Advertisement

                       மைலாஞ்சியே நாணமோ
                              அத்தியாயம் -6
“மாப்பிள்ளை  கனடா  போறதுக்குள்ள கல்யாணம் பண்ணியே ஆகனும்னு   ஒத்த கால்ல  நிக்குறா.    மாப்பிள்ளையோட அம்மா அவுங்க வீட்டு வழக்கப்படி கல்யாணம்  அவுங்க   குல தெய்வம் கோவிலில் நடக்கணும்னு சொல்லுறாங்க.  அவுங்க குல தெய்வம் கோவிலும் சோழவந்தானில்  தான் இருக்காம் .     நம்ம சொந்தக்காரங்க   எல்லோரும் சோழவந்தானில் தான இருக்காங்க. நாம இங்கே சென்னைல ஒரு ரிசப்ஷன் வைச்சிடுவோம்  ரிஷி.  நீ என்ன சொல்ற?”  என்றார்   ஊர்மிளா.
“எல்லாமே  முடிவெடுத்துட்டு வந்து கேட்குறீங்க.  இனி நான் என்ன சொல்ல?”  என்றான் வெறுமையான குரலில்.
“ரிஷி …..நீ வருத்தப்படுவனு எங்களுக்கு தெரியும்.  எல்லாமே இந்த ஐந்து நாளில்  சீக்கிரமா நடந்துடுச்சு. நீ மதுரைக்கு கிளம்பி வருவதற்கு  மூணு  நாளைக்கு முன்னாடி தான் வந்து சொன்னா. நாங்க மாப்பிள்ளை பற்றி விசாரிச்சிட்டு, உன்கிட்ட சொல்லலாம்னு வீட்டுக்கு வந்தோம்.  நீ அப்போ தான் மதுரைக்கு கிளம்பி போய்  இருந்த.  இனி நீ ரொம்ப பிஸியா இருப்ப,  உன்னை தொந்தரவு செய்ய வேண்டாம்னு தான் சொல்லலை.”என்றார்  ஊர்மிளா  குற்றவுணர்வுடன்.
“இப்போவும் பிஸியா தான் இருக்கேன் சித்தி.  என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்னு நினைக்காம போனீங்களே”என்றான்   ரிஷி  இறுகிய குரலில்.
இவர்கள்  பேசுவது  அனைத்தையும் கேட்டவாறு , சிஸ்ட்த்தினுள் தலையை நுழைத்திருந்தான் தனா.
“என்ன ரிஷி இப்படி பேசுற? நீ தான நம்ம வீட்டுல எல்லாத்தையும் முடிவு பண்ணுவ.  நீ தானே எங்களுக்கு ஆண்     வாரிசு.  இந்த கல்யாணம் திடீர்னு  அவசரத்துல  முடிவு  பண்ண  வேண்டியதாகிடுச்சு.   அதனால  நீ  எதையும்   மனசுல  வைச்சுக்காதே”  என்றார்   ஊர்மிளா.
“அதான்  சித்தி  கேட்குறேன்… இப்படி  திடீர்னு  அவசரமா  முடிவு  பண்ண  வேண்டிய  கட்டாயம்  என்னனு?.   ரஞ்சி  அழுகுறானு  சொல்ல  போறீங்க.. விடுங்க.  இப்போ  நான்  என்ன  செய்யனும் ?   எப்போ வரனும்னு  சொல்லுங்க?”  என்றான்  ரிஷி.
“நாங்க   சோழவந்தானுக்கு  தான்  இப்போ  கிளம்பிட்டு  இருக்கோம்.  நாங்க  இன்னக்கு  நைட்  அங்கே  போயிடுவோம்.  பத்மா அக்கா,  மாமா, ரேணுவும்  எங்க  கூட  வந்துடுவாங்க.  நீயும்,  தனாவும்    அங்கே   வந்துடுங்க.  நான்  தனாவை  போன்ல  சொல்லிடுறேன்”  என்றார்    ஊர்மிளா.
“ம்.. வந்துடுறோம்.  ரஞ்சிக்கு  எதுவும்   வாங்கனுமா?  ஜுவல்ஸ்,   சில்க்  சாரீஸ்  இப்படி  ஏதாவது   வேணும்னா  சொல்லுங்க.  இங்கே  மதுரைலயே  வாங்கிடலாம்”   என்றான்  பாசக்கார  அண்ணனாய்  மாறி.
