Advertisement

                 மைலாஞ்சியே   நாணமோ
            அத்தியாயம் – 7
                            ஜனனியின்  அறையை  இருள்  கவ்வ  தொடங்கியிருந்த  நேரம்.  தூக்கத்திற்கும்  விழிப்பிற்கும்   இடைப்பட்டதொரு   மோனநிலை  அது.    உள்ளத்தின்   அடியாழத்தில்  புதைந்து  கிடக்கும்  நிகழ்வுகளின்  ஒழுங்கற்ற  கோர்வைகளில்  தொலைந்திட  விரும்புபவளை  யாரோ  நிகழ்வுலகத்துக்கு   இழுத்துக்   கொண்டு  வந்ததைப்  போன்ற  உணர்வு.  
                      கண்களை   கசக்கிக்  கொண்டு   எழுந்த   ஜனனிக்கு   தலையே   பாரமாய்  தோன்றியது. நெற்றிக்  காயத்தால்   வந்த   பாரமா?  இல்லை  … மனக்  காயத்தால்   வந்த  பாரமா?  இன்னதென்று  வரையறுக்க  முடியாதவளாய்  குழம்பி … மேலும்  ஆராய  விரும்பாமல் ,    அறையின்  இருளையும், கடிகாரத்தில்   நேரத்தையும்   பார்த்து  பதறி  எழுந்தாள்.
                     மினி   குளியல்  ஒன்று   போட்டு  ,  மயில்  வண்ண  பாவாடை ,தாவணியில்   கீழே   இறங்கி  வந்தவளை   வரவேற்றார்  ஹாலில் இருந்த   அவளது   தாத்தா.
“வாடாம்மா… எழுந்துட்டியா?”  என்றவர் 
வீட்டின்   உள்பக்கத்தை  நோக்கி ,  “அரசி… ஜானும்மா  வந்துட்டா.  அவளுக்கு   குடிக்க   சூடா   பால்   கொண்டு  வா”   என்று   குரல்  கொடுக்கவும் 
                     செல் போனை  காதுக்கு   கொடுத்தபடியே  வீட்டின்  வெளிப்பக்கத்தில்  இருந்து   வந்து   சேர்ந்தனர்   ஜனனியின்   அப்பாவும் ,  பெரியப்பாவும்.  
  “ஏன்டா   கண்ணு…..   வலிக்குதா?” எனக்  கேட்ட படியே  செல்போனை  அணைத்து  தன்  பாக்கெட்டில்  போட்டார்   ஜனனியின்  பெரியப்பாவான  அருள்பிரகாஷம்.  
 “அப்பா… அக்காவுக்கு    கண்ணு   வலிக்கலையாம்… நெற்றியில  இருக்குற   காயம்  தான்   வலிக்குதாம்”  என்றான்   தேவா.
“இவ  ரூம்க்கு  வெளியே  ஒரு  ஸ்டூல்  போட்டு   டோக்கனாவது  நான்  கொடுத்துருக்கலாம்  தேவா.  எனக்கு  கல்லா நிறைஞ்சிருக்கும்.”  என்று   சொல்லிக்  கொண்டே  வந்தார்  வைதேகி.
“ஏன்மா.. அவ்ளோ   கூட்டமா?  அக்காவை  பார்க்க?”  என்றான்  தேவா.
“பின்ன?… வீட்டுல  உள்ள  ஒவ்வொருத்தரும்   தூங்குறவளை  வரிசையில வந்து  பார்த்த  கொடுமையை  நீ  பார்த்துருக்கனுமே?”   என்றார்  வைதேகி.
“நீ  டோக்கன்  போட்டு  தான்  உனக்கு  கல்லா  நிறையனுமா?  என்ன  பேசுறோம்னு   தெரிஞ்சு  தான்  பேசுறியா  வைதேகி?”  என  அதட்டிய  படி  கையில்   பால் டம்ளருடன்  வந்தார்  பாட்டி அங்கையர்கரசி.
“இல்ல அத்தை … அது  வந்து”  என்று   இழுத்தார்  வைதேகி.
