Advertisement

பகுதி – 08

மனமெனும் படகு காதல் என்னும் கடலில் ஊடலெனும் அலை அடித்து தத்தளித்துக் கொண்டிருந்தது. கண்ணனின் சிந்தையில் எழிலின் உருவம் நிழலாட. ஏக்கப் பெருமூச்சி விட்டு உடலின் அனலைத் தணித்துக் கொள்ள பானையில் இருந்த நீரை எடுத்து தொண்டையை நனைத்தான். சில்லென அடிவயிற்றைத் தொட்டது.

“அருகில் திரும்பி பார்த்தான். முத்து சற்றே கண்ணயர்ந்து இருக்க. அவனருகில் இருந்த செல்போன் கண்ணுக்குப் பட்டது. அப்படி என்னதான் விடிய விடிய அதுல அனுப்பி இருப்பான்” என அடி மனதிற்குள் தோன்ற. எடுத்து பார்க்கலாமா? இல்ல இல்ல வேண்டாமென மனம் நினைத்தாலும் நம்ம தம்பி தானே. “இரவு முழுக்க அப்படி என்ன தான் பேசுவாங்க பார்த்துடுவோம். கொஞ்சமா இருந்தா படிக்கலாம்.. கொஞ்சலா இருந்தா வச்சிடலாம்” என்ற முடிவோடு கண்ணன் முத்துவின் செல்போனை எடுத்து மலருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை ஆர்வத்தோடு திறந்து பார்க்க.

“அதில் கவிதை வரிகளே அதிகமாக இடம்பெற்றிருந்தது. காதல் மொத்தத்தையும் கவிதையாகவே கொட்டி தீர்த்து இருந்தனர். ஒரு இடத்திலாவது ஏதேனும் கொஞ்சல்ஸ் இருக்குமோ”, என ஆர்வத்தோடு கண்ணன் தேட. அதில் காதலின் உணர்வுகள் மட்டுமே நிரம்பி இருந்தது. “அடப்பாவிகளா! இதையா விடிய விடிய அனுப்பி தொலச்சிகிட்டாக. எரும மாடுக” என்று கண்ணன் செல்போனை முத்துவின் அருகில் வீச.

“முத்து மெல்ல கண்விழித்து பார்க்க. எதுக்குடா என் செல்போனை எடுத்த” என கண்ணனை பார்த்து கேட்க.

வெடிய வெடிய அப்படி என்ன கருமத்தை பேசுவீங்கன்னு  பாக்க தான் டா எடுத்தேன்.

ஏன்டா! உனக்கு எல்லாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?” என முத்து கேட்க.

“இதுல வெட்கப்பட என்னடா இருக்கு. நீதான் அதுல ஒண்ணுமே பேசலையேடா. ஏன்டா வெவஸ்த கெட்டவனே இப்படி வெடிய வெடிய உட்கார்ந்து கவிதையா யோசிக்கிறதுக்கு போன் போட்டு ரெண்டு வார்த்தை பேசி இருக்கலாமேடா. எதுக்கு இந்த வெட்டி வேல. பெரிய கவிஞர் கண்ணதாசன்னு நெனப்பு” என கண்ணன் முறைக்க.

அடுத்தவங்களோட சொந்த விஷயத்தை எட்டிப் பாக்குறதே தப்பு. இதுல எகத்தாளமா பேசுற. நான் கவிதை எழுதுகிறேன் எழுதாம போறேன். அது என் இஷ்டம். உன்னை யாருடா அதை பாக்க சொன்னாங்க.

“அட லூசு பயலே. இத போய் உட்கார்ந்து விடிய விடிய ஏன்டா டைப் பண்ற. இதுக்கு நாலு வார்த்தை போன் போட்டு அந்த புள்ளைகிட்ட பேசி இருக்கலாமேன்னு நல்லது தானே சொல்றேன். ஒவ்வொரு கவிதையா உட்கார்ந்து யோசிக்கவே பாதி நேரம் போயிடும். இது ஒரு பொழப்பா டா. பெரிய தமிழ் புலவர்கள்னு நெனைப்பு ரெண்டு பேருக்கும். அப்படி பேசியும் விடியற வரைக்கும் ஒரு முத்தம் கூட கொடுக்கல. இதுக்கு பேரு லவ்வாடா” என கண்ணன் முத்துவை எகத்தாளமாய் பார்க்க.

