“ஹலோ… ஐ அம் ரிஷி. என் பொண்டாட்டி சிட்டுவை அனுப்பி வைங்க”
ரிஷியின் இந்த வார்த்தைகள் தான் அருள்குமரனின் கை முஷ்டியை தூணில் பதம் பார்க்க வைத்தது.
வராண்டாவிலிருந்து வெளியேறி அந்த வீட்டின் நீளமான படிக்கட்டுக்களின் கடைசி படியின் தூணில்… ரத்தம் வழியும் தன் வலக் கையை தொங்கவிட்டவாறு, இடக் கையை தன் காதுகளுக்கு செல்ஃபோனால் முட்டுக் கொடுத்தவர் கோவத்தோடு ரிஷியிடம் பேச ஆரம்பித்தார்.
அருள்குமரனின் கண்ணில் நேற்று சந்தோஷை வெளியே எடுக்க பட்ட பாடு கண்ணில் வந்து போக… அதன் இயலாமை கோவமாய் வெளிப்பட , “ரிஷி” என கத்தவும்
“ இந்த கத்துறது, சேலஞ்ச் பண்ணுறது, நான் யாருனு தெரியுமானு அட்ரஸ் கேட்குறது இதெல்லாம் எனக்கு பிடிக்காத விஷயம். இப்படி வெட்டி பந்தா பண்ணுறதை விட்டுட்டு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டா இனி அறிவாவது உங்களுக்கு வளருவதற்கு சான்சஸ் இருக்கு. டூ மினிட்ஸ் இட்ஸ் வேஸ்ட். சிட்டுவை சீக்கிரம் அனுப்பி வைங்க” என்ற ரிஷி அருள்குமரனின் பதிலை எதிர்பாராது லைன் கட் பண்ணி விட்டான்.
இங்கே அருள்குமரனுக்கோ திகைப்பு. அவனே ஃபோன் போட்டான், பேசினான், அவனே கட் பண்ணிட்டும் போயிட்டான். ஒருவேளை சைக்கோவா இருப்பானோ என அவர் நினைத்துக் கொண்டிருக்கையிலே அவரது கையிலுள்ள ரேணுவின் செல்ஃபோனில் வாட்ஸப் கால் … அண்ணா என்ற பெயரில் ஒளிர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க , அதை எடுக்கவா வேண்டாமா என மனதிற்குள் சிறிய பட்டிமன்றம் ஒன்று நடக்கையிலே, ரேணு அங்கேயிருந்து சத்தம் கொடுத்தாள், “இதுவும் உங்களுக்காக தான். ஆன் பண்ணி பேசுங்க மாமா” என்றாள்.
‘என் தங்கச்சி பெத்து வைச்சதுக ரெண்டும் மனுச ஜென்மமே இல்ல’ என வாய்க்குள் முனுமுனுத்துக் கொண்டே ரேணுவை பார்த்தவாறு வீடியோ காலை ஆன் பண்ணியவருக்கு…
அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்துக் கிடந்தது அங்கே… போன் திரையில் தெரிந்து கொண்டிருந்தது அந்த ஊர் V.A.O. அவரது பின்பக்கம் அந்த ஊர் அரசு பள்ளியின் மைதானத்தில் டென்ட் போடப்பட்டு சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளியூர் ஆட்கள் இங்குமங்குமாய் ஓடிக் கொண்டிருக்க அவருக்கு சற்று பின்னால் மதுரை மாவட்ட கலெக்ட்டரோடு ரிஷி பேசி கொண்டிருக்க “வணக்கம் அருள்குமரன் சார்” என்றார் V.A.O.
அருள்குமரனுக்கோ சூழ்நிலை எதுவும் புரியாததால், “வணக்கம் சார். என்ன இந்த பக்கம்?” என கேட்டார்.
“நல்லா கேட்டீங்க போங்க. ஒரே நாள் நைட்ல உங்க மருமகன் என்னை மட்டுமல்ல கலெக்கட்டரையும் சேர்த்து நம்ம ஊருக்கு வர வைச்சுட்டார். இன்னைக்கு நம்ம ஊருல அவர் தான் ஹீரோ.” என்றார் V.A.O.