“என்னது  வந்துச்சு ?  ஜனனி  இந்த  வீட்டோட  குலவிளக்கு.  அவ  பெயருக்கு   களங்கம்  வந்துடாத  மாதிரி  தான்  இந்த  வீட்டுல  உள்ளவங்களோட  சொல்லும் ,  செயலும்  இருக்கனும்.  அது  உனக்கும்  பொருந்தும்”  என்று   கண்டிப்புடன்  பேசினார்   பாட்டி.
“பாட்டி?  என்னதிது?  நான்  அடிபட்டு  வந்துருக்கேன்னு   ஆதங்கத்துல    அம்மா  அப்படி   பேசிட்டாங்க..  நீங்க  இதுக்கெல்லாம்  டென்ஷனாகிட்டு  இருக்கீங்க?”  என்றாள்  ஜனனி.
“அதானே  …. பிள்ளைப்  பாசத்துல   ஏதோ  தெரியாம  பேசிட்டா. விடுங்க  அத்தை”  என்றார்   அங்கே  வந்த  சுமித்திரை.
  “அண்ணன்கள்   எங்கே  பாட்டி?”  என  கேட்ட  படியே  கையில்  இருந்த  பால்  டம்ளரை  காலி  செய்ய  தொடங்கினாள்  ஜனனி.
“உஷ்… மெதுவா  பேசுக்கா… அப்பா  அதுல  தான்  இன்னும்  செம  கோவமா  இருக்கார்”  என்றான்   தேவா.
           ஜனனி   அப்போது  தான்  கவனித்தாள்…. எதிர்  சோபாவில்  அமர்ந்திருந்த  தன்  பெரியப்பாவின்  முகமும் ,  வராண்டாவில்  நடை  பயின்று  கொண்டிருந்த   தன்  அப்பாவின்  முகமும்   இருண்டு போயிருப்பதை! 
              தன்  தம்பியின்  பக்கத்தில்  வந்து  அமர்ந்து     யாருக்கும்  கேட்காதவாறு  மிகவும்  ரகசியமாக   “என்னடா  ஆச்சு?”  என  கேட்டாள்  ஜனனி.
“நம்ம   சந்தோஷ்  அத்தான்  இன்னும்  போலீஸ்  ஸ்டேஷன்ல  தான்  இருக்கார்”  என்றான்  தேவா.
“என்னது?   நம்ம  அத்தானா?  உவ்வே… அடி  வயித்துல  இருந்து   குமட்டிட்டு  வருது”  என்று   முகம்   சுளித்தாள்  ஜனனி.
“இருக்கா…. உன்   குமட்டலை   ,  அம்மாகிட்ட   போய்  கொட்டிட்டு    வரேன்”  என்றான்  தேவா  சிரித்துக்  கொண்டே.
“என்  செல்லம் …  வெல்லம்..  தம்பி… தங்க கம்பி”  என்று  கொஞ்சியவள்,
“சரி… அவனை  தான  லாக்கப் க்குள்ள  தள்ளியிருப்பாங்க..  வடிவு  அத்தையை   எங்கேடா?”  என  கேட்டாள்  ஜனனி 
“நீ   செம  கேடி க்கா… அத்தானை  லாக்கப்க்குள்ள  தள்ளுறதுனு  முடிவே  பண்ணிட்ட போல”  என்றான்  தேவா.
“இன்னொரு  தடவை  அவனை  அத்தான்னு  என்கிட்ட  சொன்ன… உன்னையும்  லாக்கப்க்குள்ள  தள்ள  தயங்கமாட்டேன்”  என்றாள்  ஜனனி  கோவமாய்.
“ஆமா… மதுரை  ஜெயிலு   நம்ம  தாத்தா  கட்டின  ஜெயிலு  பாரு..  நீ  சொன்னவனையெல்லாம்  உள்ள  தூக்கி  போடுறதுக்கு”  
“டேய்…உன்னை!..”  என்று  ஜனனி  தேவாவை  அடிக்க
         அப்போது   பாட்டி  , “என்னடா  அங்க  சத்தம்?”  என்று  கேட்க
அதற்கு   தேவா  , வடிவேல்  பாணியில்   “பேசிட்டு இருக்கோம்  பாட்டி” என்று  ராகமாய்  கூறினான்.
அதை  கேட்டதும்  ஜனனிக்கு  சிரிப்பு  வந்துவிடவே , “அட  சீ  அடங்கு!.. மீதி  கதையை  சொல்லு”  என்றாள்.
