Advertisement

அனைவருக்கும் வணக்கம் செல்லம்ஸ்.. ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்..

நேற்று மாலை வைகறை கலைஞர் தமிழ்ச்சுடர் வழங்கும் விழா நடைபெற்றது.. ஆலந்தூர் மோகனரங்கன் அவர்களின் முன்னிலையில் அமைச்சர் சிவ மெய்யநாதன் அவர்களின் தலைமையில் ” வைகறை கலைஞர் தமிழ்ச்சுடர்” விருதுகள் வழங்கப்பட்டது.

மாநில அளவில் சிறந்த இளம் எழுத்தாளர் விருதான வைகறை கலைஞர் தமிழ்ச்சுடர் விருது எனக்கும் வழங்கப்பட்டது..

இவ்விருதினை நான் பெற்றது எல்லையில்லா பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.. விருது பெற்ற மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் செல்லகுட்டீஸ்…

உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எனக்கு வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்… வாசகர்கள் தான் எழுத்தாளர்களின் உயிர் நாடி.

பகுதி – 16

விழிகளில் மிரள அதிர்ச்சியுடன் அந்த பேப்பரை எடுத்து விரித்துப் பார்த்தாள்.  “ஏதோ விளையாட்டுக்கு சொல்றீங்கனு நினைச்சா நிஜமாவே பத்திரத்தை வாங்கிட்டு வந்த நிக்கறிங்க” என பேப்பரை கிழித்து போட போனாள்.

வெடுக்கென்று பத்திரத்தை வாங்கிக் கொண்டான்.  நான் சொன்னா சொன்னதுதான். அதில எந்த மாற்றமும் இல்ல.  இதுல கையெழுத்து போடு.

நிச்சயமா நான் போட மாட்டேன் யாஷ். அப்படியே நீங்க கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினாலும் எங்க போனாலும் அதை காட்டு நீங்க விவாகரத்து கேட்க முடியாது.

சரி அப்படியே வச்சுக்கோ. பரவால்ல. கையெழுத்து போடு.  மத்தத நான் பாத்துக்கறேன்.

கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல. அது நினைவில இருக்கட்டும்.

அதைப்பத்தி நீ கவலைப்படத் தேவையில்லை. கையெழுத்துப் போடு. இல்லையா  இப்பவே உன் அப்பாவுக்கு போன் போட்டு  வரச் சொல்லு.

நிச்சயமா அந்த வேலைய நான் பண்ணமாட்டேன்.  அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிய வேணாம். அவரு ரொம்ப மனசு உடைஞ்சு போய்டுவாரு.

உங்க அப்பா மட்டும் நல்லா இருக்கணும். என் மனசு உடஞ்சு போனா பரவாயில்லையா?

உங்களுக்கு இப்ப என்ன பிரச்சனை. நான் ஒரு நல்ல பொஷிஷன்ல இருக்கிறது உங்களுக்கு அவ்வளவு கேவலமா தெரியுதா? இதுல தப்பு என்ன இருக்குனு நினைக்கிறீங்க.

நிச்சயமா தப்பு இல்ல தான்.  ஆனா நீ எனக்கு மேல இருக்குறது தான் தப்பு.

நான் எங்க உங்களுக்கு மேலே இருக்கேனா. நீங்களும் நம்பர் ஒன் பிசினஸ்மேன் தானே. இதுல எங்க ஏற்றத்தாழ்வு இருக்கனு நினைக்கிறீங்க.

உன்னோட விளக்கம் எனக்கு தேவையில்ல.  கையெழுத்து போடுறியா? இல்ல உங்க அப்பாவ வர சொல்றியா?

எதற்கும் கண்ணீரை வெளிப்படுத்தாத தன்னம்பிக்கையான ஆர்விகா முதல்முறையாக தனது இலட்சியத்திற்காக கண்ணீர் சிந்தினாள்.  சற்று யோசித்தவள், “பத்திரத்தை கொடுங்க” எனக் கேட்க.

