Advertisement

பகுதி – 08

எழில் போகும் வழியில் மலருக்கு போன் பண்ணி வரச் சொன்னாள்.  மலரும் வீட்டில் பெற்றோரிடம் விஷயத்தை கூறிவிட்டு கிளம்ப தயாராக.

“மலரின் தாயோ அவளுக்கும் வேல இல்ல. உனக்கும் வேலை இல்ல. நாய்க்கும் வேலை இல்ல அதுக்கு நிக்கவும் நேரமில்லனு சொல்ற கணக்கா உங்க அக்கா சுத்திகிட்டு கெடக்கா.  அவளுக்கு வாயும் கையும் ஓயுதா பாரு”  எனத் திட்டத் தொடங்க.

மலர் தாயின் வசவுகளை கேட்டு கொண்டே ஒரு தட்டில் சாதத்தைப் போட்டு, தும்பைப்பூ கூட்டு சேர்த்து ஒரு பிடி பிடித்து விட்டு திட்டு வாங்கிக்கொண்டே கிளம்பினாள்.

“அப்போது முத்துவிடம் இருந்து மலருக்கு போன் வந்தது.  சொல்லுங்க மாமா”  என அவள்  கேட்க.

“நாம வழக்கமா சந்திக்கற இடத்துக்கு வா மலர்” என முத்து கூற.

‘நீங்க இழுத்த இழுப்புக்கெல்லாம் உங்க பின்னாடி வர நீங்க இன்னும் என் கழுத்துல தாலி கட்டுல மாமா. நெனப்பு நெஞ்சில இருக்கட்டும்” என்றாள்.

“நீ மட்டும் சம்மதம்னு சொன்னா இப்பவே தாலியோட வரேன்டி என் மாமன் மவளே” என்றான் முத்து.

“முன்னாடி கட்டிக்கொடுத்த எங்க அக்காவையே ஒழுங்கா பார்த்துக்க முடியல உங்க வீட்டு எஜமானால.  இதுல நான்  வேறயா?” என்றாள் மலர்.

“ஏன்?  இப்போ எங்க அண்ணிக்கு என்ன குறைச்சல் எங்க வீட்டில மகாராணி தான். என்ன குறை கண்டுபிடிச்சிங்க”  எனக் கேட்க.

“நல்லவேளை உங்க அக்கானு சொல்லாம எங்க அண்ணினு சொன்னீங்களே.  எங்க அக்கா ஒரு இலட்சியத்துக்காக முதல் முறையா எவ்வளவு கனவ மனசுல சுமந்துகிட்டு ஆயிரம் எதிர்பார்ப்புகளோடு போறா.  அவளுக்கு ஆதரவா உங்க அண்ணாவும்,  நீங்களும்  கூட போக வேண்டாமா?” என மலர் கேட்க.

“அண்ணனே போகாதப்போ நான் எப்படி” மலர் என முத்து தடுமாற.

“சரி விடுங்க. நான் எதுவும் சொல்ல விரும்பல. நான் அக்கா கிட்ட தான் போறேன். உங்களுக்கு விருப்பம் இருந்தா வாங்க”  எனக் கூறிவிட்டு மலர் அவன் பதிலை எதிர்பார்க்காமல் போனை துண்டித்துவிட்டு எழிலிடம் கிளம்பி வந்து சேரவும் முத்துவும் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.

“எழில் ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்திருந்தாள்.  இருவரையும் பார்த்து எழிலின் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.  எழிலின் வார்த்தைக்கு மதிப்பளித்து பத்து பேர் மட்டுமே அங்கு வந்திருந்தனர். இவங்களாவது நம்ம வார்த்தைய கேட்டு வந்தாங்களே” என்று  ஆறுதல் அளித்தது. முத்து அங்கு வந்தது மலருக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பழனிசாமியும், அன்னமும் வந்தது எழிலுக்கு ஆச்சரியமாகவும் எல்லையில்லா ஆனந்தமாகவும் இருந்தது.

“என்ன புள்ள ஏதோ பேசலாம்னு வர சொல்லிபுட்டு கண்ணு முழி பிதுங்க பார்த்துகிட்டே நிக்கே.  உனக்கான்டிதே மாமா இங்கிட்டு வந்துச்சு.  சின்ன புள்ள மனசு உடைஞ்சுடிமேனுதே.  என்ன மாமா நான் சொல்றது”  என அன்னம் பழனிசாமியைப்  பார்க்க.

