Advertisement

          மைலாஞ்சியே நாணமோ?
            அத்தியாயம் – 1 
   குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 
   குறை ஒன்றும் இல்லை கண்ணா 
   குறை ஒன்றும் இல்லை கோவிந்தா….
            நேர்த்தியாய் அழகாக  வளர்க்கப்பட்ட மரங்களின் பூச்செடிகளுக்கு மத்தியில் தன்னையும் அழகாய் காட்டிக்கொண்டு , லேடீஸ் ஹாஸ்டல் என்ற பளபளப்பான  அறிவிப்பு பலகையோடு மேலும் தன்னை மெருகேற்றி அதிகாலை சோம்பலையும் அழகாக்கிகொண்டிருந்த அந்த கட்டிடத்தின் ஒரு அறையில் மெல்லிசையாய்  இந்த பாடல் ஒலித்து கொண்டிருந்தது.
         எம்.எஸ்.சுப்புலட்சுமியின் மனம் மயக்கும் இந்த பாடலில் கண் விழிப்பதையே தன் அன்றாட பழக்கமாக்கி இருந்தாள் ஜனனி.  பக்கத்து கட்டிலில் படுத்திருந்த கல்பனா திட்டியதை காதில் வாங்காமல்…. அலாரத்தை நிறுத்தியவள்  ஜன்னல் வழியே தெரிந்த முழுநிலவையும் , சில்லென வீசும் ஈரக்காற்றையும் ரசித்தப்படி நின்றிருந்தாள் தன்னிலை மறந்து!
“பௌர்ணமி  பூவினை 
 முத்தமிட்டு முத்தமிட்டே தேய செய்கின்றது…
 பொல்லா பேரெழில் முகில் வண்டுகள்!!”
 
                    நேரமாவதை உணர்ந்து  தனது ரசிப்புத்தன்மைக்கு தற்காலிக  விடுமுறை கொடுத்து  குளித்து வந்தவள்  தனது மேசைவிளக்கின் உதவியால் படிக்க ஆரம்பித்தாள்..
         ஜனனிதேவி மதுரை  மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு விடுதியில் தங்கி படிக்கின்றாள். கல்பனாவும் ஜனனியும்  விடுதியில் ஒரு அறையை பங்கிட்டு இருந்தனர்.
                  கல்பனாவோ தன் போர்வையோடு  மீண்டும் ஐக்கியமாகி பாதியில் விட்ட கனவை தொடர்ந்து கொண்டிருக்க …  அப்போது  “ஜனனி … ஜனனி” என்று யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்கவே எழுந்து கதவை திறக்க சென்றவள்… இவ்வளவு சத்தத்திலும் விடாது தூங்கும் கல்பனாவின் போர்வையை விலக்கி  அவளது காலில் கிள்ளி சென்றாள்.
      அலறி அடித்து எழுந்தவள்,  “பிசாசே , ஏண்டி கிள்ளின… உனக்கு இதே வேலையா போச்சு…. நீ தான் தூங்காம விடிய விடிய  முழிச்சுட்டே கனவு காணுற…. தூங்குற என்னை ஏண்டி கெடுக்குற” என்று கல்பனா கத்தியதை காதில் வாங்காமல் கதவை திறக்க சென்றாள் ஜனனி.
        வெளியே அவளது தோழி நிர்மலா பதட்டத்துடன் நின்றுகொண்டு இருந்தாள்.  ஜனனியை  கண்டதும் அவளது கையை இறுக பற்றியவள் , 
“ஜனனி எனக்கு எனக்கு …. லவ் லெட்டர் வந்துருக்குடி..” என்று கண்களில் மிரட்சியோடு சொன்னவளை பார்த்து சிரித்த ஜனனி,
“காலேஜ் லைப்ல இதெல்லாம் சகஜம்.. இதுக்கு இவ்வளவு பதட்டமா?” என கேட்டாள்.
“லவ் லெட்டர் உனக்கு தாண்டி வந்துருக்கு” என்று நிர்மலா சொன்னதும்  ஜனனியின் முகம் வெளிறியது.. நிர்மலாவின் கையை பிடிப்பது இப்போது ஜனனியின் முறையாகி போனது. 