“இதனால தான் டா நீ இன்னும் உருப்படாமலிருக்க. கண்ணா லவ் பண்ணா இப்படியெல்லாம் தான் பண்ணனும்னு வரைமுறை இருக்கா. முத்தம் கொடுத்தா தான் காதல்னு யாருடா சொன்னாங்க. அதையும் தான்டி பல விஷயங்கள் இருக்கு. அன்பு, பாசம் அது எல்லாம் அந்த முத்தத்தை விட பெருசு. இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது கண்ணா. ஒருநாள் நீயா புரிஞ்சிட்டு என்கிட்ட சொல்லுவடா. அண்ணி நிச்சயமா உனக்கு புரிய வைப்பாங்க. போடா இனிமே என் செல்ல எடுத்த அவ்வளவு தான் சொல்லிட்டேன். அப்புறம் அண்ணன்ங்கிற மரியாதை எல்லாம் போயிடும்” என முத்து கண்ணனை திட்ட.

“என்னமோ இவன் வரிவரியா வக்கணையா எழுதினத நான் படிச்ச மாதிரி சிலுத்துகிற. ஒண்ணுமே இல்ல. வெறும் கவிதையா எழுதி தள்ளிட்டு இதுக்கு ஏன்டா இந்த பில்டப்பு. நீ மொதல்ல திருந்து டா. காதல்னா என்னன்னு தெரிஞ்சிட்டு வா. அப்புறம் எனக்கு டியூஷன் எடு. போடா போய் படு” என கண்ணன் கூற.

உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது கண்ணா. நீயா தெரிஞ்சுக்கோ என்றவன் முத்து தன் செல்போனை எடுத்து தனது கைரேகை பதித்து லாக் போட்டுக் கொண்டான்.

இப்ப எதுக்கு டா லாக் போடுற. இதுக்கு மேல நீ யா கொடுத்தாலும் உங்க “மொக்கைய  படிக்க நான் தயாரா இல்ல. இதுக்கு என் பொண்டாட்டி எவ்வளவோ பரவாயில்ல. நான் எவ்வளவு கோபப்பட்டாலும் என்ன கொஞ்சிட்டு போறா. நீ சொன்னது சரிதான் கண்ணானு புரிஞ்சுகிட்டு என்கிட்ட வந்து  ஒரு நாள் சொல்லப் போற பாரு” என்றான் கண்ணன்.

“சரிடா அதையும் பார்க்கலாம். யார் புரிஞ்சுகிட்டு யார் கிட்ட சொல்றோம்னு பார்க்கலாம்” என்று இருவரும் படுத்துக்கொண்டனர்.

“அதிகாலை செஞ்சூரியன் பிரகாசிக்க பொழுது விடிந்து விட்டது” என சிவப்பு கொண்டை வைத்த வீரன் விரைப்பாய் கூரை மேல் நின்று ஊரை கூட்டி தன் கொக்கரக்கோவெனும் குரல் ஒலியால் அறிவித்தது.

“இப்பதானே படுத்தோம். இன்னும் முழுசா தூங்கவே இல்லையே. அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா?” என கண்ணன் வருத்தப்பட்டான்.

முத்து வேகமாக எழுந்து முகத்தை கழுவி தனது செயல்களில் ஈடுபட்டான்.

இதைப்பார்த்த கண்ணன், “ஏன்டா விடிய விடிய நீயும் தூங்காம என்னையும் தூங்க விடாம பண்ணிட்டு இப்போ ஒன்னுமே நடக்காத மாதிரி எப்படிடா உன்னால இருக்க முடியுது. உன்ன ஆச்சி கிட்ட சொல்லி கவனிக்க சொல்றேன்டா” என்று கண்ணன் வேகமாக வெளியில் போனான்.

