Advertisement

அதுவரை   ஒரு  மோன  நிலையில்   லயித்திருந்த  ரிஷி  , “என்னது   மன்னிக்குறதா?…எதுக்குடி  மன்னிக்கனும்?  அப்போ  நீ  சின்ன  குழந்தை தான்டி.  ஆனா  இப்போ  தடிமாடு  மாதிரி  வளர்ந்துருக்க  தான?  இப்போவாது  நடந்ததை  வீட்ல  சொல்ல  வேண்டியதான?”  என  கோவத்தில்  கத்தினான்.
“நீங்க   ஒரு  ஆண்… யாருக்கும்,  எந்த  முடிவுக்கும்  கட்டுப்பட  வேண்டிய  அவசியமில்லாத  நீங்களே  என்னைத்  தேடி  வர்றதுக்கு   இத்தனை  வருசமாகியிருக்கு.   நான்  அப்படியில்ல  அத்தான்.  அம்மா அப்பா, பெரியப்பா, பெரியம்மா, அண்ணன்னு   எல்லோருக்கும்  நான்  பதில்  சொல்லனும்……..”  என  மேற்கொண்டு  பேசப்  போனவளை  இடைமறித்தவன்,
“அத  தான்டி   நானும்  சொல்லுறேன்.  எல்லோருக்கும்  பதில்  சொல்லுனு.  என்னமோ  இவளுக்கு  மட்டும்  தான்  அம்மா அப்பா  சொந்தக்காரனுங்க   இருக்குற  மாதிரி   பேசுறா.  நாங்க எல்லாம்  என்ன  அனாதையாவா  ரோட்ல  நிக்குறோம்?    இதுல   ஒரு  பெரிய  கண்டுபிடிப்பு   நான்  ஒரு  ஆண் னு…  உன்னையெல்லாம்  எவன்டி   மெடிக்கல்  காலேஜில்   சேர்த்தான்?”  என  கடுப்போடு  முடித்தான்  ரிஷி.
“பாட்டி  தான்  என்னை  அங்க  சேர்த்துவிட்டாங்க”  என்றாள்  ஜனனி  பாவமாய். 
          அப்போது   வெளியிலிருந்து   முனியனின்  சத்தம்  கேட்கவே   எழுந்து  சென்றனர்  இருவரும்.  தனாவும்  வந்துவிட்டான்  வாசலுக்கு.
“பாப்பா   போகலாம்ங்களா?”  என  கேட்டான்
ரிஷிக்கு   கோவம்   சுறுசுறுவென  மூளைக்கு   ஏற… முனியனையும்   ஜனனியையும்   மாறி  மாறி  முறைத்தவன்,
“அவளை  நான்  கொண்டு  வந்து  விடுறேன்.  நீ  வீட்டுக்கு  போ”  என  முனியனிடம்  கூறிவிட்டு   உள்ளே  செல்ல  திரும்பினான்.
“உங்களுக்கு  எதுக்கு  ஐயா  சிரமம்?… பெரிய ஐயா  என்னை  தான்  கூட்டிட்டு  வர  சொன்னாங்க.  இப்போவே  மணி  ஒண்ணாகப்  போகுதுங்க.    நான்  பாப்பாவை  கூட்டிட்டு  கிளம்புறேனுங்க”  என்றான்  முனியன்.
           இந்த   சிறிது   நேரத்துக்குள்ளாகவே  ரிஷியின்  கோவம்  பற்றி  தெரிந்து  கொண்ட  ஜனனி… தான்   முனியனோடு கிளம்புவதாக  சொன்னால்    ரிஷி  நெற்றிக்  கண்ணை   திறந்து  விடுவானே  என்ற   பயத்தில்   செய்வதறியாது ,  தனாவை  பார்த்தாள்.