“நிம்மி.. ப்ளீஸ் இதை யார்கிட்டவும் சொல்லிடாத” என்றாள் ஜனனி
“அதை தாண்டி நானும் சொல்லுறேன். உன்கிட்ட கொடுக்க சொல்லி எனக்கு லவ் லெட்டர் வந்துருக்குன்னு நீ யார்கிட்டவும் சொல்லிடாத” நிர்மலா இதை சொன்னதும் பின்னால் இருந்த கல்பனா சத்தமாக சிரித்துவிட்டாள்.  ஜனனியின் முறைப்பை கண்டதும் கல்பனாவின் வாய் தானாக மூடிக் கொண்டது.
             ஜனனியின்  கோவம் மிக மிக  அரிது. அவளது  கோவப்பார்வையில் தனது விளையாட்டுத்தனத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு அவளருகில் சென்று  அவளது கையை ஆறுதலாக பிடித்துக்கொண்டு, “பயப்படாதடி… யாருக்கும் தெரியாது …  எதுவும்  ஆகாது”…. என்று  சொன்னவள் 
“வா…. சீக்கிரம் போய் சாப்பிட்டு வருவோம்… அப்புறம் லேட்டாச்சுனா ஒன்னுமே இருக்காது” என்று கூறி அவளை இழுத்துக்கொண்டு நகர முயன்றாள் கல்பனா 
          அவளது கையை உதறியவள், “இந்த பல்லு விலக்குறது, குளிக்குறதுனு டெய்லி நாம பண்ண வேண்டிய கடமைகள் சில இருக்கு… உனக்கு அதெல்லாம் தெரியுமா?”  என கேட்டாள் ஜனனி
“இதெல்லாம்  டெய்லி  பண்ணனும்னு நம்ம மோடிஜி ரூல்ஸ் ஏதாவது போட்டுருக்காரா  பேபி?… அப்படியே  போட்டுருந்தாலும் அதை பிரேக் பண்ணுறது தான் என்  முதல் வேலை” என்றாள் கல்பனா
“காலங்காத்தால இப்படி உன்கிட்ட அரசியல் வியாக்கியானம் பேச எனக்கு பொறுமையில்ல…” என்று கடுப்போடு கூறியவளை பார்த்தவள் , இனி இவளோடு பேசி பயனில்லை என அறிந்தவளாக … மாற்றுடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
         நிர்மலா கவலை தோய்ந்த ஜனனியின் முகத்தைப் பார்த்தாள்.  அதிகாலையிலே தலைக்கு குளித்து… முடியை காய வைப்பதற்காக  இரண்டு செவியோரமும் இருந்து சிறிது முடி எடுத்து நடுவில்  கிளிப் மாட்டி , கீழே மயில் தோகையென முடியை விரித்துவிட்டிருந்தாள்… வட்ட வடிவமான அழகான முகம்…  பார்ப்போரை ஒரு முறை  திரும்பி  பார்க்க வைக்கும் தெய்வீக அழகு அவளிடம்!!… ஆனால் கண்களில் மட்டும் ஓர் வலி, ஏக்கம்.. இவ்விரண்டும் அவ்வழகிய கண்களில் தெரிந்தது… 
       அதற்கான காரணத்தை தோழிகள் இருவரும் எப்படி கேட்டு பார்த்தாலும் பதில் சொல்ல மாட்டாள். புதிர்கள்  பலவற்றை தனக்குள்ளே ஒளித்து வைத்துள்ள ஜனனி என்றுமே புரியாத  புதிர் தான் அவர்களுக்கு!!
“அண்ணா சாம்பார் கொண்டு வாங்க” என்று கல்பனா கத்திய கத்தலில் அந்த விடுதி உணவகமே  அதிர அனைவரும் ஒரு முறை இவளை திரும்பி பார்த்துவிட்டு மீண்டும்  சாப்பிட ஆரம்பித்தனர்.
         ஜனனியின் கைகளோ இட்லியை பிணைந்து கொண்டிருக்க…. பார்வையோ வேறு ஓர் இடத்தில் நிலைகுத்தி நிற்க… அதை  கண்ட கல்பனா , 
“இந்த இட்லியை இட்லியா சாப்பிட்டாவே கேவலமா இருக்கு. இந்த லட்சணத்துல இதை  உப்புமாவா வேற  மாத்த ட்ரை பண்ணிட்டு இருக்க?”  என்று  கிண்டலடித்தவளை ஜனனி முறைக்க…
“உண்மையை சொன்னா ஏண்டி முறைக்குற?… சீக்கிரம் சாப்பிட்டா தான் இந்த லெட்டர் கொடுத்தவனை பற்றி  சொல்லுவேன்” என்று  நிர்மலா சொன்னதும் வேகமாக  இட்லியை  பிய்த்து  வாயில் போட்டாள்.. சாப்பிட்டு முடித்து தோழிகள் மூவரும்  அறைக்கு  வந்து சேர்ந்தனர்.
