Advertisement

“ சிட்டு  ஒரு  டவுட்… சட்டை  கிழிஞ்சா  ரத்தம்  எப்படி  வரும்?”  என  கேட்டாள்   ரேணு.
“ஹாஹா…நீ  சட்டையோட  சேர்த்து  அவன்  தோலையும்   சேர்த்து   தான  உறிச்சு  எடுத்த?”  என  ஜனனி  சொல்லிவிட்டு  சிரிக்க  அவளோடு  சேர்ந்து  ரேணுவும்  சிரிக்க  ஆரம்பித்தாள்.
      அவர்கள்  இருவரும்  பேசுவது  பாதி  புரிந்தும்  புரியாமல்  ரஞ்சி  விழித்துக்  கொண்டிருக்க… 
“இப்போ   வந்து  நல்லா  முழி.  போடி  ஃபோனையே  கட்டிட்டு  அழுவு”  என்று   ரேணு   ரஞ்சியின்  தலையில்  கொட்டு வைக்க..
“கொட்டாதடி  பிசாசு”  என்றாள்  ரஞ்சி.
           அவர்கள்   பக்கமாய்  வந்த  தாத்தா,  “காபி   வித்   ரேணு …  காலைலயே   அமர்க்களம்”    என்று   ரேணுவின்  முதுகில்  தட்டி  “சூப்பர்”  என்றார்.
             அப்போது   அங்கே   வந்த   பத்மா,  “சும்மாவே   ஆடுறவளுக்கு  நீங்க   சலங்கை   வேற   கட்டிவிடுறீங்கப்பா”  என்றார்.
“எத்தனை  நாளுக்கு  தான்  உனக்காக  நான்  பேசிட்டே  இருக்குறதுமா?  எனக்கும்   வயசாகுதுல…  உங்களுக்காக  நீங்க  தான்  பேசியாகனும்.  பேசட்டும்.  அவளை  விட்டுடு”  என்று   தாத்தா  சொல்லி  சென்றார்.
“காலைல  டிபன்  சாப்பிட்ட  பின்னாடி  இந்த  ஆர்க்யூமென்ட்  வந்தது   நல்லதா போச்சு”  என்றாள்  ரேணு  தன்  தாய் பத்மாவிடம்.
“ஏன்”  என  கேள்வியாய்  பார்த்தார்   பத்மா.
“நான்  பேசுன  பேச்சுக்கு   நமக்கு  டிபனே  போட  மாட்டங்க  உங்க  அண்ணிங்க  ரெண்டு  பேரும்.”  என்றாள்  ரேணு  சிரித்துக்  கொண்டே.
“எங்க  அம்மாவும்  பெரியம்மாவும்  அப்படி ஒன்னும்  கொடுமைக்காரங்க   இல்ல”  என்றாள்  ஜனனி   முகவாயை  தன்  தோள்பட்டையில்   இடித்தவாறு.
“ஆமா  சொல்லிக்கிட்டாங்க   .  ஊருல  இருந்து  வந்த  எங்களை  ரிசீவ்  பண்ணாத   ரொம்ப  ரொம்ப  நல்லவங்கனு”  என்று    நக்கலாய்   ஜனனியிடம்    ரேணு   சொன்னாள்.
        அவர்களை   பார்த்து   முறைத்தவாறே  அங்கே  வந்த   வைதேகி   ஜனனியிடம்,   “சாப்பிட  வா  ஜானு”  என  கையை  பிடித்து   இழுத்தபடி  சென்றார்.
“இங்க  வடிவுனு   ஒரு  கேரக்ட்டர்  மிஸ்  ஆகுதேமா?…  எங்கேமா  அந்த  காமெடி  பீஸோட  அம்மா?”  என  கேட்டாள்   ரஞ்சி   பத்மாவிடம்.
“அந்த  வடிவு   நைட்  முழுசும்  தூங்காம  போலீஸ்  ஸ்டேஷன்ல  சந்தோஷ்க்காக  அழுதுட்டே  இருந்ததால.. இப்போ  மாத்திரை  போட்டு  ரூம்ல  ரெஸ்ட்  எடுத்துட்டு  இருக்காளாம்.  நீ  எதுக்குடி  அவளை   அக்கறையா  விசாரிக்குற?”  என  கேட்டார்  பத்மா.
“சும்மா  தான்   கேட்டேன்மா”  என்றாள்   ரஞ்சி.
