Advertisement

              மைலாஞ்சியே   நாணமோ
                       அத்தியாயம்  8
“நிறுத்துடா!… என்னமோ  இங்க  சிட்டுங்குற  பேருக்கு   காம்ப்பட்டீஸன்   நடந்துட்டுட்டு  இருக்குற   மாதிரி   அண்ணனும்   தங்கச்சியும்  ஓவரா   சீன்   போட்டுட்டு  இருக்கீங்க.  உங்களுக்கு   பிடிச்சா  கூப்பிட்டு   தொலைய  வேண்டிய தான?   அதென்ன  இவ  சொல்லட்டும்,  அவன்  சொல்லட்டும்னு   ஜாமின்  கையெழுத்து   போட  சொல்லுறீங்க?”  என்று   சொல்லிக்   கொண்டே  காரிலிருந்து   இறங்கிய   தனாவை,
“டேய்!…”  என   பல்லை    கடித்தான்   ரிஷி.
“ரொம்ப  வருசம்  கழிச்சு   கட்டிக்கப்  போற   பொண்ணை  பார்க்கப்  போறானே?… நாம  எதுக்கு   வால்   மாதிரி   கூடவே  இருக்கனும்னு   காருக்குள்ளவே   இருந்தா…   அந்த   சின்ன  பொண்ணை   மிரட்டுறதும்   இல்லாம  ,   பெரியவங்களையும்   சேர்த்து   கலங்க  வைச்சுட்டு  இருக்க?   இதுல   இவரு   மனுஷனாவே   இருக்க  மாட்டாராம்,  நீ  எப்போ  தான்டா   மனுஷனா   இருந்துருக்க.”  என    திட்டியபடியே  ரிஷியின்  அருகில்  வந்து  நின்றான்  தனா.
“இவன்  தான்  என்னுடைய  தனா” என்று   பெருமிதம்  பொங்க  அனைவருக்கும்   பொதுவாய்  அவனை   அறிமுகப்படுத்தினான்  ரிஷி.
“ உன்னைப்  பற்றி  பத்மா  நிறைய  சொல்லியிருக்கா பா… உன்னை  நேர்ல  பார்க்குறதுக்கு  இவ்ளோ  நாள்  ஆகியிருக்கு  பாரு”  என்றார்   பாட்டி.
“அதே  தான்  பாட்டி  எனக்கும்.   உங்களை  பற்றி  எனக்கு  எல்லாம்  தெரிஞ்சாலும்   உங்க  எல்லோரையும்   நேர்ல   பார்த்து   பழகுற  பாக்கியம்   எனக்கும்   இப்போ  தான்  கிடைச்சிருக்கு”   என்றவன்   தாத்தா  பாட்டியின்   கால்களில்   விழுந்து   ஆசி  வாங்கினான்.
ஜனனியின்    பக்கம்   திரும்பிய   தனா ,  “ஹாய்…  சிஸ்டர்    ஐ அம்  தனா”  என்று  சொல்லியபடி  தன்  கைகளை  நீட்டினான்.
“சிட்டுக்கு   தமிழ்  நல்லாவே  புரியும்டா”  என்றான்  ரிஷி  நக்கலாக.
“ இனி   என்   உடன்பிறவா  சகோதரியிடம்   தமிழிலிலேயே   கதைக்கின்றேன்.  போதுமா  மஹாபிரபு!” என்ற  தனா  மீண்டும்  ஜனனியிடம்,
“என்  உடன்பிறவா  உடன்பிறப்பே… தங்களுடைய   எதிர்காலத்தை  எண்ணி    நான்   இக்கணம்  முதல்   கலக்கமுறுகின்றேன்”  என   நாடகபாணியில்  சொல்லியபடி   கண்ணீர்  வராத  கண்களை  துடைத்துக் கொண்டான்.
“அடங்கித் தொலை” என்ற  ரிஷி
“அங்க  பாரு.. அவ  பாஸிங்க்ல  இருக்கா.  அவளை  முதல்ல  இறக்கு”  என்றான்.