கண்ணன் முகத்தை கழுவிக் கொண்டு வயல் வெளிக்கு சென்றான். பயிர்களின் பசுமையை ரசித்து  மங்களகரமான பொன் மஞ்சள் வயலுக்கு நீரை திருப்பி விட்டு வீட்டிற்கு வந்தான். வந்தவனின் கண்கள் எழிலைத் தேடியது.

எழில் குளித்து முடித்து தனது அறையில் தான் கொண்டு வந்த புத்தகங்களை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தாள். அவளைத் தேடித் தனது அறைக்கு போனான் கண்ணன்.

“என்ன பண்ற” என கண்ணன் கேட்டான்.

பார்த்தா தெரியலையா? புத்தகத்தை அடுக்கி வச்சிக்கிட்டு இருக்கேன்.

“இப்போ இது ரொம்ப முக்கியமான வேலையா? காலையில பொம்பள ஒரு சட்டி பானை கழுவலாம். வீட்டில சமைக்கலாம். எத்தனை வேலை கிடைக்கு. இப்போ இந்த வேலையை அவசரமா செய்யற” என கேட்டான்.

“இதெல்லாம் முக்கியமான புத்தகங்கள். ரொம்ப பாதுகாப்பா வச்சுக்கணும். அதான் இப்பவே செய்யறேன். அடுக்கி முடிச்சுட்டு போயி சமைக்கிறேன். அதை நீங்க சொல்ல தேவை இல்லை”  என்று எழில் சொல்லிக் கொண்டே புத்தகங்களை அடுக்க. அதிலிருந்து ஒரு புக் கீழே விழுந்தது.

“அது ஒரு நாவல் ‘இதயமே உயிரே நீ தானடி’ எழுத்தாளர்  வாணி அரவிந்த்” என்று போடப்பட்டிருந்தது.

அதைப்பார்த்த கண்ணன், “ஏன்டி இது உனக்கு முக்கியமான புத்தகமா. கத புத்தகங்கள எடுத்து வச்சிக்கிட்டு வீட்டு வேல செய்யாம ஏமாத்திட்டு இருக்க. இது ஒரு நொண்டி சாக்கு வேற” என்றான்.

“எல்லா முக்கியமான புக்கு தான்.  கதை புத்தகம் தான். அவங்களோட கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப நல்லா இருக்கும் வேணும்னா படிச்சு பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும்” என்றாள்.

“அதெல்லாம் நீயே படிச்சுக்கோ. அதுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்ல. அம்மா தனியா வேலை செய்றாங்க. நீ கூட வந்து செய் என்றான். நீ இனி இந்த வீட்டு மருமக. உனக்குன்னு சில பொறுப்புகள் இருக்கு. அத மனசுல வெச்சுக்கோ எழில்” என்றான்.

எழில் எதுவும் பேசாமல் மௌனமாக தனது வேலையை செய்ய.

“நான் சொன்னது ஏதாவது காதுல விழுந்துச்சா. ஒரு வேளை காது கேட்கவே இல்லையா? செவிடா” என்றான்.

அவனை திரும்பி முறைத்துப் பார்த்தாள். “என்ன செவிடுனு நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியும். உங்க பாராட்டு பட்டத்துக்கு ரொம்ப நன்றி. நீங்க உங்க வேலைய பாருங்க. நான் என் வேலையை பாக்குறேன். தேவை இல்லாத பேச்சு வேண்டாம்” என்றாள்.

“நேத்து அப்படியே கொஞ்சினா. இப்போ வெட்டி வீசறா. இவளை புரிஞ்சுக்கவே முடியலையே” என யோசித்துக்கொண்டே கண்ணன் வெளியேறினான்.

எழில் அத்தையுடன் சேர்ந்த சமையல் வேலைகளை முடித்து குளித்துவிட்டு இளம்பச்சை நிறத்தில் பூ வேலைப்பாடுகளோடு செய்த சேலையை கட்டிக்கொண்டு தலையை லேசாக பின்னலிட்ட பாதியில் ஒரு பூப்போன்ற ஜடவிலை போட்டு இருக்கினாள்.