“எல்லாமே  வாங்கியாச்சு  ரிஷி.  நீங்க  மட்டும்  சீக்கிரம்  வந்தா  போதும்”  என்றார்   ஊர்மிளா.
“ம்ம்…சரி  சித்தி.  பட்  ஒன்  கண்டிஷன்.  அந்த  பையனோட  பயோடேட்டாவை  எனக்கு  மெயில்  பண்ணுங்க.  நான்  விசாரிச்சுட்டு  திருப்தியா  இருந்தா  மட்டும்  தான்  இந்த  கல்யாணம்   நடக்கும்.  அதை  நினைவுல   வைச்சுக்கோங்க.   ரஞ்சி   அழுகுறா ,  ஆடுறானு  என்கிட்ட   அப்போ வந்து  கதையும்  சொல்ல  முடியாது…  காவியமும்   பாட  முடியாது”   என்று   சொல்லி விட்டு   தொடர்பை   துண்டித்தான்.
இது வரை  அமைதியாய்  இருந்த  தனா ,  ரிஷியின்  பேச்சால்   கோவமானான்.
“இப்படி   பேசாதேனு  உனக்கு  எத்தனை  தடவை  சொல்லியிருக்கேன்?    சித்தியின்   மனசு  காயப்பட்டு போயிருக்கும்”   என்றான்
அதற்குள்   ரிஷிக்கு  மெயிலில்  மாப்பிள்ளையின்  பயோடேட்டா   வந்துவிடவே  அதை   நண்பர்கள்   இருவரும்   ஆராயத்   தொடங்கினார்கள்.
“பார்க்க  ஆள்  நல்லா  ஹீரோ  போல  தான்டா  இருக்கான்.  பேர்   கூட   சூப்பரா  இருக்கே…. இந்திரஜித்”  என்றான்  தனா.
“ம்…எல்லாம்  நல்லா  தான்  இருக்கு”  என்றான்  ரிஷி  எரிச்சலாய்.
“அதை  ஏன்டா  இவ்ளோ  கடுப்பா  சொல்லுற”  என  கேட்டான்  தனா.
“இப்போ   நீ  என்ன  செய்யுற  தெரியுமா?   இந்த  பயோடேட்டாவை  நேசன்  டிடக்டிவ்  ஏஜென்சிக்கு   மெயில்   பண்ணிட்டு ,  நேசன்  சார் கிட்ட   டூ டேஸ்க்குள்ள  இதை   முடிச்சு  தர   சொல்லு”   என்றான்  ரிஷி.
“ம்ம்”   என்றவாறு   போனை  காதுக்கு  கொடுத்தான்  தனா.
அங்கே    ரிஷியின்   வீட்டிலிருந்து  போன்  பேசிய  ஊர்மிளாவோ  திகைப்பின்   உச்சியில்  இருந்தார்.
“அக்கா!… என்ன  ஆச்சு  ரிஷிக்கு?  அவன்   என்னை  திட்டவேயில்லை”  என  தன்  அக்கா  பத்மாவிடம்   கேட்டார்.
“என்னது?   அண்ணா  உங்களை  திட்டலையா?   அப்போ  இவ்ளோ  நேரம்   உங்களை  கொஞ்சிட்டா  இருந்தாரு?  போங்க   சித்தி.   உங்களை  கழுவி  கழுவி  ஊத்தினது  இங்கே  வரை   தெறிச்சது”   என்று   சிரித்தாள்  ரேணு.
“கழுதை … வாய்  பேசாதனு  எத்தனை  தடவை  சொல்லுறேன்”  என்று  சொல்லிவிட்டு  அவளது   முதுகில்  அடி  ஒண்ணு  வைத்தார்  பத்மா.
“விடுக்கா… அவ  சின்ன பொண்ணு.  விளையாட்டுத்தனமா  பேசுறா.   எனக்கு  என்ன   ஆச்சர்யம்னா  மாப்பிள்ளையோட   சொந்த  ஊர்  சோழவந்தான்னு   சொல்லியும்   ரிஷி   கோவப்படவேயில்லை.   அவனது   கோவமெல்லாம்   நாங்க   அவன்கிட்ட   சொல்லாமல்  முடிவெடுத்தது  தான்.   சோழவந்தான்னு   எப்போ  தெரிஞ்சதோ ,  அந்த  நிமிஷத்துல  இருந்து   இருதலைக் கொல்லி  எறும்பாய்  தவிச்சுட்டு  இருக்கோம்.   அந்த  பக்கம்  ரஞ்சி  அவரை  தான்  கட்டிக்குவேன்னு   அழுகுறா.  இந்த  பக்கம்  ரிஷி   சோழவந்தானுக்கு  வர  மாட்டான்.   என்ன  செய்யப்  போறோம்னு   தூக்கமில்லாம  புலம்பிட்டு  இருந்தோம்.  இவன்  சாதாரணமா  எப்போ  வரணும்னு  கேட்குறான்?”  என்றார்  ஊர்மிளா.
