Advertisement

“எது   பாட்டி?…சிட்டுவை  கட்டிப்பிடிச்சு   முத்தம்  கொடுக்குறதா?”  என்று   ஜனனியை  பார்த்துக்   கண் சிமிட்டிக்  கொண்டே  பாட்டியிடம்  கேட்டாள்   ரேணு.
‘ஐயோ …இந்த  லூசு  இதை  விடவே  மாட்டாளா?..  சைக்காலஜி  படிச்சு  படிச்சு  இவளுக்கு   பைத்தியம்  பிடிச்சுருச்சோ?’ என  ரேணுவை   பற்றி  தெரியாமல்  சொன்னது  ஜனனியின்  மைண்ட்வாய்ஸ்.
‘நானா  லூசு?…  நீ  தான்  பைத்தியமாகி  என்  அண்ணன்  பின்னாடி  சுத்த  போற.  அதையும்  நான்  பார்க்க தான்  போறேன்  தங்கம்’  என்று  பதில்  சொன்னது  ரேணுவின்  மைண்ட்வாய்ஸ்.
‘இப்போ   எதுக்கு   இந்த  லூசு   சிவாஜி  கணேசன்  மாதிரி  நவரசத்தையும்   தன்னோட  மூஞ்சியில  காட்டிட்டு  நிக்குது’   இது  ஜனனியோட  மைண்ட்வாய்ஸ்  தாங்க.
              ஜனனியின்   மைண்ட்வாய்ஸால்   கடுப்பான  ரேணு, அவளுக்கு  பதில்  சொல்வதற்குள்… 
“சிட்டுனு   கூப்பிடுற   பழக்கம்  புதுசா இருக்கே  ரேணு”  என  கேட்டார்   பாட்டி.
“இது  ஒண்ணும்  புதுசில்லையே  பாட்டி.   நாம   முன்னாடியெல்லாம்   ஜனனியை   சிட்டுனு   தான   கூப்பிடுவோம்.  இப்போ  தான் கொஞ்ச   நாளா  மறந்துட்டோம்.  இனி  நான்   எப்பவும்  போல  சிட்டுனு  தான்   கூப்பிடபோறேன்.”  என்றாள்   ரேணு   தீர்மானமாக.
“அப்படியெல்லாம்   கூப்பிட  கூடாது “ என்றார்  பாட்டியும்  விடாது.
“அதை   நீங்க  சொல்ல  கூடாது  பாட்டி.  என்  அண்ணன்  தான்  சொல்லனும்”  என்றாள்  ரேணு  கோவத்தில்  முகம்  சிவக்க.
“ரேணு   என்ன  இப்படியெல்லாம்  பெரியவங்களை   எதிர்த்து  பேசுற?   மன்னிப்பு   கேளு”  என்றார்  ரேணுவின்  அப்பா  உலகநாதன்.
“விடுங்க   மாப்பிள்ளை.  சின்ன  பிள்ளை  ஏதோ  தெரியாம  பேசுறா.    எல்லோரும்  உள்ளே  வாங்க”  என்ற  தாத்தா
“என்னம்மா  கல்யாண  பொண்ணு  என்ன  சொல்லுறார்  மாப்பிள்ளை? “  என்று   ரஞ்சியின்  தோளில்   கைப்போட்டு  உள்ளே  அழைத்துச்   சென்றார்.
           வீட்டின்  வராண்டாவில்   பாட்டியுடன்  பத்மாவும் , ஊர்மிளாவும்  மட்டும்   தனித்திருக்க… 
 “என்ன   பத்மா  இது ?  ரேணு  இப்படி  பேசுறா?  எப்பவும்   இப்படி  பேச  மாட்டாளே.  என்னாச்சு?”   என்றார்   பாட்டி கவலையாக.
“இதுக்கே  கவலைப்பட்டா  எப்படிமா?    ரிஷியின்  பேச்சில்  பத்து சதவீதம்  தான்   ரேணு  பேசியிருக்கா.  அவன்  வந்த பின்னாடி  தான்   நமக்கு திருவிழாவே  இருக்கு.  நான்  கவலைப்பட்டு  அழுது  முடிச்சுட்டு  தான்   இங்க  கிளம்பி  வந்துருக்கேன்.”  என்றார்   பத்மா. 
