட்டியோ எனக்கு தெரியாது. போற இடத்துல எங்க மானமரியாதைக்கு பங்கம் வர மாதிரி நடந்துக்காத. இது உன்னோட வாழ்க்கை. நல்லபடியா இருந்து வாழப்பாருடியம்மா” என கண்கலங்க.

பாட்டி நீ பயப்படவே வேணாம். இப்பவும் சொல்றேன். முதல்ல எனக்கு பிடிக்கல தான். ஆனா அவங்க குடும்பத்த பாத்த பிறகு பிடிச்சு தான் ஓகே சொன்னேன். நீங்க கவலப்பட வேணாம். நிம்மதியா இருங்க.

எனக்கு இது போதும் அருக்காணி. அப்புறம் அந்த லண்டன் விஷயத்தப் பத்தியோ, மும்பை விஷயத்தைப் பத்தியோ உன் புருஷன்கிட்ட நீயா எதுவும் சொல்ல வேணாம். தானா தெரிஞ்சா பேசிக்கலாம்.

நான் எதுக்கு பாட்டி அதெல்லாம் சொல்லப் போறேன்.

ஏதோ ஆர்வக்கோளாறுல சொல்லிட்டேனா? ஏற்கனவே பொய் சொல்லி வேற கல்யாணத்த முடிச்சு இருக்கோம்.

பாட்டி அதெல்லாம் நான் பாத்துக்கறேன் விடுங்க. ஊர்உலகத்துல யாருமே பொய் சொன்னதில்லையா? நாம மட்டும் தான் புதுசா பேசற மாதிரி சொல்ற. அதுகூட அப்பாவுக்காக தான்.

அப்படி சொல்லு ஆர்வி. செல்லபாட்டி எதுக்கு ஃபீல் பண்றிங்க. ஆர்வி எல்லாத்தையும் சொன்னா. லண்டன் மேட்டர், மும்பை மேட்டர்லாம் நான் பாத்துக்கறேன். ஆர்வி டியர் நீ ஹேப்பியா உன்னோட மேரேஜ் லஃப் ஸ்டார்ட் பண்ணு.

தேங்க்ஸ் அனிஷா. நீ சப்போர்ட் பண்ணா போதும். மத்ததையெல்லாம் நான் பாத்துக்கறேன்.

“நான் இருக்கேன் டா செல்லகுட்டீ” என ஆர்விகாவை அனிஷா கட்டிக்கொள்ள. பாட்டி கண்கலங்கி நின்றார்.

“பாட்டி அவ்வளவு சீன்லாம் இல்ல. அமைதியா இருங்க. இது அவ்வளவு பெரிய பொய்யும் இல்ல. போய் அடுத்து ஆக வேண்டிய வேலைய பாருங்க” என அனிஷா சொல்ல.

பாட்டி அமைதியாக நகர்ந்தார். அனிஷாவும், ஆர்விகாவும் ஹாலுக்கு சென்று அமர.

மூர்த்தி அங்கு வந்தவர், என்னம்மா மாப்ளைய உட்கார சொல்லாம நீங்க உட்கார்ந்துட்டிங்க.

ஆர்விகா மௌனமாக ஓரக்கண்ணால் யாஷ்மிதனை பார்க்க.

யாஷ்மிதனின் விழிகள் கண்டும் காணாமல் எங்கோ சுழன்று கொண்டிருந்தது.

‘உலகமகா நடிப்புடா சாமி’ என ஆர்வி நினைத்துக்கொண்டு, நான் அப்பவே சொன்னேன். அவர் தான் கால் வலிக்குது கொஞ்ச நேரம் நிக்கறேன்டானு சொன்னாருப்பா.

‘போய் பேசறது எப்படினு ஒரு புத்தகமே போடலாம் போல’ என யாஷ் நினைத்தான்.

“ஓஓ. சரிம்மா. இருந்தாலும் அவர் நிக்கும் போது நீங்க உட்கார்ந்துட்டு நல்லாவா இருக்கு” என்றார்.

என்னங்க வந்து உட்காருங்க. அப்பா தான் சொல்றாரே.

‘என்னங்கவா. அடேங்கப்பா. இவ ரொம்ப பெரிய கேடி தான்’ என மனதில் நினைத்துக்கொண்டு வந்து அமர்ந்தான்.

இன்னும் என்னம்மா தயக்கம்.. மாமானு கூப்பிட வேண்டியது தான. நம்ம பழக்கம் அதானே. கல்யாணம் தான் முடிஞ்சிடுச்சே.

அச்சோ! இந்த அப்பா ஏன் இப்படி பண்றாங்க. கடவுளே! சத்தியசோதனை பண்றியே.

ஆர்வி கண்ணு.. என்னம்மா யோசனை.

“ஒண்ணும் இல்லப்பா. சும்மா தான்” எனத் தடுமாற.

முதல்ல கொஞ்சம் வெட்கம், தயக்கம் இருக்க தான் செய்யும். போகப்போக சரியாப்போகும்.

சரிங்கப்பா..

மாப்ளைக்கு காஃபி எதுவும் கொடுத்திங்களா?