‘அண்ணனும் தங்கச்சியும் தான் பேசியே என்னை டயர்ட் ஆக்குச்சுகனா… இப்போ இந்தாள் அவர் பங்குக்கு என்னை டயர்ட் ஆக்கிடுவான் போலயே’ என மனதுக்குள் நொந்தவராய் வெளியே முகத்தை சிரித்தவாறு வைத்துக் கொண்டு, “நீங்க என்ன சொல்றீங்கனு எனக்கு புரியலையே” என்றார் அருள்குமரன்.
“உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை தான். நீங்க கல்யாண வீட்டுக்காரங்க” என்றார் V.A.O.
“ஆமா சார். இங்க எல்லாத்தையும் நான் தான் பார்த்துக்கனும். அதான் அங்க என்ன நடக்குதுனு எனக்கு தெரியலை” என்றார் அருள்குமரன்.
உண்மையில் கல்யாண வேலைகளுக்காக அருள்குமரனோ, அவரது அண்ணனோ, அவரது வாரிசுகளோ என யாரும் துரும்பை கூட அசைக்கவில்லை. ரிஷியே மதுரையிலிருந்து ஆட்களை வரவழைத்து கல்யாண வேலைகளை இன்று அதிகாலையிலிருந்து பம்பரமாய் பார்க்க ஆரம்பித்துவிட்டானென்பதை தன் தந்தை வாயால் கேள்விப்பட்ட அருள்குமரன் மனதுக்குள் எப்பவும் சொல்லுற அதே டயலாக், ‘அவன் மனுசப் பிறவியே இல்ல’ என்பது தான்.
“கலெக்ட்டர் தலைமையில நம்ம ஊர் மக்களுக்காக மெடிக்கல் கேம்ப் ஒன்னு உங்க மருமகன் ஏற்பாடு பண்ணியிருக்கார். ஊரே உங்க தங்கச்சி பையனை தலைல தூக்கி வைச்சு கொண்டாடுது பாருங்க” என சொன்னவாறு செல்ஃபோனை தனக்கு பின்னால் சில அடிகள் தள்ளி நின்று கொண்டிருந்த ரிஷியின் பக்கம் திருப்பிக் காட்டினார் V.A.O.
அப்போது கலெக்ட்டரோடு பேசிக் கொண்டிருந்த ரிஷியின் பக்கம் வந்த வயதான மூதாட்டி ஒருவர் தன் நடுங்கும் கரங்களால் ரிஷியிடம் கைகூப்பி வணங்க போக… அதை நடுத்து நிறுத்தியவன் …அவரது காலை இவன் தொட்டு வணங்கியதும்… உடனே அந்த கிழவி தன் முந்தி சேலையில் முடிந்து வைத்திருந்த சில்லரை காசுகளை எடுக்கப் போக… அவனே அதிலிருந்து ஒற்றைக் காயினை மட்டும் எடுத்துக் கொள்வது தெரிந்தது. அவன் கையசைக்க ஓடி வந்த நர்ஸ் ஒருத்தி … அந்த மூதாட்டியை அங்கே நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸில் ஏற்றுவதும் தெரிந்தது அருள்குமரனுக்கு.
இதையெல்லாம் பார்க்க பார்க்க அருள்குமரனுக்கு வயிறு மட்டும் எரியவில்லை …உடம்பும் சேர்த்து எரிவது போலிருந்தது.
அந்த எரிச்சல் தன் வார்த்தைகளில் வெளிப்படாதவாறு V.A.O.விடம் “மெடிக்கல் கேம்ப் போடுறது ஒன்னும் சாதாரணமான விஷயமில்லை சார். அதுக்கு ஆயிரத்தெட்டு பார்மாலிட்டிஸ் இருக்கு. இதெல்லாம் ஒரே நாள் நைட்டுக்குள்ள பெர்மிஷன் வாங்குற விஷயமா என்ன? என அருள்குமரன் கேட்டார்.
“அதென்னவோ உண்மை தான் சார். ஆனா பணமும் , அதிகார பலமும் இருந்துட்டா போதுமே!!… நினைச்சதை சாதிக்கலாமே!… உங்க தங்கச்சி பையனுக்கு இருக்குற செல்வாக்குக்கு இதெல்லாம் தூசி மாதிரி சார்” என்றார் V.A.O.