“அட ஆமா தாயி.  பருத்தி வெதப்பு  பாதியில நிக்குது வேறலே. வெறசா போகணும். என்ன சொல்றயோ   சொன்னா கிளம்புவோம்லே” என பழனிசாமி  கூறிக்கொண்டு மரத்தடி நிழலுக்கு தோதான ஒரு இடத்தில் அமர. வந்திருந்தவர்களும் ஆங்காங்கே நிழலில் அமர்ந்தனர்.

எழில் உற்சாகமாக தனது பேச்சைத் தொடங்கினாள்.  சிறுதொழில் எப்படி செய்யணும். அதுக்கு என்ன வேணும். தொழில் தொடங்க முதலீடு எப்படி வங்கியில் மூலம் பெற முடியும் என்பது பற்றியும் பெண்கள் தொழில் முனைவோர் சங்கம் பற்றியும் விவரமாக எடுத்துக் கூறினாள். முத்துவும் தனக்கு தெரிந்த சில விஷயங்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டான்.

“இதையெல்லாம் கேட்ட அன்னத்திற்கு மனதிற்குள் ஒரு வல்லூறு உயர உயர பறந்து கொண்டிருந்தது.  இதெல்லாம் கேட்க நல்லாதே புள்ள  இருக்கு.  ஆனா பொம்பளைங்க எப்படி இதெல்லாம் செய்ய முடியும்” என்று அன்னம் கேட்க.

“ஏய்!  அன்னம் அதான் அந்த புள்ள வெவரமா சொல்லுதில்ல.  அப்புறம் என்னாலே குறுக்கால கேள்வி கேட்கே”   என பூவாயி கூற.

“தே, பூவாயி நீ செத்த சும்மா இரு புள்ள.  யாரு என்ன சொன்னாலும் கதை கேட்க மாதிரி காதுல கேட்காத.  அதுல என்னா இருக்குன்னு யோசிக்கணும்லே கூறுகெட்டவளே”  என அன்னம் கூற.

“அந்த புள்ள நல்லதுதானே சொல்லுது. கேட்டா கேளு இல்லாட்டி வாய மூடு.  பெரிய இவலாட்டம்  பேசுற”  என பூவாயி அன்னத்தை அடக்க.

“இந்தே வார்த்தையை அதிகமாகிவிட்ட நாக்க இழுத்து வச்சு அறுத்துபுடுவேன். அப்புறம்  வாளக்கருவாட்டு கண்டம்  மாதிரி தான்  நாக்கு இல்லாம  அறுத்த இடம் சுருண்டு  கெடக்கும்  பார்த்துக்கோ”  என அன்னம் கூற.

“ஏய்!  எங்க போனாலும் வம்பு இழுத்துக்கிட்டே நிக்காதடி.  அந்த வாய மூடு.  அந்த புள்ள ஏதோ சொல்றது ஏதாவது உப்பு மொளவாய்க்கு ஆகுமானு காது கொடுத்து கேளுடி”,  என பழனிசாமி அன்னத்தை அடக்க.

எழில் தன்னால் முடிந்தவரை சிறு தொழில் பற்றிய விஷயங்களை எடுத்துக் கூறினாள். ஆனால் வந்தவர்கள் யாரும் இவள் கருத்தை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

“இதெல்லாம் நடக்கிற கதையா புள்ள. பொம்பளைங்க தொழில் செஞ்சு அத வித்து லாபம் பாக்கறது குதிரைக்கு கொம்பு முளைக்கிற மாதிரிதே.  கதையில் மட்டுந்தேன் இதெல்லாம் நடக்கும்.  பேங்க்குல கடன் வாங்கச் சொல்றதே தப்பு.  பொம்பளை வாசற்படி தான்டினாவே  தப்புனு நெனக்கிறவன் நான். இதுல கடன் வாங்கி தொழில் வேற செய்யச் சொல்லி வீட்டுல இருக்கறவள  உசுப்பேத்தி விட்டு கெடக்க. கண்ணனுக்கு ஒத்தாசையாக காட்டுல இருக்க வேலையச் செய்யுலே” என பழனிசாமி தன் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்ப.

“ஹீக்கும். பொம்பளைக ஒன்னு பண்ணா உனக்கு பொறுக்காதே”  என அன்னம் முறைத்துக் கொண்டு அவன் பின்னாலேயே போக. மற்றவர்களும் கலைந்து செல்ல.
பூவாயி மட்டும் இவளிடம் மேலும் தகவல்களை கேட்டுக் கொண்டு இருந்தாள்.