யாஷ்மிதன் முறைத்துக் கொண்டே பத்திரத்தையும், பேனாவை நீட்டினான்.

பத்திரத்தை வாங்கியவள் ஆர்விகா எனும் அந்த நான்கு எழுத்தை எழுதமுடியாமல் பத்திரத்தில் கண்ணீர் சிந்த.

யார் அழுதாலும் அதைத் தாங்கிக் கொள்ள முடியாத இளகிய மனம் கொண்டவன்  யாஷ்மிதன். அவளின் கண்ணீர் அவனது ஆழ் மனதில் ஏதோ செய்தது.

“அத்தை, மாமா நம்ம பக்கம் இருக்காங்க. இந்த கையெழுத்த வச்சி அவர் என்ன பண்ண முடியும். நடப்பது நடக்கட்டும் பார்க்கலாம்” என கையெழுத்து போட குனிந்தாள்.

அப்பொழுது யாஷ்மிதன் அந்தப் பத்திரத்தை வாங்கி அவனே கிழித்து போட்டான்.

இப்பதான் கையெழுத்து வேணும்னு ஆர்ப்பாட்டம் பண்ணிங்க. அப்புறம் எதுக்கு கேட்டீங்க.

அது என்னோட இஷ்டம். உன்னோட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்ல.

“எங்க அப்பாவ கூப்பிடனும்னு மட்டும் நினைக்காதிங்க. நிச்சயமா இங்க வர விடமாட்டேன். அப்படி ஒரு எண்ணம் இருந்தா அத மாத்திக்கோங்க” என்றாள்.

சரி. உங்க அப்பா இங்க வர வேண்டாம்.  நீ அங்க போய்டு.  நானே கொண்டு வந்து உங்க வீட்டுல விட்டு வரேன்.

நான் அவங்க கிட்ட இதப்பத்தி எதுவும் சொல்லவும் மாட்டேன்.  இந்த பிரச்சனைக்கு நீயே முடிவ எடுக்கனும்.  நான் வேணும்னா என்கிட்ட மன்னிப்பு கேட்டு, உன்னோட கனவு எல்லாத்தையும் தலைமுழுகிட்டு வீடு வந்து சேரு.  அரை மணி நேரம் டைம் தரேன்.  உன்னோட டிரஸ பேக் பண்ணிட்டு ரெடியா இரு.

நான் போக முடியாது. நான் ஏன் போகணும். இதுதான் என்னோட வீடு.

அதுக்கு நீ பொய் சொல்லாம இருந்திருக்கணும்.

நீங்க கூட தான் பொய் சொன்னீங்க.

அதுவும் இதுவும் ஒன்னா. நீ கல்யாணத்துக்கு முன்னாடியே இதப்பத்தி சொல்லி இருக்கனும்.

நீங்க தான் ஒரு டைப்பாவே சுத்திட்டு இருந்திங்களே. எப்படி சொல்ல முடியும். உங்கள பாத்த உடனே வேற எங்க வீட்டுல எல்லாருக்கும் பிடிச்சி தொலஞ்சிடுச்சி. எங்க வீட்டு நாய் டுமீல் கூட உங்கள பாத்த அன்னைக்கே கொஞ்சறான். கல்யாணம் வேணாம்னு நினைச்ச நானும் உங்கள பாத்த உடனே  முடிவ மாத்திட்டு ஓகே சொல்லிட்டேன். எல்லாம் விதி.

காமெடி பண்றதா நினைப்பா? கோவத்தோட உச்சியில என்ன நிறுத்திட்டு வேடிக்க பார்க்கற.  இப்ப தான தெரியுது. உன் லட்சியத்துக்காக தான் என்னைய கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருக்கேனு. செல்ஃபிஷ். லட்சியத்துக்காக வாழ்க்கைய அடமானம் வைக்கிற. இப்படி ஒருத்தி எனக்கு தேவையே இல்லடி. முதல்ல கிளம்பு.