“சித்தியும்  சித்தப்பாவும்  நீ  பேசுனதை  பார்த்து  ரொம்பவே  பயந்து போயிருக்காங்க.  ரஞ்சி  கல்யாணத்துக்கு  மாமா  அத்தைகள்  வர  மாட்டோம்னு  சொல்லிட்டா  என்ன  பண்ணுறது?  ஏன்  ரேணு   இப்படி  பேசுற?”   என   ஆதங்கத்துடன்   கேட்டார்  பத்மா.
“அப்படியெல்லாம்   சொல்லிட  மாட்டாங்கமா.  இப்போ  உன்  அண்ணன்களோட   குடுமியே   நம்மகிட்ட  தான்   இருக்கு.”  என்று   ஜனனியைப்   பார்த்துக்   கொண்டே   சொன்னாள்   ரேணு.  
“என்னடி   சீரியல்ல  வர்ற   வில்லி  மாதிரி   பேசுற?  எனக்கு  பயமாருக்கு”   என்றார்   பத்மா.
“நாங்கல்லாம்   வில்லத்தனம்  பண்ண  ஆரம்பிச்சா  உங்க  அண்ணன்களும் ,  அண்ணிகளும்  தாங்க  மாட்டாங்கமா.    உன்  அண்ணன்களும்,  அவுங்க  பெத்து  வைச்சுருக்குற  பசங்களும்  மீசை  வைச்ச   புள்ள பூச்சிங்க.”  என்றாள்   ரேணு   சிரித்துக்  கொண்டே.
“ஆ….”   என  நெஞ்சில்  கை  வைத்து   அதிர்ந்த  பத்மா,   “நீயே   இப்படி   பேசுனா… ரிஷி   எப்படி   பேசுவான்?”  என  கேட்டார்.
“ஹாஹா… அண்ணன்   இந்த  ஊருக்குள்ள   நுழைஞ்சதுக்கே  ஒருத்தனை   தூக்கி  உள்ள  வைச்சுட்டார்.  இன்னும்  இந்த  வீட்டுக்குள்ள   நுழைஞ்சா   பன்னிரண்டு  வருஷக்  கணக்கை  தீர்க்காம  விட  மாட்டார்.   இங்க   இனி  எது  நடந்தாலும்   கண்டுக்காதீங்க.  இன்னைக்கு  காலைல   ஒன்னு  சொன்னீங்க  பாருங்க   அதை  மட்டும்  சொல்லுங்க  போதும்”  என்றாள்  ரேணு.
ரேணு   பேசியதில்   பயந்து  போயிருந்த  பத்மா,  “என்ன  நான்  சொன்னேன்?”  என  அவளிடமே   திருப்பி  கேட்க,
தன்  தலையில்  தானே  தட்டிக்  கொண்ட  ரேணு, “சத்தியமா  இது  எதுவுமே  எனக்கு  தெரியாதுனு   சொல்லிடுங்கமா.  உங்களுக்கு  இந்த  ஸ்கிரிப்ட்  முழுசும்  இதான்  டயலாக்..  ஓ.கே.வா”  என்றாள்.
          மண்டையை   நாலாபக்கமுமாக   ஆட்டிய   தன்  தாயைக்  கண்ட  ரேணு   சிரித்துக்  கொண்டே,  “டென்ஷன்  ஆகாம  ரிலாக்ஸா  இருங்கமா… அண்ணன்  எல்லாத்தையும்  பார்த்துப்பார்.  பை  மா”  என்றாள்
“எங்க  போற?”  என  கேட்டார்   பத்மா.
“அண்ணன்   சிட்டுவை   பார்க்க  கூட்டிட்டு  வர  சொன்னார்.” 
“என்னது?” அதிர்ச்சியில்   வாயை  பிளந்தவாறு  உட்கார்ந்துவிட்டார்  பத்மா.
“சிட்டுவை   கல்யாணம்  பண்ணிக்க  கூட்டிட்டு  வர  சொன்னது  மாதிரி    இந்த  ரியாக்சன்  கொடுக்குறீங்க?”  என்று  சொன்ன  ரேணு  வாய்க்குள்  ‘இதுக  ரெண்டும்  நேத்து   நைட்  அடிச்ச  கூத்தை  பார்த்தா  இந்த  அம்மாக்கு  அட்டாக்கே  வந்துடும்’  என  முணுமுணுத்தாள்.