“டேய்…தாத்தாவும்  பாட்டியும்  தூங்காம  முழிச்சுருப்பாங்க.  ஜனனியை   அனுப்பி  வை.  நாம  இங்கே  தான  இருக்க  போறாம்.   நாளைக்கு   பேசிக்கலாம்”  என்ற  தனாவை  முறைத்த   ரிஷி
“சிட்டு….ரூம்ல  டேபிள்  மேல  போன்  இருக்கும்.    எடுத்துட்டு  வா.”  என்றான் .
            போனை  எடுக்கப்  போனவளின்   கண்களில்  தென்பட்டது   அவளது   போட்டோ.    அந்த  போட்டோ   எப்பொழுது  எடுத்ததென்று   அவளுக்கே  நினைவில் இல்லை.  அது  எந்த  இடம்  என்றும்  தெரியவில்லை.  ஒரு  சுடிதாரில்  இடுப்பு  வரை  மட்டுமே  எடுத்த  படம்  அது.  தலைமுடி  பின்னாமல்  காற்றில்   பறக்க  இவள்  நன்றாக  சிரித்தவாறு  போட்டோ  எடுக்கப்பட்டிருந்தது.
       ஜனனி   போட்டோவை  வைத்து  ஆராய்ச்சி  செய்து  கொண்டிருக்க… உள்ளே  நுழைந்த  தனா , “என்னம்மா  பண்ணிட்டு  இருக்க?   இனி அவன்  வேகத்துக்கு   போக  கத்துக்கோ”  என  சொல்லியவாறு  போனை  எடுத்துக்  கொண்டு  வெளியேற … அவன்  பின்னிலே  ஓடினாள்  ஜனனி. 
         போனை  வாங்கி   தாத்தாவுக்கு   கால்   செய்து  விவரத்தை   கூறியவன்,  திரும்பவும்  தன்  ஃபோனை  முனியனிடம்  கொடுத்தான்  ரிஷி
         அந்த  பக்கம்  என்ன  சொல்லப்பட்டதோ,  அனைத்திற்கும்  சரிங்க  ஐயா , சரிங்க  ஐயா  என  பவ்யமாய்  சொன்னவன்… ரிஷியிடம்   ஃபோனை  கொடுத்துவிட்டு  ,
“என்னை   மன்னிச்சுடுங்க  தம்பி.  நீங்க  தான்   ரிஷி  தம்பினு  தெரியாம  பேசிட்டேனுங்க.  சின்ன  வயசுல  உங்களை  பார்த்ததுங்க .  அடையாளமே  தெரியலை.  பாப்பாவை  பத்திரமா  கூட்டிட்டு  வாங்க  தம்பி.  நான்  போயிட்டு  வரேனுங்க.”  என்ற  முனியன்  விடைபெற்று  சென்றான்.
“அம்மா  தாயே!  அன்னலட்சுமி … வந்து  சோத்தை  போட்டா  நல்லாருக்கும்.  பசில   பாதி  உயிர்  போயிடுச்சு”  என்ற   தனாவை  பார்த்து   சிரித்த   ஜனனி  ,
“சாப்பிட  வாங்க  அண்ணா”  என்று   சொல்லியபடியே   டைனிங் டேபிள்  நோக்கி  சென்றாள். 
          ஒரே   நேரத்தில்   முப்பது  பேர்  அமர்ந்து  சாப்பிடக்  கூடிய   பெரிய   டைனிங்  டேபிள்  அது.   இப்பொழுது   தனாவும்   ரிஷியும்   மட்டுமே   சாப்பிட்டுக்  கொண்டிருக்க… இருவருக்கும்   நடுவில்  நின்று   ஜனனி  பரிமாறிக்  கொண்டிருந்தாள்.  
“என்னம்மா   சாதம்  கொண்டு  வந்துருப்பனு   ஆசையோட  வந்தேன்.   பார்த்தா   நீயும்   சிட்டில   உள்ளவங்க  சாப்பிடுறது  மாதிரி  சப்பாத்தியும்   இட்லியும்  கொண்டு  வந்துருக்க?”  என்று   சலித்துக்  கொண்டே  சாப்பிட்டான்  தனா.