இந்த பூச்சாண்டிக்கெல்லாம்  பயப்படுற ஆள் நான் இல்ல.  நான் பொய் சொன்னேன் தான். அதுவும் நல்ல விஷயத்துக்காக. புரிஞ்சிக்கோங்க யாஷ். ப்ளீஸ்.

நான் எதுக்கு புரிஞ்சிக்கனும்.

இந்த ஆம்ளைங்களே இப்படி தானா? உங்களை மாதிரிதான் எங்கப்பாவும் என்னுடைய லட்சியத்த புரிஞ்சுக்கவே இல்ல. என்னோட லட்சியத்துக்கு தடை போட்டது எங்க அப்பாதான்.

நல்ல காரியம்தான் செஞ்சிருக்காங்க. அவர பாராட்டலாம். அப்புறம் எப்படி அவர ஏமாத்தின.

லண்டன்ல போய் படிக்க என்னோட சித்தி சப்போர்ட் பண்ணி கூட்டிட்டு போனாங்க. அங்க போய் அனிஷாவோட சேர்ந்து விளம்பரத்துக்கான படிப்பு படிக்க ஆசைப்பட்டேன். என் சித்தி எனக்காக அதையும் செஞ்சாங்க. மனசுக்கு பிடிச்ச மாதிரி படிச்சி முடிச்சேன்.

கொஞ்ச நாளா நீ கிராமத்துல தான இருந்த. அப்புறம் எப்படி மும்பைல கம்பெனி ஆரம்பிச்ச.

அதான் அனிஷா இருக்காளே. அவ தான் என்னோட மொத்த பலமும். எனக்காக என்ன வேணா செய்வா என் தங்கச்சி.

ஆமா.  ஒரு  கேடிக்கு இன்னொரு கேடி தானே உதவி செய்ய முடியும்.

ஓவரா பேசாதீங்க யாஷ்.

நீங்க ஓவரா பண்ணதால தான் நான் ஓவரா பேச வேண்டியதா போயிடுச்சு. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்னா நீ முதல்ல உங்க அப்பா வீட்டுக்கு கிளம்பி போ. அங்கே போய் நீ என்ன சொல்லுவியோ எனக்கு தெரியாது. ஒட்டுமொத்தமாக உன்னோட வேலைக்கு முழுக்குப் போட்டா இங்கு வந்து சேரலாம். ஒரு வாரம் டைம் எடுத்துக்கோ. நல்லா யோசி.  நான் வேணும்னு நினைச்சா இங்கே வா. உன்னுடைய லட்சியம் தான் முக்கியம்னு நினைச்சா அங்கயே இருந்துக்கோ. எனக்கு  பேச நேரமில்ல. மொதல்ல கிளம்பு. உன்னை கொண்டு போய் நானே உங்க வீட்டுல விட்டுட்டு ஆபீஸ் போறேன்.

வீட்டுக்கு அனுப்பறதுனு முடிவு எடுத்து பிறகு நீங்க என்ன என்னைய கொண்டு வந்து விடுறது. எங்க வீட்டுக்கு போக எனக்கு வழி தெரியும். நீங்க கிளம்பலாம்.

நீ வேற எங்காவது போய்ட்டா யாருக்கு கெட்ட பேரு.

“இப்ப கெளம்பனும் அவ்வளவுதான. கிளம்பி தொலைக்கிறேன். தூக்கு தண்டனை கைதிகிட்ட கூட கடைசி ஆசை என்னனு கேட்பாங்களாம். இங்க எதையும் முழுசா சொல்ல கூட உரிமை இல்ல. என்ன வாழ்க்கை இது” என கோபத்தில் அவசரமாக தனது துணிமணிகளை எடுத்து ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டு, கிளம்புங்க” என்றாள்.

“இந்த ரோசத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல. கிளம்பு” என்றான்.