“அதுக்கு?… சிட்டுவை   பொய்  சொல்லி   கூட்டிட்டு  போக  போறியா?” என  கேட்டார்   பத்மா.
“தவறு  செய்தா  தான்   பொய்  சொல்லனும்.  நான்  எதுக்கு  சொல்லனும்மா”  என  கேட்டாள்  ரேணு.
“என்னடி  குழப்புற?…   உன்  அத்தையும்  மாமாவும்   சிட்டுவை  எப்படி   ரிஷியை   பார்க்க  விடுவாங்க?”  என  கேட்டார்  பத்மா.
“இப்போ  விடுவாங்க  பாருங்க”  என  சொல்லிவிட்டு   டைனிங்  ஹால்  பக்கம்  சென்றாள்  ரேணு.
“சிட்டு   சாப்பிட்டாச்சா”  என  கேட்டபடியே    உள்ளே  நுழைந்த   ரேணுவை   எதிர்கொண்டனர்  ஜனனியும்   வைதேகியும்.
“ம்ம்.”  என  தலையாட்டியபடியே  வந்த  ஜனனியை ,
“வா..  போகலாம்”  என  ரேணு  கைப்பிடித்து  இழுக்க
“அவளை  எங்க  கூட்டிட்டு  போக  போற?” என  ரேணுவை  முறைத்தபடியே   கேட்டார்  வைதேகி.
                 ரேணுவிடம்  இதுவரை  வைதேகி  கொஞ்சி ,  சிரித்துப்  பேசி  நாத்தனார் பெண்ணென்று உறவு  கொண்டாடியதில்லையென்றாலும் …  வெறுப்பும்   கொண்டதில்லை.    ஆனால்   அவளது   ‘சிட்டு’  என்ற  அழைப்பும்,  அதை  தடுக்க  முடியாத  தனது   இயலாமையும்  ஒன்று   சேர்ந்து   ரேணுவின்  மீது   எல்லையில்லா  வெறுப்பை  உண்டாக்கியது  வைதேகிக்கு.
‘இப்படி முறைத்துக்  கொண்டு  பகையாளியைப்  போல   கேள்வி  கேட்பவரிடம்  என்ன  பதில்  சொன்னாலும்   வீணான  வாக்குவாதம்  தான்  வரும்’  என  தன்  மனதுக்குள்   நினைத்துக்   கொண்ட   ரேணு ,  தன்  அத்தை  வைதேகிக்கு   எந்தவொரு  பதிலும்  சொல்லாமல்   ஜனனியின்   கைப்பிடித்து  இழுத்துக்  கொண்டு  வாசல்  நோக்கி  சென்றாள்.
“ரேணு   கையை  விடு.    முதல்ல  எங்க  போகனும்னு  சொல்லு”  என்றவாறு   ரேணுவின்  பிடியிலிருந்து   தன்  கையை  உருவ  முயன்றபடியே    அவள்  பின்னிலே  ஏறக்குறைய  ஓடி  வந்து  கொண்டிருந்தாள்   ஜனனி. 
“ஓஓ… நீ  கேள்வியெல்லாம்  கேட்பியா?”  என  கேட்டாள்   ரேணு. 
“லூசு… கேள்வி  கேட்காம  இருக்குறதுக்கு   நானென்ன  குழந்தையா?.. மெடிக்கல்  படிக்குற  பொண்ணு”  என்றவளிடம்   சட்டென்று   நின்று  திரும்பிய  ரேணு,
“ம்ம்…அப்படியா?.. நீ   கேள்வி  கேட்காம  கூட  வருவனு  என்  அண்ணா  சொன்னாங்க.  நீ  இத்தனை  கேள்வி  கேட்குற”  என  ஜனனியிடம்   சொல்லியவள்   நொடிப்பொழுதில்  மீண்டும்  அவளை  இழுத்துக்  கொண்டு   நடக்க  ஆரம்பித்துவிட்டாள்.
‘என்னது?  அத்தானா  கூட்டிட்டு  வர  சொன்னாங்க?’  என  ரிஷியை  நினைக்க  ஆரம்பித்ததும்  ரேணு  இழுத்துச்  செல்ல  ஏதுமின்றி ஜனனியின்   கால்கள்  தானாகவே   அவள்  பின்னால்  செல்ல  ஆரம்பித்தது.