“அத்தையும்  மாமாவும்  நைட்  டிபன்  தான்  சாப்பிடுவாங்க  அண்ணா.  அதான்   இதையே   ரெடி  பண்ணி  வைச்சிருக்காங்க  போல.  நாளைக்கு  நைட்  உங்களுக்காக  சாப்பாடு  ரெடி  பண்ண  சொல்லிடுறேன்  அண்ணா.  இப்போ  பால்  சாதம்  கொண்டு  வந்துருக்கேன்  … வைக்கட்டுமா?”  என  கேட்டு   இருவருக்குமாய்   பரிமாறினாள்   ஜனனி.
           தனா   சாப்பிட்டுக்  கொண்டே  ரிஷியின்  முகத்தை    கடைக் கண்ணால்  ஆராய… அவனது   முகம்  எல்லையில்லா  மகிழ்ச்சியில்   பூரித்துக்  கிடந்தது.   
“நீயும்  சாப்பிடு  சிட்டு”  என்ற  ரிஷிக்கு
“வேண்டாம்  அத்தான்.  நான்  அப்போவே  சாப்பிட்டேன்.  நீங்க  சாப்பிடுங்க”  என்றாள்  ஜனனி.
“பரவால்ல..  கொஞ்சம்  சாப்பிடு.  நல்லா  சாப்பிட்டா  தான  இன்னும்   உருண்டு  பிரண்டு  ரத்தக்  களறியாகி  வீட்டுக்கு  வர  உடம்புல  தெம்பிருக்கும்”  என்றான்  ரிஷி  அவளது  நெற்றிக்  காயத்தைப்  பார்த்துக்  கொண்டே.
           ரிஷியை   முறைத்தவாறு  தனாவின்  பக்கம்  திரும்பியவளை  கைப் பிடித்து   தன்  பக்கமாய்  இழுத்தவன்…  அவளுக்கு  ஒரு  வாய்  பால் சாதத்தை   ஊட்டிவிட்டான்.  
           எதிர்பாராத  இந்த  செய்கையினால்   ஜனனி   மட்டுமல்ல   தனாவுமே   அதிர்ச்சியாகிப்  போனான்.   ஜனனி   மறுக்க  மறுக்க  அடுத்த  வாய்  சாதத்தையும்    எடுத்து    ஊட்டியவனை  கண்ட  தனா,
“நான்  இங்க   உட்கார்ந்து  சாப்பிட்டதே   தப்பு.  திண்ணைக்கு  எடுத்துட்டு  போய்    சாப்பிட்டுருக்கனும்.”  என்றான்    சாப்பிட்டுக்  கொண்டே.
“ஏன்  இங்க   என்ன  தப்பை  கண்டுட்ட?”    அவன் சொல்வது  புரிந்தும்  அவனை  சீண்டுவதற்காக  கேள்வி  கேட்டான்  ரிஷி.
“நீயாச்சு  உன் லவ்வராச்சு… நானாச்சு  என்  திண்ணையாச்சுனு  போயிருக்கனும்.  அதை  சொன்னேன்டா”  என்றான்  தனா.
“யாரு  என்  லவ்வர்?… இவளா?… இல்லை”  என்றான்  ரிஷி.
          தனா  சாப்பாட்டிலிருந்து  எழுந்தே  விட்டான்.  ஜனனியைப்  பார்க்க   அவளோ கடமையே  கண்ணாக  சாப்பாட்டு   பாத்திரத்தை  ஒழுங்கு படுத்திக்   கொண்டிருந்தாள்.
“இவ  நான்  கட்டிக்கப் போற  பொண்ணு.  என்  வருங்கால  பொண்டாட்டி”  என்று   தனாவிடம்   சொல்லிக்  கொண்டே  கை கழுவி  வந்தவன்  ஜனனியிடம்
  “அப்படியே  வைச்சுட்டு  வா.  காலையில  வேலைக்காரங்க  வந்து  க்ளீன்  பண்ணிக்குவாங்க”  என்று  சொன்னான்  ரிஷி.
