Advertisement

பகுதி – 09

எதிர்பாராமல் விழுந்ததில் இருவருக்கும் சின்ன சின்ன சிராய்ப்புகள் ஏற்பட்டது.

மலருக்கு சட்டென்று கோபம் வந்தாலும் தவறு அவன் மேல் இல்லை என்பதை புரிந்து கொண்டவளாய் கைகளை நிலத்தில் ஊன்றி மெல்ல எழுந்து நின்றாள்.

“அவனும்,  அவளது திராட்சை போன்ற கருவிகளை பார்த்துக்கொண்டே எழுந்து நின்றான். மலர் திட்ட போகிறாள்” என்று எதிர்பார்த்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க.

ஜில்லு அவன் மீது கோவத்தோட தாவப் பார்த்தான்..

“மலரோ ஜில்லுவை தடுத்து விட்டு, ஏதோ சின்ன கண்ணு குட்டி விளையாட்டா உங்கள இடிச்சுட்டு போயிடுச்சு. ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க”  என்று அவள் பவ்யமாக கூறியதைக் கேட்ட ஆனந்திற்கு ஏனோ பார்த்த கணமே ஒரு ஈர்ப்பு வந்தது.

“ஏங்க ஊருக்குள்ள இப்பதான் முதல் முறையா வரேன்.  வரும்போதே கன்னுக்குட்டிய விட்டு துரத்துறிங்க.  இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லங்க.  ஏதோ உங்க ஊரு பத்தி விசாரிக்கும்போது ஆஹா ஓஹோன்னு சொன்னாங்க.  இங்க வந்தா ஆரம்பமே முட்டலும் மோதலுமா இல்ல இருக்கு” என்றான் ஆனந்த்.

“அதான் தெரியாம நடந்திருச்சுனு மன்னிப்பு கேட்கிறேன் இல்ல.  அப்புறம் என்னங்க” என்று மலர் அவனை பார்க்க.

“இப்படி எல்லாம் அப்பாவியா பார்த்தா மட்டும் செஞ்ச தப்பு சரின்னு ஆயிடாதுங்க. நீங்க சொல்ற மாதிரி  அது தெரியாம பண்ணிடுச்சு ஓகே விட்றலாம். தண்டனைய உங்களுக்கு கொடுக்கலாமா?” என்று தனது புருவங்களை உயர்த்தி  ஆனந்த் கேள்விக்குறியோடு அவளைப் பார்க்க.

“நீங்க இவ்வளவு சொல்லியும் கேட்காம வேணும்னே வம்பிழுத்து பாக்குறீங்க. இதுக்கு மேல நான் மன்னிப்பு கேட்கணும்னு அவசியம் இல்ல.  உங்களால ஆனத பார்த்துக்கோங்க” என்று  மலர் முன்னால் அடியெடுத்து வைக்க.

இங்க பாருங்க அப்படியெல்லாம் எனக்கு பதில் தெரியாம உங்கள அனுப்ப முடியாது. கொஞ்சம் நில்லுங்க  மேடம் என்றான் ஆனந்த்.

“நின்ற மலர் திரும்பிய வேகத்தில் இப்போ உங்களுக்கு என்னங்க பதில் தெரியணும்” என மலர் கேட்க.

நீங்க பாட்டுக்கு வந்தீங்க.  உங்க மாட்டை விட்டு இடிச்சி தள்ள  வச்சீங்க.  கீழ விழுந்துட்டு  நாங்களும் ஒன்னும் கேட்காம அப்படியே போய்டனுமா.

“அதுக்கு இப்ப என்ன என்ன பண்ண சொல்றீங்க.  வேணும்னா போய் கன்னு குட்டி மேல ஒரு கேஸ் குடுங்க.  அதானே இடிச்சுது.  கூட்டிட்டு போங்க” என்றாள் மலர்.

நான் ஊருக்கு புதுசுனு தான  இப்படியெல்லாம் கலாய்க்கிறீங்க.

