Advertisement

பகுதி – 05

மலரின் விழிகளில் இருந்து வழிந்தோடிய கண்ணீரால் அவளின் கன்னங்கள் பளபளத்தது.

மலரை, முத்து அடித்ததை பார்த்த  ஜில்லு உடனே கோபமாக முத்துவின் மீது தாவி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

மலர் ஜில்லுவை தடுத்தாள்.. ஜில்லு அமைதியாக நிற்க.

ஒரு கணம் தான்  தடுமாறி தவறிழைத்ததை எண்ணி  முத்து வருந்தினான்.

“ஏன் மலரு என்னோட மனச புரிஞ்சுக்கவே மாட்டேங்கிற.  என்னோட தவிப்ப எப்படி உனக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியல.  நீ என்னோடு  ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாடியும்  இருக்கணும்னு நான் ஆசைப்படறேன் மலரு.  என்னோட வாழ்க்கை பயணத்தில எப்போதும் நீ கூடவே இருக்கணும்னு ஆசைப்படறேன். இது தப்பா மலரு சொல்லு” என முத்து கேட்க.

அவனது வார்த்தைகளில் அவன் வைத்திருக்கும் காதலை அவளால் உணர முடிந்தது. ஒரு கணம் கண்ணீரோடு சலனமின்றி நின்றவள் எனக்கு புரியும் மாமா. முதல்ல உங்க லட்சியத்தை முடிங்க மத்ததை பத்தி அப்புறம் யோசிக்கலாம் மாமா. நான் உங்க கூடவே தான் இருக்கேன்.

“எனக்கு அப்படி ஒன்னும் தெரியல மலர்.  உன் மனசுல நான் மட்டும்தான் இருக்கேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.  உன்னோட வீம்ப எதுல வேணாலும் காட்டு.  ஆனா அத நம்ம காதல்ல  மட்டும் காட்டாத மலர்.  அதோட வலி ரொம்ப பெருசுடா”  என்று முத்து கூற.

“சும்மா திருப்பித் திருப்பி பேசிக்கிட்டு நேரத்த வீணடிக்காதீங்க மாமா.  இப்போ நான் என்ன பண்ணனும்னு நினைக்கிறீங்க.  அதை நேரடியாக சொல்லிடுங்க.  ஏன் சுத்தி வளச்சி பேசிக்கிட்டு”  என்று மலர் கூற.

சரி மலர்.  நானும் நேரடியாவே உன்கிட்ட கேக்குறேன்.  என்ன உனக்கு பிடிச்சிருக்கா? இல்லையா?

“ம்ம்ம். இத நான் சொல்லித்தான்  உங்களுக்கு தெரியுமா மாமா”  என்றாள் மலர்.

பேச்ச  மாத்தாம கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு மலர்.

“உங்கள எனக்கு பிடிக்கும். இப்போ  யார் இல்லைன்னு சொன்னாங்க”  என்று மலர் கூற.

“அப்போ இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்.  உன் கிட்ட இருந்து நேரடியா என்னுடைய கேள்விக்கு பதில் வேணும்.  உன்னோடு அடி மனசுல மறச்சி வச்சிருக்க உண்மைய இன்னைக்கு நீ சொல்லாம இங்கிருந்து உன்னைய  போக  விட மாட்டேன்”  என்று முத்து கூற.

என்ன முடிவு தெரியனும்னு   நினைக்கிறீங்க மாமா.

“என்னைய  உனக்கு பிடிச்சிருக்குனு எனக்கு நல்லாவே தெரியும்.  அத உன் வாயால நீயே  இப்போ சொல்லனும்” என்று கூற.

அதான் உங்களுக்கே  தெரியுது இல்ல. அப்புறம் எதுக்கு சொல்லனும்.

“இல்ல மலர். நீ இன்னைக்கு சொல்லியே ஆகணும். சொல்லாம விடமாட்டேன் மலர்” என்றான்.

என்ன சொல்லணும்ன்னு நினைக்கிறீங்க மாமா.

“அழகான தமிழ்ல, ‘நான் உன்னை நேசிக்கிறேன்’  முத்து மாமான்னு சொல்லு போதும்” என்று முத்து கூற.