“உன்னை  பார்த்ததுல  இருந்தே  சிஸ்டர்  ஏர்ல தான்டா  இருக்காங்க”  என்றான்  தனா  சிரித்துக்  கொண்டே.
அதுவரை   ரிஷியை  மட்டுமே  பார்த்துக்  கொண்டிருந்தவள்.. இருவரது   கேலியில்   முகம்சிவக்க , 
“அப்படியெல்லாம்  ஒண்ணுமில்லை  அண்ணா.  என்னை   ‘வா’  ‘போ’ னு  கூப்பிடுங்க.  நீங்களும்  எனக்கு  ஒரு  அண்ணன்   மாதிரி  தான்”  என்றாள்   ஜனனி.
 “அண்ணன்   மாதிரியெல்லாம்   இல்ல…  உனக்கு   இவனும்  ஒரு   அண்ணன் தான்.  நம்ம   குடும்பத்தில்   ஒருத்தன்.  புரியுதா?”  என்றான்  ரிஷி   ஜனனியை    நோக்கி.
புரியுது   என்பதன்   அடையாளமாய்  தன்  மண்டையை   ஆட்டியவள்  தனாவை   பார்த்து,
“சாப்பிட்டீங்களா  அண்ணா?”  என  கேட்கவும்
         ரிஷிக்கு   உடம்பெல்லாம்   பொறாமை  தீ  பற்றி  எரிய …  வந்து   இவ்ளோ  நேரம்  ஆச்சு  இன்னும் என் கூட  ஒரு  வார்த்தை    பேசனும்னு  தோணலை … என   கடுப்பானவன்,   தாத்தாவிடம்  திரும்பி
“நாங்க   சாப்பிட்டு  தான்  வந்தோம்  தாத்தா.  காலையில்   பார்ப்போம்  தாத்தா.. வரேன்  பாட்டி”  என்றவனது  முகம்  அனலைக்  கக்கிட  மறந்தும்  கூட  ஜனனியின்  பக்கம்  திரும்பினானில்லை…    விடைபெற  சொல்லிக் கொள்ளவும் இல்லை.
“டேய்…எருமை!  உன்  கோவத்துக்கு   என்  வயிற்றுல  ஏன்டா  கையை  வைக்குற?” என்று   சொன்ன   தனாவை   காருக்குள்  தள்ளி  டோர்  லாக்  பண்ணியவன் ,  புயல்  வேகத்தில்   காரை  கிளப்பினான்   ரிஷி.
“மெதுவா  போடா!…  இது  வில்லேஜ்.   உன்னால தாத்தா  பாட்டிக்கிட்ட   கூட  நான்  சொல்லாம  வந்துட்டேன்”  என  திட்டிக்கொண்டிருந்தான்  தனா.
“அவுங்க  ரெண்டு  பேரும்   சாப்பிடலை  போல  பாட்டி. “  என்றாள்  ஜனனி   கவலையாக.
“பசங்க  ரெண்டு  பேருக்கும்  நீ  பெரிய  ஹாட்பாக்ஸ்ல  இருக்குறதை  சின்ன  பாக்ஸ்ல  மாத்தி  எடுத்து வைடா  கண்ணு.   முனியன்கிட்ட  கொடுத்து   விடுவோம்.”  என்றார்   பாட்டி.
“சரி  பாட்டி”  என்ற  ஜனனி    அனைத்தையும்  எடுத்து  வைக்க  கிட்சனுக்குள்   ஓடினாள்.
“என்னங்க  இதெல்லாம்   சரியா வருமா?.. எனக்கு  ஒரே  குழப்பமா  இருக்கு”  என  கேட்டார்  பாட்டி  தாத்தாவிடம்.
“இதுவரை  நம்ம  குடும்பத்தில்  இருக்குற  குழப்பம்  போகனும்னா … அதுக்கு  இது  தான் சரி”  என்றார்  தாத்தா  சிரித்துக் கொண்டே.
“ரிஷியின்  ஆளுமைக்கும்,  ஜனனியின்  பயந்த  சுபாவத்துக்கும்   ஒத்துப்  போகுமா?”   என கவலையோடு  கேட்டார்   பாட்டி.
