Advertisement

என்ன தான் தன்னை தன் குடும்பத்தில் ஈடுபடுத்திக் கொள்ள முயன்றாலும் முடியாமல் போகவே தனக்குத்தானே யோசித்தவளுக்கு அப்போதுதான் அந்த பதில் கிடைத்தது.

“அவள் அன்பிற்காக ஏங்குவது!”.

 ஆனாலும்,” அவள் ஒன்றும் அன்பை அனுபவிக்காதவள் அல்ல”

சிறு ராணி போல் தான் தன்  வீட்டை ஆண்டு கொண்டிருப்பவள் அவள். 

“இந்த அன்பு மற்ற அனைத்தையும் தாண்டியது” 

“இருவர் மட்டுமே அவர்களின் உலகில் இருப்பார்கள்”

“தன்னுடையவனை மணக்க தாகம் மறைத்து வளரும் பாலைவன கள்ளி போல் நின்று பல ஆண்டுகள் பொறுமை காத்தவள்”

 ஆனால்,” இன்று அவன் நான் வேறு ஒருத்தியை விரும்பினேன்” என்றானே!

” என்னை பிடிக்கவில்லை என்று அவன் கூறாவிட்டாலும் அவன் மனதில் எனக்கு முதலிடம் இல்லை”.

என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாமல் விழித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் விளங்கிற்று. 

அதாவது,” அவன் இல்லாமல் அவள் வாழ்வு நிறைவு பெறாது” என்பது தான் அது. 

கண்கள் கண்ணீரில் குளிக்க விருப்பம் தெரிவிக்கவும் உள்ளே சென்று தன் அம்மாவின் அருகில் படுத்துக் கொண்டாள்.

 காலையில் அவள் கண்விழித்தபோது மணி பத்து அவள் அவசரமாய் எழுந்து தன் அலுவலகத்திற்கு கிளம்பினாள். 

அவளுக்கு காலை உணவை ஊட்டியவர்,” இன்று கோவிலுக்கு சென்றுவிட்டு வா கவி!”

” நீ ஏனோ குழப்பமாய் இருப்பதும் பயப்படுவதும் தெரிகிறது” என்றார் தேவகி. 

“சரிமா போயிட்டு வரேன்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள். 

அவள் அலுவலகத்தில் நுழைந்ததுமே கண்மணி அவளை கட்டிக்கொண்டு,

“என்னடி உன்ன பாக்கவே முடியல?”

“உன் அப்பாவுக்கு கால் பண்ணா அவர் சொன்ன பிறகுதான் விஷயமே எனக்கு தெரியுது!”என்றாள்  உண்மையான மகிழ்ச்சியில். 

அவள் ஏதோ சொல்ல வாயை திறக்கும் முன், “தினேஷ் இன்னும் நான் கேட்ட அந்த லெட்டர் வரலையே!”  என்று கேட்கவும் கண்மணி கவிக்கு கண்களால் சைகை சொல்லிவிட்டு அவள் இடத்திற்கு சென்றாள். 

தினேஷ் கவியிடம் “கங்கிராட்ஸ் கவி”  என்று கூறிவிட்டு,

” மேரேஜ்க்கு அப்புறம் வேலைக்கு வருவிங்களா இல்லையானு கொஞ்சம் முன்னாலேயே இன்ஃபார்ம் பண்ணிடுங்க”  என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த கவிக்கு அவன் மேல் இரக்கம் ஏற்பட்டுவிட்டது. 

பாவம் தன் தந்தையை இழந்து தாயின் உடல்நலக் குறைவினால் அவதியுற இந்த இளம் வயதில் காதல் கீதல் என்று சுற்றாமல் வேலையிலேயே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவன்  அவன்.

கவி தன் வேலைகளில் மூழ்கி விட சரியாய் 4 மணிக்கு அவள் மொபைல் ஒலிக்கவும் எடுத்து “ஹலோ” என்றாள்.