          ஜனனியும்  ரேணுவும்    வராண்டாவில்  உட்கார்ந்திருந்த   ஜனனியின்   அப்பா  அருள்குமரனின்  அருகில்  வருவதற்கும்,  அவர்களை  துரத்தி  வந்த  வைதேகியும்  மூச்சு  வாங்க  அங்கே  வருவதற்கும்   சரியாக  இருந்தது.
 மூவரையும்   மாறி  மாறிப்  பார்த்த  அருள்குமரன் ,  “என்ன  விஷயம்?”  என  கேட்க
“அதை   உங்க  தங்கச்சி   பொண்ணுகிட்ட  கேளுங்க”  என  வைதேகி   நொடித்துக்  கொண்டார்.
“மாமா…என்  அண்ணன்   சிட்டுவை  பார்க்க  கூட்டிட்டு வர  சொன்னார்.  சிட்டுக்கிட்ட   முக்கியமான  விஷயத்தை  பத்தி  பேசனுமாம்”  என்றாள்  ரேணு  செமகூலாக.
            பயத்தின்   எல்லைக்கு   ஜனனி   சென்றாளென்றால்,   அவளைப்    பெற்றவர்களோ   கோவத்தின்  மறு உருவமாய்  மாறி  நின்றார்கள்.
  “எப்படி  தான்  இப்படி  பேசுறியோ?  பேசிட்டு   என்  அப்பா  முகத்தையே   தைரியமா   பார்த்துட்டு   வேற  நிற்குற?”  என  ரேணுவின்  காதுகளில்   கிசுகிசுத்தவாறு  பயத்தில்   நடுங்கிக்  கொண்டிருந்தாள்   ஜனனி.
          அருள்குமரனையே  இமைக்காது  பார்த்துக்  கொண்டிருந்த  ரேணு   பல்லைக்  கடித்தவாறு மூன்றாம்  நபருக்கு  கேளாதபடி வார்த்தைகளை  வாய்க்குள்ளேயே  மென்று  பாதி  மட்டும்  வெளியே  துப்பிக்   கொண்டிருந்தாள்.
“ஓடிப்  போய்  கிட்சன்ல  இருந்து   இரண்டு  முட்டை  எடுத்துட்டு  வா  சிட்டு”  என்றாள்   ரேணு.
“முட்டையா?”   தனக்கு  காது  சரியா  கேட்கலையோவென  எண்ணிய   ஜனனி   மீண்டும்  அவளிடம்  “என்ன” என  கேட்க
“ஹாஃப்பாயில்”  என   ரேணு  வாய்க்குள்  முணுமுணுத்தது  தெளிவாக   ஜனனியின்  காதுகளில்  விழுந்துவிட…  அவளை   பார்வையாலே   எரித்துவிடும்  அளவுக்கு  முறைக்க  ஆரம்பித்துவிட்டாள்   தன்   பெற்றோரோடு  சேர்ந்து  கொண்டு.
“என்ன   பேசுறோம்னு  தெரிஞ்சு  தான்  பேசுறியா?  தங்கச்சி  பொண்ணுனு  பார்க்குறேன்.  இல்ல  நடக்குறதே  வேற”  என   பெருங்குரலில்   வீடு  அதிர சிவந்த  கண்களோடும்   துடிக்கும் தன்  மீசையை  முறுக்கிக்  கொண்டும்  கழுத்து  நரம்புகள்  புடைக்க     அருள்குமரனின்  கர்ஜனையில்   வீட்டிலுள்ள  அனைவரும்  வராண்டாவிற்கே  வந்துவிட்டாலும்  அவரது    இந்த  அவதாரத்தைப்  பார்த்துப்  பயந்து   அனைவரும்   பத்தடி  தள்ளியே   நின்று  கொண்டனர்.
“நீங்க   எப்போ  எங்களை  தங்கச்சி   பசங்கனு  பார்த்துருக்கீங்க  மாமா?”   என  அருள்குமரனிடம்   ரேணு  சொல்லிக்  கொண்டிருக்கும்  போதே  அவளது   செல்ஃபோனுக்கு   அழைப்பு  வர  ,  ஆன்  பண்ணி  தன்  காதுக்கு   கொடுத்தவள்… எதிர்ப்பக்கம்  என்ன  சொல்லப்பட்டதோ … 
  “ம்ம்…  இதோ   தர்றேன்”  என  சொன்னவள்
   செல்ஃபோனை   தன்னெதிரே  இருந்த   தன்  மாமாவிடம்  கொடுத்து   “உங்ககிட்ட   தான்  பேசனுமாம்…  பேசி  முடிச்சுட்டு  வாங்க.  நான்  இங்க  உட்கார்ந்துருக்கேன்.  நீங்க  வந்ததும்    நானும்  சிட்டுவும்  போயிட்டு  வர்றோம்”  என்றாள்  ரேணு.
