Advertisement

                          மைலாஞ்சியே   நாணமோ

                               அத்தியாயம் 12

                    “உன்னோடு   ஊடலென்று   வருகையில்…

                    உத்திரவாதமென்று   எதுவுமில்லை   எனக்கு..

                     என்  நகக்கண்கள்  கூட   உன்னைத்   தேடுகையில்!!”

                    அந்த   அரசுப்   பள்ளி   மைதானத்தின்   முக்கால் பகுதி  சாமியானாவால்   போர்த்தப்பட்டு…  பத்தடிக்கு   ஒன்று   வீதம்  ‘பெடசல் பேன்’  என  அழைக்கப்படும்   மிகப் பெரிய   ஸ்டாண்டிங்  ஃபேன்   வைக்கப்பட்டு   அது   தனது  தலையை   இடமும்  வலமுமாக  ஆட்டிக்  கொண்டிருக்க….

          முப்பதுக்கும்  மேற்பட்ட   செவிலிப்   பெண்கள்   வெள்ளை  நிற   கவுனில்   இங்குமங்குமாய்   ஓடியபடி…  மூன்று  ஆண்  மருத்துவர்களோடு, நான்கு பெண்  மருத்துவர்களும் இணைந்து கொள்ள    வெள்ளை நிற கோட்டும்   ஸ்டெதெஸ்கோப்பும்  கையுமாய்  அலைந்தவாறு…  அவர்களுக்கென  தனி  இருக்கைகள்,  பரிசோதனைக்கென   உருவாக்கப்பட்ட மறைவான   தடுப்புகள்…  அவசர   சிகிக்சைக்கென  ஆம்புலன்ஸ்  சர்வீஸ் … சிகிச்சை பெற வந்த   ஊர் மக்கள்  என  அந்த  மைதானம்  முழுவதுமே   மனிதத்  தலைகளால்  நிரம்பியிருக்க…  

           இக்கூட்டத்திற்குள்   ஜனனியை  எத்திசையில்  தேடுவது?…நெற்றியை   தன்  இரு  விரல்களால்   அழுந்த  தேய்த்து  விட்டபடி   நாலாபக்கமும்   தன்  கண்களை  சுழல  விட்டுக்  கொண்டிருந்தான்  ரிஷி.

“எதுக்கு  அண்ணா  இவ்ளோ  டென்ஷனாகுறீங்க?   முதல்ல சிட்டுவுக்கு  கால்  பண்ணுங்க”   

“சிட்டு  ஃபோன்  எடுத்துட்டு  வரலை  குட்டி”  என்றான்  ரிஷி  ஜனனியை  தேடிக்  கொண்டே.

‘கூட்டிட்டு  வந்த  நான்  இத  கவனிக்கல.  மேடையில  இருந்த  அண்ணா  கவனிச்சுருக்காரு…ம்ஹும். நானும்  தான்  ஒன்னை  லவ்  பண்ணுறேன்.  நான்  என்ன  கலர்  ட்ரஸ்  போட்டுருக்கேனு   கேட்டா  கூட  சொல்ல  தெரியாது.  எனக்கு  வாய்த்த  அடிமை  மகா  மட்டமானது’  என  தனாவை  பார்த்தவாறு   தனக்குள்  நொந்து  கொண்டிருந்தவளை… 

தன்    ஒற்றைப்   புருவத்தை   மட்டும்  தூக்கி  பார்வையாலே  ‘என்ன’  என  கேட்டான்  தனா.

‘இப்படி  சின்ன  சின்னதா    பார்வை   தூண்டிலை  போட்டு  வைச்சிரு.  நானும்  வந்து  அதுல  வசமா  சிக்கிக்கிறேன்  கருவாயா!..’  என  மனதுக்குள்  அவனை  ரசித்த  ரேணு..

தனாவுக்கு  மட்டுமே   கேட்கும் படியாக  அவனருகில்  வந்து  மிக  மெல்லிய  குரலில்,   “ஒன்னுமில்லை  ராசா…  ஒன்னுமேயில்லை”   என்றாள்  ராகம்  போட்டு.  