“அத்தான்    உங்ககிட்ட  ஒன்னு  கேட்கனும்” 
“ம்ம்…கேளு”  என  சொன்னவாறே  ஹாலுக்கு  வந்தவன்  பின்னாடியே     ஏறக்குறைய  ஓடி  வந்தாள்  ஜனனி.
“சந்தோஷ்…” என்று  இழுத்தவளை
“ஓ… மேடம்  சோத்துக்  கூடையை  தூக்கிட்டு  வந்தது   ரெக்கமன்ட்டேஷனுக்காகவா?”  என  சொல்லிட்டுவிட்டு  நக்கலாக  சிரித்தான்  ரிஷி.
“அதில்லத்தான்..  வடிவு  அத்தை…பாவம்”  என  மீண்டும்  இழுத்தாள்  ஜனனி.
          அப்போது  தான்    சாப்பிட்டுவிட்டு  வந்த  தனாவிடம்,  “உன்   சிஸ்டரு   உனக்கு  சோறு  போட  வரலை.  அவளோட  சந்தோஷ்  அத்தானையும்,  வடிவு  அத்தையும்  ஜாமீன்ல  கூட்டிட்டு  போக  வந்துருக்கா”   என  தனாவிடம்  சொன்னபடியே  ஜனனியின்  கண்களை  கூர்ந்து  நோக்கியவாறு  சொன்னவன்,
“நான்   உன்  சந்தோஷ்  அத்தானுக்காக  தான்  வலை  விரிச்சேன்.  ஆனா  அதுல  தானா வந்து  மாட்டிக்கிட்ட  லூசுங்க  மூணு  பேர்.  உன்  வடிவு அத்தையும்,  உன்   அருமை  அண்ணங்களும்  தான்  அது.  ஏண்டி  தெரியாம  தான்  கேட்குறேன்?   உன்  அண்ணன்களுக்கு   புல்லும், புண்ணாக்கும் தான்  சாப்பிட  போடுவீங்களா?  தடிமாடு மாதிரி  வளர்ந்துருக்கானுக .. அறிவு  கொஞ்சம்  கூட  வளரலை”    என  ரிஷி  சொன்னதும்   அவனை  முறைத்தவாறு   கொலுசுகள்  அதிக  சப்தமிட   பண்ணைவீட்டிலிருந்து   வெளியேறினாள்  ஜனனி.
        அவளது   பின்னிலே   சிரித்துக்  கொண்டே  போனான்  ரிஷி.   இருளில்  மூழ்கிக்  கிடந்த  தெருக்கள்   ஆங்காங்கே  எரியும்  தெரு விளக்குகளின்   உபயத்தால்   சிறிதே  வெளிச்சத்திற்கு  வருவதும்  போவதுமாய்  இருக்க… ஜனனியின்     கொலுசொலி  மட்டுமே   எதிரொலித்துக் கொண்டிருந்தது.
“ஊர்க்காரனுங்க  மோகினிப்  பேய்  நடமாடுதுனு  நினைக்கப்  போறானுகடி”  என்றான்  ரிஷி.
“நான்  மோகினி  தான்  அத்தான்.   ஆனா  ரிஷியை  மயக்குன  மோகினி  இல்ல..  ரிஷியிடம்   மயங்கி  கிடக்குற  மோகினி”  என்றாள்  ஜனனி  கண்களில்  மையலோடு. 
         இதை  விட  ஒரு  ஆணை  மயங்க  வைக்கின்ற  வார்த்தைகள்  இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை.   இதை  தன்னையறியாமல்  பேசிக்  கொண்டிருந்தாள்  ஜனனி.  