ரேணுவிடமிருந்து   பலமான  சிரிப்பொலி  வெளிப்பட்டது.
“ஏன்  ரேணு  சிரிக்குற?”  என்று   கேட்ட  ஊர்மிளாவுக்கு,
“நீங்க  இப்போ சோழவந்தானுக்கு  வர  சொல்லாட்டியும்  அண்ணன்  அங்கே  தான்  போக  போறாங்க”  என்றாள்  ரேணு.
“என்னது  அங்கேயா?   எதுக்கு?  எப்போ?”  என்று   ஒருமித்த  குரலில்   அலறினர்  பத்மாவும்  ஊர்மிளாவும்.
“கூல்!… கூல்!… எதுக்கு  இவ்ளோ  பதட்டம்   உங்களுக்கு?”  என்றாள்   ரேணு.
“எதுக்கு  ரிஷி  அங்கே  போகணும்னு  முடிவு  பண்ணியிருக்கான்?    உன்கிட்ட   சொன்னானா?”  என  கேட்டார்   பத்மா.
“என்கிட்ட   சொல்லலைமா.  ஆனா  அங்கே  போக  போறதா  ஒரு  தகவல்  வந்துச்சு”   என்றாள்  ரேணு.
“அட  கடவுளே!…   நான்  என்ன  செய்வேன்?  இப்போ  தான்  என்  அண்ணன்கள்   நடந்ததை   மறந்துட்டு  என்கிட்ட  இயல்பா  பேச  ஆரம்பிச்சு  இருக்காங்க.  மறுபடியும்  பிரச்சனை  ஆரம்பிச்சுடும்  போல”   என்று   அழுக  ஆரம்பித்தார்  பத்மா.
              இதுவரை   விளையாட்டுத்தனமாய்  சிரித்து  பேசிக்  கொண்டிருந்த  ரேணு   தன்  அம்மாவின்   பேச்சைக்  கேட்டதும்  எரிமலையாய்   வெடிக்க  ஆரம்பித்தாள்.
“சோ…. இப்போவும்   உங்களுக்கு  உங்க  அண்ணன்கள்  தான்  பெருசா  தெரியுறாங்க.   பன்னிரண்டு  வருஷமா  உங்க  கூட   பேசாம  இருக்குற   என்  அண்ணன்  பக்கத்து  நியாயம்   உங்க  கண்ணுக்கு  தெரியலை.  நீங்க  எங்களுக்கு  நல்ல  அம்மாவாய்  இருக்குறதை  விட,  உங்க  அண்ணன்களுக்கு  தான்   நல்ல  தங்கச்சியாய்   இருக்குறீங்க.  இனி  நானும்  என்  அண்ணனை  போல  உங்க  கூட  பேச  மாட்டேன்”  என்று   சொல்லிவிட்டு   மாடிப்படிகளில்  ஏறியவள்…  சற்றே  நின்று,
“ஆனா  ஒரு   விஷயம்  மறந்துடாதீங்க.  பன்னிரண்டு  வருஷத்துக்கு    முன்னாடியிருந்த  ரிஷி  இல்லை.    இப்போ  இருக்குறது  நினைச்சதை   நடத்திக்  காட்டுற  ரிஷிவந்த்.   யார்  தடுத்தாலும்  என்  அண்ணனின் விருப்பம்  போல  தான்  இனி  எல்லாம்  நடக்கும்”   என்று   சொன்னவள்  வேகமாய்  தன்   அறைக்கு  சென்று   கதவை   தாழிட்டுக்  கொண்டாள்.
            ரேணுவின்  பேச்சைக்   கேட்ட  பத்மா   இறுகி  கல்லாய்   அமர்ந்து விட்டார்.