ஆர்வி லக்கேஜோடு இறங்கி வருவதைப் பார்த்து வானதியும், சங்கரும், “என்னடா உங்க ஊருக்கு போறீங்களா?” எனக் கேட்க.

இல்ல என் பொண்டாட்டி மட்டும் போறா.

என்னம்மா திடீர்ன்னு கிளம்பிட்ட.

நான் போகல மாமா. உங்க பிள்ள தான்  போக சொன்னாரு.

எதுக்குடா இப்ப அந்த பொண்ண  அனுப்பி வைக்கிற.

அவன் என்கிட்ட பொய் சொல்லிட்டா. அதை என்னால ஏத்துக்க முடியாது. அவளுடைய இலட்சியத்த உதறிட்டு வந்தா நான் ஏத்துக்கிறேன். இல்ல லட்சியம்தான் பெருசுனு சொன்னா அவ அங்கேயே இருக்கட்டும். அதை பத்தி எனக்கு கவலை இல்ல.

ரொம்ப தப்பான முடிவு பண்ணி இருக்க யாஷ். இது நல்லதுக்கு இல்ல.

“உங்க பேச்சை கேட்டு கேட்டு நான் கஷ்டப்பட்டது  போதும். இது என்னோட வாழ்க்கை. இது என்னோட வாழ்க்கை. நான் தான் முடிவு செய்வேன். யாரும் இங்கே பேச வேணாம். அதே போல நாளைக்கு நான் லண்டன் கிளம்பறேன். இனி இந்தியா வரமாட்டேன்” என அவளது கையை பிடித்து இழுத்துக்கொண்டு காரின் அருகில் விட்டான். ம்ம்ம்ம் கார்ல ஏறுடி.

ஆர்விகா கண்ணீரோடு  காரில் அமர்ந்தாள். லண்டன் போறிங்களா? ஏங்க இப்படி பண்றிங்க.

உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல.

அவன் பேச்ச கேட்காதம்மா. நீ முதல்ல கீழ இறங்கு. என் பேச்ச கேளும்மா. டேய் உன் புத்தி ஏண்டா இப்படி போகுது. என்னங்க நீங்களாவது சொல்லுங்களேன். அவன் லண்டன் போறேன்னு சொல்றான். எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.

அவ இப்ப வெறில இருக்கான் வானதி. நம்ம பேச்சு எடுபடாது. நாம சம்மந்தி வீட்டில பேசுவோம். நாம பாத்துக்கலாம். கவல படாதம்மா.

இதற்குள் கார் வேகமாக கிளம்பி நேராக ஆர்விகாவின் வீட்டிற்கு சென்று நின்றது.

“மகளையும் மருமகனையும் பார்த்தவுடன் வளர்மதியும், மூர்த்தியும் சந்தோஷத்தில் ஓடிவந்தனர்.  இப்பதான் ரெண்டு பேரும் உங்கள நினைச்சு பேசிக்கிட்டிருந்தோம். அதுக்குள்ள வந்துட்டீங்களா?” என மரியாதையோடு எழுந்து நின்று வரவேற்றனர்.

இல்ல மாமா.  எனக்கு கொஞ்சம் ஆஃபீஸ்ல வேலை இருக்கு. உங்க பொண்ணு  ஒரு வாரம் இங்க இருக்கணும்னு ஆசைப்பட்டா. அதான் கூட்டிட்டு வந்தேன்.

உங்க மனசு யாருக்கு வரும்  மாப்ள.ரொம்ப சந்தோசமா இருக்கு.

அடக்கடவுளே! இவரோட புத்தி தெரியாம இதுங்க புகழுதே.

“எனக்கு நேரம் ஆகுது. நான் கிளம்புறேன்” என கூறிவிட்டு கிளம்பினான்.