“இதையெல்லாம்  வக்கனையா  பேசு.   ஆனா  என்னை  விட  உனக்கு   அந்த  சந்தோஷும், வடிவு  அத்தையும்  தான  பெருசா  போயிட்டாங்க.  அதனால  தான  இந்த  நேரத்துல  என்னை  தேடி  வந்துருக்க”  என  வார்த்தைகளில்  நெருப்பை  அள்ளிக்  கொட்டினான்.  
         தான்  அவர்களைப்  பற்றிப்  பேசியது  மிகப்  பெரிய   தவறென்பதை  மிகவும்  தாமதமாகத் தான்  உணர்ந்தாள்  ஜனனி.    அறியா  பருவத்தில்  தான்  செய்த  தவறால்  உண்டான  ரணமே   அவன்  மனதில்  இன்னும்  ஆறாத  போது… மேலும்  மேலும்  அவனை  காயப்படுத்துவது  முறையல்ல.  அவனே   இரண்டொரு  நாளில்  இப்பிரச்சனைக்கு   ஒரு  தீர்வு  காண்பான்  என்பதை  தீர்மானமாய்  நம்பியவள் … அவனது   மனதிள்ள  சந்தேகத்தை  தெளிவாக்கும்  பொருட்டு,
“இல்லத்தான்…  நான்  உங்க  கூட  பேசனும்னு   தான்  சாப்பாடு  கொண்டு  வந்தேன்”  என்றாள்  ஜனனி
“அதான்  நானே  சொல்லிட்டேனே.. நீ  இதை  பேசனும்னு  தான்  சாப்பாடு  கொண்டு  வந்துருக்க”
“நீங்க  இப்படி  எடக்கு மடக்கா  பேசுனீங்கனா … எனக்கு  பதில்  பேச  தெரியாது  அத்தான்” என்றவள்  மூச்சுக்களை   ஆழமாய்  உள்ளிழுத்து  வெளிவிட்டவள் (பின்ன  அவன்  முன்னாடி  அழுக கூடாதுல. அதுக்கு தான் இந்த  பில்டப்பு)
“சந்தோசுக்காக  ஒன்னும்  நான்  பேசலை.  வடிவு  அத்தை  பாவம்னு  தான்  சொன்னேன்.”  என  அவள்  சொல்லி  முடிப்பதற்குள்
       ரிஷியின்   கைவிரல்கள்  ஐந்தும்  ஜனனியின்   குரல்வளையை   நெருக்கியபடி அவளைத்  தள்ளியவாறு அருகிலிருந்த  வீட்டின்  சுவற்றுக்கு   சென்றவன்… அதில்  அவளை  சாய்த்து,
“யாரைடி  பாவம்னு  சொல்லுற?   இத்தனை  வருசம்  தவறே  செய்யாம  தண்டனை  அனுபவிச்சுட்டு  இருக்கேனே  நானு?  அப்போ  நான்  உனக்கு  பாவமா  தெரியலையா?”  ரிஷியின்  கேள்வியில்  உடைந்து  உள்ளுக்குள்  பல  நூறு  துகள்களாய்  சிதறிக்  கொண்டிருந்தாள்  ஜனனி.
        ஜனனியை  கொன்று  புதைத்துவிடும்   அளவுக்கு  ஆத்திரம்  வந்தது   ரிஷிக்கு .  அனைத்தும்  அவள்  முகத்தை  அருகில்  பார்க்கும் வரை  தான்.   
       அவளிடம்   கேள்வியை  கேட்டவன்  … பதிலையும்  அவனே  சொல்லிக்  கொண்டிருந்தான்  வேறு  விதத்தில்.  
       அவளது  பிறை நெற்றிக்கும்,   மிரட்சியாய்  அவனை  பார்க்கும்  விழிகளுக்கும் ,  அந்த  ஒற்றை  சிவப்புக்கல்   மூக்குத்திக்கும்,  பளபளக்கும்  அந்த  தாமரைப்  பூ  கன்னங்களுக்கும்,   வண்டுகள்   தேன்  எடுத்திட  விரும்பும்  அந்த  மலரிதழ்களுக்கும்  ……  தன்  முரட்டு  இதழ்களால்  முத்திரை  பதித்துக்  கொண்டிருந்தான்.   