அதுவரை   இவர்கள்  இருவருக்கும்  முதுகு  காட்டிய படி  ஜனனியை   தேடிக்  கொண்டிருந்த   ரிஷி,

“என்ன  குட்டிமா  சொன்ன?  சரியா கேட்கலை”  என  சொல்லவும்

“ஒன்னுமில்லை   அண்ணா… ஒன்னுமேயில்லை”  என  தனாவுக்கு  சொன்ன  அதே   வாக்கியத்தை  அதே  ராகத்தோடு  ரேணு   திருப்பி  சொல்லவும் … தனாவுக்கு   சிரிப்பை  அடக்க   வெகு  சிரமமாயிற்று.

அதை  மறைக்க   ஜனனியை  தேடும்  சாக்கில்   எதிர்ப்பக்கம்   திரும்பிக்  கொண்டு   சிரிப்பை  அடக்கினான்.

“ஒன்னுமில்லாததுக்கு  எதுக்கு  ஏன்  ரெண்டு பேரும்  இங்க  நின்னுட்டு  இருக்கீங்க?… சிட்டுவை  தேட  போங்க…  யார்   பார்த்தாலும்  சரி  எனக்கு  ஃபோன்  போடுங்க”   என  ரிஷி   சொன்னதும்   மூவரும்  மூன்று  திசைகளில்   பிரிந்து  போயினர்.

          மருத்துவர்களுக்கென  உருவாக்கப்பட்ட  தனி  அறை  போன்ற  மறைப்பில்  ஒரு  பெண்  மருத்துவரோடு  டாக்டர்  கௌதமும்  ஜனனியும்  இணைந்து   பேசிக்  கொண்டிருக்க….  அங்கே  எட்டிப்  பார்த்த ரிஷி,  “ஸாரி  டாக்டர்… கேரி ஆன்”  என  சொல்லியவன்  சற்று  தள்ளி  வந்து   தனாவுக்கும்,  ரேணுவுக்கும்  கால் பண்ணி  ஜனனி   இருக்குமிடத்தைக்   கூறினான்.

தனாவும்   ரேணுவும்  ரிஷி  இருக்குமிடம்  வந்து  சேர்ந்ததும்,  “நீ  பண்னை  வீட்டுக்கு  போய்  அங்க  உள்ளவங்களுக்கு  என்னன்ன   தேவையோ  அதெல்லாம்   செய்து  கொடு.  ரேணுவையும்   வீட்டுக்கு  கூட்டிட்டு  போயிடு”  என்றான்   தனாவிடம்.

“அண்ணா  நான்  சிட்டு  கூட  துணைக்கு  இருக்க  வேண்டாமா?”  என  கேட்ட  ரேணுவுக்கு

“வேணாம்டா  குட்டிமா… இப்போ  நானிருக்கேன்.  இன்னைக்கு  ஈவ்னிங்ல  இருந்து  நீ  சார்ஜ்  எடுத்துக்கோ”  என   சிரித்துக்  கொண்டே  ரிஷி  கூறினான்.

“மச்சான்…நீ  இப்படி  சிரிச்சா  ரொம்ப  அழகாருக்கடா”  என சொன்ன  தனா  ரிஷியை  தன்  தோளோடு   சேர்த்தணைக்கவும்,

‘அட… பன்னாட.. என்கிட்ட  சொல்ல வேண்டிய  டயலாக்கெல்லாம்  என்  அண்ணாகிட்ட  போய்  சொல்லிட்டு இருக்கு… அதுவும் கட்டி வேற  பிடிச்சுட்டு…கருமம்டா…கன்றாவி..  இதுல  நான்  தாலி  கட்ட  சொன்னா  மட்டும்  கோவம்  பொத்துட்டு   வருது… நீ  வாடி  மாப்பி  காருக்கு…உனக்கு  அங்க  இருக்கு   கச்சேரி’  என  மனதுக்குள்    தனாவை   வறுத்தெடுத்துக்  கொண்டிருந்தாள்   ரேணு.

“சரி…சரி…போதும்   கிளம்புங்க  நேரமாச்சு”  என  சொன்ன  ரிஷி…  அப்போது  தான்  நினைவு  வந்தவனாக,

“டேய்…இரு…சிட்டு   ஏன்  டல்லாருக்கானு   உன்னை  அப்போவே  கேட்டேன்… பிறகு  சொல்லுறேன்னு   சொன்ன..  என்னாச்சு?”  என  தனாவிடம்  கேட்டான்.

“ம்ம்…அதுவா? டேஷ்போர்டு  பாக்ஸ்குள்ள இருந்த சிகரெட்  பாக்கெட்டை  சிட்டு  பார்த்துட்டா.. அதான்”  என்றான்  தனா.