“வடிவு  அத்தை  அவுங்க  பையன்  இல்லாம  வீட்டுக்கு  வர  மாட்டேன்னு   அங்க   போலீஸ்  ஸ்டேஷன்லயே  உட்கார்ந்துட்டாங்களாம்.   சந்தோஷை   மீட்க  போன  நம்ம  அண்ணன்களும்   வந்தா  அவரோட  தான்  வருவோம்னு  அங்கேயே  இருக்காங்க  போல”  என்றான்  தேவா.
“நம்ம  தாத்தா , பெரியப்பா, அப்பா இவுங்க  மூணு  பேருக்கும்   இருக்குற   செல்வாக்குக்கு  ஒரு  போன் போட்டா  போதுமே … யாராயிருந்தாலும்  வெளியே  அனுப்பிடுவாங்களேடா… இப்போ  என்ன  ஆச்சு?”  என  கேட்டாள்  ஜனனி.
“அதான் கா  இங்க உள்ள  யாருக்குமே  புரியலை.  புது  இன்ஸ்பெக்டர்  போல.     ஏட்டுல  இருந்து  இன்ஸ்பெக்டர் வரை     எவனும்  போன்  எடுக்க  மாட்டுறானுக  போல.  அத்தை  வேற  அங்கேயே  இருக்காங்க.   அதான்  எல்லோரும்  செம  டென்ஷன்ல   இருக்காங்க”  என  முடித்தான்  தேவா.
             அப்போது   தாத்தாவுக்கு  போன்  வரவே , எடுத்து   பேசியவர் … பாட்டியிடம்  திரும்பி, “சென்னையில  இருந்து     பிள்ளைங்க  எல்லோரும்  வந்து   சேர  நைட்  பத்து  மணிக்கு  மேல  ஆகுமாம்.  ப்ளைட்  லேட்டாம்.  அதனால  நம்மை  காத்திருக்க  வேண்டாம்னு  சொல்றாங்க”  என்றார்  தாத்தா.
“எதுக்கு   காத்திருக்க  வேண்டாமாம்  தாத்தா?”   என கேட்டான்  தேவா
                    தாத்தா  பதில்  சொல்லும் முன் இடைபுகுந்த  ஜனனி ,              “சாப்பிடவும்  , தூங்கவும்  தான் டா.  இதையெல்லாம்  விலாவரியா  விளக்கிட்டா  இருப்பாங்க?”  என்றாள்.
                    இவர்கள்  இவ்வாறு  பேசிக் கொண்டிருக்க…  சத்தமில்லாமல்   எழுந்து   வராண்டாவில்  போடப்பட்டிருந்த  சோபாவில் சென்று   அமர்ந்தனர்  ஜனனியின்  அப்பாவும் ,  பெரியப்பாவும்.
   “நீ  ஊர்ல இருந்து  வர்றவங்களை  ரிசீவ்  பண்ணிடுறீயா?”  என  கேட்டார்  ஜனனியின்  பெரியப்பா.
“இப்போ  நானிருக்குற  மனநிலைல    யாரையும்   வரவேற்க  முடியாது.  நீங்களே  பார்த்துக்கோங்க”  என்றார்  ஜனனியின்  அப்பா.
            இவர்கள்   இவ்வாறு  பேசுவது  தாத்தாவின்  காதுகளில்  விழவே ,  ‘இதுக்கே  இவனுக  இவ்ளோ   சோர்வாகிட்டானுக? … வர்றவனை  எப்படி  சமாளிக்கப்  போறானுகளோ?… அவன்  அடிச்ச  ப்ர்ஸ்ட்  பாலே  சிக்ஸர்.  இனி  அடிக்க  போற  ஒவ்வொரு  அடியையும்  சொல்லி சொல்லி  அடிக்க  போறான்.  இவனுக  தாங்குவானுங்களான்னு  தெரியலையே?’  என  தன்  மனதுக்குள்  நினைத்தவாறு,
“நீங்க  ரெண்டு  பேரும்   போய்  தூங்குங்க.  வர்றவங்களை  நான்   பார்த்துக்கிறன்”  என்றவர்… சற்றே பெருமூச்சுவிட்டு  மீண்டும்  தன்  மகன்களிடம்,
“வரப்  போறது    உங்க  கூட  பிறந்தவங்களும் , அவுங்களோட   கணவர்களும்!.  இந்த  வீட்டு  மாப்பிள்ளைகளுக்கு   கொடுக்க  வேண்டிய   மரியாதையை  கண்டிப்பா  நீங்க  தந்து  தான்  ஆகணும்.   எந்த  குறையும் யாரும்  சொல்லிடாதவாறு  தாய்மாமன்களா  இந்த  கல்யாணத்தை  முன்ன  நின்னு  சீரும்  சிறப்புமா  நடத்திக்  கொடுக்கனும்.   பிறந்த  வீட்டுக்கு  வர்ற  பெண்  பிள்ளைகளை  இருந்து   வரவேற்க  கூட    மனசில்லாத  உங்களுக்கு   அப்படியென்னடா   கவலை  வந்துடுச்சு ?”  என்று  கேட்டார்  தாத்தா.