           தன்   அன்னையிடம்  கோவமாய்  பேசிவிட்டு  வந்த  ரேணுவின்   கண்களிலிருந்து   அருவியாய்   கண்ணீர்  கொட்டிக்   கொண்டிருந்தது.   அவளது   பின்னில்  ஓடி வந்த  ஊர்மிளா  அறைக்கதவை  தட்ட,
“ப்ளீஸ்  சித்தி..  டோன்ட்  டிஸ்டர்ப்  மீ”  என்றவள்  மீண்டும்  அழ  தொடங்கினாள்.
      அப்போது   தனாவிடம்  இருந்து  ரேணுவுக்கு  போன்  வரவே  அட்டென்ட்  பண்ணினாள்.
“ஹலோ … ரேணு”
“தனு”  என்றவள்  அழ  ஆரம்பித்தாள்.
“ஏய்!…ரேணு…  எதுக்குடி  அழுகுற?  என்னடி  ஆச்சு?  உடம்பு  சரியில்லையா?”
இவன்  கேட்ட  அத்தனை  கேள்விகளுக்கும்   அழுகையே  அவளது   பதிலாய்  வந்தது .
தனாவுக்கோ  டென்ஷன்  கூடிக்  கொண்டே  போனது.
“ரேணு… யாருக்காவது  வீட்டுல  உடம்பு  சரியில்லையா?”
அதற்கும்  அவளிடம்  பதில்  இல்லாது  போகவே,
“சரி… நான்   கிளம்பி  வரேன்டி.  கொஞ்ச  நேரம்  அழாம  இரு.  டூ  ஹவர்ஸ்ல   உன்  பக்கத்துல  இருப்பேன்”  என்றான்  தனா.
“இல்லை… நீங்க  வர வேண்டாம்”  என்றாள்  ரேணு.
“அப்புறம்   எதுக்கு  அழுகுற” 
தனக்கும்   தன்  அன்னைக்கும்  இடையே  நடந்த  வாக்குவாதத்தை  அழுதுகொண்டே  சொல்லி  முடித்தாள்.
“இதுக்காடி  அழுகுற?   உனக்கு  மெச்சூரிட்டி  இருக்கும்னு  நினைச்சேன்.  நீ  இன்னும்  சின்ன  பொண்ணு  தான்  போல”  என்றான்   தனா.
“நானா  சின்ன  பொண்ணு?”  என  கோவமாய்  கேட்டாள்  ரேணு.
“இப்போ  எதுக்குடி  இவ்ளோ  கோவம்?  அண்ணனும்  தங்கச்சியும்  இப்படியே   தொட்டதுக்கெல்லாம்   கோவப்பட்டீங்கனு  வைச்சுக்கங்க ,  அந்த  கோவத்துக்கு  அர்த்தமே  இல்லாம  போயிடும்.  தேவைப்படும்  இடத்துல  மட்டும்   கோவப்பட்டு  பழகு”  என்றான்   தனா.
“என்  அண்ணனை  பற்றி  குறை  சொல்ல  நீ  யாரு?”  என  கேட்டாள்  ஆத்திரத்தோடு.
“நான்… நான்… யாரா?   நான்  அவனுக்கு   ப்ரண்ட்.  உனக்கு  லவ்வர்”  என்றான்   சிறு  சிரிப்போடு.
“எனக்கு   லவ்வரா?   போடா   கருவாயா.. இனி  நமக்குள்ள  எந்த  வெங்காயமும்  கிடையாது.  உனக்கு  ப்ரண்ட்னா  என்ன  வேணும்னாலும்  சொல்லிடுவியா?  உன்  நண்பனை  பற்றி   இப்படி  தான்  எல்லார்கிட்டவும்   சொல்லுவியா?   முதலில்  அவர்   எனக்கு  அண்ணன்.  ரெண்டாவது   தான்  உனக்கு   ப்ரண்ட்”  என்றாள்  கோவமாய்.
“என்னடி   இப்படி  சொல்லிட்ட?  நான்  தான்  உன்  உயிர்னு   சொல்லுவ.  நம்ம  காதல்  தெய்வீக  காதல்னு   பாட்டு  பாடுவ.   இப்போ   அதை  வெங்காயம்னு   சொல்லி  ,  அந்த  தெய்வீக  காதலோட   தோலை   உரிச்சுட்டியே   ரேணு?   இப்போ  நான்  என்ன  செய்வேன்?”  என்றான்    சிரிப்பை  அடக்கியபடி.
