Advertisement

நடந்ததை  சுருக்கமாக சொல்லி முடித்தான் சுகுமாறன்.
“என்ன மிஸ்டர் சுகுமாறன்.. இவ்ளோ பெரிய ஷோரூமோட டீடைல்ஸ் எல்லாத்தையும்  உங்க பிங்கர்டிப்ஸ்ல வச்சிருக்கீங்க…உங்க பாஸ் என்ன சாப்பிடுவார்னு உங்களுக்கு தெரியாதா?” என கேட்டான் தனா.
“தெரியலையே. அன்னைக்கு ஒரு நாள்  இதே நேரத்தில தான் சாப்பிட கேட்டார்.  பீட்சாவும் கோக்கும் வாங்கிட்டு போய் வச்சேன் .என்னை முறைச்சுட்டே என் மூஞ்சில தூக்கி எரியுற மாதிரி குப்பைத்தொட்டியில தூக்கி போட்டுட்டாரு. அதான் இப்ப என்ன வாங்குறதுனு தெரியாம பயந்துட்டு நிக்கிறேன் ..”
“கவலையை  விடுங்க சுகுமாறன் நான் பார்த்துக்குறேன்….”என்று சொன்ன தனா பார்க்கிங்கில் இருந்த தனது பைக் நோக்கி சென்றான்.
       ஒரு ஐந்து நிமிடம் நெடுஞ்சாலை பயணத்திற்குப் பின் மேலும் ஒரு ஐந்து நிமிடம் நெருக்கமான குடியிருப்புகளுக்கு மத்தியில் பயணம்  சென்ற தனாவின் பைக் பச்சரிசி மாவு,தேங்காய்ப்பூ,கருப்பட்டி கலந்து குழாப்புட்டு அவித்துக்கொண்டிருந்த ஒரு பாட்டியின் வீட்டின் முன் நின்றது. நூறு ரூபாய் கொடுத்து வாங்கி கொண்டு வந்து சுகுமாறனிடம் கொடுத்து கொடுக்க சொல்ல அவனோ..
“என்ன சார் வாங்கிட்டு வந்துருக்கீங்க?… நீங்களே கொண்டு போய் கொடுத்துடுறீங்களா?” என்று பார்சலை பார்த்து திகிலோடு கேட்க 
“உங்களை தான பாஸ் வாங்கிட்டு வர சொன்னார்… இப்போ நான் வாங்கிட்டு போய் கொடுத்தால் உங்க சீட் கிழியும் பரவால்லையா?” என தனா சற்று கோவமாய் கேட்டதும் தான் சுகுமாறன் பார்சலை கையிலே வாங்கினார். 
            சுகுமாறன் வேலுவை அழைத்து பார்சலை கையில் கொடுத்ததும், “இது இன்னைக்கு  உங்க மூஞ்சிக்கு தான் சார் வரப் போகுது”என்று கிண்டலடித்து விட்டு ரிஷியின் அறைக்குள்ளே அனுமதி கேட்டு உள்ளே  சென்றான் வேலு 
“சாப்பாடு வாங்கிட்டு வர இவ்ளோ நேரமா வேலு?  அங்க டீப்பாய் மேல வைச்சுட்டு போ ”என்று கூறி விட்டு வாஸ்ரூம் நோக்கி சென்றான் ரிஷி.
     அவனது அறையின் ஒரு மூலையில் பிரம்மாண்டமான சோபா செட் மத்தியில் அழகான கண்ணாடி டீப்பாய் ஒன்று போடப்பட்டு  அதன் நடுவில் செயற்கை மலர்க்கொத்து ஒன்றும்  மலர்ந்திருக்கும்.
        கை கழுவி வந்தவன் “வாவ்!!….. வாழை இலையில் மடித்த சாப்பாடா?…. இப்போ இதை  பார்க்குறதே அபூர்வமா இருக்கு” என்று சொல்லிக்கொண்டே பார்சலை திறந்தவன் உள்ளே இருந்த குழாப்புட்டை பார்த்ததும் ஆச்சர்யத்தோடு வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.