“நீ   ஏதாவது  சொல்லி   சமாளிச்சுருக்க  வேண்டியதான?”  என்ற  ரிஷிக்கு

“எப்படி  அண்ணா  சமாளிக்க  சொல்லுறீங்க?  கார்  எங்களோடது.  ஆனா  உள்ள  இருக்குற  சிகரெட் பாக்கெட் அடுத்த  வீட்டுக்காரனோடதுனா”  என  கேட்டாள்  ரேணு.

ரேணுவைப்  பார்த்து   முறைத்த  ரிஷி,  “டேய்…கார்   கீ யை  அவ  கிட்ட  கொடு”  என  தனாவிடம்  சொன்னவன்

“குட்டிமா  கார்ல   போய்  நீ  வெயிட்  பண்ணு.   தனா  இப்போ  வருவான்”  என  சொன்னான்  ரேணுவிடம்.

“ஹுக்கூம்… எனக்கு  தெரியாத   ரகசியம்   பாருங்க. தம்மு, தண்ணி  இத  தவிர  கொல்லிமலை  ரகசியத்தையா  பேசப்  போறீங்க?”  என  ரேணு  நொடித்துக்  கொண்டே  சென்றாள்.

“டேய்…என்னடா  இவ  சொல்லுறா?… தண்ணியடிக்குறதும்  தெரிஞ்சிடுச்சா?…  காருக்குள்ள  இன்னைக்கு  பாட்டிலை  வைக்கலையேடா   மாப்பிள்ளை”  என  ரிஷி    யோசித்துக்  கொண்டே  சொல்லவும்

“நல்லா  வருவடா  மச்சான்… ஏன்  கொண்டு வர  மறந்துட்டியா?”  என  நக்கலாக   தனா  கேட்டான்.

“ச்ச…ச்ச.. மறக்கலை. ஃபேமிலியோட   இருக்கப்  போறோம்..  எதுக்கு  அதுனு  தான்  எடுத்துட்டு  வரலை.”   என  ரிஷி   சொல்லவும்

“இப்போ  நீ   தனி  மனுஷன்  இல்லை  மச்சான்.  உன்னை  நம்பி  ஒரு  பொண்ணு   இருக்கா.  அப்படி  இப்படினு  பக்கம்  பக்கமா  உனக்கு  அட்வைஸ்  பண்ண  மாட்டேன்.  உனக்கு  தெரியும்   அதோட  எல்லை  எதுனு?  அதை  தாண்ட  விட மாட்டனு  நினைக்குறேன்”  என்ற   தனா  ரிஷியிடம்  விடைபெற்று  ரேணுவை   வீட்டிற்கு  அழைத்து  செல்வதற்காக  விரைந்தான்.

           ஜனனிக்கென   தனியாக  மேஜை  நாற்காலிகள்  போடப்பட்டு… சிகிச்சைக்கு   வருகின்ற  பெண்களுக்கு   டெம்ப்பரேச்சர்,  ப்ரஷர்,  செக்  பண்ணி….  அவர்களுக்கு   மேலும்  உடல்  உபாதைகள்  இருக்கின்றனவா  என்பதையும்  ஆராய்ந்து… மேற்கொண்டு  சிகிச்சைக்கு   எந்தெந்த டாக்டரை  அணுக  வேண்டும்  என்பதையும்  விளக்கி  அவர்களது   அறியாமையை     நீக்கி,  உற்ற  நேரத்தில்  தகுந்த  சிசிச்சை எடுத்துக் கொள்ள  வைக்க வேண்டும் என  அறிவுறுத்த  வேண்டும்  என்பது  தான்  அவளிடம்  டாக்டர்  கௌதம்   கூறியது.   ஜனனியும்   மற்ற  மருத்துவர்களோடு   இணைந்து   தனக்கான  வேலையை  கண்ணுங்  கருத்துமாய்  பார்க்கத்  துவங்கினாள்.

          தனாவும்   இல்லாமல்   ரிஷிக்கு   போரடிக்க…. அங்குமிங்கும்  நடந்தவாறு   மேலும்  ஒரு அரை மணி  நேரத்தை  கடத்தியவன்…  காலியாக   கிடந்த   ஒரு  பிளாஸ்டிக்  நாற்காலியில்   அமர்ந்து   தன்  ஃபோனை  எடுத்து   உருட்ட  ஆரம்பித்தான்.