அவர் திரும்ப திரும்ப ரிஷியின் புகழையே பாடிக் கொண்டிருக்க, “ஆமா… ஆமா… தூசி தான். இப்போ எனக்கு எதுக்காக ஃபோன் போட்டீங்க?” என கேட்டார் பல்லைக் கடித்தவாறு.
“இப்போ தான் ரிஷிவந்த் சார் சொன்னார்…. உங்க பொண்ணும் M.B.B.S. தான் படிக்குறாங்கன்னு” என்றார் V.A.O.
“அதுக்கு?”…. என்றார் அருள்குமரன்
“உங்களுக்கே தெரியும் அருள்குமரன் சார்… நம்ம ஊர் பெண்களுக்கு இன்னும் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு குறைவா தான் இருக்கு. பல பெண்கள் தன் உடல் சார்ந்த பிரச்சனைகளை வெளியே சொல்ல தயங்குறாங்க. அப்படிப்பட்டவங்க இயல்பா தன் மனதை திறந்து பேசனும்னா… அந்த பெண்களுக்கு மிக பழக்கமான அதே சமயத்துல டாக்டராகவும் இருக்குற ஒரு பெண் தேவைப்படுறாங்க”
அருள்குமரன் குறுக்கே பேச முற்படுகையில் ஃபோன் திரையில் V.A.O வோடு அருகில் தோன்றிய கலெக்ட்டர் , “வணக்கம் அருள்குமரன். டீட்டெய்ல்ஸ் எல்லாம் V.A.O. சொல்லிட்டாரா?.. உங்க அப்பாவும் நீங்களும் இந்த ஊருக்கு பல நல்ல காரியங்கள் செய்துருக்கீங்க…இப்போ மூணாவது தலைமுறையும் அதை தொடர போகுது. வாழ்த்துகள்!!.. உங்க பொண்ணோட ஹெல்ப் இப்போ நம்ம ஊருக்கு ரொம்ப முக்கியம் அதை மறந்துடாதீங்க” என மறைமுகமாக ஜனனியை வர சொல்லி ஆர்டர் ஒன்னு போட்டுவிட்டு அருள்குமரனின் பதிலை எதிர்பாராது அத்திரையிலிருந்து அகன்றார்.
“ஸார்… சீக்கிரம் அனுப்பி வைங்க. இன்னும் அரைமணி நேரத்துல பங்க்ஷன் ஆரம்பிச்சுடும்” என்ற சொன்ன V.A.O.வும் வாட்ஸப்காலை கட் பண்ணி விட்டு அங்கே அவரது வேலையை பார்க்க பறந்து கொண்டிருந்தார்.
போனையே பார்த்துக் கொண்டிருந்த அருள்குமரனுக்கு… ரிஷியை கொன்று புதைத்து விடும் அளவுக்கு கோவம் வந்தது. தன்னால் மறுக்க கூட வழியின்றி அவனிருக்கும் இடத்துக்கே தன் பொண்ணை அனுப்பி வைக்க வேண்டுமா? ‘என்ன கொடுமை ஆண்டவா’ என தனக்குள் நொந்து கொண்டிருந்தார்.
பலவாறு சிந்தனையில் மூழ்கிக் கிடந்தவரை ரேணுவின் குரல் கலைத்தது.
“ மாமா பேசி முடிச்சுட்டீங்களா?”
ரேணுவை முறைத்தவாறே அவளை நோக்கி வந்தவர் … ஃபோனை அவளிடம் கொடுத்துவிட்டு…”ம்ம்…” என்றார்
“நாங்க இப்போ போகலாமா மாமா?” என்றாள் ரேணு
“ம்ம்”… என்ற அருள்குமரனுக்கு
“நாங்க இன்னும் மனித தன்மையை இழக்காததுனால தான் நீங்க நிம்மதியா இருக்கீங்க மாமா” என சொன்ன ரேணு ஜனனியிடம் திரும்பி , “வா… போகலாம்” என்றாள்.