“என்  அண்ணனை  பற்றி  யார்  குறை  சொன்னாலும்  எனக்கு  வேண்டாம்.  அது  எனக்கு  உயிர்  கொடுத்த  என்  அம்மாவானாலும்   சரி… எனக்கு   உயிராகிப்   போன  நீயே  என்றாலும்  சரி…  எனக்கு   வேண்டாம்”   என்றாள்   அழுது கொண்டே.
“இதுக்கு   தான்  சொன்னேன்  உனக்கு  மெச்சூரிட்டி   இல்லைனு.   சகோதர  பாசத்துல   உனக்கு   ஒரு   சட்டம் , உங்க  அம்மாவுக்கு   ஒரு  சட்டமா?”  என்றான்  தனா.
மௌனத்தையே  பதிலாய்  தந்தாள்  ரேணு.
“உன்   அண்ணனுக்காக   ஒரு   நொடியில   என்னையும் ,  உன்  அம்மாவையும்  தூக்கி  எறிய   முடிவு   பண்ணிட்ட.   ஆனா  உன்   அம்மா  ,  அவுங்க  அண்ணன்களுக்காக   யாரையும்  தூக்கி  எறியல.   உன்  அண்ணன்  உன்கூட  ஒரு நாள்  பேசாம  இருந்தா  நீ   தாங்குவியா?  ஆனா  உன்  அம்மாவுடைய   அண்ணன்கள்  அவுங்க  கூட  எத்தனை  வருஷம்   பேசாம   இருந்திருப்பாங்க.   உன்  அம்மா  எவ்ளோ   வருத்தப்பட்டு இருப்பாங்க?   சமீபமா  தான்  நடந்ததை  மறந்துட்டு   இயல்பா  உன்  அம்மா  கூட  பேச  ஆரம்பிச்சுருக்காங்க.   இப்போ  ரிஷி  அங்கே  போனா   குடும்பத்துக்குள்ள  திரும்பவும்   பிரச்சனை  ஆரம்பிச்சுடும்னு   நினைச்சுருப்பாங்க .  ரிஷி   பேசாம   இருந்து   உன்   அம்மாவை   கொடுமைப்படுத்துறான்னா … நீ  பேசியே   கொடுமைப்படுத்து”   என்றான்   தனா.
அப்பொழுதும்  ரேணு   அமைதியாய்   இருக்கவே ,  “லைன்ல   இருக்கியா ?  இல்லையா ?    பேசித்  தொலை”  என்று   அதட்டினான்.
மூக்கை  உறிஞ்சிக்  கொண்டே  ,  “ம்ம்… இருக்கேன்..  இப்போ   நான்   என்ன  செய்யனும் ?”   என்றாள்   சிறு   குழந்தையாய்.
“முகம்  கழுவி  ப்ரெஷ்  ஆகிட்டு  அம்மா கிட்ட  போய்  ஸாரி   கேட்கனும்.   அம்மாவும்   அழுதுட்டு  தான்   இருப்பாங்க.  சீக்கிரம்  போ”   என்றான்  தனா.
“ சரி….    போறேன்.  ஸாரி   கேட்குறேன்”  
“ம்ம்…குட்  கேர்ள்.  இனி   சோழவந்தானில்   பார்ப்போம்.  பை டி   செல்லம்”  என்றான்  தனா.
“நீங்க   சொன்னதும்   நான்  சரின்னு  கேட்டுக்கிட்டேன்ல.  எனக்கு  கிப்ட்   எதுவும்   கிடையாதா”  என்று   இழுத்தாள்  ரேணு.
பொங்கி   வந்த  சிரிப்பை   அடக்கிக்   கொண்டு ,  “இதுக்கெல்லாம்மா  கிப்ட்  குடுப்பாங்க?  நானா  கொடுத்தா  தான்டி  அதுக்கு  பேரு  கிப்ட்.   இதுக்கு   பேரு   வழிப்பறிடி…  பகல் கொள்ளை!”  என்றான்   சிரிப்புடன்.
“ஹுக்கும்  எனக்கு  ஏது  அந்த  குடுப்பனை?  எல்லாத்தையும்  நானா  தான்  கேட்டு  வாங்க  வேண்டியிருக்கு”  என  நொடித்துக்   கொண்டாள்   ரேணு.