“அப்படிலாம் இல்லங்க. நீங்க யார் வீட்டுக்கு இங்க வந்திருக்கிங்க தெரிஞ்சிக்கலாமா?” என மலர் கேட்க.

“நான் யார் வீட்டுக்கும் வர்லங்க. இந்த ஊருக்கு போஸ்ட் மாஸ்ட்டரா வந்திருக்கேன். என் பேரு ஆனந்த். இரண்டு டிகிரி முடிச்சேன். இன்னும் கல்யாணம் ஆகல. படிப்புக்கு ஏத்த வேல இல்லனாலும் சரி கெடச்ச வேலைக்கு வந்துடுவோம்னு பொட்டிய கட்டிக்கிட்டு  வந்துட்டேன். அம்மா அப்பா ஊர்லயே இருக்காங்க. எங்க சொந்த ஊர் கொளத்தூர். அங்க இருந்து இந்த ஊருக்கு தினமும் வந்து போக முடியாது. அதனால உங்க ஊரு தலைவர்கிட்ட பேசி இங்கயே தங்க ஏற்பாடு பண்ணியாச்சு” என படபடவென ஆனந்த்  பொரிந்து தள்ள.

ஏங்க நான் ஒரு கேள்வி தானங்க கேட்டேன்.  அதுக்கு இத்தனை பதிலா? என்றாள் மலர்.

“அடுத்தடுத்து நீங்க இத தான கேட்க போறிங்க. உங்களுக்கு எதுக்கு கஷ்டம். அதான் நானே சொல்லிட்டேன். ஏங்க நான் இவ்வளவு சொன்னேன் உங்க பேரு என்னனு இன்னும் சொல்லலையே”  என ஆனந்த் கேட்க.

ஆனாலும், “உங்களுக்கு கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான் போலங்க. இப்போதான பாத்திங்க. அஞ்சு நிமஷம் கூட இருக்காது. அதுக்குள்ள பேர கேட்பீகளோ” என்றாள்.

“நீங்க கேட்காமலே நான் என்ன பத்தி சொன்னேன்ல. நீங்க சொன்னா என்னவாம்” என்றான்.

“அப்படிலாம் சொல்ல முடியாது.. வந்த வேலய மட்டும் பாருங்க” என்று மலர் நகர.

“சரிங்க கருத்த கலையழகி” என்றான் ஆனந்த்.

“ஏய்! என்ன திமிரா” என மலர் முறைக்க.

கொஞ்சம் திமிர் பிடிச்சவன் தாங்க. ஆனா ரொம்ப நல்லவனு எங்க ஊர்ல சொல்லுவாங்க. உங்க பேர் தெரில. அதான் அப்படி சொன்னேன். உண்மைய தானங்க சொன்னேன். கருப்பா இருந்தாலும் கலையா இருங்கிங்கனு.

“இத தான காலங்காலமா சொல்றிங்க. வேற எதுவுமே மாத்தி சொல்ல கூட தோணாது. ஆட்டு மந்தைல வந்த கெடா மாதிரி. அடுத்தவன் சொன்னதை காப்பி அடிச்சி சொல்றது.  உன்கிட்ட எனக்கென்ன பேச்சி”  என மலர் நகர.

“என்னங்க கருப்பு தான் நிரந்தரமான அழகு ஆரோக்கியம்னு  ஆராய்ச்சி பண்ணியே சொல்லிட்டாங்க. நீங்களாம் கருப்பா இருக்கிங்கனு பெருமைபடுங்க. இயற்கை அழகுங்க. கருப்பா இருக்கவங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க. இதெல்லாம் படிச்சவங்களுக்கு தான் தெரியும்.. கிராமத்து பொண்ணுக்கு எங்க தெரியப்போவுது. போங்க போங்க” என்றான்.

ஹலோ!… “கிராமத்து பொண்ணுங்களுக்கு மட்டும் தெரியாதா.. நாங்களும் படிச்சவங்க தான். நானும்  டிகிரி முடிச்சிருக்கேன். எங்களுக்கும் தெரியும்” என்றாள்.

