Advertisement

மௌனமே – 20

அவன் சென்ற பிறகு  மலருக்கு அனைவரும் எவ்வளவு ஆறுதல் கூறினாலும் அவர்களுடைய வார்த்தையால் அவளின் கண்ணீருக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை.

அன்று இரவு முழுவதும் மலர்  உறங்கவில்லை. இருவரிடையே  குறுஞ்செய்திகளும் பரிமாறப்படவில்லை.  அங்கு இருவரிடத்திலும் மௌனங்கள் மட்டுமே நிலவியது.

இமைகள் மூடாமல் அவர்களின் முதல் சந்திப்பில் இருந்து  மனதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நினைவுகளை தட்டி எழுப்பியது.

“முத்து முதன் முதலாக கூறிய காதல் மொழி, ‘நான் உன்னை விருப்புறேன்’ மலர்” என்ற ‘காதல் மந்திரம்’ திரும்ப திரும்ப அவளின் காதுகளில் எதிரொளித்துக் கொண்டே இருந்தது.” மலரோ ‘நானும் உங்கள விரும்பறேன்’ மாமா” என தலையணையைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
“முத்துவின் அழகான வட்ட முகம், காற்றில் நெற்றிப் பரப்பில் கலைந்தாடும் கேசம், இதழ் பிரித்து மென்மையாக வெளிப்படும் புன்னகை, அவளை வாட்டி வதைத்தது.

அவன் கொடுத்த இதழ் முத்தம்” என ஒவ்வொன்றும் மனதைத் தீண்டியது.
மாமாவோட லட்சியமும் முக்கியம். அவரோட வெற்றிக்கு மட்டும் தான் நான் காரணமா இருக்கனும்.  ட்ரெயினிங் முடிஞ்சதும் மாமா வந்துடுவாங்க. அப்புறம் வாழ்க்கை முழுக்க மாமா எனக்கு மட்டும் தான. இதுக்கு ஏன் நான் இப்படி அழனும். மாமா என் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்காங்க. அத வீணாக்கக் கூடாது. இந்த பிரிவு தற்காலிகமானது தானே. நாம தான் மாமாவுக்கு ஆறுதலா இருக்கனும். அவர் மனசுலயும் இந்த வலி இருக்கும் தானே. என்ன விட அதிகமா மாமாவுக்கு தான் வலியும் வேதனையும் இருக்கும். நாளைக்கு மாமாவ சந்தோஷமா ட்ரெயினிங் அனுப்பி வைக்கனும். அவர் முன்னாடி அழக் கூடாது என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள். இரவு முழுவதும் முத்துவின் நினைவில் உறக்கமின்றி பஞ்சணையில் படுத்திருந்தாள்.

முத்துவும் லட்சியம் பெரிதென்று நினைத்தாலும், மலரின் ஆழமான காதல், அன்பு, குறும்பு, இதழ் தீண்டிய முத்தம், மென்மையான ஸ்பரிசம் அவனுக்குள் வலிகளைக் கொடுத்தது. மலரின் நினைவுகளை இதயத்தில் சுமந்து கொண்டு கொஞ்ச நாள் எனக்காக காத்திரு மலர். இந்த இடைவெளி நம்மோட காதலை இன்னும் ஆழமாகவும், அழகாகவும் மாத்தும்னு நம்பறேன். நீதான்டி என்னோட  உயிரே. நான் உன்ன விரும்பறேன் மலர். என்னோட கடைசி மூச்சு வரைக்கும் உன்ன விரும்பிட்டு தான் இருப்பேன் என உறக்கம் இன்றி இமைகள் மூடாமல் புரண்டு புரண்டு படுத்திருந்தான்.

அழகான காலை பொழுது, ஆதவன் செங்கதிர்கள் பூமியை மெல்ல முத்தமிட. கதிரவனின் காதலில் மொட்டவிழ்ந்த மலர்கள் புன்னகையோடு பூத்து குலுங்கியது.
முத்து காலையில் எழுந்து குளித்துவிட்டு கிளம்புவதற்கு ஆயத்தமாக தன்னுடைய அனைத்து தேவைகளையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

“ஊர்மக்கள் அதிகாலையிலேயே அவர்கள் வீட்டின் முன் கூடியிருந்தனர்.  தம்பி கலெக்டர் ஆகப்  போகுதாம்ல.  வெளியூருக்கு எல்லாம் போகுதாமே”  என அனைவரும் பார்க்க வந்திருந்தனர்.