“இப்போ சொல்லு….. யார் கொடுத்த லெட்டர் இது?” என்ற  ஜனனியின்  கேள்விக்கு 
“சுந்தரி கொடுத்தா… நீ அந்த லெட்டரை பிரிச்சு படிக்கலையா?” என கேட்டாள் நிர்மலா 
“ம்ஹும்… எனக்கு படிக்க இஷ்டமில்லை… சுந்தரிக்கு யார் கொடுத்தா?” 
“சிவா  தான் உனக்கு லவ் லெட்டர் கொடுத்துருக்கான்….. சுந்தரியோட அண்ணனும் சிவாவும்  ப்ரண்ட்ஸ்…. அதான் ரெண்டு பேரும் சேர்ந்து  அவளை மிரட்டி அவளிடம் கொடுத்து அனுப்பி இருக்காங்க” என்றாள் நிர்மலா.
“.அட கொடுமையே!! …. இவனுங்களுக்கு என்ன ஆச்சு?…ராம்குமாரோட  அண்ணன் தானே இந்த சிவா .இவனுங்களுக்கு அறிவே இல்லையா?
தெரிஞ்சி செய்றாங்களா? இல்ல தெரியாம செய்றாய்ங்களா?….தெரியலையே?” என கல்பனா நிர்மலாவிடம் கேட்டாள்.
         ஜனனி அமைதியாக இரண்டு நிமிடம் யோசித்தாள். பின்பு ஒரு முடிவு எடுத்தவளாய் எழுந்து கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள்.
        அதை கண்ட தோழிகள் இருவரும் “என்னடி…நாங்க ரெண்டு பேரும் இவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கோம்?…நீ எனக்கென்னனு கிளம்பிட்டு இருக்க?”என்று கேட்டனர்.
“நான் சிவாவை  பார்த்து பேச போறேன்”என்று கூற கல்பனாவும் நிர்மலாவும் வியப்பில் விழி விரித்தனர்.
“நீயா…நீயா…பேச போற?”என்று கேட்க 
“ஆம்” என்று தலையசைத்து விட்டு புத்தகங்களை எடுத்துக் கொண்டு சென்றாள்.
          விடுதியை விட்டு வெளியேறி  கல்லூரிக்குள் நுழைந்ததும் ஜனனியின் கண்கள் சிவாவை  தேடின. அவன் எப்படியும் இங்கு தான் இருப்பான் என்றெண்ணி பார்வையை நாலாபுறமும் வீசினாள்.
         காம்பவுண்டு சுவரின் ஓரமாய் பூங்கா போல் அமைக்கப்பட்டு இருந்த இடத்தில் ஸ்டோன் பெஞ்சில் நண்பர்களுடன் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும் அவனை நோக்கி அவள் நடக்க….அவள் வருவதைக் கண்டதும் அவனது நண்பர்கள் அனைவரும்  எழுந்து சென்றனர். அவன் லெட்டர் கொடுத்தது நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்துள்ளது .என அவள் அறிந்து கொண்டாள்.
          அவனருகே போனதும் அவளை பார்த்து சிரிக்க அவளோ “அறிவிருக்கா உனக்கு?…என்ன செய்றோம்னு தெரிஞ்சிதான் செய்றியா?…நீ லெட்டர் கொடுத்ததை  உன் ப்ரண்ட்ஸ் எல்லார்கிட்டவும் சொல்லி வச்சிருக்க போல….திருந்தவே மாட்டிங்களா?”என பொரிந்து தள்ளினாள்.
“நான் லவ் லெட்டர் கொடுத்தது பிரச்சினையா?…இல்லை எல்லோருக்கும் தெரிஞ்சி கொடுத்தது பிரச்சினையா?” என்று நிதானமாக கேட்டான் சிவா. 
அவளோ பதில் சொல்லாமல் முறைக்க “என்னம்மா பேச மாட்ற?….பேசு..” என கூற 
“உன் தம்பி ராம்குமார் எப்படி இருக்கான்?”
ராம்குமாரின் பெயரைக் கேட்டதும்  சிவாவின்  கண்கள் கோபத்தில் சிவந்தன.