ரேணு சொன்னதன் அர்த்தம் புரிந்த அருள்குமரன் ‘தான் முனுமுனுத்தது எப்படி இவளுக்கு தெரிந்தது? அதுவும் இவ்வளவு தூரத்தில்?’ என நினைத்துக் கொண்டிருக்கையிலே…
“எனக்கு கொஞ்சம் லிப் ரீடிங்கும் தெரியும் மாமா” என்றாள் ரேணு.
ஜனனிக்கு இவர்கள் பேசுவது எதுவும் புரியவில்லை. புரியவும் தேவையில்லை… அவளுடைய குறிக்கோளெல்லாம் தன் அப்பாவின் கையிலிருந்து வழியும் ரத்தத்தை நிப்பாட்டுவது மட்டுமே.
“அப்பா…உங்க கையில ரத்தம் வருது. இங்க உட்காருங்க முதல்ல… ஃபர்ஸ்ட் எய்ட் பண்ணனும்” என சொல்லிக் கொண்டே அப்போவே தான் எடுத்து வைத்திருந்த ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டை திறந்தாள்.
“இப்போ நீ ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டியது எனக்கில்லை” என சொன்னவாறு ஜனனியிடமிருந்து தன் கைகளை உருவிக் கொண்டு அருள்குமரன் தன் அறைக்குள் செல்ல… அவரை பின்தொடர்ந்து வீட்டின் மற்ற உறுப்பினர்களும் உள்ளே சென்றனர்… அவரை கேள்வியால் துளைத்துக் கொண்டே!!
“ஜனனி எங்க போறா?…ஏன் போறா?…ஏன் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறீங்க?” என வைதேகியும்…
“உங்களுக்கு என்னாச்சுப்பா?…. சுய நினைவுல தான் எல்லாம் செய்யுறீங்களா?” என ஜனனியின் சின்ன அண்ணன் பாலாவும்
“டேய் தம்பி … இன்னைக்கு நீ நடந்துக்குறது ரொம்ப புதிரா இருக்குடா. நம்ம புள்ளையை ஏன்டா அவனைப் பார்க்க அனுப்பி வைச்ச?” என அருள்பிரகாஷும்
“ஏஏ….ஜனகை மாரியாத்தா!!..” என சுமித்திரை ஆரம்பிக்கவும்…
“எல்லோரும் அமைதியா இருக்கீங்களா?… இந்த கல்யாணம் முடியுற வரை நம்ம புள்ளையை பத்திரமா பார்த்துக்கோங்க… இதை மட்டும் தான் என்னால சொல்ல முடியும்” என்றார் அருள்குமரன்.
“நம்ம புள்ளை நம்மளை விட்டுட்டு எங்கடா போக போகுது?” என்றார் அருள்பிரகாஷ்.
“ஜானுவா போக மாட்டா… சிட்டுவா நம்ம கையை விட்டு போயிடுவானு எனக்கு தோணுது” என்றார் அருள்குமரன் கண்களில் பயத்தை போக்கி.
“அதுக்காக நம்ம பொண்ணை சந்தேகப்பட சொல்லலை. கவனமா பார்த்துக்க தான் சொன்னேன்” என சொல்லியபடி தன் அறையை விட்டு வெளியேறினார் அருள்குமரன்.
வெளியே ரேணுவின் பின்னால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருந்த ஜனனியிடம்
“என்ன சிட்டு உம்முனு வர்ற?” என்றாள் ரேணு
“என் அப்பாவுக்கு கையில ரத்தம் வந்துட்டுருக்கு.. என்னால எப்படி சந்தோசமா உன்கூட வர முடியும்?” என கேட்ட ஜனனியை வினோதமாக பார்த்த ரேணு
“என் அண்ணாவோட இதயத்துல பன்னிரண்டு வருஷமா ரத்தம் வந்துட்டு இருக்கு. உன் அப்பா கை காயத்துக்கு மருந்து போட்டா காயம் ஆறிடும். ஆனா என் அண்ணாவுக்கு?” என கேட்டவள் அவளது பதிலுக்கு காத்திராமல் ஜனனியின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
இருவரும் பங்களாவின் கேட்டின் அருகே வந்ததும் அங்கே ரோட்டின் மீது ரிஷியின் கார் மீது சாய்ந்து நின்று ஃபோனை உருட்டியவாறு நின்ற தனாவை கண்டனர்.