“எல்லை  மீறி  பேசுற  ரேணு.  நீ   போகனும்னா  போ.  ஜானுவை    உன்  கூட   அனுப்ப  முடியாது”  என்றார்  வைதேகி  கோவமாக.
“ வெயிட் அண்ட்  ஸீ.  போயிட்டு வாங்கனு  மாமாவே  இப்போ வந்து  சொல்லுவார்  பாருங்க  அத்தை”  என  வைதேகியிடம்  சொல்லிவிட்டு  கெத்தாக  சோபாவில்  அமர்ந்து  கொண்டாள்  ரேணு  ஜனனியையும்  தன்னோடு  இழுத்துக்  கொண்டு.
        தன்  வீட்டிலுள்ள  அனைத்து  ஜீவன்களும்  பதட்டத்தோடு   மீண்டும்  குடும்பத்திற்குள்   சண்டை  வந்திடுமோவென்ற   பயத்தில்    நிலைகுலைந்து  போய்  நின்று  கொண்டிருக்க   தான்  மட்டும்    எவ்வாறு    ஜாலியாக சோபாவில்   உட்கார்ந்திருக்க  முடியுமென  நினைத்த   ஜனனி   எழ  எத்தனிக்க ,
“உன்னை   அண்ணன்   என்கிட்ட  உட்கார  சொன்னாங்க”  என  ரேணு  சொன்னதும் 
 ஜனனி     ‘நான்  பாவம்’  என்பது  போல்   பார்க்க 
‘இதற்கெல்லாம்  நான்  அசர  மாட்டேன்’  என்பது   போல்  பதில்  பார்வை  பார்த்து  வைத்தாள்  ரேணு.
        ரேணுவின்   கைகளிலிருந்து   தன்  கைக்கு  மாறிய   செல்ஃபோனை   கோபத்தோடு  குழப்பமும்   இணைந்து  கொள்ள    அதன்   ஸ்கீரீனையே   சில  நொடிகள்   வெறித்துப்  பார்த்த  அருள்குமரன்  எடுத்து  காதுக்கு  கொடுத்த   மறுவினாடி…  பக்கத்தில்  இருந்த   தூணில்  தன்  வலது  கை  முஷ்டியை   ஓங்கி    இருமுறை   குத்திக்  கொண்டார்.
        அவரது   கை முஷ்டியிலிருந்து   ரத்தம்  வர  ஆரம்பித்ததும்…  அனைவரும்   அவர்  பக்கத்தில்   பதட்டத்தோடு   ஓடி  வர…  ஆட்காட்டிவிரலினால்  அனைவரையும்  பின்னால்  போகுமாறு   ஜாடை  செய்தார்   அருள்குமரன்.
“பாகுபலி   நாசர்னு   மனசுக்குள்ள  நினைப்பு.”  ரேணு   இவ்வாறு   சொன்னதும்
“எங்க  அப்பா   கையில  இருந்து   ரத்தம்  வந்துட்டு  இருக்கு  ரேணு.  எங்க  அப்பா  என்ன  செய்தாங்க?… பாவம்  அவுங்க”  என்றாள்  ஜனனி  அழுது  கொண்டே. 
“என்ன  செய்தாங்களா?   இந்த  கை  தான  தவறே  செய்யாத  என்  அண்ணாவை  பன்னிரண்டு  வருஷத்துக்கு  முன்னாடி  அடிச்சது”   என  ரேணுவின்  வாய்  சொன்னாலும்  அவளது  பார்வை  மட்டும்   அருள்குமரனை  விட்டு  இம்மியளவும்  விலகவில்லை.
“அத்தான்!”..    என  ஜனனி   மனதிற்குள்  அதிர்ந்தவளாய்     சிலை  போல்    அமர்ந்து  விட்டாள்.
 
 
   
  
  
  
            
        
        
  
                
            

Advertisement