        அவன் பேச ஆரம்பிக்கும் முன், “உன் தம்பி யாருக்கும் தெரியாமல் போன வாரம் தான் எனக்கு லவ் லெட்டர் கொடுத்து அடி வாங்கி ஹாஸ்பிட்டல்லில் படுத்துருக்கான். கையும் காலும் உடைஞ்சு போச்சுன்னு சொன்னாங்க. இப்போ  எப்படி இருக்கான்? தம்பி லவ் லெட்டர் கொடுத்த பொண்ணுக்கு தெரிஞ்சே அவன் அண்ணனும்  லவ் லெட்டர் கொடுக்குற கொடுமையை இப்போ தான் பார்க்குறேன். யாருக்கும் தெரியாமல் லெட்டர் கொடுத்தவனையே கண்டுபுடிச்சு துவைச்சி காயப் போட்டுட்டாங்க…நீ எல்லோருக்கும் தெரியுற மாதிரி வேற கொடுத்துருக்க….என்ன நடக்க போகுதோ?”என கிண்டலாக ஜனனி முடித்தாள்.
            அதை கேட்ட சிவா  “இந்த திமிரை தாண்டி நான் அடக்க போறேன். உன்னை மனசார காதலிச்ச என் தம்பியை உன்  அண்ணன்களை  விட்டு அடிச்சி படுத்த படுக்கையா ஆக்கிட்ட. அதுக்குத்தாண்டி நான் இப்ப உனக்கு கொடுத்த லெட்டர் .இப்ப வருவானுங்களா உன் அண்ணனுங்க?.  அப்ப இருக்குடி அவனுங்களுக்கு. என் தம்பியை  உன் அண்ணனுங்க எப்படி அடிச்சானுங்களோ அதை  விட பல மடங்கு உன் அண்ணனுங்கள அடிச்சி அவனுங்க முன்னாடியே இதே காலேஜ் கேம்பஸ்குள்ளேயே உன் கழுத்துல தாலியை கட்டி என் வீட்டுல வேலைக்காரியா  உன் ஆயுசு முழுவதும் நான் உன்னை கொடுமைபடுத்தலை  என் பெயரை நான் மாத்திக்கிறேன்டி” என்று ஆவேசமாக மூச்சு விடாமல் பேசினான்.
         கையில் தாலியுடன் நின்றவனை கண்ட ஜனனி சிரித்து விட்டு “சீக்கிரமே ஒரு நல்ல பெயர் செலக்ஷன் பண்ணிக்கோ” என்று சொல்லிவிட்டு திரும்பி நடக்கலானாள்.
”இந்த திமிரைத்தாண்டி நான் அடக்க போறேன்” என சிவா  மீண்டும் கூற 
“உனக்கு பெயர் வைக்க என் அண்ணன்கள் வந்துட்டு இருப்பாங்க.  ஆல் தி பெஸ்ட்”என்று சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். 
           அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் முன்னே தனது ரோல்ஸ்ராய்ஸ் காரை லாவகமாக  அவன் நிறுத்தியவிதமே சொல்லாமல் சொன்னது அவனது ஆளுமையை!!… 
            அவன் ரிஷி என்றழைக்கப்படும் ரிஷிவந்த்… ஆறடிக்கு மேல் உயரம்… யாருக்கும் அடிபணிய மாட்டேன் என  சொல்லிடும் அடர்ந்த சிகை!!… அனைவரையும் தள்ளி நிற்க வைத்திடும் ஆராய்ச்சி  பார்வை… நான் பிடிவாதக்காரன்  என  காட்டிடும்  அழுத்தமான தாடை!… கூர் நாசியின் கீழ் நான் கம்பீரமானவன் என காட்டிடும்  கற்றையான மீசை!!.. நிக்கோடின் கறை படிய ஆரம்பித்த தடித்த உதடுகள்!!… அலட்சியமாக திறந்து விடப்பட்ட சட்டையின் வழியே மின்னிடும்  தங்க செயின், முறுக்கேறிய கைகளில் ஒய்யாரமாய் ஓர் தங்க காப்பு என அவன் செல்போனில் பேசிக்கொண்டே நடப்பதை காண அவனுக்கு ஓர் ரசிகர் மன்றமே அங்கு  உண்டு..