இவர்களைப் பார்த்ததும், “ஆத்தா மகமாயிஸ்…பஞ்சாயத்து முடிச்சுட்டு வர இம்புட்டு நேரமா?” என சொன்ன தனா கார்க் கதவை திறந்து விட்டான்.
“பின்ன?.. ஒன்னா? ரெண்டா?.. விடிஞ்சதுல இருந்து சொம்பும் கையுமாவே அலையுறேன்… எல்லாத்தையும் முடிச்சுட்டு வர வேண்டாமா?” என்ற ரேணுவுக்கு..
“டேய்.. கருவாயா.!!.. பஞ்சாயத்தை சொன்னேன். ஓவரா பேசாத” என்ற ரேணு எம்பி தனாவின் மண்டையில் ஓங்கி ‘நங்க்’ என கொட்டு ஒன்று வைத்தாள்.
இவர்கள் இருவரது பின்னிலும் ஓடி வந்த ஜனனியின் பெரிய அண்ணன் உதய்… இவையனைத்தையும் பார்க்க நேரிட அவனது ‘ஒரு நாள் காதல் கோட்டை’ சுக்கு நூறாய் வெடித்து சிதறியது.
ரேணு தனாவின் நெருக்கத்தை பார்த்த ஜனனிக்கு அனைத்தும் புரிந்து போனது.
பேசிக் கொண்டே கார் முன் கதவை ஜனனிக்கு தனா திறந்து விட , “எனக்கெல்லாம் கார் கதவை திறந்து விட மாட்டீங்களோ?….உங்க சிஸ்டரை தான் தாங்குவீங்களா?” என வம்பிழுத்தாள் ரேணு.
காரை ஓட்டிக் கொண்டே, “சிட்டு முகம் ஏன் வாடியிருக்கு?” என திரும்பி பின் சீட்டில் உட்கார்ந்திருந்த ரேணுவிடம் கேட்டான் தனா.
“சத்தியமா அவளை நான் அடிக்கவேயில்ல… வேணும்னா என் துப்பட்டாவை போட்டு தாண்டட்டுமா?” என கேட்டபடியே மார்பில் போட்டிருந்த துப்பட்டாவை தன் கையில் எடுத்தாள் ரேணு.
“அட சீ….துப்பட்டாவை ஒழுங்கா போடு முதல்ல” என அதட்டியவன்….ரேணு தெரிவது போல ரிவர்யூ மிரர்ரை சரி செய்து “நீ பேசுனா போதாது? மத்தவங்களை டென்ஷனாக்குறதுக்கு? இதுல அடிக்க வேற செய்யனுமாக்கும்?” என்றான் தனா சிரித்துக் கொண்டே.
“அப்பா கையில ரத்தம் வந்துட்டு இருக்கு அண்ணா. என்னை ஃபர்ஸ்ட் எய்ட் பண்ண விட மாட்டுறார். நாம இப்போ எங்க போறோம்னு கூட எனக்கு தெரிய மாட்டுது. என்னை சுத்தி என்ன நடக்குதுனே தெரியலை. ஒரே குழப்பமா இருக்கு” என்றாள் ஜனனி கலங்கிய கண்களோடு.
“ரிஷி உன்கிட்ட விவரம் சொல்லி தான் கூட்டிட்டு வர சொன்னான். இந்த ராட்சசி உன்கிட்ட விளையாடிட்டா போல” என்ற தனாவுக்கு
“என்கிட்ட மட்டுமா விளையாடினா?… என் வீட்டையே ஃப்ளே க்ரௌண்ட் ஆக்கி அங்க உள்ள எல்லார்கிட்டவும் விளையாண்டுட்டு வந்துருக்கா” என்று சொன்ன ஜனனி திரும்பி பார்க்க… பின் சீட்டின் நடுநாயகமாய் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டு மிதப்பமாய் பார்வை ஒன்றை பார்த்து வைத்தாள் ரேணு.
“என்ன அண்ணா சொல்லுறீங்க? அத்தானா? மெடிக்கல் கேம்ப்பா?… அதுவும் இன்னைக்கா? ஒரே நாள்ல எப்படி பெர்மிஷன் கிடைச்சது?” என அடுக்கடுக்காய் கேள்விகளை ஜனனி கேட்டதும்
“நிரூபிச்சுட்டமா… அவனுக்கேத்த ஜோடி நீ தான்னு!” என தனா சொன்னான்.