 “நான் உன்னுடைய ஹரிகேஷ் பேசுகிறேன்” 

“ஆபீஸ் எப்போ முடியும்?” என்று அவன் கேட்கவும்

  “ஆபீஸ் டைமிங் முடிஞ்சிடுச்சி நான் வீட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.

 அவன்,” சரி ஓகே!” என்று கூறி வைத்துவிட்டான்.

 “பெரிய அக்கறை இருக்கிற மாதிரிதான்” என்று முணுமுணுத்துக் கொண்டே வெளியில் வந்தவளுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி, அதை அவள் முகம் தெளிவாக காட்டியது.

அவளின் அலுவலகத்தின் வாயிலில் தன் காரின் மீது சாய்ந்து இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவளின் வருகைக்காக காத்திருந்தான் அவளின் உலகமானவன். 

அவள் அவனருகில் வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சா? என்று கேட்கவும் “அம்மையாரின் தரிசனம் கிடைக்க, அடியேன் ஒரு அரை மணி நேரம் செலவு செய்தேன் அவ்வளவுதான்” என்று  கூறவும்,

 சிரிப்பை அடக்கிக்கொண்டு,” என்ன விஷயம்?” என்றாள் அழுத்தமான குரலில்.

“நம்ம மேரேஜ் மேட்டர்” என்றான் அவனும் இறுகிய குரலில். 

அவள் ,”இதில் பேச வேண்டி என்ன இருக்கு?” என்று கேட்கவும் அதற்கு “அவன் நிறையவே இருக்கு! அதிலும் குறிப்பாய் எனக்கு” என்றான். 

“இப்போது என்ன தான் என்னை செய்யச் சொல்கிறீர்கள்?” என்று கேட்கவும்,” ஒரு மணி நேரம் என்னுடன் நான் சொல்லும் இடத்திற்கு வர வேண்டும்”

” உன் அப்பாவிடம் பேசி விட்டேன்” என்றான் அவன். 

இதற்கு மேல் அவனிடம் வழக்கு அடிக்கப் பிடிக்காமல் அவளும் அவன் காரின் பின்சீட்டில் அமர்ந்து கொண்டாள். 

அவன் அமைதியாய் காரை ஓட்டிக்கொண்டே கண்ணாடியின் வழியே அவளின் செயல்களை கவனித்துக் கொண்டிருந்தான்.

 இப்போது கார் நேராய் கடற்கரை செல்லும் பாதையில் செல்லவே ஈரக்காற்று இருவர் மனதையும் வருடிச் சென்றது. 

கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு கடற்கரை மணலில் நடந்து கடலை நோக்கி சென்றனர். 

இருவரைச் சுற்றிலும் இளம்வயது பட்டாளம், குழந்தைகள் , பெரியவர்கள் என அனைவரும் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். 

“ஹரி சென்று இரண்டு மேக்னம் ஐஸ்கிரீம் வாங்கி வந்தான்”.

 “அவளை உட்காரச் சொல்லிவிட்டு அவளிடம் ஒன்றை நீட்டினான்”.

 அவள் சிறு தயக்கத்துடனே வாங்கிக் கொண்டாள். 

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்தவன் பின்பு அவள் புறம் திரும்பி அமர்ந்து கொண்டு அவளுடன் பேச ஆரம்பித்தான்.

 முதலில்,” கவி” என்று அவன் அழைக்கவும் ம்…என்ற சத்தம் மட்டுமே வெளியில் வந்தது அவளிடமிருந்து.

“இந்த திருமணத்தில் உனக்கு சம்மதம் உண்டா?” 

“எந்த பதிலாய் இருந்தாலும் பரவாயில்லை உண்மையை சொல்லும்மா?” 

“மத்தவங்களுக்காக வாழாத சரியா?” என்று கேட்டான்.

இப்போதும் அவளின் பதில் ம்… மட்டும் தான். 

இப்போது, ” அவன் அவளிடம் நீ பதில் ஏதும் சொல்லாமல் இருந்தால், நான் என்னவென்று எடுத்துக் கொள்ளட்டும்?”