          ரிஷி  டெக்ஸ்ட்டைல்ஸ்  மிக பெரிய பரப்பளவை தனக்குள் உள்வாங்கி சென்னை மக்களை தனது பிரம்மாண்டத்தால்  திகைப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமின்றி   தமிழ்நாட்டின் முக்கிய பெருநகரங்களில் எல்லாம் தனது ஆதிக்கத்தை  நிலைநாட்டியுள்ளது.  இது யாவும் ரிஷி என்ற தனிப்பட்ட மனிதனால் ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியாகும். 
          மேனேஜரை அழைத்து அன்றைய அக்கவுண்ட்ஸ் சரி பார்த்தவனின் கேள்விகளுக்கு பதிலாய் மேனேஜரின் வியர்வை தான் முதலில் வெளியாகும்.   
       அடுத்த சோதனை சூப்பர்வைசருக்கு தான்… 5000 சதுர அடி பரப்பளவுள்ள ஷோரூம்… ரிஷியின் லேசர் கண்களில் இருந்து ஒரு சதுர அடி கூட ஸ்கேன் செய்வதில் இருந்து தப்பிப்பது இல்லை… சில சமயம் வேலை செய்யும் பணியாளர்களிடமும் கூட தனது விசாரணை கமிசனை ஆரம்பித்து விடுவான்… ஆனால் அவர்களிடம் ஒரு போதும் கடுமையை காட்டமாட்டான்.  
           அரிதாக சில நாட்களில் வாடிக்கையாளர்களிடமும் கூட  தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தங்கள் ஷோரூமின்  நிறை குறைகளை கேட்டு தெரிந்துகொள்ளுவான்.  அவர்கள் கூறிய குறை , நிறைகளை மனதார ஏற்றுக்கொள்ளுவதோடு  குறைகளை நிறைகளாக்க முயல்வதோடு  செயல்படுத்தவும் தவற மாட்டான்.
           இன்று ஏனோ அவனது விசாரணை கமிஷன்  முடிய வெகு நேரமாகிற்று.. மணி மூன்று முப்பதுக்கு மேல் ஆகிவிட்டது. சாப்பாட்டை அவன் மறக்கலாம்… அவன் வயிறு மறக்குமா என்ன?. சிறு குடலும் பெருங்குடலும்  கூப்பாடு போட தொடங்கிவிட்டன.
          மேனேஜரை தனது அறைக்கு அழைத்தவன், “சுகுமாறன் பசிக்குது .வேலுவை  சாப்பிட வாங்கிட்டு வர சொல்லுங்க ..”  என  சொல்லிவிட்டு மீண்டும் தன் தலையை சிஸ்டத்துக்குள் புதைத்துக் கொண்டவன்… இன்னும் தன் முன்னால் நிழலாடுவதை உணர்ந்து  நிமிர்ந்து , புருவத்தை உயர்த்தி கண்களாலே என்னவென்று கேட்க ,
“இல்ல சார்… சாப்பிட என்ன வாங்கிட்டு வரணும்னு நீங்க சொன்…..” என்று அவர்  கேட்டு முடிக்கும் முன்பே…
“கெட் லாஸ்ட்” என்று ரிஷி கத்திய கத்தலில் வெளியே போய் விழுந்தார் சுகுமாறன்.
       பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட மனைவியை எதிர்பார்க்கும் கணவனை போல  கையை பிசைந்தபடி … ரிஷியின் அறையை பார்த்தவாறு குறுக்கும் நெடுக்குமாய் நடந்த சுகுமாறனை,
 “உங்களை ரிஷிவந்த் சார் ரூம்க்கு செக்யுரிட்டி ஆபிஸரா ப்ரமோட் பண்ணிட்டாங்களா என்ன?..” என்று கிண்டலடித்தபடி ஆபத்பாந்தவனாய் வந்து சேர்ந்தான் ரிஷியின் உயிர் நண்பனான தனபிரபு .. கல்லூரியில்  தொடங்கிய இவர்களது  நட்பு இன்று வரை எவ்வித பிசிறுமின்றி தொடர்கின்றது… 
          இந்த ஷோரூமில் ரிஷிக்கு சமமான  மரியாதை  இவனுக்கு தான்… இவனுக்கென்று எவ்விதமான பதவியும் இல்லை… அனைவரையும்  கட்டுப்படுத்தி, மேற்பார்வை செய்யும்  உரிமை இவனுக்குண்டு… சுருக்கமாக சொல்லுவதானால்   ரிஷியின் வலக்கை , இடக்கை என இரண்டு கையுமே இவன் தான்!!

Advertisement