      பசியின் வேகம் அதிகமோ… இல்லை ருசியின் அளவு அதிகமோ….எதுவோ ஒன்று , ரிஷியின் வாய்க்கும் கைக்கும் போட்டி ஒன்று நடந்து கொண்டு இருந்தது.
       சாப்பிட்டு முடித்து நிமிர்ந்தவன் வேலுவையும் மேனேஜரையும்  அழைத்து, “எந்த கடைல வாங்குன வேலு? டேஸ்ட்டா  இருந்துச்சு” என கேட்டான்.
      பார்சலுக்கு உள்ளே இருந்தது  என்னவென்றே தெரியாத போது அதை எங்கே வாங்கியது என்று எப்படி சொல்லுவான்.
‘யோவ்…. ஸ்கிரிப்ட் எதுவுமே கொடுக்காம இந்தாள் முன்னாடி என்னை நிக்க வச்சிட்டியே…உண்மையை சொன்னாலே கண்ணுக்குள்ள எறங்கி போய் பார்த்துட்டு வருவாரு இந்த மனுஷன் ……இதுல பொய் சொன்னா அந்த கண்ணையே நோண்டி கையோட எடுத்துட்டு வந்துடுவாரு’ என மனசுக்குள் மேனேஜரை அர்சித்தவாறு முறைத்துக் கொண்டு இருந்தான் 
“நான் உன்னை கேட்டா பதில் சொல்லாம சுகுமாறனை ஏன் முறைச்சுட்டு நிக்குற?… இதை வாங்கிட்டு வந்த தனா வெளியே நிற்பாரு… போ அவரை  வர சொல்லு” என்றான் ரிஷி  இருவரையும் முறைத்தவாறு.
“நான் இந்த ரூம்க்குள்ள தான இருக்கேன் .. எனக்கு வெளியே நடக்குறது எதுவும் தெரியாதுனு நீங்க நினைச்சா அது உங்க முட்டாள்தனம்…. சிசிடிவி கேமரா எங்கங்க பிக்ஸ் பண்ணியிருக்கோம்னு உங்களுக்கு தெரிஞ்சுருக்கலாம். உங்களுக்கு தெரியாத இடங்களில் எனக்கு மட்டுமே தெரியுற மாதிரி எத்தனை கேமரா இருக்குனு உங்களுக்கு தெரியுமா??”
“இல்ல சார் ….அது வந்து …” என்று சுகுமாறன் இழுக்க 
“நீங்க வந்ததும் சொல்லியிருக்கணும் சுகுமாறன்… இது தனா தான் வாங்கிட்டு வந்து கொடுத்ததுன்னு… இனி இப்படி செய்யாதீங்கன்னு. எனக்கு உண்மையை மறைச்சா பிடிக்காது. இதான் லாஸ்ட் வார்னிங்…போய் வேலையை பாருங்க” என்றான் அடக்கப்பட்ட குரலில் கடுமையை ஏற்றி!!
         அவர்கள் வெளியேறியதும் தனாவிடம் , “உன் மூஞ்சி ஏன்டா இஞ்சி திண்ண குரங்கு போல இருக்கு?” என கேட்டான் 
          அதை கேட்டதும் சீறும் சிங்கமாகி விட்டான் தனா, “உன் மூஞ்சி தான்டா குழாப்புட்டு திண்ண குரங்கு மாதிரி இருக்கு. பாவம் பையன் பசிக்குதுன்னு சொல்லுறானேனு அவ்ளோ ஹெவி ட்ராபிக்லயும் …ஒ டர்ன், யு டர்ன் எல்லாம் பில் அப் பண்ணி …. சாப்பிட வாங்கிட்டு வந்து கொடுத்தா , கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம எல்லாத்தையும் வழிச்சு தின்னுட்டு…மனசாட்சியே இல்லாம  எல்லோரையும் திட்டிட்டு இருக்க?” என்ற தனாவின் குரலில் கிண்டலே மேலோங்கி இருந்தது..
“அதில்லடா மாப்பிள்ள… என்கிட்ட இருக்குறவுங்க எனக்கு உண்மையா இருக்கணும் , நான் அவுங்களுக்கு உண்மையா இருக்குற மாதிரி!!” 