“எனக்கு மூணு பொட்ட புள்ள தாயி.  அதுகல  கரசேத்தனும். காணி நிலத்தை வச்சிகிட்டு பொழப்பு நடத்துறதே பெருசா இருக்கு. ரெண்டு பொட்ட புள்ளைக பத்தாப்பு  தான் படிச்சதுக. அதுகளுக்கு அதுக்கு மேல படிப்பு ஏறல. பெரியவ செண்பகம் மட்டும் விடாப்பிடியா அவங்க அப்பன் கிட்ட மல்லுக்கட்டி ஏதோ பெரிய படிப்பு படிக்கிறேன்னு அது  என்னமோ பிஏவா அதைய படிச்சுட்டு ஏதேதோ புத்தகமெல்லாம் கேக்கிறா. என்னமோ பரிச்சி எல்லாம் எழுதனுங்கறா. ஒரு
எழவும் புரியல. இதுக்கே அவங்கப்பன் கிட்டே தெனம் தெனம்   மல்லுக்கட்டுகிட்டு கெடக்கேன்.  அவளுக்கு ஏதாவது பண்ண முடியுமானு சொன்னா உங்களுக்கு புண்ணியமா போகும்” என்றாள்  பூவாயி.

“நான் உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கிட்ட பேசி அவங்களுக்கு என்ன பண்ணலாம்னு முடிவு பண்றேன்ம்மா” என்று எழில் அன்பாக கூற.

“பூவாயி அவளது கன்னங்களை நீவி  நெட்டி  முறித்து மகிழ்ச்சி பொங்க நீ நல்லா இருப்ப தாயி”  என  மகிழ்ச்சியோடு விடை பெற்று கிளம்பினாள்.

“அண்ணி பரவால்ல ஒருத்தராவது உங்க பேச்சுக்கு மதிப்பு கொடுத்தாங்களே. போகப்போக எல்லாருக்கும் புரியும் பாருங்க. உங்க அருமை ஒரு நாளைக்கு இந்த ஊருக்கே தெரியும். நீங்க நினைச்சது நிச்சயமா நடக்கும் அண்ணி” என முத்து எழிலை  உற்சாகப்படுத்த மலரும் அதற்கு ஆதரவு கொடுப்பது  போல தனது அக்காவை பாராட்டு மழையில் நனைத்தாள்.

“இது என்னோட முதல் முயற்சிதான்.  நிச்சயமா நான் நினைச்சத சாதிப்பேன்.  நான் பருத்தி காட்டுக்கு போறேன். உங்க அண்ணா நேத்தே வரலன்னு சொல்லிட்டு போனாரு.  நீ கிளம்பு மலரு”  என கூற.

“நானும் கொஞ்சம் படிக்க வேண்டி இருக்கு அண்ணி” என ஓரக்கண்ணால் மலரை பார்க்க. முத்துவின் குறும்பு பார்வையில் அவன் காதல் அரும்புவது மலருக்கு புரிந்துவிட்டது போல.  நாணத்தால்  அவள் விழிகள் நிலத்தை நோக்க.  “ரெண்டு பேரும் பார்த்தது போதும் நீங்க முதல்ல கிளம்புங்க. நான் கிளம்புறேன்” என எழில் அந்த இடத்தை விட்டு நகர.

“முத்து மலரை வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு அழைக்க. ஆடு மாடுகள் எல்லாம் தண்ணி காட்டாம கிடக்கு. நான் போயிட்டு அதுகள  ஓட்டிட்டு வரேன் மாமா. தோப்புல ஒரு பக்கம் அதுகள கட்டிட்டா அப்புறம் நாம படிக்கலாம்” என கண்சிமிட்ட .

“சரி மலர்.  நான் அங்க உனக்காக காத்துட்டு இருப்பேன்.  சீக்கிரம் வா”  என முத்து கிளம்ப.  மலரும் கிளம்பினாள்.

“எழில் ஒருவழியாக பருத்திக் காட்டுக்கு வந்து சேர.  கண்ணன் தலையில் முண்டாசு கட்டி கொண்டு ஆட்களோடு பருத்தி  வெதைப்பில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான்.
கண்ணனின் அப்பா மணிவண்ணன், “எழிலைப்  பார்த்துவிட்டு கண்ணா உன் பொஞ்சாதி வருது பாரு” என கூற.