        அப்போது   அங்கே   வந்த   டாக்டர்   ஒருவர்… டாக்டர் கௌதம் தனக்கு  வேறு ஒரு  வேலை  கொடுத்திருப்பதாகவும்…அதனால்  தான்  பயன்படுத்திக்  கொண்டிருந்த   அறை  போன்ற   மறைப்பில்  ரிஷியை   ஓய்வு  எடுத்துக்  கொள்ளும்படியாக  வற்புறுத்தவே…  ரிஷியும்   வேறு  வழியில்லாது    அங்கே  சென்றான்.

        மூன்று  பக்கமும்   மறைப்புகளால்  தடுக்கப்பட்டு   இரண்டு  பிளாஸ்டிக்  நாற்காலிகள்,  ஒரு  மேஜை,  ஒரு  ஸ்டாண்டிங் ஃபேன்  என ஏறக்குறைய   ஒரு  அறையைப்  போன்றே   தோற்றமளித்தது  அவ்விடம்.   

        ரிஷியின்   முந்தைய  நாள்  தூக்கம்  தடைப்பட்டதால்  என்னவோ… இப்போழுது    தூக்கம்  கண்ணை  சுழட்டிக்  கொண்டு  வந்தது.  ஒரு  நாற்காலியில்  அமர்ந்து இன்னொரு   நாற்காலியின்  மீது   தன்  கால்களை  நீட்டி  வைத்துக்  கொண்டு  அமர்ந்தவன்… சிறிது  நேரத்திலேயே  தூங்கியும்  போனான்.

“அத்தான்  எழுந்திரிங்க… சாப்பிட்டு  தூங்கலாம்”  ரிஷியின்  தோள்  தொட்டு  ஜனனி   எழுப்பிக்  கொண்டிருக்க…

அப்போதும்   ரிஷி   அசைந்தானில்லை.   அவனை  விட்டு  சற்று  தள்ளி  நின்றவள்,  “தூங்குறவங்களை   எழுப்பலாம்.   தூங்குற  மாதிரி   நடிக்குறவங்களை  எல்லாம்  எழுப்பவே  முடியாது”  என  ஜனனி  சொல்லி  முடிப்பதற்குள்

“ஏய்…யாரைப்  பார்த்துடி  நடிக்குறேன்னு   சொல்லுற?… நீ தான்டி   பன்னிரண்டு  வருஷமா  நடிச்சுட்டு இருக்க?”  என  சொல்லியவாறு   நாற்காலியிலிருந்து   வேகமாக  எழுந்து  நின்றான்.

          ஜனனியோ விளையாட்டாக  தான்  ரிஷியிடம்  பேசிக்  கொண்டிருந்தாள்.  அந்த  விளையாட்டு  வினையாகிப் போகுமென  அவள் எதிபாராதது. “நானா?…அத்தான்…   நான்  என்ன  நடிச்சேன்?… யார்கிட்ட  நடிச்சேன்?”  என  கேட்டாள்  குழப்பத்தோடு.

“காலம்  முழுசும்   நான்  தலை நிமிர்ந்தே   பார்க்க  முடியாத  அளவுக்கு… உன்  சந்தோஷ் அத்தானுக்காக  என்  மேல  போட்டு  வைச்சுருக்கியே  ஒரு  பழி!!.. அதை  தான்  சொல்றேன்.  எல்லாம்  தெரிஞ்சும்   வாயைத்  திறக்காம  இப்போ  வரை  நடிச்சுட்டு  தான  இருக்க?”   என  சொன்னவன்   அதிர்ந்த  நின்ற   அவளது   கோலத்தைக்  காண   சகியாது,

“ஹேன்ட்வாஷ்  பண்ணிட்டு  வர்றேன்”  என  சொல்லிவிட்டு  வேகமாக   அவ்விடத்தை  விட்டு  அகன்றான்.

இங்கே   ஜனனியின்  இதயமோ   துடிக்க   மறந்து   அப்படியே  நின்று விடட்டுமா  என  அவளிடம்  கேட்டுக்  கொண்டிருந்தது.