“ஹாஹா… இன்னும்   கொஞ்ச  நாள்ல   ரிஷி  தான்  ஜனனிக்கு  அடங்கிப்  போவான்.  நான்  உனக்கு  அடங்கி  போறது  மாதிரி”   என்றார்  தாத்தா  சிரிப்புடன்.
“யாரு?  நீங்க  எனக்கு   அடங்கி  போறீங்களா? ஹுக்கும்”  என  முகவாயை  தன்  தோளில்  இடித்துக்  கொண்டார்  பாட்டி.
“இல்லையா  பின்ன?  பாரு  … இப்போ  கூட  உன்  முந்தானையை  பிடிச்சுட்டு  நிக்குறேன்”  என்ற  தாத்தா   பாட்டியின்  பட்டு  சேலையில்  கைவைக்க   போக,
“அடி  ஆத்தி…என்னதிது ?  பிள்ளைங்க  வர  போறாங்க.  பிள்ளையில்லா  வீட்டுல  கிழவன்   துள்ளி  விளையாண்ட  கதையாருக்கு”  என்று   சொல்லியபடி  தாத்தாவிடம் இருந்து  தள்ளி  நடந்தார்   பாட்டி.
“ஓய்…யாரைடி  கிழவன்னு  சொல்லுற?……..”   மேற்கொண்டு  தாத்தா   விவகாரமாய்   பேசப்   போகும்  முன்  , 
 “எடுத்து  வைச்சுட்டேன்  பாட்டி”  என   சொன்னபடியே   வராண்டாவிற்கு  வந்து  நின்றவள்  சற்றே  தயங்கி,  “நானும்  முனியன்  கூட  போய்  சாப்பாடு  கொடுத்துட்டு  வரவா தாத்தா”   என  அனுமதி  கேட்டாள். 
“ம்ம்…சரி  ஜானும்மா…   போயிட்டு   சீக்கிரம்   வந்துடு”   என்றார்  தாத்தா.
“என்ன  சொல்லுறீங்க?.. நம்ம  பசங்களுக்கும் ,   பேரன்களுக்கும்  தெரிஞ்சா  என்னாகும்?”  என  பயத்தில்  வியர்க்கத்  தொடங்கிய  முகத்தை  துடைத்துக்  கொண்டே  கேட்டார்  பாட்டி.
“ஒண்ணுமாகாது  அரசி.  ரிஷி எல்லாத்தையும்  பார்த்துப்பான்”  என்றவர்   முனியனை  கூப்பிட்டு,
“ஜானும்மாவை   நம்ம  பண்ணை  வீட்டுக்கு பத்திரமா கூட்டிட்டு  போயிட்டு   திரும்ப  சீக்கிரம்   கூட்டிட்டு  வரனும்”  என்றார்  உத்தரவிடும்  தொணியில்.
              முனியன் …  அவர்களது  வீட்டில்  வேலை  செய்யும்  தோட்டக்காரன்.  கல்யாணம்  ஆகாத   45  வயது  கட்ட பிரம்மச்சாரி.   அவனது   உழைப்பில்  மெருகேறுவது  அவர்களது   தோட்டம்  மட்டுமல்ல   அவனது  உடற்கட்டும்  தான்.   இருபது  வயதிலிருந்து   இங்கே  வேலைக்கு   சேர்ந்த  உண்மை  ஊழியன். 
“ஐயா…இந்த  நேரத்துல   பாப்பா  எதுக்குங்க?  நானே  கொண்டு  போய்  கொடுத்துட்டு  வாரேனுங்க”  என்றான்  முனியன்  பவ்யமாய் . 
            முனியனின்  பேச்சைக்  கேட்ட  ஜனனி    ‘காரியமே  கெட்டுச்சு’  என   மானசீகமாக  தலையிலடித்துக் கொண்டாள்.  ஜனனியின்  முகமாற்றத்தைக்  கண்ட  தாத்தா   உள்ளுக்குள்  சிரித்துக்  கொண்டே,
“ஜானும்மாவுக்கு   பாடிகார்டா  தான்  நீ  போறீயே  முனியா.. அப்புறம்  என்ன ?  சீக்கிரம்  போயிட்டு  வாங்க”   என்றார்  தாத்தா.