வளர்மதியோட பார்வை ஆர்விகாவின் முகத்தை நோக்க. ஒரு சிறு சந்தேகம் வந்தது. என்னம்மா உடம்பு ஏதும் சரியில்லையா? கண்ணெல்லாம் ஒரு மாதிரி இருக்கு. தல வலிக்குதா? ‘டீ’ போட்டு கொண்டு வருவா?

ஆர்விகா எந்த பதிலும் சொல்லாமல் உள்ளே போனாள்.

அரை மணி நேரத்திற்கு எல்லாம் வானதியும்,  சங்கரும்  ஆர்விகாவை தேடி வந்தனர்.

அடடே! வாங்க சம்மந்தி வாங்க.  எதிர்பார்க்கவே இல்ல. என்ன இன்னைக்கு வரிசையா வரீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆர்விகா இங்க வந்து பாரு. உங்க அத்தையும், மாமாவும் வந்திருக்காங்க.

ஆர்விகா வேகமாக ஓடி வந்தாள். வாங்க அத்தை. வாங்க மாமா. “அம்மா கொஞ்சம் காஃபி வச்சி கொண்டு வாங்களேன்” என்று கூற.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.  உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுட்டு, எங்க மருமகள  கூட்டிட்டு போகணும்னு தான் வந்தோம். எங்க பையன் பண்ணதுக்கு நாங்க மன்னிப்பு கேட்டுக்கிறோம் சம்மந்திஎன இருவரும் கையெடுத்து கும்பிட.

அச்சோ! என்ன சம்மந்தி. மூர்த்தியின் வளர்மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  அப்போது பாட்டி அங்கு வர.

என்ன  மும்பை விஷயம் தெரிஞ்சி போய்டுச்சா.

“ஆமா பாட்டி” என ஆர்வி கண்கலங்கி நின்றாள்.

“ஏங்க என் பேத்தி ஏதோ ஆசைப்பட்டு அப்படி செஞ்சிட்டா. அதுவும் தப்பில்ல. சொந்த கால்ல மிகப்பெரிய போராட்டத்தில சாதிச்சி இருக்கா. பொண்ணுங்க வளரவே கூடாதா? படிச்ச  நீங்களுமா இப்படி இருக்கீங்க. என் மகன் மூர்த்தி தான் புத்தி கொட்டு போய் அவ ஆசைல மண்ணப்போட்டு இங்க கூட்டிட்டு வந்து அவ மனசு கனவ நொறுக்கிட்டான். உங்களுக்கும் ஒரு பொண்ணு இருக்கா இல்லையா? அவள இப்படித்தான் பண்ணுவீங்களா? நீங்களாவது படிச்சவங்க. புரிஞ்சி நடப்பிங்கனு நம்பிக்கையோட இந்த கல்யாணத்த பண்ணிக்கிட்டா. நீங்க என்னென்னா” என பாட்டி கோபத்தோடு பேச.

பாட்டி அவங்கள ஒன்னும் சொல்லாதீங்க. அவங்களுக்கும் உண்மை தெரியும். அவங்க முழுமனதோடு  என்னுடைய லட்சியத்துக்காக என் கூட இருக்கேன்னு சொல்லிட்டாங்க.

அப்படியா? ரொம்ப சந்தோஷமா இருக்குடியம்மா. ஆவேஷத்துல கொஞ்சம் பேசிட்டேன்.  தப்பா எடுத்துக்காதிங்க.

பரவாலங்க.

இதைக்கேட்ட மூர்த்தி, “நான் அப்பவே படிச்சு படிச்சு சொன்னேன். இதெல்லாம் நம்ம வாழ்க்கைக்கு ஒத்து வராது. இதெல்லாம் வேண்டாம்னு நான் சொன்னேனே கேட்டியா? அந்த கோபத்தில் தான் மாப்பிள்ளை கொண்டு வந்து  விட்டுட்டு போறாங்களா? இப்படி வாழ்க்கையை தொலைச்சிட்டு வந்த நிக்கிறியே” என மூர்த்தி கதறினார்.

சாரல் தொடரும்…

Advertisement