 ‘ஒரு  நொடியில்  என்னெல்லாம்  பேசி  விடுகின்றான்?… சூரியனும்   சந்திரனுமாய்  மாறி  மாறி  என்னைப்  படுத்துறான்.  நான்  செய்த  பாவம்  காலம்  முழுவதும்  என்னை  துரத்த  தான்  செய்திடுமா?’  என  தனக்குள்ளேயே  உழன்று  கொண்டிருந்தாள்  ஜனனி.

           கை கழுவிட  வெளியே  வந்த  ரிஷி… உணவு   வழங்குமிடத்திற்கு  சென்று   அனைத்தையும்   பார்வையிட்டுக்  கொண்டிருந்தான்.  அவனது   ஷோரூமில்  வேலை  செய்வோரிலிருந்து  மேனெஜர்சுகுமாரனின்  ஆலோசனையின்  பெயரில்  திறமையான, விசுவாசமான  பத்து   பேரை  மட்டும்  தனது   தங்கை  ரஞ்சியின்   திருமண  வேலைக்காக   சோழவந்தானுக்கு   அழைத்து   வந்திருந்தான் .

          அவர்கள்   ஒவ்வொருவருக்கும்   தனித்தனியாக   பொறுப்புக்கள்   பகிர்ந்தளிக்கப்பட்டு…  திருமண   வேலைகளை   தன்   மேற்பார்வையில்   கவனித்துக்  கொண்டிருந்தான்  ரிஷி.

         மெடிக்கல்   கேம்ப்பில்   ஒரு   பக்கம்   நடைபெற்றுக்  கொண்டிருந்தாலும்,  அங்கே   சிகிச்சைக்கு   வரும்  மக்களுக்கும்,  மருத்துவர்களுக்கும்   மதிய   உணவையும்   தானே  பொறுப்பேற்றுக்  கொண்டு…  அதன்   பொறுப்பை   தன்   ஊழியர்  ஒருவரின்  கையில்  கொடுத்திருந்தான்  ரிஷி.

உணவுப்   பொட்டலங்கள்   வழங்குமிடத்திற்கு  வந்த   ரிஷி,  “எத்தனை  பார்சல்  யார்  கேட்டாலும்   கொடுத்துடுங்க  கோபி.  இல்லைங்குற  வார்த்தை  வரவே  கூடாது.  வாட்டர்  பாட்டிலும்   சேர்த்து   தான  கொடுக்குறீங்க”  என  கேட்டான்.

“யெஸ்  ஸார்…ஸாரி  ஸார்”   என  இரண்டும்  கலந்து  கூறினார்  அந்த  ஊழியர்   கோபி .

“எதுக்கு   ஸாரி”   என  கேட்ட  ரிஷிக்கு

“நான்   உங்களை   கவனிக்கலை   ஸார்…  அதுக்கு” என  கோபி   ரிஷியிடம்   பேசிக்  கொண்டிருந்தாலும்   உறை  மாட்டிய அவனது    கைகள்   உணவு   வழங்குவதிலேயே   குறிக்கோளாகவும்,   மும்முரமாகவும்  இருந்தன.


“நோ   பார்மாலிட்டிஸ்”  என்ற  ரிஷி… “சாம்பார்   சாதமும்,  தயிர்  சாதமுமா?”   என  கேட்டான்.

“யெஸ்  ஸார்… சாம்பார்  சாதத்துக்குள்ள   ரெண்டு  பொறியலும்  வைக்க  சொல்லிட்டார்  தனா  ஸார்.”  என்றான்   கோபி.

“ம்ம்…குட்”  என்றவன்…  தான்  வரும்  போது  ஜனனியின்   கையில்    இரண்டு  உணவு   பொட்டலங்களை  மட்டுமே  பார்த்தது   நினைவில்  வர   

“கோபி… ஒரு   தயிர்  சாதத்தை   எடுத்துட்டு….”  என   ரிஷி   சொல்லி  முடிப்பதற்குள்

“யெஸ்  ஸார்… நீங்க   இப்போ  ரெஸ்ட்  எடுத்துட்டு   இருந்த  அந்த   ரூம்ல  கொண்டு  போய்  வைச்சுடுறேன்  ஸார்”  என   கோபி   சொன்னதும்

“ஹாஹா…கேரி ஆன்”  என சொல்லிய  ரிஷி  கை கழுவுவதற்காக   சென்றான்.

       பள்ளி  மைதானத்தின்   குழாயில் கை கழுவிக்  கொண்டிருந்தவனின்  மனமோ  மானசீகமாக   ஜனனியிடம்   மன்னிப்புக்   கேட்டுக்  கொண்டிருந்தது.