“ம்ம்…சீக்கிரம்  வந்துடுறோம்  தாத்தா”  என  புறப்பட்டாள்  ஜனனி   தன்  அத்தானைக்  காண.
           முனியன்  சாப்பாட்டு   பேகை  தூக்கிக்  கொள்ள  ,  முன்னால்   நடந்தவளின்  தோரணை   ஓர்  மகாராணியைப்  போல  தோற்றமளித்தது.   
           பண்ணை  வீடு     அடுத்த   தெருவில்  தான் இருந்திடவே   நடந்தே  சென்றாள்  ஜனனி .
          வீதிகள்  அனைத்தும்  உறக்கத்தை   தழுவியிருக்க..  ஜல்  ஜல்  என ஜனனியின்   கொலுசொலி   மட்டுமே   வீதியில்   எதிரொலிக்க , 
“அம்மன்  வீதி உலா  வர்ற மாதிரி  இருக்கு  பாப்பா”  என்றான்  முனியன்.
புரியாமல்  விழித்த  ஜனனிக்கு ,
“உங்க  கொலுசு  சத்தம்  பாப்பா” என்றதும்
“இன்னும்  கொஞ்ச  நேரத்துல  என்  கையில  வேப்பிலையும்  தீச்சட்டியும்  கொடுத்துடுவீங்க  போல”  என்றாள்  சிரித்துக் கொண்டே  ஜனனி.
“அப்படி  கொடுத்தா  தான்  நீங்க  அம்மன்னு  இல்லை  பாப்பா.   நம்ம  ஊரு  ஜனகை  மாரியாத்தா  பெயரை   தான்  உங்களுக்கு   வைச்சுருக்காங்க.  அப்போவும்  இப்போவும்   எப்பவும்   நீங்க  எனக்கு   அம்மன்  தான் பாப்பா”  என்றான்  முனியன்   உணர்ச்சிவசப்பட்ட குரலில்.   அவனை  விட்டால்  இப்போவே   ஜனனிக்கு   கோவில்  கட்டிவிடுவான்    போல.
           பேசிக்  கொண்டே   பண்ணை  வீடு  வந்து   சேர்ந்தனர்   இருவரும்.   ஜனனிக்கு   கை  கால்கள்   உதற  ஆரம்பித்தது.   தாத்தா  பாட்டியின்  முன்   அவளால்   இயல்பாக   தன்  அத்தானிடம்   பேச  முடியவில்லை.  அதன்  பொருட்டே   சோத்து  மூட்டையை  தூக்கிக்  கொண்டு   வந்துருக்கின்றாள்.
முனியன்   கதவை  தட்ட , திறந்தது   ரிஷி  தான்.
“பெரிய  ஐயா  சாப்பாடு  கொடுத்துவிட்டாங்க”  என்று  தன்  கையிலிருந்த  பேகை  ரிஷியிடம்  கொடுக்க,
“இல்ல…சாப்பிட்டோம்னு  சொல்லிடுங்க”  என்றான்  ரிஷி  எரிச்சலோடு.
       உள்ளே  ஒருத்தன்  பசியில்  அலறிக்  கொண்டிருக்க,  ரிஷி  சாப்பாடு  வேண்டாமென்று  சொன்னது  மட்டும்  அவனுக்கு  தெரிந்தால்  ரிஷியை  என்ன  செய்வானென்றே  தெரியாது.
            ரிஷியின்  தற்போதைய  தேவை  என்னவென்று  அவனுக்கே  தெரியவில்லை.  அதன்   விளைவே  தேவையில்லா  முகத்  திருப்பலும், எரிச்சலும்.
“ஏன்   வேண்டாமாம்?”  என கேட்டுக்  கொண்டே   வாயிலின்  பக்கவாட்டில்  இருந்து   வெளிவந்தாள்  ஜனனி.