கண்ணன் திரும்பிப்பார்க்க.  எழிலின் நடையில்  அவளின் கொடி இடை அசைந்தாட சற்று சொக்கித்தான் போனான். அந்த உச்சி வெயிலிலும் அவன் மனம் குளிர்ந்து போனது. “ என் பொண்டாட்டி அழகுதான். என்ன ஒய்யாரமாய் நடந்து வரா”,  என மனதில் நினைத்துக்கொண்டே, என்ன மகாராணி இந்த பக்கம் என்றான்.

“மகாராஜா அவர்களை காணமேன்னு  கண்ணு ரெண்டும் தேடுச்சி.  அதான் வந்தேன்” என்று  உதட்டை சுளித்துக் பழிப்பு காட்ட.

“அதான் பாத்துட்ட இல்ல. அப்புறம் வயல்ல இறங்காம  வரப்புலயே  நின்னுட்டு இருந்தா  எப்படி” என்றான் கண்ணன்.

“வயல்ல இறங்க சொன்னா போதுமா?  ஒரு கையைப் பிடிச்சி  இறக்கி விட்டா என்னவாம்”,  என எழில் கேட்டு கண்ணனிடம்  தன் கரங்களை  நீட்ட.

“இதுக்கு தானே ஆசைப்பட்டேன் என் தங்கமே” என கண்ணன் அவளது கரங்களைப் பிடித்து வயலில் மெல்ல பிறகு இறக்கி விட்டான்.

“ஹிக்கும்… இன்னைக்கு வேல நடந்தா மாதிரி தான்” என மணிவண்ணன் மனதில் முணகிக் கொண்டார்.

எழிலின் கரங்களைப் பிடித்தவன் அப்படியே பிடித்துக் கொண்டே மெய்மறந்து நிற்க. மனம் முழுக்க மேகத்திற்கு ஆகாயத்தை தொட்டுக் கொண்டு சிறகில்லாமலே பறந்து கொண்டு இருக்க..

எழிலோ தன் கரங்களை அவன் கரங்களுக்கு அடைக்கலமாக கொடுத்து தன் விழகளால் தன்னவனை சிறைப்பிடித்து இதயம் படபடக்க  ஏக்கத்தோடு பார்க்க… தங்களை சுற்றி உள்ள சூழலையும் மறந்து  நின்றனர்..

செவ்வரளி தோட்டத்தில
உன்ன நெனச்சு தேடிக்கிட்டு
பாடுதய்யா இந்த மனசு
அக்கம் பக்கம் யாருமில்லே
ஆளுங்க அரவமில்ல சுத்தும்
முத்தும் பாக்கயிலே
துடிப்பும் அடங்குதில்ல….

என பாடலின் ஒலி எங்கிருந்தோ இவர்களின் ஏக்கத்திற்கு தாளம் போட்டது…

“அடேய்! கண்ணா.. கொஞ்சம் வேலய முடிச்சிட்டு பாக்கலாம்லே”  என மணிவண்ணன் கூற..

“அ. அப்.. அப்பா… ம்ம்ம்ம்.. இதோ”,  என இருவரும் குறுநகையோடு விலக..வேலை தீவிரமாக நடைபெறத் தொடங்கியது..

இங்கு பனிமலர் வீட்டிற்கு பக்கமாக வர.. வீட்டின் அருகே ஒரே கூட்டமாக இருந்தது.
மலரின் மனதிற்குள் ஒரு சின்ன பயம்  ஏற்பட.. பதட்டத்தோடு கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னால் போக..

பக்கத்து காட்டு கந்தசாமியின் மனைவி மரிக்கொழுந்து தான் ராசப்பனை வார்த்தையால் வசவு பாடிக்  கொண்டு இருந்தாள்.. ஆத்தே இந்த கொடுமைய எத்தன நாளைக்குதே பொறுத்து போறதுலே. பணம் பெத்த கருவாடு பானைக்குள்ள.. சாவட்ட கருவாடு மேவட்டம் போடுதாம்ல. இந்த கன்னுகுட்டியும் நாயையும் வச்சிட்டு இவிக பண்ற கூத்து நாட்டுல எங்கயுமே நடக்காதுலே.

“இந்தே மரிக்கொழுந்து சும்மா வார்த்தைய விடாதலே. ஏதோ தப்பு நடந்து போயிடுச்சு. தெரியாம எங்கவூட்டு நாயி உங்க வூட்டு கோழிய புடிச்சிட்டு வந்துடுச்சி. அதுக்கு என்ன தெண்டமோ அத சொல்லி. கொடுக்கறேங்கறேன். அப்புறம் என்ன இங்குட்டு வந்து ஊர கூட்டி கூப்பாடு போடுறவ” என ராசப்பன் பதிலுக்கு குரல் கொடுக்க.