“உங்களால  மட்டும்  தான்ப்பா  இப்படி  எதுவுமே  நடக்காதது   மாதிரி  இருக்க  முடியும்.  சந்தோஷ்  இன்னும்  போலீஸ்  ஸ்டேஷன்ல   இருக்கான். நமக்கு  எவனும்  ரெஸ்பான்ஸ்  பண்ண  மாட்றானுக.  இதெல்லாத்தையும்  விட  நம்ம  வீட்டு  பொண்ணு  சந்தோஷோட  அம்மாவும்  இப்போ  ஸ்டேஷன்ல  இருக்காங்க.  இது  எவ்ளோ  பெரிய  அவமானம் நமக்கு.”  என்று  கோவத்தில்  கூறிய  ஜனனியின்  அப்பா  தன்   கையை  இறுக  மூடி  முஷ்டியை  பக்கத்தில்  இருந்த  தூணில்   குத்திக்  கொண்டார்.
“நீ  இப்படி  கையை  தூண்ல  குத்துறதுனால  நடந்தது   எதுவும்  மாறப்  போறது  கிடையாது.   வடிவு  ஏன்  இன்னும்  அங்கேயே  இருக்கனும்?   நம்ம  பசங்க  தான்  போய்  கூப்பிட்டு இருக்காங்க   தான?   அவுங்களோட  கிளம்பி   நம்ம  வீட்டுக்கு   வர  வேண்டியது  தான?..  சந்தோஷை  நாம  பார்த்து  வெளியே  கூட்டிட்டு வர மாட்டோமா  என்ன?   நம்ம  மேல  நம்பிக்கையில்லாதவ  ஏன்   நம்மை   தேடி  வரணும்?”  என  அடுக்கடுக்காய்  பல   கேள்விகளை  தன்   மகன்களை  நோக்கி  கேட்டார்  தாத்தா.
“இல்லப்பா….அது   வந்து…..” என  இழுத்த  தன்  பெரிய  மகனிடம்.
“என்ன… வந்து   போயினு  இழுத்துட்டு  இருக்கீங்க?    காலையில  சீக்கிரம்  எழுந்து  மதுரைக்கு  நீங்களே போய்    சந்தோஷை  கூட்டிட்டு  வாங்க.  இப்போ  போய்  படுங்க”  என்று உத்தரவிட்டார்  தாத்தா.
            அடுத்த   அரைமணி நேரத்தில்  வீடே  நிசப்தமாகிவிட…. ஹாலில்  தாத்தா பாட்டியுடன்  அரட்டை  அடித்துக் கொண்டிருந்தாள்  ஜனனி.   
“ஜானும்மா  உனக்கு  தூக்கம்  வந்தா  தூங்க  போ டா”  என்றார்  பாட்டி.
“ஈவ்னிங்  ரொம்ப  நேரம்  தூங்கிட்டேன்  பாட்டி.  அதான்  எனக்கு  தூக்கம்  வரலை.  ஏன்  பாட்டி  என்னை  விரட்டிவிட்டுட்டு  தாத்தா கூட  லவ்ஸ்  பண்ணலாம்னு  ப்ளான்  போட்ருக்கீங்களா?”   என   கண்சிமிட்டினாள்  ஜனனி.