அதற்கேற்ப காதுகளில் இளம்பச்சை நிறத்தில் முத்துக்கள் பதித்த தோடும், முத்து மாலையும், முத்துக்கள் பதித்த வளையலும் போட்டுக்கொண்டாள். தலையில் மல்லிகைச் சரத்தை எடுத்து தொங்கவிட்டாள். மீண்டும் வந்த கண்ணன் அவளைப் பார்த்தான்.

“இவ்வளவு அழகா இருக்காளே என் கருப்பழகி” என மனதில் நினைத்துக் கொண்டு அவளையே பார்த்தான் கண்ணன்.

அவனது பார்வையில் உள்ள காதலை  உணர்ந்த எழில் தன் பார்வையை ஓரமாக விலக்கிக் கொண்டு முகம் சிவந்தாள்.

“அவளின் கன்னக் கதுப்புகளின் சிவப்பைப் பார்த்து அவன் மனம் மெல்ல கனிந்தது. பெண்ணின் வெட்கத்தில் கூட இத்தனை நளினமா? இதுதான் பெண்மையின் பொலிவா? இப்படி என் மனதை ஈர்க்கிறது” என்று நினைத்தான்.

என்ன என்பதை போல எழில் தன்  புருவத்தை உயர்த்த.

“ஒன்னும் இல்ல என்பது போல அவன் தலையாட்டினான். மல்லிகைப் பூவின் வாசம் அவனுக்கு மிகவும் பிடித்தது. எழிலின் அருகில் சென்ற கண்ணன், இப்போ என்ன மேடம் அவசரமா கிளம்பிட்டீங்க. அதுவும் இந்த நேரத்துக்கு” என்று சொல்லிக் கொண்டே அவளது விழிகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க. அதில் அவனுக்கு ஒருவித ஈர்ப்பு தெரிந்தது.

“நாம சொல்றதை யாராவது காது கொடுத்து கேட்டா தானே நாம எங்க போறோம்னு தெரியும்” என எழில் புத்தகங்களை நகர்த்திக் கொண்டு இருக்க.

“கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு. இப்போ இதுக்கு ஒன்னும் அவசரம் இல்லை”, என கண்ணன் அவளது கையில் இருந்த புத்தகத்தை தட்டிவிட.

எழில் கீழே குனிந்து புத்தகத்தை எடுத்தாள். அப்போது எழில் கட்டியிருந்த திருமாங்கல்யம் சேலையின் மேல் வந்தது. அவளது நெற்றி வகிட்டில் குங்குமம் ஜொலித்தது. நெஞ்சில் அவளின் காதல் மட்டும் கண்ணனுக்கு தெரிந்தது. காதல் பறவை ஒரு கணம் மின்னலென காதல் சிறகடித்து வந்து போனது. மனம் ஏதோ சிறகடித்துப் பறப்பது போல கண்ணனுக்கு தோன்ற. அவளின் அந்த ஒப்பனையில் மெய்மறந்த கண்ணன் நிலைதடுமாறி அவளது கரங்களை தனது கரங்களுக்குள் சிறைப்பிடிக்க.

எழில் தடுக்க முடியாமல் தடுமாறி நிற்க.

“அப்போது அங்கு வந்த ஆச்சி காக்கைகளை விரட்டுவது போல இதுகளுக்கு நேரம் காலமே கிடையாது. கொஞ்சம் கூட வெவஸ்தையே இல்ல. எந்த நேரத்துல வந்து நிக்குது பாரு”  என்று கூற.

ஆச்சியின் குரல் கேட்டு கண்ணன் ‘சட்டென’ விலகி நிற்க.  கண்ணன் வெட்கத்தால் நெழிந்தான்.  எழில் முகம் நாணத்தால் சிவக்க.

“ஆச்சி உள்ளூர சிரித்து கொண்டே என்னம்மா வேசம் போடுதுக.  இரண்டும் பகலெல்லாம் எலியும், பூனையுமா சுத்துறது. அப்புறம்  ஒன்னுமண்ணா கைய்ய பிடிச்சிட்டு நிக்குதுக. அப்புறம் எதுக்கு நடிக்கணும்” என்று மனதில் நினைத்துக் கொண்டு, “கண்ணா!  வயக்காட்டுல வேலை அப்படியே கிடக்கு. இன்னைக்கு பூஜை போட்ருவோம்  கெளம்பு”,  என்று ஆச்சி கூற.