“ஓஓ… நீங்க படிச்சவங்களா. சரிங்க. அப்படியே கொஞ்சம் இந்த விலாசத்தை சொன்னா நான் போய்டுவேன் கலையழகி”  என தனது மொபைலில் இருக்கும் விலாசத்தை காட்டினான்.

“கடவுளே! என் பேரு மலர் என்று கூறிவிட்டு மொபைலைப் பார்த்தவள் அட நம்ம பூவாய வீட்டுக்கு முன்னால தான் இருக்கு இந்த வீடு” என்றாள்.

ஒரு சின்ன திருத்தம் மலர்.

“என்ன திருத்தம்” என மலர் அவனைப் பார்க்க.

“நம்ம பூவாயி இல்ல. உங்க ஊரு பூவாயி. ஹஹஹ”.  என்றான்.

“மலர் கடுப்பாகி அவனைப் பார்த்தவள் இப்படியே நேரா போய்ட்டு கிழக்கு பக்கமா திரும்புங்க கொஞ்ச தூரம் போனா அங்க ஒரு புளிய மரம் இருக்கும். அங்க முன்னாடி ஒரு ஓட்டு வீடு இருக்கும். அதான் இந்த வீடு” என்றாள் மலர்.

“ரொம்ப தேங்க்ஸ் மலர்” என்றான்.

“இந்த பேர் சொல்ற வேலைலாம் இங்க வேணாம். கிளம்பு என்றவள், ஹலோ! மிஸ்டர் வாய்க்கொழுப்பு கொஞ்சம் அதிகமா இருக்கு. ஊருக்குள்ள குறச்சி பேசுங்க. இல்லனா தைச்சிபுடுவாங்க” என்றாள்.

அத நான் பாத்துக்கறேன் மேடம். உங்க அறிவுரைக்கு ரொம்ப தேங்க்ஸ் மேடம் என்று தனது உடமைகளை எடுத்துக்கொண்டு அவளை திரும்பி பார்த்துக் கொண்டே போனான்..

“ரொம்ப வாய் நீளம் போல இவனுக்கு”, என நினைத்துக் கொண்டு மலர் மருதுவை ஓட்டிக் கொண்டு தோப்பை நோக்கி போனாள்.

“இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அன்னம் பழனிச் சாமியிடம் இது என்னங்க புதுக்கூத்தா இருக்கு.  அவன் யாரு என்னன்னு ஒன்னும் தெரியல. அவங்கிட்ட மணிக்கணக்காக நின்று பேசறாளே.  இது எங்கே போய் முடியுமோ. இதுக்கு முன்னாடி இந்த பையன ஊருக்குள்ள பாத்ததில்லையே”  எனக் கூற.

“உனக்கு ஊரு வம்புல மூக்க நொழச்சு அறுபட்டு வரதே பொழப்பா போச்சுலே.  வாய மூடிகிட்டு வேலைய மட்டும்  பாரு புள்ள” என பழனிச்சாமி முறைக்க.

“ஏதோ பொட்டபுள்ளே எவனோடயோ பேசறாளே.  நாள பின்ன ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுன்னா ராசைய்யா உசுரையே விட்டுடுவாரு இல்ல. அதுக்குத்தே சொன்னேன்.  எனக்கென்ன யாரோ  எக்கேடோ கெட்டுப் போட்டும்” என அன்னம்  தனது வேலையை பார்க்கத் தொடங்கினாள்.

“பழனிச்சாமி உன்னைய திருத்தவே முடியாதலே” என தலையில் அடித்துக்கொண்ட பருத்தி விதைத்தப்பில் மும்முரமானார்.

“மலர் ஒரு வழியாக தோட்டத்திற்கு வந்து சேர. அங்கு முத்து அவளுக்காக காத்திருந்தான். மலரை பார்த்தவுடன் இங்க வர  இவ்வளவு நேரமா உனக்கு”  என கேட்க.