“சரி…சரி  …. போதும்… ஸாரி  கேட்டுட்டு  ஊருக்கு  கிளம்புற  வழியைப்  பாரு”  என்றான்.
“ம்ம்…பை  தனு”  என்று   தொடர்பை  துண்டித்துவிட்டு,  கீழே  தன்   அம்மாவை  தேடி  சென்றாள்  ரேணு.
                        “உன்    பாராமுகத்திற்கே
                         பைத்தியமாகும்   பாவை  நான்!
                        இன்னும்   நீ  என்னை  பார்த்து  வைத்தால்
                        நான்  என்ன   ஆவேனோ!”
                பத்மா  இன்னும்   அதே  சோபாவில்  தான்  கண்களை  மூடியவாறு  சாய்ந்து  அமர்ந்திருந்தார்.
                 அவரது  பக்கத்திலே  ஊர்மிளாவும்   தனது   சகோதரியின்  கைகளை  பற்றியவாறு   ஆறுதல்  சொல்லிக்  கொண்டிருந்தார்.
                 கீழே   சென்ற  ரேணு   தன்  அம்மாவின்  முன்  மண்டியிட்டு  ,   “ஸாரிம்மா… இனி  இப்படி  பேச  மாட்டேன்”   என்றாள்   கண்ணீர்   மல்க.
              அவளது   தொடுகையில்  உணர்வு  வர  பெற்றவராய்  திடுக்கிட்டு   எழுந்த   பத்மா…  ரேணுவின்   இந்த   வார்த்தைகளில்    உடைந்து  , அவளை  தன்னோடு   சேர்த்தணைத்து   அழ   தொடங்கினார்.
“அக்கா…  என்ன  இது ?  சின்ன  புள்ளை  அவ  தான்  அழுகுறான்னா  ,  நீயும்   சேர்ந்து  அழுதுட்டு  இருக்க?   போதும்   ரெண்டு  பேரும்  அழுதது.   லக்கேஜ்   பேக்   பண்ணுங்க.  ஊருக்கு   கிளம்பனும்ல”  என்றார்  ஊர்மிளா.
“ஆமா  சித்தி…  நானும்  பேக்  பண்ணலை.  நான்  போய்  ரெடி  ஆகுறேன்”  என்று  அவளது  அறைக்கு  வேகமாய்  ஓடினாள்.
           அவள்  அறைக்குள்  போனதை  உறுதி  செய்த  பின்,  பத்மா  ஊர்மிளாவிடம்,  “எனக்கு  பயமாவே  இருக்கு  ஊர்மி.  ரிஷி  என்ன  பண்ண  போறானோனு?  அவன்  ஒரு  முடிவு  எடுத்துட்டான்னு   தான்  தோணுது.  அவன்  மதுரைக்கு  அப்படி  தான்  கிளம்பி  போனான்.  அவன்  சிட்டுவை  மறக்கலை  போல “  என்றார்  அழுத  கண்களை  துடைத்துக்  கொண்டே.
“ஏன்  புலம்பிட்டே  இருக்க?  ரிஷி  எதுக்கு  அங்கே  போக  போறான்னு  நம்ம  தனா  கிட்ட  கேட்டா  தெரிஞ்சிட  போகுது”  என்றார்  ஊர்மிளா.
வெறுமையாய்  சிரித்த  படியே  தன்  அறைக்குள்  சென்று,  லக்கேஜ்  பேக்  பண்ணிக்  கொண்டே…  “அவனுக்கு  தெரிஞ்சாலும்,  நம்ம  கிட்ட  தெரியாதுன்னு  தான்  சொல்லுவான்.  தனா  ரிஷியோட   உண்மை  தோழன்.  விசுவாசத்தையே  சுவாசமாய்  சுவாசிப்பவன்  தனா.  அவன்  கிட்ட  கேட்குறது  வேஸ்ட்   ஊர்மி”  என்றார்   பத்மா.
“அதுவும்  உண்மை  தான்கா.  தனா  ரிஷியின்  உயிர்  நண்பன்ங்கிறதை  நான்  மறந்துட்டேன்.  சரிக்கா…  மாமா  வந்ததும்  எல்லோரும்  சீக்கிரம்  கிளம்பி  வாங்க.  நான்  இன்னும்  கொஞ்சம்  பேக்  பண்ண  வேண்டியிருக்கு.  நாங்க  கிளம்பிட்டு  இருக்கோம்.   நீங்க  வந்ததும்  சேர்ந்து  புறப்படுவோம்”  என்று  சொல்லிவிட்டு  தன்  வீட்டிற்கு  கிளம்பி  சென்றார்  ஊர்மிளா.