‘ஸாரி   சிட்டு…  உன்  மனசை  நோகடிக்கனுங்கிறது  என்  குறிக்கோள்  இல்லைடி… நடந்தது   என்னனு  தெரியாம  இன்னும்  எத்தனை  வருஷம்  தான்  நானும்   பழியை  சுமக்குறது?… எனக்காக   வேண்டாம்… உன்  பாதுகாப்புக்காகவாவது   நடந்ததை   என்னிடம்  மட்டுமாவது   நீ  சொல்லித்தான்   ஆகனும்.’  என மருகிக்  கொண்டிருந்தவனின்   மனப்  புழுக்கம்  அதிகமோ  என்னவோ…  அதன்  விளைவாய்   வியர்வை  ஆறாய்   பெருக்கெடுக்க, சட்டையின் கைப்பகுதியை தன்  முழங்கை  வரை  ஏற்றிக்  கொண்டவன்,   சட்டைப்   பொத்தான்களில்   மேல்  இரண்டையும்  கழட்டிக்  கொண்டு  முகம்  மற்றும்   கழுத்துப்  பகுதியையும்   சேர்த்து   தண்ணீரால்  நன்கு  கழுவிக்  கொண்டு   ஜனனியிடம்   வந்து   சேர்ந்தான்.

“என்ன   அத்தான்   இப்படி  துடைக்காம  வந்துருக்கீங்க?”  என  சொல்லியபடியே   தன்   கைக் குட்டையை    கொடுத்தாள்  ஜனனி.

“எது?…இதுல   துடைச்சா  இந்த   ஈரமெல்லாம்  போயிடும்?”  என நக்கலாக  கேட்டவாறு   ஜனனி   கொடுத்த   கைக்குட்டையை   அவள்  கண்  முன்னே  விரித்துக்  காண்பித்தான்  ரிஷி.

“கர்சீஃப்ல   எதுக்குடி  இம்புட்டு  கஞ்சத்தனம்?  கொஞ்சம்  பெருசா  தான்  வாங்கி  யூஸ்  பண்ணுறது.  நீ  ஜவுளிக்கடைக்காரன்  பொண்டாட்டிடி”  என  சொல்லியவாறு   ஜனனியின்   இடுப்பில்  சொருகியிருந்த  தாவணியில்  இயல்பாய்  ரிஷி கை  வைத்தவுடன்…

“அத்தான்… என்ன  செய்றீங்க?”  என  அதிர்ந்தவாறு  இரண்டடி  பின்னால்  தள்ளி  நின்று  கொண்டு  கேட்டாள்  ஜனனி.

“முகத்தை  துடைக்கனும்டி…  என்  கர்சீஃப்  அப்போவே  யூஸ்  பண்ணிட்டு   டஸ்ட்பின்ல  போட்டாச்சு.”  என  சொல்லிவிட்டு  திரும்பவும்   அவளது   தாவணி  முந்தியையே   கருமமே  கண்ணாக   பார்க்க  ஆரம்பித்து விட்டான்.

          அவனது   பார்வையை   உணர்ந்த   ஜனனி… ‘ம்ஹூம்… இவன்  எப்படியும்   துடைக்காமல்  விடப்  போறதில்லை.  என்ன  பார்வைடா  இது’  என  மனதுக்குள்  ரிஷியை   திட்டிக்  கொண்டே… அவளே  இடுப்பில்  சொருகியிருந்த  தன்  தாவணி   முந்தியை   எடுத்து   அவனிடம்  நீட்டினாள்.

அதை   வாங்கி   துடைத்துக்  கொண்டவனது  மனதோ   உற்சாகத்தின்   உச்சாணிக்  கொம்பிலேறி   உட்கார்ந்து  கொண்டது.      ஜனனியின்   ப்ரத்யேகமான  வாசத்தை   நாசியின்  வழியாக      இதயத்திற்கு   கடத்தியவன்  அதை   தன்  உயிர்க்  கூட்டிற்குள்   பத்திரப்படுத்திக்  கொண்டான்.

            “தூரல்   விழும்  நேரமெல்லாம்…

             துளிர்   விடுகின்றது…

             அனல்  மூட்டும்  உன்  பார்வையின்   கனல்  எனக்குள்!!”

Advertisement