 “அங்கே திருமணநாள் குறிப்பதற்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள்” 

“எந்த முடிவாக இருந்தாலும் வாயை திறந்து பேசினால் தானே தெரியும்” என்றான்.

அவள் சிறிது நேரம் கண்களை மூடியவாறு அமர்ந்து விட்டு பின்பு அவன் பக்கம் திரும்பி,” எனக்கு சம்மதம்”  என்றாள். 

அவன் சிரித்துக் கொண்டே அவள் கைகளை பிடித்துக் “தேங்க்ஸ் ஏஞ்சல்” என்று கூறியதும் அவளுள் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது அவள் இதயம்.

பிறகு ,”அவளிடம் எனக்கு மீண்டும் மும்பைக்கே மாத்திட்டாங்க”

 “அதனால நான் இப்போ மும்பைக்கு போகணும்”.

” சரியா ஒன் மன்த் கழிச்சு  வந்ததும் நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்னு இருக்கேன்”

” நீ என்னடா கவி சொல்ற?” என்று கேட்டதும் அவள் தலையை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள். 

“சரி!  இப்போ நாம கிளம்பலாம்” என்று கூறி அவன் எழுந்து அவளுக்கு கைகொடுக்கவும் தன்னையுமறியாமல் அவள் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு எழுந்தாள். 

அவர்களை நோக்கி பூக்கூடை உடன் ஓடி வந்த சிறு பெண் கீழே விழுந்துவிட கவி அவளை தூக்கி விட்டு அவளிடம் ஒரு நூறு ரூபாய் தாளை கொடுக்கவும் அந்த சிறுமி தன் கூடையில் இருந்த மல்லிகைப் பூவிலிருந்து 3 முழம் கொடுத்தாள். 

அவள் மறுப்பாய் தலையை அசைக்கவும் அவள் கைகளில் வைத்து விட்டு சென்று விட்டாள் அந்த சிறுமி.

கவி பூவை எடுத்து பேகில் வைக்க போகவும்,” தலையில் வைத்துக் கொள் கவி” என்றான் ஹரி. 

அவளும் எதுவும் பேசாமல் பூவை தலையில் வைத்துக் கொண்டு அவனுடன் காரில் ஏறினாள். 

அவளை வீட்டில் இறக்கி விட்டு அவள் முகத்தைப் பார்க்கவும் அவள் ஏதோ சொல்ல எத்தனிக்கும் முன் அபியும் அக்சுவும் ஓடிவந்து,” என்ன மாமா அப்படியே ஓடலாம் என்று பார்க்கிறீர்களா?”

” உங்களுக்காக உள்ள ஒரு பெரிய விருந்து ரெடி ஆகிட்டு இருக்கு” என்றாள் அக்சு.

 அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே சேரனும் தேவகியும் வெளியில் வந்து விட்டனர். 

மரியாதை நிமித்தமாக ஹரி காரை விட்டு இறங்கியதும்,” உள்ளே வாங்க மாப்பிள்ளை!” என்று ஹரியை அழைத்துவிட்டு,” கவி இங்க நின்னுட்டு என்ன பண்ற?” என்ற தேவகியிடம் ஹரி அவசரமாய்,” இல்ல அத்தை நான் தான் பேசிட்டிருந்தேன்.”

லேட்டாயிடுச்சு அத்தை. இன்னொரு நாள் வரேன் என்றான்.

இது சம்பிரதாயம் மாப்பிள்ளை!

” ஒரு பத்து நிமிஷம் உள்ளே வந்துட்டு போங்க” என்று அவனிடம் கூறிவிட்டு  கவியிடம் திரும்பி,” அவரை அழைத்து வா!” என்றார் தேவகி. 

அனைவரும் உள்ளே சென்று விட அவள் குற்ற உணர்ச்சியுடன் வாங்க என்று கூறிவிட்டு உள்ளே செல்லவும் அவன் அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

உள்ளே சென்றதும் அனைவரையும் அமரச்சொல்லி பரிமாற ஆரம்பித்தார் தேவகி. 