“அடி  கழுதை…. உனக்கு  இப்படியெல்லாம்   பேச  தெரியுமா?  என்னங்க… பார்த்தீங்களா… ஜானு  எப்படி  வாய்  பேசுறானு?”  என்றார்  பாட்டி.
தாத்தாவின்   முகத்திலொரு   மர்ம  புன்னகை. 
“எல்லாத்துக்கும்   ஒரு  கால  நேரம்  வரணும்  அரசி.  இனிமேல்  ஜானு  இப்படி  தான்  ஜாலியா  பேசுவா.”  என்றார்  தாத்தா.
“என்ன  தாத்தா  ஜோசியம்  சொல்ல  ஆரம்பிச்சுட்டீங்க”  என்று  சிரித்தாள்  ஜனனி.
              ஆனால்   பாட்டி  மட்டும்   தாத்தாவின்  முகத்தையே   பார்த்துக்கொண்டிருந்தவர்…  அவருக்கு  என்ன  புரிந்ததோ  ஜனனியின்  தலையை   பாசத்துடன்  தடவிக்  கொடுக்க  ஆரம்பித்தார்.   
“என்ன  பாட்டி  தாத்தாவோட  ஜோசியம்  உங்களுக்கும்  புரியலையா?”
“எனக்கா  புரியாது?   உங்க  தாத்தாவோட   சொல் ,  செயல், மூச்சுனு  எல்லாத்தோட  அசைவுக்கும்  எனக்கு  அர்த்தம்   புரியும்”  என்றார்  பாட்டி.
             மேற்கொண்டு   ஜனனி  பேச  ஆரம்பிக்கையில் …   கார்  ஹாரன்  சத்தம்  கேட்கவே  மூவரும்  எழுந்து   வெளியில்  சென்றனர்.
                முதலில்   கார்  கதவை  திறந்து  கொண்டு  ஓடி  வந்து  ஜனனியை    அணைத்தது   நம்ம  ரேணுகாவே   தான்.
                “சிட்டு……..”  என்று   கத்திக்  கொண்டே  வந்தவள்  ஜனனியை  இறுக   கட்டிப்பிடித்துக்   கன்னத்தில்  முத்தம்  ஒன்றை  வைத்தாள்.   
                 இந்த   அதிரடி   தாக்குதலை   ஜனனி  மட்டுமல்ல  அங்கேயிருந்த  யாருமே   எதிர்பார்க்கவில்லை.   ரேணு   இதற்கு   முன்பும்   பலமுறை    தாத்தா  பாட்டியின்  வீட்டுக்கு   வந்திருக்கின்றாள்.   ஜனனியை   பார்த்துருக்கின்றாள்,  பேசி  பழகியிருக்கின்றாள்.  அப்போதெல்லாம்   வராத   உற்சாகமும் , மகிழ்ச்சியும்   இப்போது   அவளில்   வெளிப்படவே  அதை  தான்  அங்கிருந்த  அனைவரும்  பேயறைந்தாற்  போன்று   பார்த்துக்  கொண்டிருந்தனர்.
               அதுவும்   ரேணுவின்   “சிட்டு”  என்ற   அழைப்பில்   அனைவரும்   கதிகலங்கி  போய்  நிற்க….  ஜனனியோ  ரேணுவிடமிருந்து   விடுபட்டு   அவள்   முத்தம்  கொடுத்த   கன்னத்தை   தன்   கைகளால்   அழுந்த   துடைத்துக்  கொண்டாள்.
           ஜனனியின்  அச்செய்கைக்கு   பின்னரே  சுற்றுப்புறம்   உணர்ந்த   ரேணு ,  ‘கை வைச்சு   துடைக்கவா  செய்யுற?… இதுக்காக  நீ   பின்னாடி   ரொம்ப  பீல்  பண்ண  போற?… உனக்கு   இப்போதிருந்தே   நாத்தனார்   கொடுமை  ஸ்டார்ட்  ஆகிடுச்சு  சிட்டு’  என்று   மனசுக்குள்   கருவியவள்  … 
“ஸாரி   சிட்டு”  என்றாள்   வெளியில்   அப்பாவியாய்  முகத்தை  வைத்துக்  கொண்டு.
“என்ன  பழக்கமிது  ரேணு ?”  என   அதட்டினார்  பாட்டி.

Advertisement