பின்சீட்டிலிருந்த ரேணு சிரித்துக் கொண்டே, “உன் ஒளிமயமான எதிர்காலம் இப்போவே என் கண்ணுக்குள்ள வந்து போகுது ராசா” என்றாள்
“என்ன தெரியுதாம்?” என கேட்டான் தனா ரிவர்யூ மிரர்ரில் ரேணுவை பார்த்தவாறு.
“உன் தங்கச்சி தமிழ்ல கேள்வி கேட்க… உன் ஃப்ரண்ட் இங்க்லீஷ்ல கொஸ்டின் கேட்க… நீ கை கட்டி இருவருக்கும் பதில் சொல்ல… அட!! அட!.. நான் அதை வேடிக்கை பார்க்கனு …. உன் எதிர்காலம் ஒரே குதூகலமா இருக்கப் போகுது” என சொல்லிவிட்டு ரேணு அடக்க முடியாமல் சிரிக்க…
காரை சடன் ப்ரேக் அடித்து நிறுத்தியவன் பின்னால் திரும்பி, “வாய்… வாய்… இந்த வாய் இல்லைனா உன்னை நாய் தூக்கிட்டு போயிரும்டி” என சொல்லிவிட்டு அவளது காதை பிடித்து திருகினான் தனா.
“நான் இங்க இருக்குறதையே மறந்துட்டு நீங்க ரெண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கீங்க? எப்பவுமே நீங்க இப்படி தான் எல்லோர் முன்னாடியும் ஜாலியா இருப்பீங்களா?” என கேட்டாள் ஜனனி.
“அம்மா தாயே …பர தேவதை!!.. உன்கிட்ட மட்டும் தான் கள்ளத்தனமில்லாம இயல்பா நாங்க பேசுறோம். அண்ணனுக்கு கூட எங்க விஷயம் தெரியாது.” என்று சொன்னாள் ரேணு.
“அதான் ஏன்னு கேட்குறேன்?… என்கிட்ட மட்டும் ஏன்?” என இருவரிடமும் கேட்டாள் ஜனனி
“அது வந்து…. இரு சொல்லுறேன்” என்ற ரேணு … தனாவிடம், “நாம இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சா?” என கேட்க
அவன் ‘ஆம்’ என தலையசைத்ததும்…
“அப்போ நீ கீழ இறங்கு… நான் சிட்டுகிட்ட இதுக்கு பதில் சொல்லனும்” என்றாள் ரேணு.
“அதுக்கு என்னை எதுக்கு இறங்க சொல்லுற?” என கேட்ட தனாவுக்கு
“பெண்களுக்குள்ள பேசுறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கு. அதையெல்லாம் ஆம்பளை உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது” என்றாள் ரேணு.
“அப்போ நீயும் சேர்ந்து தான் கீழ இறங்கனும் வா” என்றவன் ரேணுவின் கைப்பிடித்து இழுக்கவும்
“சிட்டுகிட்ட பேசிட்டு வந்து உன்னை வைச்சுக்கிறேன்டா” என ரேணு சொன்னதும்…
“வைச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்ல…” என தனா பாட்டு பாடிக் கொண்டே இறங்கவும்…
“என்ன கேட்ட சிட்டு?… உன்கிட்ட மட்டும் ஏன் இப்படி நடந்துக்குறோம்னா?… “ என கேட்டாள் ரேணு.
“ம்ம்…ஆமா” என்ற ஜனனிக்கு
“ஏன்னா…. எங்க ரெண்டு பேருக்கும் உலகமே என் அண்ணா மட்டும் தான்!.. இந்த உலகத்துலயே என் அண்ணா அதிகம் நேசிக்குறது உன்னை மட்டும் தான்!!
என் அண்ணா நேசிக்குற உன் மேல பல மடங்கு அதிகமா நாங்க பாசம் வைச்சுருக்கோம். அதனால தான் உன்கிட்ட எதையும் மறைக்கனும்னு எங்களுக்கு தோணலை” என்றாள் ரேணு தன் மனதை மறைக்காது!