         ரிஷி தனாவை மாப்பிள்ளை என்றும் , பதிலுக்கு அவன் இவனை மச்சான் என்று அழைப்பதும் இவர்களது  கல்லூரி பாஷை… இப்பொழுதெல்லாம் இப்படி அழைப்பது மிகவும் அரிதாகிவிட்டது…. மிகவும் உணர்ச்சிவசப்பட்டானென்றான் என்றால் மட்டுமே இவ்வாறு அழைப்பது வழக்கம்!!.
“இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு ஓவர் எமோஷனல் ஆகுற?..”
“எதுடா சின்ன விஷயம்?… உண்மையை மறைக்குறதா?”
         கடுப்பான தனா ,  “சுகுமாறன் அப்போவே என்னை தான் கொண்டு வந்து கொடுக்க சொன்னார்டா… பாவம் அந்த மனுஷன் என்கிட்டவும் திட்டு வாங்கி உன்கிட்டவும் திட்டு வாங்கிட்டு போறார்…விடு”
“ இதை இப்படியே வளர விட்டால் , இதான் நம்பிக்கை துரோகத்தின் முதல் படியா இருக்கும்” 
            அசந்து விட்டான் தனா,,, எங்கேயிருந்து  எங்கே போய் விட்டான்??… இவனை விட்டால் இன்னும் இதையே பேசிக்கொண்டு இருப்பான் என்றெண்ணி … பேச்சை திசை மாற்றும் பொருட்டு… “நீ எப்போ மதுரைக்கு வர்ற?… முக்கால்வாசி வேலைகள் முடிஞ்சுருச்சு… இன்னும் ஒரு தடவை கூட நீ வந்து பார்க்கலை… இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படியே இருப்ப?”
“நீ எப்போ மதுரையில இருந்து  வந்த? நேற்று நைட் போன் பேசும்போது கூட ஒன்னும் சொல்லலை?” என கேட்டான் ரிஷி 
“நான் உன்னை கேள்வி கேட்டா , நீ திருப்பி என்னை கேள்வி கேட்குற?… என்ன தான்டா உன் மனசுல நினைச்சுட்டு இருக்க?” என்றான் தனா 
“நான் நினைக்குறது என்னனு பிறகு பார்ப்போம்… நீ எப்போ? எதுக்கு வந்த??”
        ‘வினாக்களின் மன்னன்னு நினைப்பு இவனுக்கு… பதில் சொல்லுற வரை நம்மை விட மாட்டான்’ என மனசுக்குள் ரிஷியை திட்டியபடி “அம்மாவுக்கு  நேற்று நைட் பிரஷர் அதிகமாகி ஹாஸ்பிட்டலில் சேர்த்துருக்காங்க போல.. அதான் மிட்நைட்ல  அவசரமா ஓடி வந்தேன்” 
“இப்போ அம்மா எப்படி இருக்காங்க?”
“ம்ம்… நார்மல் ஆகிட்டாங்க… அப்பா தான் கொஞ்சம் பயந்துட்டார்” என்றான் தனா 
“அப்போ நீ இங்கேயிருந்து அம்மாவை கொஞ்ச நாளுக்கு பார்த்துக்கோ… நான் மதுரைக்கு போறேன்” என்றான் ரிஷி   
“நிஜமா தான் சொல்லுறியா?…. மதுரைக்கு வர தயாராகிட்டியா?” என்ற தனாவின் கேள்விக்கு “ம்ம்” என ஒற்றை சொல்லில் பதில் சொல்லியவாறே தன் சிந்தனைகளுக்குள் மூழ்கி கிடந்தவனை …
“இன்னும் த்ரீ ஹவர்ஸ்ல பிளைட்… டிக்கெட் புக் பண்ணிட்டேன்டா.. கிளம்பு போவோம்” என்ற தனாவின் குரல் நிகழ்வுலகுக்கு அழைத்து வந்தது.