“அதை ஏன் கேட்குறீங்க.  வர வழில எரும மாடு  மாதிரி ஒருத்தன் வந்தான். அவன நம்ம மருது  முட்டித் தள்ள அந்த எருமை வந்து என் மேல விழ.  நான் கீழே விழுந்து கையெல்லாம் காயம் ஆயிடுச்சு”  என கைகளில் இருந்த சிராய்ப்பை காட்டினாள்.

“நம்ம ஊர்ல உன்னை இடிக்க எவனுக்கு தைரியம் இருக்கு, என முத்து கோபத்துடன் கேட்க.

மலர் மாடு கன்றுகளை ஒரு இடத்தில் கட்டிக்கொண்டு, அவன் ஏதோ புதுசா எந்த ஊருக்கு போஸ்ட் மாஸ்டரா வந்திருக்கான் போல மாமா.

அது சரி. இங்க  இருக்கிறவனுக்கு இங்க வேலை இல்ல. ஆனா  வெளியூர்ல இருக்கவனுக்கு   எல்லாம்  நம்ம ஊர்ல வேலை கிடைக்குது.  ஏதோ தெரியாமல் உன் மேல  விழுந்திருப்பான்.  அதுக்கு நாலு வார்த்தை பேசிட்டு  வர இவ்வளவு நேரமா.

நான் எங்கே பேசினேன்.  அவன்தான்  ஆயிரம் வார்த்தை பேசி,  நான் கேட்காமலேயே அவன் மொத்த ஜாதகத்தையும் சொல்லி  என் பேரு வேற கேட்டு இம்சை பண்ணிட்டான். அவன சமாளிச்சிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிடுச்சு. ஆனா மாமா எனக்கு ஒரு சந்தேகம்.

“அதான் வந்துட்டியே.  அப்புறம் இன்னும் என்ன சந்தேகம் கேளு”,  என முத்து  கேட்க.

“ஊருக்கு புதுசா வந்து இப்பதான் முதல் முறையா பார்த்தான்.  அதுக்குள்ள ஏன் என்கிட்ட இம்புட்டு வாய் பேசறான்.  இப்படி கூட பேசுவாங்களா என்ன?” என கேட்டாள் மலர்.

நீ ஏன் மலர் இப்படி இருக்க. பேசுறதுக்கு வாய் இருந்தாலே போதும்.  இதுக்கு என்ன முதல் முறை இரண்டாவது முறைனு.  உன்ன பாத்த உடனே அவனுக்கு  பிடிச்சி  கூட இருக்கலாம்.   அதனால கூட பேச நினச்சிருப்பான்.  இதெல்லாம் மனசுல வெச்சுக்காத. விட்டுத்தள்ளு  மலர். நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச தான் உன்ன இங்க வர சொன்னேன்.

“முக்கியமான விஷயமா? சொல்லுங்க மாமா” என மலர் முத்துவின் அருகில் அமர.
நான் அடுத்து வர இன்டர்வியூக்கு படிக்கப் போறேன்.  உனக்கு தெரியுமில்ல மலர்.

அதான் ஏற்கனவே சொல்லிட்டீங்களே மாமா. தெரியும்.  அதுக்கு என்ன இப்போ.

அதான் நான் என்ன சொல்ல வரேங்கிறத  நீ தெளிவா புரிஞ்சிக்கிட்டா எனக்கு அதுவே போதும் மலர்.

“முதல்ல விஷயத்தை சொல்லுங்க மாமா”, என கேட்க.

என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும்   சேர்ந்து வாட்ஸ்ப்ல புதுசா ஒரு குரூப் ரெடி பண்ணி இருக்கோம்.  குரூப் ஸ்டடி வீடியோ கால் இதெல்லாம் அதுல பண்ற மாதிரி பிளான் பண்ணி இருக்கோம்.  வெற்றியோடு கடைசி படியை தொட்டு வந்தவங்க நாங்க அஞ்சு பேரும். ரெண்டு எக்ஸாம் முடிசிட்டோம். இன்னும் ஒரே ஒரு இன்டர்வியூ மட்டும் தான். நாங்க மட்டும் தான் இந்த குரூப்ல  கலந்துட்டு படிக்கறோம்..  இந்த முறை ஜெயிச்சே ஆகனும்னு  முடிவோட தீவிரமா இறங்கி இருக்கோம்.