இல்லப்பா.

“என்ன பொண்ணும்மா நீ. உன் புருஷன நீ தான விட்டுக்கொடுக்காம கவனிக்கனும். அனிஷா உங்க பெரியம்மாகிட்ட சொல்லி மாப்ளைக்கு எதாவது கொடுக்க சொல்லுங்க” என்றார்.

“அவருக்கு என்ன பிடிக்கும்னு தெரியாம என்னத்த கொண்டு வரசொல்றது” என ஆர்வி முனகினாள்.

“சரிங்க பெரியப்பா” என அனிஷா சமையலறைக்கு போக.

மாப்ள சின்ன பொண்ணு. வெவரம் தெரியல. தப்பா எடுத்துக்காதிங்க.

பரவால மாமா.. எனக்கு இப்போ எதுவும் வேணாம். கொஞ்ச நேரம் அப்படி வெளிய நின்னுட்டு வரேன்.

சரிங்க மாப்ள. அப்படியே தோட்டத்த சுத்தி பாக்கலாமே. ஆர்வி கண்ணு மாப்ளைய தோட்டத்துக்கு கூட்டிட்டு போ.

“சரிங்கப்பா. வாங்க யாஷ்” என்றவள் அப்பாவின் முகத்தைப்பார்த்து அர்த்தம் புரிந்தவளாய், “வாங்க” என்றாள்.

இப்ப தானம்மா சொன்னேன். மாமானு கூப்பிடு.

ஆர்விகா அப்பாவின் வார்த்தையை மீறமுடியாமல் தயங்கி தயங்கி வாங்க மா…மா… என்றாள்.

‘மாமாவா. இவங்க இன்னும் எந்த காலத்துல இருக்காங்க. என்னோட லெவலுக்கு இதெல்லாம் சோதனையா? இன்னும் என்னெல்லாம் இருக்கோ தெரியலையே’ என நினைத்தான்.

அவனது மனதின் வார்த்தைகள் மௌனத்தில் வெளிப்பட்டது. அமைதியாக ஆர்விகாவுடன் தோட்டத்திற்கு நடந்தான்.

தோட்டத்திற்கு வந்த மறுநொடி, யாஷ் அப்பாக்காக தான் மாமானு சொன்னேன். மத்தபடி அப்படியே கூப்பிடுவேன்னுலாம் எதிர்பாக்காதிங்க. என்னோட கேரக்டரே வேற. பெரியவங்க எதிர்பார்ப்ப நிறைவேத்தறது நம்ம கடமை அவ்வளவு தான்.

ஓகே அருக்காணி. தேங்க்ஸ். எங்க மாமானு கன்ட்டினியூ பண்ணிடுவியோனு பயந்தேன். எனக்கு அதெல்லாம் பிடிக்காது. நீ என்னோட நேம் சொல்லியே கூப்பிடலாம்.

“அருக்காணியா? ஆர்வி.. ஆர்விகானு சொல்லுங்க” என கண்கள் சிவக்க முறைத்தாள்.

உண்மைய தான சொன்னேன். பர்ஸ்ட் டே கால் பண்ணும் போது உங்க நேம் அருக்காணினு தான சொன்னிங்க.

“அது அப்போ. உங்க ஸ்டேட்டஸ்க்கு உங்க நேம்க்கு அருக்காணினு போட்டா தான் உங்களுக்கு பிடிக்கும்னா எனக்கு ஓகே. அப்படியே சொல்லிக்கோங்க” என்றாள்.

நோ நோ..

அப்புறம் எதுக்கு இந்த குசும்பு.

சும்மா தான்.

உங்ககிட்ட ஒன்னு கேட்கனும். அதுக்கு நீங்க உண்மைய மட்டுமே சொல்லனும்.

அது நீ கேட்கற கேள்விய பொறுத்தது மேடம்.

மேடம்மா. ஆர்விகானு சொல்லுங்க.

முதல்ல கேள்வி என்னனு சொல்ல முடியுமா?

நான் ஓப்பன் டைப்.

அது உன் பேச்சுலயே தெரியுது. அப்புறம்..

ஒருகணம் அவனைப்பார்த்து முறைத்து விட்டு, இந்த கல்யாணம் உங்க விருப்பத்தோட நடந்ததா?

ஏன் அப்படி கேட்கற.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க யாஷ்.

“இவ கிட்ட என்ன சொல்றது. எதாவது சொல்லி வில்லங்கமாகிட்டா. இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது” என யோசித்தான்.

என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கிறிங்களா?

இல்லையே. நான் எதுக்கு பொய் சொல்லனும்.

அப்போ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க யாஷ்.

‘இவ சொல்லலனா விடமாட்டா போலவே. பிடிக்காம தான் கல்யாணம் பண்ணிகிட்டேனு சொல்லிடலாமா? அம்மாவோட விருப்பத்துக்காகனு சொல்லலாமா? இவ கேள்வி கேட்கற விதத்த பாத்தா கொஞ்சம் பயமா வேற இருக்கே’ என பலவாறாக நினைத்தான்.

சாரல் தொடரும்….

Advertisement