          இதை  சற்றும்  எதிர்பார்க்காத  ரிஷியின்  மனதில்   கோடி  பூக்கள்  பூத்து.. சற்று  நேரத்துக்கு  முன்   அவன்  மனதில் இருந்த   எரிச்சலை  நீக்கி  சாமரம்  வீசியது.
“இதென்ன  ஒளிஞ்சு  நிக்குற  பழக்கம்?”  என்றான்  சிரிப்புடன்.
“ஹுக்கும்.. யாரும்  இங்க  ஒளிஞ்சு  நிற்கலை.  நான்  இருக்குறது   உங்க  கண்ணுக்கு  தான் தெரியலை”  என்ற  ஜனனி
          முனியனிடமிருந்து   பேகை  வாங்கி கொண்டு  ரிஷியை  இடித்தவாறு  உள்ளே  சென்றாள் .  அவளது   பின்னிலே  வந்தவன்,
“என்ன  வாய்  ஓவரா இருக்கு?”  என  கேட்டான்  ரிஷி.
“இருக்காதா பின்ன?… பன்னிரண்டு  வருசம்  கழிச்சு  பார்க்க  வந்தா  அப்படி  தான்  பேசுவேன்”  என்றாள்  ஜனனியும்  விடாது.   
            அப்போது  தான்  ரிஷியை  கவனித்தாள்.  வெறும்  ஷார்ட்ஸ்  மட்டுமே  அணிந்திருந்தான்.  வெற்று  மார்பில்  ஆங்காங்கே   நீர்த்துளிகள். தலை முடியும்  ஈரத்தால்  ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருந்தது.   இப்போது  தான் குளித்துவிட்டு  வந்துருப்பான்  போல.   சோப்பின்   மணம்  அந்த  வீட்டின்  ஹாலை  மட்டுமல்ல…  ஜனனியின்    நேச நாசியின்  வழியாக   இதயத்தையும்   நிரப்பிக்  கொண்டிருந்தது.  
              ரிஷியை  நிமிர்ந்து   பார்த்துவிட்டு  ஜனனி   தலையைக்  குனிந்து  கொள்ள..    அவளது  பார்வை  மாற்றத்தின்   பொருளுணர்ந்து ,  
“உட்காரு  வரேன்”  என்றவன்  வலப்பக்கத்தில் உள்ள  அறைக்குள்  சென்று  மறைந்தான்.
            வலப்பக்கம், இடப்பக்கம் என தலா  இரண்டு  அறைகளும்,  மேலே  முதல் தளத்திலும்  அவ்வாறே  கட்டப்பட்டு… பக்கவாட்டில்  பால்கனியும் …அதற்கு  மேலே  மொட்டை  மாடி என  அவர்களது  பண்ணை வீடே  மினி  பங்களாவாக  காட்சியளித்தது.
              கையில்லா  டீசர்ட்  ஒன்றை  போட்டுக்  கொண்டு, கைகளாலே   தலைமுடியை   அப்படியும்  இப்படியுமாய்  கோதியபடியே   அரக்க  பறக்க  அறையிலிருந்து  ஓடி  வந்தான்  ரிஷி.
“தனா  அண்ணா  எங்க? “  என  கேட்டாள்  ஜனனி  ரிஷியிடம்.
“நீ  கதவை  தட்டும்  போது  தான்  அவன் குளிக்க  போனான்.  இப்போ  வந்துடுவான்.  அவன்  தான்  ரொம்ப  பசியில  இருந்தான்”  என்றவன்  அவள்  பக்கமாய்  நெருங்கி  நின்று
“நான்  உன்னை  தேடி  வராதது  தான்  தப்புங்குற  மாதிரி  பேசுற.   அப்போ  நீ  எந்த  தப்புமே   செய்யலையா  சிட்டு?”  என அவள்  விழிகள்  கோர்த்து  கேள்வி  கேட்டான்  ரிஷி.
“ அத்தான்!”  அதிர்ந்தாள்  ஜனனி.