கண்ணன் சிரித்துக் கொண்டே வேகமாக வெளியில் ஓட.  எதிரில் வந்த முத்துவின் மேல் வேகமாக இடித்தான்.

“அய்யோ! அம்மா.  எரும மாடு.  ஏழு கழுத வயசாகுது.  இன்னும்  ஏன்டா இப்படி ஓடுற. மெதுவா போக மாட்டியா?” என  தோள்களை பிடித்துக் கொண்டான்.

“அதெல்லாம் உனக்கு வரும்போது தெரியும் போடா” என கண்ணன் வேகமாக நழுவினான்.

“இடிக்கிறதுக்கு கூட இவன் கிட்டதான் கத்துக்கணும் போல இருக்கே” என்ற முத்து தனது சில புத்தகங்களை எடுத்துக் கொண்டு வயக்காட்டு இருக்கு கிளம்பினான்.

“ஆச்சி மாரியம்மாளிடம் சென்று நீ சொன்னது சரியாத்தேன் போச்சு மாரி.  அதுங்க ரெண்டும் நேத்து அப்படி சண்ட கோழியா மல்லுக்கு  நின்னுசீக.   இப்ப காலையில ரெண்டும் கட்டிகிட்டு நிக்குதுகலே”  என்று கூற.

“அத போய் நீங்க வேடிக்கை பார்த்தீர்களா?” என்ற மாரியம்மா சிரிக்க.

“அங்கு முருகேசன் தாத்தாவும் பங்குக்கு பேசத் தொடங்கினார். தானா அமைஞ்சா என் பொஞ்சாதி என்ன பண்ணுவா? சின்னஞ்சிறு இருக்க பக்கம் நறுக்குனு போகாதனா கேட்கனும்லே.  நமக்கு கண்ணாலம்   ஆன புதுசுல நீ மட்டும் என்ன சும்மாவா விட்டவ”  என தாத்தா ஆரம்பிக்க.

“இந்த வாய புடுச்சி ஊசி வச்சி தைக்கணும்.  இதையெல்லாம் இந்த வயசுல  புள்ளைக முன்னாடி பேசுற பேச்சா.  வரவர கிழவனுக்கு குறும்பு அதிகமாயிடுச்சு.  இதுக்கு  ஒரு வழி பண்ணனும்” என்று ஆச்சி கூற.

“நீ என்ன வேணாலும் பண்ணு தங்கம்.  அதுக்கு தான்டி நான் தவம் கெடக்க” என்று தாத்தா கண் சிமிட்ட.

“இதா பாரு எவ்வளவு வாய்க் கொழுப்புன்னு”  என சிரித்துக் கொண்டே ஆச்சி தூர போனார்.

எழில் வீட்டில் அனைவரிடமும் சொல்லிக் கொண்ட தனது இன்றைய முதன்முதலாக நடத்தும் இந்த பயிற்சிக்கு கொஞ்சமாவது ஊர் மக்கள் வந்து ஒத்துழைப்பு கொடுக்கனும்னு  கடவுளை  மனதில் வேண்டிக் கொண்டு,  அவள்  சொன்ன அந்த ஊருக்கு  பொதுவாக உள்ள ஆலமரத்திற்கு மனதில் ஆயிரம் கனவுகளை சுமந்து கொண்டு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் புறப்பட்டாள்.

தொடரும்….

அன்பு நெஞ்சங்களுக்கு

இதில் நான் குறிப்பிட்டுள்ள “இதயமே உயிரே நீ தானடி” நாவலுக்கு தான் விருது கிடைத்துள்ளது… நீங்கள் விரும்பினால் இந்த கதை முடிந்ததும் இதயமே உயிரே நீ தானடி நாவலை இங்கு பதிவிடுகிறேன்… 

Advertisement