மாரியம்மாளுக்கும்,  மணிவண்ணனுக்கும் ஏகப்பட்ட பெருமையாக இருந்தது.  தாங்க முடியாத மகிழ்ச்சியளித்தது.  ஆனாலும் முத்து, மலரை பிரிந்து செல்வது அவர்களின் மனதிற்கு வேதனை  அளித்தது.

கண்ணனும்,  எழிலும் அவனுக்கு தேவையானதை உடனிருந்து செய்து கொடுத்தனர்.

“மாமா வீட்டுக்கு   கார் அனுப்பிட்டியா கண்ணா. அவங்கள ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வர சொல்லிட்டியா?”  என்று கேட்க.

“அதெல்லாம் அனுப்பிட்டேன் டா முத்து. நாம கிளம்பலாம்.  அவங்க வந்துடுவாங்க” என்று கூற.

தனது லக்கேஜை  எடுத்து வைத்துக் கொண்டான்.  தனது பெற்றோரிடம் ஆசியை வாங்கிக்கொண்டான்.  இருவரும் அவனை ஆசீர்வதிக்க.

ஊர்மக்களும், முத்துவை  வாழ்த்தினார்கள். “நம்ம  ஊருக்கே திரும்ப கலெக்டரா வரனுமய்யா. உன்னால முடிஞ்ச நல்லத பண்ணும்” என்றனர்.

பழனிச்சாமியோ, “எந்த ஊருக்கு வந்தாலும் சரி..  எல்லாரையும் நம்ம மக்களா நினச்சி நல்லது பண்ணு முத்து அது போதும். நம்ம ஊர்ல இருந்து ஒரு புள்ள இவ்வளவு உசந்த இடத்துக்கு வயதே நம்ம ஊருக்கு பெருமைதே” என்றார்.

கண்டிப்பா, “என்னால முடிஞ்ச வரைக்கும் நல்லது மட்டும் தான் செய்வேண்ணா” என்றான். ஊர்மக்களின் ஆசியையும், வாழ்த்துக்களையும்  பெற்றுக் கொண்டான்.

மாரியம்மாள்,  முத்துவுக்கு பிடித்த  வத்தக்குழம்பும், பூண்டு ரசமும் வைத்திருந்தார். தன் கையால் சாதம் போட்டு குழம்பை ஊத்தி பிசைந்து ஊட்டி விட்டார். “அம்மா! எனக்கும்” என கண்ணனும் வாய் திறக்க. இருவருக்கும் சிறு குழந்தைகளுக்கு ஊட்டுவதைப் போல ஊட்டி மகிழ்ந்தார். மகிழ்ச்சியில் கண்ணீர் வர.
முந்தானைச் சேலையில் துடைத்துக் கொண்டார்.

மணிவண்ணனோ, “கார் வந்துடுச்சி. நல்ல நேரம் தான்டி போறதுக்குள்ள வாங்க” என்று கூற.  அனைவரும் வந்து காரில் ஏறி அமர.

பழனிச்சாமி, மணிவண்ணனையும் அமரச் சொல்லி விட்டு காரின் நான்கு சக்கரத்திற்கும் எலுமிச்சம்பழம் வைத்து விட்டு, முத்துவின் கையில் ஒரு எலுமிச்சம்பழத்தைக் கொடுத்து  காரை புறப்படச் சொன்னார்.

கார் மெதுவாக கிளம்பியது. அனைவரும் கையசைக்க. முத்துவும் தன் பங்கிற்கு கையசைத்து விட்டு கிளம்பினான்.
மனம் முழுக்க, “மலர் என் மனச புரிஞ்சிட்டு  வருவாளா? இல்ல வழக்கம் போல புரிஞ்சிக்காம கோவப்பட்டு  வரமாட்டாளா?” என்று நினைத்தான்.  நிமிடங்கள் கரையக்கரைய முத்துவின் மனம் ஏனோ துடித்துக் கொண்டிருந்தது.