              இந்த   வயதிலும்     எதற்கும்   கலங்காது  குடும்பத்தை  நிர்வகிக்கும்  பாட்டியின்   முகத்தில்   அச்ச  ரேகைகள்  ஓடிட , 
“நான்  பெத்த  நாலு  பிள்ளைகளும்  எப்பவும்  ஒற்றுமையோடு   இருக்கனும்.     ஆண்டவன்கிட்ட   தினமும்    வேண்டுறது   அதான்”   என்றார்   பாட்டி.
“பெண்கள்   மாநாட்டுல   என்ன   முடிவெடுத்துருக்கீங்க?”  என  கேட்ட படியே  வந்தார்   ரஞ்சனியின்  அப்பாவான  தனசேகரன்.
“டாட்…. இது   பெண்கள்   மாநாடில்லை.    முதியோர்  மாநாடு”  என்று   ரஞ்சி  சொல்லிக்  கொண்டே  காரை  நோக்கிச்  சென்றாள்.
“எங்கடா  கண்ணு   போகுற?”  என்றார்   பாட்டி
“பண்ணை  வீட்டுக்கு  தான்  பாட்டி.  தூக்கம்   கண்ணை  சொழட்டுது.  ரொம்பவே   டயர்ட்”  என்றாள்   ரஞ்சி.
“அச்சோ  … உங்களை  சாப்பிட  வைக்காம   நான்  இங்க  நின்னு  பேச  ஆரம்பிச்சுட்டேன்”  என  தன்   நெற்றியில்   தட்டிக்  கொண்டார்   பாட்டி.
“நாங்க     சாப்பிட்டு   தான்  வந்தோம்  பாட்டி.  இப்போ  இங்க   வந்து    எல்லோரும்  சூடா   பால்  குடிச்சாச்சு.  இனி    படுக்க   வேண்டியதான்”   என்றாள்  ரஞ்சி.
              அனைவரும்  பேசிவிட்டு  பண்ணைவீட்டுக்கு   போக    மேலும்  அரைமணி நேரமாகியது.   இத்தனை  பேச்சு  சத்தத்துக்கும்    தன்  வீட்டிலிருந்த   யாரும்   எழுந்து   வரவில்லையே  என  தாத்தாவுக்கும்   பாட்டிக்கும்   மிகுந்த   மன வருத்தம்.   அனைத்திற்கும்   விரைவில்  ஒரு   நல்ல   தீர்வு  வரும்  என்பது   தாத்தாவின்  நம்பிக்கை.
               மீண்டும்   தனித்துவிடப்பட்டனர்   ஜனனியுடன்   தாத்தாவும்   பாட்டியும்.
“இதுக்கு   முன்னாடியெல்லாம்  வந்தப்போ    அத்தை  மாமா  நம்ம  வீட்டுல  தான  தங்கியிருந்தாங்க.   இப்போ மட்டும்   ஏன்  பண்ணை  வீட்டுல  தங்க  வைச்சுருக்கீங்க?”  என   கேட்டாள்   ஜனனி   தாத்தாவிடம்.
“நான்   தங்க  சொல்லலை   ஜானும்மா.    உன்   ரிஷி  அத்தானுக்காக  தான்  அவுங்க  பண்ணை  வீட்டுல  தங்க  போறோம்னு  சொல்லிட்டு   போயிருக்காங்க.”   என்றார்   தாத்தா    ‘உன்  ரிஷி  அத்தானில்’   அழுத்தம்  கூட்டி.
                  ஜனனியோ   பேசுவதறியாது   தாத்தாவின்   முகத்தை  பார்த்தபடியே   இருக்க… பாட்டி   பேச  ஆரம்பிக்கும் முன்     கார்  ஹார்ன்   சத்தம்   கேட்கவே   வெளியே   வந்து   பார்த்தனர்   மூவரும் .
                  புத்தம்புதிதாய்   பளபளவென  மினுக்கிய   கோல்டன் க்ரீன் லம்போர்கினி  காரின்   மீது  சாய்ந்தவாறு  ஒரு  மாடலைப்  போல   நின்று   கொண்டிருந்தான்   ரிஷி.
                  மூச்சுவிட   மறந்தவளாய்,  கால்கள்  வேரோட   சிலையென   அப்படியே  நின்றிருந்தவளை   இழுத்து  சென்றார்  பாட்டி.    காரை   வீட்டு   காம்பவுண்ட் கேட்டின்  முன்    சாலையின்  ஓரத்தில்  நிறுத்தியிருந்தான்  ரிஷி.
“ரிஷி  உள்ளே  வாப்பா”  என்றார்   பாட்டி.