        பல  வருசமாய்  தன்னை    துரத்திக்  கொண்டிருந்த  கேள்வியை  … ரிஷியும்  கேட்கவும்    குற்றவுணர்ச்சியில் உள்ளுக்குள்   உடைந்து  கொண்டிருந்தவளுக்கு ,  ரிஷியின்  இந்த  அணைப்பும்  முத்தமும்  மிக  தேவையாயிருந்தது.
         முதலில்  மிரண்டவள்… பின்பு  தன்  கைகளால்  ரிஷியின்  இடுப்பை   இருபுறமும்  பிடித்துக்  கொண்டதும்,  ரிஷியின்  மனது  உற்சாகத்தின்  உச்சாணிக்  கொம்பிலேறி  உட்கார்ந்து  கொண்டது.
        இருவரும்  அது  வீதி  என்பதை  மறந்தனர்.  எங்கேயோ   சேவல்  கூவ  இருவரும்  திடுக்கிட்டு  விலகினர்.  
          அடுத்த  வீட்டின்  திண்ணையில்  தூங்கிக்  கொண்டிருந்த வயதான  மூதாட்டி  ஒருவர்   எழுந்து  உட்கார்ந்து   அவரது  கைத்தடியைக்  கொண்டு … தன்  வீட்டின்  கதவை  தட்டி, 
“ஏலேய்… சேவல்  கூவியும்  இன்னுமா  தூங்குறீக?…எந்திரிச்சு  காடு  கழனிக்கு  போங்க”  என்றார்
அதற்கு   உள்ளேயிருந்து  ஒரு  பெண்  , “தாய்க் கிழவி…மணி  ரெண்டு  தான்  ஆகுது.  பேசாம  படு.  விடியட்டும்  முதல்ல  அந்த  சேவலை  அடிச்சு   குழம்பு  வைச்சுடுறேன்”  என்றார்   தூக்கம்  கலைந்த  எரிச்சலோடு. (அந்த  சேவல்  நிறைய  பேருக்கு  தொல்லையா இருக்கு  போல) 
ரிஷியும்   ஜனனியும்   ஒருவரையொருவர்  பார்த்து  வெட்கத்தோடு  சிரித்துக்  கொண்டனர்.
 அதன்  பின்   இருவரும்  பேசுவதற்கு  வார்த்தைகளின்றி   மௌனமாகவே  நடந்தனர்.  வீட்டின்  அருகே  வந்ததும்,
“ரேணு  கிஸ்  கொடுத்ததும்   ஏண்டி  துடைச்ச?”  என  கேட்டான்  ரிஷி.
“அத்தான்… அது வந்து…… என்னை  இதுக்கு  முன்னாடி  அப்படி  யாரும்  கிஸ்  கொடுத்ததில்லை…  அதான்  துடைச்சேன்”
“இப்போ  நான்  கொடுத்தேனே.  நீ  துடைக்கலையே”  என்றான்  கண்ணடித்துக் கொண்டே.
“இது  நீங்க  அத்தான்” என்றாள்  தலையை  குனிந்து  கொண்டு.
“உன்  லிப்ஸ்  வீங்கிடுச்சு  சிட்டு.. வீட்டுல  சமாளிச்சுடுவியா?” என மிகவும்  மெல்லிய  குரலில்  கேட்டான்  ரிஷி.
“ம்ம்…”  தலை நிமிர்ந்தாளில்லை
“சேவல்   இன்னும்  கொஞ்சம்  லேட்டா  கூவியிருக்கலாம்டி”
             “உன்  அல்லி  இதழின்
               அமுதம்   பருகியே
               அகோர   பசி  கொண்டேன்!”
   
 

Advertisement