“ஒரு முறை மலரோட முகத்தைப் பார்த்துட்டு கிளம்பலாமா?  பார்த்தா கிளம்புற சக்தி எனக்கு இருக்குமா?  அதனால தான் நான் அவகிட்ட எதுவுமே பேசல.  நாலு வருஷம் தானே.  சீக்கிரம் போயிடும்.  அதுக்கப்புறம் காலம் முழுக்க  மலரோட சந்தோஷமா வாழப்போறோம்”  என்று மனதை தேற்றிக் கொண்டான்.  ஆனாலும் அவனது இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் மலரை நினைத்தே  இயங்கிக் கொண்டிருந்தது.
இங்கே ராசைய்யாவும், சரசும்  கிளம்பி தயாராக இருக்க.  மலர் முகத்தில் வாட்டத்துடன் உயிரோட்டமே இல்லாமல் அங்கு அமர்ந்திருந்தாள்.

“மலர் கார் வந்துடுச்சிலே.  நேரமாவுது”  என  கிளம்ப வைத்தாள்.

முத்துவுக்கு பிடித்த  பச்சை நிறத்தில் புடவை கட்டி, தலையில் மல்லிகை மொட்டை வைத்தாள். மலரின் கண்களிலிருந்து அணை போட்டாலும் நிறுத்த முடியாத அளவு கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. “மாமா முன்னாடி அழக் கூடாது. சந்தோஷமா அனுப்பி வைக்கனும்” என நினைத்துக் கொண்டு கண்களை துடைத்துக் கொண்டாள்.

“மலரின் முகத்தைப் பார்க்க வேதனையாக இருந்தது. சரசு தன்  மகளை   நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். நாலு வருஷம்தாம்மா.  சீக்கிரம் போயிடும் கண்ணு. எவ்வளவு நாள் ஆனாலும் உனக்கு முத்து தான்.  முத்துக்கு நீ தான்.   இதை யாராலும் மாத்த  முடியாது டா கண்ணு”  என தலையை வருடிக் கொடுத்தார்.

நேரமாவுது. “நீ போகலனா முத்து  ஏமாந்து போய்டும்.  போய்  அனுப்பி வச்சிட்டு வரலாம்.  வா மலரு” என்று அழைத்துக் கொண்டு காரில் அமர்த்தனர்.  ஜடமாக மலரும் அவர்களுடன்  வந்தாள்.

குறித்த நேரத்திற்கு  கார் ரெயில்வே ஸ்டேஷன் வந்து சேர்ந்தது.  அதற்கு முன்பாகவே முத்துவின் குடும்பத்தினர் அங்கு  வந்திருந்தனர்.

மலரால்  காரில் இருந்து இறங்கி ஒரு அடி கூட முன்னால் எடுத்து வைக்க முடியவில்லை.  “மாமாவை பார்த்து ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது.  அவருடைய பயணம் என்னால் தடைபடக் கூடாது” என்று மனதுக்குள் நினைத்தாள்.

ஆச்சியோ, “கடைசி நேரத்தில் எதாவது மாற்றம் நடக்காதா? முத்து மனசு மாறி மலர் கழுத்துல ஒரு மஞ்ச கயித்த கட்டிட்டு போகமாட்டானா?” என நினைத்தார்.

முத்து கிளம்ப வேண்டிய ட்ரெயின்  வந்தாகிவிட்டது.  கண்ணன் லக்கேஜை  எடுத்த டிரெயினில் வைத்தான். முத்து  அனைவரிடமும் விடைபெற்று  கொண்டு ட்ரெயின் வாசற்படியில் ஏறி நின்றான்.  மலர் தன்னை ஒருமுறை பார்க்க மாட்டாளா? என்று ஏங்கினான்.

மலரோ,  “முத்துவைப் பார்த்தாள்  விடை கொடுக்க  முடியாது” என நினைத்தாள். ஆனாலும் கண்கள் பார்க்க தூண்டியது.
மலரின் மௌனத்தில் இருந்த ஆயிரமாயிரம் காவியங்களை அவளின் விழிகளில் வழிந்தோடிய சூடான கண்ணீரில் அவனால் உணர முடிந்தது.  ஒரு தடவையாவது பார்த்துட்டு தான் கெளம்பனும். ஒருமுறை பார்க்க மாட்டாளா?  என அவனது மனம் சொல்லிக் கொண்டே இருக்க.