“ரொம்ப நல்ல விஷயம் தான்.  இதுல என்ன இருக்கு மாமா.  தாராளமா பண்ணுங்க. நான் எப்போதும் உங்க கூட இருப்பேன்”  என்று மலர் கூற.

அதான் இப்போ பிரச்சனையே.  அதை சொல்லதான் உன்ன இங்க கூப்பிட்டேன்.

“இதுல என்ன மாமா உங்களுக்கு பிரச்சனை” என மலர் கேட்க.

“நாங்க படிக்க டைம் வெச்சிருக்கோம் மலர்.  ப்ராக்டிஸ் பண்ணனும்.  பகல் நேரத்துல ஃபுல்லா நான் படிக்கணும்.  நைட்டு ஏழு மணியிலிருந்து பத்து மணி வரைக்கும் ஒரு டீம்.  அந்த குரூப்ல முடிச்சுட்டு வந்து சாப்பிட்டுட்டு அடுத்து பத்தரை மணியிலிருந்து நைட்டு ஒரு மணி வரைக்கும் அப்படி என்ன டைம் செட் பண்ணி படிக்க முடிவு பண்ணி இருக்கோம். அதனால நைட்ல இனி உன் கூட பேச முடியாது மலர். ஒரு மணிக்கு மேல நீ முழிச்சிட்டு இருந்தா நாம பேசலாம். பகல் நேரத்தில பேசறேன் மலர்” என முத்து கூற..

“உங்க படிப்புக்காக நான் எந்த அளவு வேணாலும் விட்டுக்கொடுப்பேன் மாமா.  நீங்க நல்லா படிச்சி மேல வந்தா முதல்ல சந்தோஷப்படுற  ஆள் நானாத்தான் இருப்பேன். நேரத்துக்கு சாப்பிட்டு படிங்க.  ஆனா பகல் முழுக்கப் படிச்சிட்டு இரவு முழுக்க கண்விழிக்கனும்னா  ரொம்ப கஷ்டமா ஆச்சே மாமா. பேசாம  இரவு பத்து மணி வரைக்கும் படிங்க போதும்.  அதுக்கு மேல எதுக்கு”  என மலர் தடுமாற்றத்துடன் கேட்க.

“இப்படி எல்லாம் கஷ்டத்தை பார்த்தா படிக்க முடியாது. சாதிக்கணும்னா கொஞ்சம் இல்ல எவ்வளவு வேணாலும் கஷ்டப்பட்டு தான் ஆகணும்.  அதனால கொஞ்ச நாளைக்கு நாம பேசுறது குறைக்கலாம்னு நினைக்கிறேன். அதுக்காக உன் கிட்ட பேசாம இருக்க மாட்டேன்  மலர். நான் என்ன சொல்ல வரேன்னா நீ தெளிவா புரிஞ்சுக்குவனு நினைக்கிறேன்” என்று முத்து கூற.

ஏன் புரியாம.  நல்லாவே புரியுது மாமா. நான் இனி உன்கிட்ட பேசமாட்டேன் என்ன எதிர்பார்க்காதன்னு சொல்றீங்க.  அவ்வளவுதானே.  இது கூட புரியாத மக்கு இல்ல மாமா.

நான் சொல்ல வந்ததயே நீ தப்பா புரிஞ்சுகிட்ட மலரு.  நான் உன் கிட்ட பேசாம எங்க போவேன்.  கொஞ்ச நாளைக்கு கொஞ்சம் கம்மி பண்ணிக்கலாம்னு தான் சொல்றேன். அதை நீ தப்பா புரிஞ்சுகிட்டனு நினைக்கிறேன்.

Advertisement