அவளது   அதிர்ச்சியை   தாங்காத   அவளது   விழிகள்  கண்ணீர்   எனும்  கழிவிரக்கத்தை   உடனடியாக  வழிய  விட,
“த்சு…அழாதடி… அன்னைக்கும்   இந்த  அழுகையைப்  பார்த்து  தான்  இந்த  ஊரை விட்டு  ஓடிப்  போனேன்.   திரும்பவும்   என்னை  அப்படி  ஒரு  நிலைக்கு  கொண்டு  போயிடாத”  என  சொல்லியவன்  தன்னை   மனதளவில்  மிகவும்    களைத்துப் போனவனாய்   உணர்ந்து  அருகிலிருந்த  சோபாவில்  ‘தொப்’பென  அமர்ந்தான்.
         அவனது   இந்த  நிலையை  காண  சகியாது   மனம்  வருந்திய  ஜனனி… அவனது   காலடியில்  மண்டியிட்டு   அமர்ந்து    அவனது  கைகளை  தன்  கைகளால்  இறுகப்  பற்றிக்  கொண்டு,
“ஸாரி   அத்தான்!…இனி   எப்போவுமே   அழ  மாட்டேன்”  என்றாள்  ஜனனி.
       ஜனனியின்   தொடுகை   ரிஷியின்  உடலுக்குள்  சில  பல  ரசாயன  மாற்றங்களை   உருவாக்கிக்  கொண்டிருந்தது.  சில  நொடிகளுக்கு  முன்   தான்   சொல்லொண்ணா  துயரத்தில்   இருந்த  தன்  உடலும்  மனதும்  ஜனனியின்  தொடுகையினால்  தன்  உயிருக்குள்  ஒரு   புத்துணர்ச்சியை  விதைப்பதை  உணர்ந்தான்.  (ஜானும்மா…இதை தான்   செல்ஃப்  ஆப்பு னு  சொல்லுவாங்க)
          ஜனனியை   அவன்  அறியாதவன்  அல்ல.  அவனது   பதினாறாம்  வயது வரை   ஜனனியை    தூக்கி  கொஞ்சி  கொண்டு  அலைந்தவன்  தான்.   ஜனனியோடு   ஓடிப்  பிடித்து  விளையாண்டும்,  உப்பு  மூட்டை  தூக்கிக்  கொண்டும்,  சேர்ந்து  ஊஞ்சலாடிக்  கொண்டும்  இருந்தவன்  தான்.  பல  சமயங்களில்   ஜனனியை   அவனது  மடியில்   உறங்க  வைத்த  காலங்களும்  உண்டு. 
            அப்பொழுதெல்லாம்  ரிஷிக்கு  ஜனனியின்  மீது  தன்னுடைய  குட்டி  தோழி  என்ற  பிரியம்  மட்டுமே  இருக்குமாதலால் … அவளை  கண்ணுங்  கருத்துமாய்  எப்பவும்  பாதுகாத்துக் கொண்டே  தான்  இருப்பான்.
            ஆனால்  இன்றைய   ஜனனியின்  தொடுகை  அவனுக்குள்   பருவ  வயதுக்குரிய  மாற்றங்களை  ஏற்படுத்த… ஜனனியின்   கைகள்   இப்போது   ரிஷியின்   கைகளுக்குள்  அடைக்கலமாகியிருந்தன.
             ஜனனி   ரிஷியின்  கையை  பிடிக்கும்  போதே  தனா  வந்துவிட்டான்..  வந்தவன்  இவர்களுக்கு  தனிமை  கொடுக்கும்  பொருட்டு  திரும்பவும்  பூனை  போல்  சென்று தன்  அறைக்குள்   மீண்டும்  பதுங்கிக்  கொண்டான்.
ரிஷியின்   மனநிலை   பற்றி  தெரியாத  ஜனனி,   “அத்தான்  அப்போ   எனக்கு  எட்டு  வயசு தான  இருக்கும்.  நான்  சின்ன பிள்ளை  தான.  என்னை  மன்னிச்சுடுங்க  அத்தான்”  என்றாள்.

Advertisement