ட்ரெயின் மெல்ல மெல்ல நகரத் தொடங்கியது.  அந்த சத்தத்தைக் கேட்டு மலரின் கண்களில் கண்ணீரோடு மனம் ‘மாமா’ என்று சொல்லிட உதடுகள் துடிக்க.  அவனை ஏறிட்டாள்.
அங்கு,  மலரின்  வார்த்தைகள் ஏனோ   நெருப்பிலிடப்பட்டு  சாம்பலாய் போனது. மௌனத்தால்  தன் காதலை நிரப்பி கண்ணீர் துளிகளாக முத்துவிற்கு கொடுத்தாள். மனம் துடித்தது.

“மாமானு மட்டும் சொல்லிடாத மலர்.  சத்தியமா என்னால இங்க இருந்து கடந்து போக முடியாது.  உன் வார்த்தையை தாங்கற சக்தி எனக்கு இல்லடா தங்கம். சொல்லிடாத.  சொல்லிடாத”  என  முத்து மனதில் நினைத்துக் கொண்டான்.
முத்துவின் கண்ணீர் திரையிட்ட விழிகளும் மலரின் மௌனத்தையே தனக்கு பொக்கிஷமாக,  காதல் வரமாக தனது இலட்சிய பயணத்துடன் எடுத்துக் கொண்டு கண்ணீர் துளிகளை மட்டுமே அவளுக்கு காதல் பரிசாக கொடுக்க.

ட்ரெயின் கொஞ்சம் கொஞ்சமாக நகரத் தொடங்குகிறது.

மலரோ சற்றும் தாங்கிக் கொள்ள முடியாத வலியில் துடித்தாள்.   “நான்  உன்னை விருப்புறேன்” மாமா. “நீங்க ஆசையா கேட்டப்போலாம்  சொல்லல. இப்போ ஊரே கேட்கற மாதிரி கத்தி சொல்லனும் போல இருக்கு மாமா” என அவளின் மனம் உள்ளுக்குள்ளேயே காதல் போராட்டம் நடத்தியது. “அவள் உதடுகள் வலிமை இழந்து ‘மாமா’  என உச்சரிக்க தொடங்குகிறது.
முத்துவின்  உதடுகளோ,  “மலரின் மௌனம் பேசிய காதலை புரிந்து கொண்டதைப் போல மலர்.. மலர்” என  மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.  அவனோடு அவனது ஆசைகளும் அவளுடனான நினைவுகளும்  வெடித்து கண்களிலிருந்து கண்ணீர் துளிகளாக சிதற.

மாமா, “உங்களோட இந்த லட்சியப் பயணத்துக்கு  நானும் உனக்கு துணையா எப்போதும் கூடவே இருப்பேன்” என்று அவளின் விழிகள்  மௌன மொழி பேச.

அவளின்  விழிகள் பேசிய மௌன மொழியை புரிந்து கொண்டு, அந்த மௌனத்தையே தனது லட்சியத்திற்கு வழித்துணையாக எடுத்துக் கொண்டு கிளம்பினான். அந்த பயணத்தின் தொடக்கத்தில் இருவரது மௌனங்களும் கண்ணீர் துளிகளாய் சேர்ந்து லட்சியப் பாதையில் காதலோடு பயணிக்கத் தொடங்கின.
மலரின் விழிகள் முத்துவின் விழிகளோடு, அவன் தூரத்தில் சென்று மறையும் வரை போராடியது..

இவர்களது  இந்த பிரிவு தற்காலிகமானது தான். காதலில் பிரிவை  விட கொடுமையான வலியை  வேறு  எதுவும் கொடுத்துவிட முடியாது. இதுவும் ஒரு சுகமான வலி தான். இவர்களின் காதலை இன்னும் வலிமையாக்கிவிடும் ஒரு வரம் தான் இந்த சிறிய பிரிவு. அதுவரை…..

அவனுக்காக அவளும்
அவளுக்காக அவனும்
காத்திருப்பார்கள்….

வாய்மொழி பேசவில்லை
என்றாலும் அவர்களின்
மௌனமே காதலை
பேசிக்கொள்கிறது..
பேசும் மொழிகளை விட
பேசாத மௌனமே
காதலின் மொழியாகிறது… 

மொழிகள் ஊமையாகும்
      பொழுது மௌனமே
                  காதல் மொழி  பேசும்….

…… முற்றும் ….

எனது நாவலை தொடர்ந்து படித்து வரும் அன்பு உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் செல்லம்ஸ்.. 

அடுத்து சைப்பரான கதையோடு வருகிறேன் செல்லக்குட்டீஸ்.

Advertisement