அபி அக்சு அருகில் அமர்ந்து கொள்ள அவர்களுக்கு எதிரே இருந்த நாற்காலி ஒன்றில் கவி அமரவும் அவள் அருகில் அமர்ந்தான் ஹரி. 

சிக்கன்,மட்டன்,மீன் என ஒருபுறமும் இன்னொருபுறம் சாதம்,சாம்பார்,ரசம்,மோர், பொரியல் என வகை வகையான சாப்பாடும் பழங்கள் மற்றும் இனிப்புகள் என சாப்பாட்டு மேசை நிரம்பியிருந்தது.

ஹரி தன்னால் முடிந்தவரை சாப்பிட்டு விட்டு எழுந்துவிட்டான்.

ஆனால் கவி தன் உணவை கொரித்துக்கொண்டிருந்தாள்.

தேவகியின் சைகையினால் அவளும் எழுந்து அவனைப் பின்தொடர்ந்து சென்றாள். 

அவன் கை கழுவிவிட்டு திரும்பவும் அவள் அவன் பக்கமாய் வரவும் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டனர்.

கவி தன் நெற்றியில் கைவைத்து தேய்க்கவும் அவன் மிருதுவாய் அந்த இடத்தில் முத்தமிட்டுவிட்டு வந்து தன் மாமியாரிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அவள் அப்படியே உறைந்து நிற்க தேவகியின் குரல் அவளின் கனவை கலைத்தது. 

அவள் வேகமாய் வெளியில் வரவும் அவன் தன் காரில் அமர்ந்து கொண்டு,” பாய்” சொல்லிவிட்டு கிளம்பி விட்டான். 

அவள் வீட்டுக்குள் செல்ல திரும்பி இருப்பாள்.

 அதற்குள் கார் ஹாரன் சத்தம் கேட்டு திரும்பியவளின் இரு கண்களும் இமைக்க மறந்தன என்று கூட சொல்லலாம். 

ஏனெனில் அங்கு ஹரி காரைவிட்டு இறங்கி வந்து கொண்டிருந்தான். 

வந்தவன் அவள் அருகில் வந்து நின்று கொண்டு “போயிட்டு வரட்டுமா ஏஞ்சல்” என்று கேட்கவும் அவள் தலையை மட்டும் அசைத்தாள். 

அவன் தன் ஒற்றை விரலால் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்கள் கலங்கி இருந்ததை கண்டு முடி கோதி விட்டான்.

பின்பு அவளிடம்,” உள்ளே போய் ரெஸ்ட் எடு”

” நான் நாளைக்கு வரேன்” என்று கூறிச் சென்று விட்டான். 

இவை அனைத்தையும் அபியும் அக்சுவும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

அடுத்த நாள் காலையில் அரவிந்த் குடும்பம் இங்கு வரவும் வீடே ஒரே பரபரப்பாக இயங்கியது.

தேவகி காலையிலேயே  விருந்து சாப்பாட்டை சமைக்க ஆரம்பித்து விட்டார்.

சேரன் காலையில் சென்றவர் நண்பகல் கோகுலுடன் வந்தார்.

ரேவதி வீட்டு அலங்காரத்தை கவனித்துக்கொண்டார். 

மாலையில் கண்மணி வீட்டிற்கு வந்தாள். 

அவளை வரவேற்ற தேவகி கவியை அலங்காரம் செய்ய உள்ளே விரட்டினார்.

 எல்லா வேலைகளும் முடிந்து விட அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

அரவிந்த் மொபைலில் யாருடனோ பேசி விட்டு வந்து,” ஆண்டி அவங்க கிட்ட தட்ட நம்ம வீட்டுக்கு ரொம்ப பக்கத்துல வந்துட்டாங்க” என்று நினைக்கிறேன் என்றான். 

அனைவரும் வெளியே செல்லவும் ஹரியின் குடும்பம் உள்ளே வரவும் சரியாக இருந்தது.

அனைவரும் முகமன் கூறி ஒருவரை ஒருவர் வரவேற்றுக் கொண்டனர்.  