“எல்லாம்  தெரிஞ்சும்  கூப்பிடுறீங்களே  பாட்டி?… தாத்தாவெல்லாம்   என்னை   கூப்பிடவா  செய்யுறார் ?”  என்றான்   ரிஷி.
“அவரை   மாதிரி  இரும்பாட்டம்  இருக்கவெல்லாம்  என்னால  முடியாது  சாமி.”   என்றார்  பாட்டி  
“ அவர்கிட்ட  இருந்து  நாம  நிறைய  கத்துக்கனும்  பாட்டி. இப்போ     ரெண்டு  பேரும்  சேர்ந்து   நில்லுங்க”  என்றவன்  
               அதுவரை  மறந்தும் கூட  ஜனனி  பக்கம்  திரும்பாமல்  இருந்தவன்… இமைக்கும்  நொடியில்   ஜனனியின்   கைப்பிடித்து    தன்னோடு  இழுத்துக்  கொண்டு   தாத்தா  பாட்டியின்  கால்களில்   விழுந்து   ஆசி  வாங்கினான்.
             இச்செயலில்   பெரியவர்கள்   திகைத்துப்  போனார்கள்  என்றால்,  ஜனனியோ  அச்சத்தின்  எல்லைக்கே  போய்விட்டாள்.    இன்று   காலையில்  இருந்து    தனக்கு   நேர்ந்த   நிகழ்வுகளில்  இது   ஒன்று  மட்டுமே  போதுமானது   பன்னிரண்டு   வருடங்களுக்கு  பிறகு   மீண்டும் ஒரு முறை  இந்த  குடும்பத்தில்      எரிமலை  வெடிக்க.
                    காலையில்   சந்தோஷை   காலேஜில்  பார்த்தது   முதல்   அதிர்ச்சி.    
                 வீட்டிற்கு  வந்தால்   ரஞ்சியின்   கல்யாணத்திற்கு   ரிஷி  உட்பட   அனைவரும்  வருகின்றார்கள்  என்ற   செய்தி   இரண்டாம்  அதிர்ச்சி.    
                எந்த   பெயர்  தன்  குடும்பத்தினரால்  மறக்கடிக்கப்பட்டதாக  நினைக்கப்பட்டு…    இன்றும்  தன்  உள்ளத்தின்   அடியாழத்தில்      பசுமையாய்    தன்  மனதுக்குள்   ரகசியமாகவே    ரசிக்கப்பட்டு   தன்னை   உயிர்ப்போடு   வைத்திருக்கும்   அந்த   பெயரை   சொல்லி பல  வருடங்களுக்கு   பிறகு   ரேணு    கூப்பிட்டது    மூன்றாம்   அதிர்ச்சி.
               யாராலும்  எதிர்  கேள்வி  கேட்க  முடியாத   பாட்டிக்கு  ரேணு     பதில்   சொன்ன   விதம்   நான்காம்   அதிர்ச்சி.  
              ரிஷி  அத்தானை  பற்றி  பேசி  பழக்கமில்லாத  இந்த  வீட்டில்   இன்று   மட்டும்   ‘உன்   ரிஷி  அத்தான்’ னு   தாத்தா  சொன்னது    ஐந்தாம்  அதிர்ச்சி.
                 இவையணைத்திற்கும்  சிகரம்  வைத்தாற்   போன்று   இதோ   தற்போது   நடந்த  நிகழ்வு.  இன்னும்   என்னனென்னவெல்லாம்   நடக்க  போகுதோ?   என   தனக்குள்  உழன்று   கொண்டிருந்தவள்,
“உன்  அதிரடி  என்ட்ரீயைப் பார்த்தா  எனக்கே   பயமாருக்கேப்பா?”  என்ற   பாட்டியின்   கேள்வியில்  சுய உணர்வுக்கு  வந்தாள்.
“நான்   சோழவந்தான்  அருணாச்சலத்தோட  பேரன்   பாட்டி.  இது   கூட   செய்யலைனா  எப்படி?”  என்ற  ரிஷி   ஜனனியை   பார்த்து   கண்சிமிட்ட   … அதை   எதிர்பாராதவளாய்  மூச்சுவிட  மறந்து   தன்  கண்களை  இமைக்க  மறந்து   மேலும்  அகல  விரித்தாள்.
“ஆனா   நீ   இப்போ  தாத்தாவை  மிஞ்சுன   பேரன்   ஆகிட்டியே?”   என   கேட்டார்   தாத்தா.