ரேணுவிடம்  பேசிவிட்டு,  முகமெல்லாம்  மகிழ்ச்சியோடு  அமர்ந்திருந்த  தனாவை…  அப்போது  தான்  அறைக்குள்   நுழைந்த  ரிஷி  பார்த்து  விட்டு,
“என்னடா…  பொங்கலுக்கு  இறக்கியிருக்குற  புது  கலெக்சன்ஸ்  மாதிரி  உன்  முகம்  பொங்கி  போய்  கிடக்குது”  என்றான்  ரிஷி.
“ரிஷி  நீயாடா  இப்படி  பேசுற?  என்னால   நம்ப  முடியல.  இப்படியெல்லாம்  உனக்கு  பேச  தெரியுமா?  என்றான்  அதிர்ச்சி  கலந்த  மகிழ்ச்சியோடு.
“நானும்  மனுஷன்  தான்டா.  ஓவரா  சீன்   போடாத.  ஏன்  சிரிச்சிட்டு  உட்கார்ந்து  இருந்த.  அதை  சொல்லு?”  என்றான்  ரிஷி.
“சிரிச்சது  ஒரு  குற்றமாடா?  இனி  அழுதுட்டு  இருக்கேன்.  போதுமா  மகா  பிரபு!  ஆனா  அப்பவும்   வந்து   ஏன்டா  அழுகுறனு   கேட்க  கூடாது”  என்றான்  தனா   கடுப்புடன்.
“இன்னும்  எனக்கு  பதில்  வரலை”  என்றான்  ரிஷி.
“பாவம்டா  சிட்டு.  உனக்கு  பதில்  சொல்லியே  வயசாகிடும்  அவளுக்கு”
“வயசானாலும்  என்  சிட்டு  அழகா  தான்டா  இருப்பா”  என்றான்  ரிஷி.
“அப்படியும்   கேள்வி  தான்  கேட்பேன்னு  சொல்லுற.   ம்ஹூம் …  உன்னையெல்லாம்  திருத்தவே  முடியாது”  என்றான்  தனா  கடுப்போடு.
“போதும்…  போதும்…  நான்  திருந்துனது.   இன்னைக்கு  நைட்   சோழவந்தானுக்கு   கிளம்பனும்.  அதுக்கு  ஏற்பாடு  பண்ணு.  ஏன்  இன்னும்   காரை  டெலிவரி   பண்ணாம  இருக்காங்க?  அதை  என்னன்னு  பாரு.  இன்னும்   ரெண்டு  மூணு   பேப்பர்  மூவ்  ஆக   மாட்டுது.  அதை  என்னன்னு  பாரு.”  என்று  அடுத்தடுத்து  தனாவுக்கு  வேலைகள்  கொடுத்தவாறு  தன்  மேஜை   டிராயரை  உருட்டிக்  கொண்டிருந்தான்.
“ம்ம்ம்…  கார்  இப்போ வந்துடும்.  போன்   போட்டு   சொல்லிட்டாங்க.  நீ  கேட்ட  கலர்  அப்படிபட்டது  ராசா.  அந்த   பிராடு  M.L.A.  இன்னும்  நம்ம  கிட்ட  எதிர்பார்க்குறார்.  அதான்  அந்த  மூணு  பேப்பர்ஸ்  பெண்டிங்”  என்றான்  தனா.
“இன்னுமா?  என்னடா  நினைச்சுட்டு   இருக்கார்?  பதவில  இருக்குறோம்னு   ஓவரா  ஆடிட்டு  இருக்கார்.  இவரைப்   போல   எத்தனை  பேரைப்   பார்த்திருப்போம்.   ரஞ்சி   மேரேஜ்  முடிச்சுட்டு  வந்து   அவரைக்  கவனிப்போம்.  நீ   மற்ற  வேலைகளைப்  பாரு”    என்றவனது   மனது   பறக்க  ஆரம்பித்தது   தன்  சிட்டுவைக்   காண!
            “உன்    இரு விழிக்குள்
             கருக்   கொண்டிருக்கும்
             கவிதைகளை   எழுதிடவே
             பிறந்திட  வேண்டும்  நானும்…
             ஒரு   கம்பனாக!!”

Advertisement