“ஏய்யா. உன் நாயி  வெவரம் தெரியாமத்தே வெட கோழியா பிடிச்சிட்டு திரியுதாம்லே. உன் நாயிக்கு இருக்க வெவரம் உனக்குதாம்லே இல்ல. முதல்ல என் கோழிக்கு பணத்த எடுத்துவைலே.. வெறும் வாய்சவடால் விட்டு நேரத்த வெறயமாக்காதலே. எனக்கு எம்புட்டு வேல கெடக்கு” என  கத்தினாள் மரிக்கொழுந்து..

இந்தா ஆத்தா.  எங்க நாய் தான் உங்க கோழிய பிடிச்சதுனு நாங்க எப்படி நம்பறது. ஊருல வேற நாயே இல்லையா? என மலர் ஆரம்பிக்க.

வாடியம்மா. உன் நாயி திருடுனது ஒங்க அப்பனாத்தாலுக்கே தெரியும்.. ஒனக்கு வேற தனியா படம் புடிச்சு காட்டனுமா. திருட்டு நாயிக்கு வக்காலத்து வாங்க வரிசையில வரிஞ்சி கட்டிட்டி வாரியலோ..

“மலரு நீ விடும்மா” என்று கூறிய ராசப்பன் அந்த கோழிக்கான பணத்தை கொடுத்து மரிக்கொழுந்தை அனுப்பி விட்டு அருகில் சுற்றும் முற்றும் தேட ஒரு கட்டை கெடக்க அதை கையில் எடுத்தார்.. மலர் அப்பா வேண்டாம் பா ஜில்லுவ அடிக்காதிங்க. பாவம்பா என்று தடுத்தும் கேளாமல் கட்டையை ஜில்லுவை நோக்கி ஓங்க..

“அடுத்த நொடி அங்கிருந்த ஜில்லு உசாராகி மின்னலென ஓடி மறைந்தான்… பாரு கெரகம். ஊரு வம்ப வாங்கிட்டு வந்து என்னை உசுர வாங்குது. வரட்டும் இன்னைக்கு.. கஞ்சி தண்ணீ எதுவும் ஊத்தக் கூடாது. கொன்னுபுடுறேன்”  என கையில் இருந்த கட்டையை வீசிவிட்டு வீட்டிற்குள் போனார்.

மலர் மாட்டிற்கு சாடியில் தவிடு புண்ணாக்கு போட்டு  தண்ணி காட்ட..  ராசப்பனும் வந்தார். மருது தண்ணீர் குடிக்காமல் முரண்டு பிடிக்க இருந்த கோவத்தில் ராசப்பன் மருதுவை ரெண்டு வெளுத்து விட மலர் துடித்து போய் அவர் கையில் இருந்த குச்சியை பிடிங்கி தூர வீசினாள்..  மருது வலி தாங்காமல் நெளிந்து கொண்டு அவரைப் பார்த்தான்.. “நான் இதுகள தோப்புல கட்டிட்டு வரேன்” என கூறிவிட்டு மலர் மாடுகளை ஓட்டிக் கொண்டு போக.. வீட்டின் பின்னால் மறைந்திருந்த ஜில்லுவும் மலருடன் ஓடி வந்தான்.. மலர் வரும் வழியில் மருதுவை விட்டு விட அவன் சுதந்திரமாக துள்ளிக் குதித்து முன்னாள் நடை போட..

அப்போது அங்கு சற்று தூரத்தில் ஒரு புதிய நபர் ஒருவர் கையில் சூட்கேஸ் தோளில் பையை மாட்டிக்கொண்டு வர.. போன வேகத்தில் மருது அவரை  மலரின் பக்கமாக முட்டித் தள்ள..

அந்த புதிய நபர் மருது தள்ளிய வேகத்தில்  அவர் மலரின் மேல் தடுக்கிவிழ.. அவனது கைகளில் இருந்து பெட்டியும், தோளில் இருந்த பையும் ஒருபுறம் விழ.. மலரோ விலக முயற்சி செய்ய. அவனோ மலரின் மெல்லிய இடையைத் தாங்கி அவளையும் சேர்த்து கீழே தள்ளி விழ..

புதிய திருப்பங்கள் இனிதாக அந்த நொடியே ஆரம்பமானது..

தொடரும்…

Advertisement