புரியாமல்   பார்த்தனர்   பாட்டியும்   ஜனனியும்.
“அப்படியெல்லாம்   ஒன்னுமில்லை  தாத்தா”  என  சிரிப்போடு  சொன்னான்  ரிஷி.
“சந்தோஷை   எதுக்கு   போலீஸ்ல  மாட்ட    வைச்ச?”  என  கேட்டார்   தாத்தா   ரிஷியின்   கண்களை  நோக்கி.
             அது வரை  சிரிப்போடு  இருந்த  ரிஷியின்  முகம்  கடுமையை  தத்தெடுத்தது. “அதை   உங்க  வீட்டு   இளவரசிக்கிட்ட  கேளுங்க”  என்றான்  கடுப்போடு.
           தாத்தாவும்  பாட்டியும்  ஜனனியும் கேள்வியாய்  பார்க்க … கண்  கலங்கி  இதழ்  துடிக்க    எப்பொழுது  வேண்டுமானாலும்   வெடித்து  விடுவேன்  என்று   அழுவதற்கு  தயாரானாள்.
அவளது   நிலையை  கண்டவனுக்கு   மேலும்  ஆத்திரம்  வர , 
“பன்னிரண்டு  வருஷத்துக்கு   முன்னாடியும்   அழுத…       தடிமாடு  மாதிரி  வளர்ந்துட்டு   இப்போவும்   வெட்கமில்லாம  அழுகுற?”  என்றான்   குரலில்  கடுமையை  ஏற்றி.
           ரிஷியின்   பேச்சால்  பயந்தது   ஜனனி  மட்டுமல்ல  பாட்டியும்  தான்.  ஏனென்றால்   யாரும்  ஜனனியிடம்  கடுமை காட்டி  பேசியதில்லை.  மிகவும்  செல்லமாய்   வளர்த்த  தன்  பேத்தி   இதை  தாங்குவாளா?   என  எண்ணிக்  கொண்டிருக்கும்  போதே  ஜனனியிடமிருந்து  மெல்லிய   விசும்பல்   சத்தம்  வர  ஆரம்பித்தது.
“சிட்டு  … முதல்ல  அழுகையை   நிறுத்து”  என்றான்  ரிஷி   அழுத்தமாக.
           ரிஷி   சொன்னதும்  ஜனனியின்  அழுகை  உடனே  அவளை  விட்டு  ஓடிப்  போனது.   அது  ரிஷியின்   சிட்டு  என்ற  அழைப்புக்காகவா?  ரிஷியின்  மேல் உள்ள  மரியாதையா? என்பதை  அவள்  ஆழ்மனது  மட்டுமே  அறியும்.
“இவளை  சுத்தி  என்ன  நடக்குதுனு   இவளுக்கே  தெரியாதப்போ … உங்க  மகன்களுக்கும்  ,  பேரன்களுக்கும்  மட்டும்  தெரிஞ்சிடவா  போகுது?   ஸ்லீப்பர்  செல்ஸ்  மாதிரி   இவளை  சுத்தி  ஆட்களை  போட்டா  மட்டும்  போதாது…  கொஞ்சம்  அறிவுக்  கண்ணையும்   திறந்து   பார்க்க  சொல்லுங்க.”   என்றவன்  பாட்டியிடம்   திரும்பி
“இவ   என்னோட   சிட்டு.  இது  அவ  பிறந்ததும்   முடிவான  பந்தம்.  இதுல  யார்  குறுக்க  வந்தாலும்  நான்  மனுசனாவே   இருக்க  மாட்டேன்.  பன்னிரண்டு  வருஷத்துக்கு  பிறகு   ஏன்    இந்த   ஊருக்குள்ள  வந்துருக்கேன்னு   உங்களுக்கு  இப்போ புரியும்னு  நினைக்குறேன்   பாட்டி.   சிட்டுனு   கூப்பிட  கூடாதுனு   சொன்னீங்களாம் .  அதை  நீங்க   சொல்ல  கூடாது.  என்  சிட்டு  சொல்லட்டும்  ,  நான்  கூப்பிடாம  இருக்கேன்”  என்றான்   ஜனனியை   பார்த்துக்  கொண்டே!    
           “என்னை   எப்பொழுதும்   
            உன்னுடனே   வைத்துக்   கொள்வாய்  என்றால்  சொல்…
            நான்   உன்   கைக்குட்டையாகி  விடுகின்றேன்!!”
              
 
          
    
                       
                     
                     
 

Advertisement