“டேய்… ஜெட் வேகத்துல இருக்கீயேடா?” என்றான் சின்ன சிரிப்போடு ரிஷி 
“நீ ஷோரூம்காக மட்டும் மதுரைக்கு வரலை… ஒரு முடிவெடுத்துட்டு தான்  கிளம்பியிருக்கனு தான் தோணுது …. அதான் உடனே டிக்கெட் போட்டுட்டேன் மச்சான்” என்றான் தனா 
“உன்னை அம்மா கூட இங்க இருந்து பார்த்துக்க சொன்னேன்டா”
“அம்மாவை அப்பா பார்த்துப்பார்… அம்மாவும் இப்போ நார்மல் ஆகிட்டாங்க… அதுமட்டுமில்லாம மதுரைல நிறைய வேலை பெண்டிங்ல இருக்கு… அதெல்லாம் நான் போனா தான் மூவ் ஆகும்..” என்றான் தனா 
“ம்ம்… சரி …வா போவோம்” என்ற ரிஷிக்கு ,சற்றே திகிலோடு 
“எங்கேடா” என கேட்டான் தனா
“நம்ம வீட்டுக்கு தான்டா.. வீட்டுக்கு போயிட்டு ஏர்போர்ட் போவோம்”
“அதில்லடா… நான் அப்படியே நேரா ஏர்போர்ட்டுக்கு வந்துடுறேன் … நீயும் வந்துடு” என்று சொன்னவனை முறைத்த ரிஷி ,
“நீ இப்போ உன் வீட்டுக்கு போகனுமா?” என சற்றே கோவமாய் கேட்டான்,
“இல்லை” என்றான் தனா 
“அப்புறம் என்ன?.. என்கூட வீட்டுக்கு வர்றதுக்கென்ன?”
‘வர்றதுக்குக்கென்னவா?… உங்க வீட்டுல இருக்குற ராட்சசியை பார்க்க பயந்து போய் தான்டா அந்த பக்கமே வர மாட்டுறேன்’ என்றது தனாவின் மைன்ட்வாய்ஸ் 
“அது வந்து ….. இங்க கொஞ்சம் வேலை இருக்குடா எனக்கு” என்று இழுத்தான் தனா
அவனை ஆராய்ச்சியாய் கூர்ந்து நோக்கியவன், 
“இப்போ எல்லாம் ஏன் வீட்டுக்கு வர மாட்டுற?  என்னாச்சு?” என கேட்டான் ரிஷி 
‘போச்சு… இவன் ஆராய ஆரம்பிச்சுட்டான்.’  என தனாவின் மூளை அவனை எச்சரிக்கை செய்ய…
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா.. இப்போ என்ன உன் கூட வீட்டுக்கு வரணும்… அவ்ளோ தானே?… வா போவோம்” என ரிஷியின் கார் சாவியை கையில் எடுத்துக் கொண்டான்..
           தனா இப்போது தான் சென்னை ட்ராபிக்ல முதன் முதலாக ட்ரைவிங்  கற்றுக் கொள்ளுபவனை போல மிக மிக  கவனமாக சாலையிலே தன் கவனத்தையும், கண்களையும் வைத்திருந்தான் … சாலையும் அவனுமாய் போய் கொண்டிருந்தான் …. எங்கே திரும்பினால் மீண்டும் ரிஷியின் கேள்விக்கணைகளின் தாக்குதலுக்கு உட்பட நேருமோ என்ற பயம் அவனுக்கு!!
            இங்கே ரிஷியின் மனதோ தன்னை தானே கேள்வி கேட்டுக் கொண்டது… நீ எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டதா?… கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு ரிஷியின் கால் மதுரை மண்ணில் பதிய போகிறது…  அனைவரையும் எதிர்கொள்ளும் பக்குவம் தனக்கு வந்துவிட்டதா?….
“இறந்த  காலமாயினும்…
 இன்னும் உயிர்ப்போடு இருக்கின்றது…
 மறக்க நினைக்கும் ரணங்கள்!!!….
 நெருஞ்சியாய் நெஞ்சினில்…
 நினைவுகளின்  பிம்பமாய்….
 கண்ணீரின் வெப்பமாய்!!!”

Advertisement