அய்யர் நல்ல நேரம் பார்த்து சொல்ல திருமண தேதி வாசிக்கப்பட்டது.

அந்த சபையில் அங்கு அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க,” கவியின் முகம் மட்டும்  பல்வேறு உணர்ச்சிகளை மாறிமாறி பிரதிபலித்தது”. 

“அதை ஹரி கவனிக்க தவறவில்லை”

இன்றிலிருந்து சரியாக 20ஆம் நாள் திருமணம் என இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சுகமாகி முடிவுற அன்றைய நாள் இரவே ஹரிகேஷ் மும்பைக்கு கிளம்பிவிட்டான். 

கவி எப்போதும் போல் அலுவலகத்திற்கு சென்றாள். 

நாளை தாரிகையின் திருமணம் என்பதால் அவளும் கண்மணியும் கிப்ட் வாங்குவதற்காக வெளியில் ஷாப்பிங் சென்றனர். 

அவர்கள் அந்த மாலின் இரண்டாம் தளத்தை அடைய எஸ்கலேட்டரில் சென்றபோது அதே சமயம் அரவிந் தன் நண்பர்களுடன் முதல் தளத்திற்கு சென்று கொண்டிருந்தான். 

எதேச்சையாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கண்மணி அரவிந்தை பார்த்தாள். 

அதற்குள் அவர்கள் தளத்தை அடைந்து விட அவள் ஏமாற்றத்துடன் கவியின் பின்னே சென்றாள். 

இருவரும் சேர்ந்து ஓர் அழகிய கண்ணன் ராதை வடிவம் சேர்க்கப்பட்டிருந்த கிப்ட்டை எடுத்துக் பேக் செய்யுமாறு பணித்து விட்டு அருகில் இருந்த காபி டேவிற்கு இருவரும் போய் காபி ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தனர். 

அங்கே ஒரு டேபிளில் அமர்ந்திருந்த இளைஞர்கள் அனைவரும் ஒரே கேலியும் கிண்டலுமாக பேசிக்கொண்டு இருந்தனர். 

அவர்களை பார்த்து விட்டு ஏமாற்றமாய் திரும்பியவள் தாங்கள் ஆர்டர் செய்தது வந்துவிட தன் காபியை எடுத்துக் குடிக்கலானாள் கண்மணி.

“கவி தன் அம்மாவிற்கு போன் செய்து தான் வர லேட் ஆனாலும் ஆகலாம்” என்று கூறினாள். 

அதற்கு தேவகி, “சரி கவி நீ அரவிந்த் கிட்ட சொல்லிடு அவன் எப்படியும் வெளியில்தான் எங்கேயாவது சுத்திட்டு இருப்பான் அப்படியே உங்களையும் கூட்டிட்டு வந்து விடச் சொல்லு” என்றார்.

அம்மா என்று அவள் சலிப்புற்று கூறினாலும் இப்போது அவன் எங்கே இருப்பான் என்ற ஆவலில் அவனுக்கு போன் செய்தாள். 

அவனும் எடுத்ததும் ,”என்ன கவி உன்னோட ஆளு கிட்ட பேசவே நேரம் பத்தாதுன்னு பார்த்தா?”

“நீ எனக்கு எல்லாம் கூட கால் பண்றே!”

” அதற்கு கவி டேய்! அடங்குடா அறுந்த வாலு”

“இப்ப எங்க இருக்கேன்னு சொல்லு” என்றாள். 

அதற்கு ,”அவன் இதெல்லாம் சொல்லக்கூடாது”

“இருந்தாலும் நீ என்னோட  அத்தை பொண்ணு அதனால சொல்கிறேன்” என்று கூறிவிட்டு 

“இன்னிக்கி தான் என்னோட கேர்ள் ஃபிரண்ட் ஓட ஷாப்பிங் வந்தேன்” அதற்குள்ள “சிவ பூஜையில் கரடி மாதிரி” என்று அவன் கூறிக்கொண்டிருக்கும் போதே,”எந்த ஷாப்பிங் மால்?” என்றாள் கவி. 

Advertisement