ஏன் மாமா எல்லார  மாதிரியும் நீங்களும் சராசரியாவே  யோசிக்கிறீங்க.  ஒரு வார்த்தையில வைக்கிற நம்பிக்கைய ஏன் என் மேல வைக்க மாட்டேங்கறீங்க.  அந்த வார்த்தையை சொன்னாதான்  காதலா? எனக்கு ஒரு விஷயம் புரியல மாமா.  இந்த வார்த்தையில  அப்படி என்ன  தான் இருக்கு. இந்த வார்த்தைய  சொன்னவங்க எத்தனை பேர் இதுவரைக்கும் பிரியாம சந்தோசமா சேர்ந்து வாழ்ந்து இருக்காங்க சொல்லு மாமா.

அந்த வார்த்தையில் தான் வாழ்க்கையோட மொத்த சந்தோசமா இருக்கு மலர்.  அது தான் நம்ம  வாழ்க்கையில கிடைக்கிற பெரிய பொக்கிஷம். காதல்ங்கிற அந்த ஒரு வார்த்தை தான் நம்ம வாழ்க்கையில வர  பெரிய  மாயாஜாலம். அந்த வித்தைய சரியா கையாள தெரிஞ்சா வாழ்க்கையில ஜெயிக்கலாம்.  இல்லன்னா தோல்விதான் கிடைக்கும்.  ஒருமுறை சொல்லித்தான் பாரேன். எவ்வளவு நல்லா இருக்கும்னு உனக்கே புரியும்.  அந்த வார்த்தையில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் இருக்கும் மலர்.

காதல் ஒரு பெரிய சக்தி. அதுவும்  காதல் நம்ம கூடவே இருக்கிற ஒரு ஆத்ம சக்தி.  இது தான் நம்ம வாழ்க்கைக்கு முழு அர்த்தத்தையும் தரும் மலர்” என்று முத்து கூற.

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் மாமா.  நான் இல்லைன்னு சொல்லல.  சில நேரங்கள்ல அன்பின் ஆழத்தை விளக்க முடியாமல் போகலாம்.  மௌனம் கூட  காதலின் மொழி தான் மாமா. அதை  சொல்லியே ஆகணும்னு ஏன் அடம் பிடிக்கிறீங்க” என்று மலர் வெளியே முத்துவிடம் கூறினாலும்,  அவளின் மனதில் தணல்  மூடிய நெருப்பாய் உள்ளுக்குள்ளே அவளின் காதல் உணர்வு புகைந்து கொண்டே தான் இருந்தது.

“உன்னோட பிடிவாதம்தான் என்னைய திரும்பத் திரும்ப அந்த வார்த்தையை சொல்ல வைக்கணும்னே தூண்டுது மலர்.  கோபத்தால் சாதிக்க முடியாததை கூட அன்பால் சாதிக்கலாம்னு சொல்லுவாங்க. நான் உன் கிட்ட அன்பா தான் கேட்கிறேன். எனக்காக இந்த ஒரு வார்த்தைய ஒரு முறை சொல்ல மாட்டியா மலர்”  என்று முத்து கேட்க.

“இலட்சியம் எனும் தென்றல் காற்று வீசுற நேரத்தில,   உங்க மனசுல காதல்ங்கற புயல் காற்று வீசப் பார்க்குது மாமா.  அது உங்க அறிவு,  அனுபவம் எல்லாத்தையுமே மறைக்கும். தடையா இருக்கும். இந்த  காதலால உங்களுடைய எதிர்காலம் சூனியமாகிடும். அத  நான் விரும்பல மாமா.  இப்போ உங்க கவனம் முழுக்க உங்கள் இலட்சிய பாதையில மட்டும் தான் இருக்கணும்னு நான் நினைக்கிறேன்” என்று கூறிய மலரின் விழிகளில் கண்ணீர் மடை திறந்த வெள்ளமாய் கொட்டியது. காதல் கைக்கூடி வரும் தருணத்தில்  முத்துவின் லட்சியத்திற்காக தன் காதல் திசை மாறி  வேறு திசையில் சென்று விடுமோ என்ற பயத்தில் மனம் புழுவாய் துடித்துக் கொண்டிருந்தது.

என்ன பொருத்த வரைக்கும்  நீ என்னோட இருந்தா தான் என்னோட வெற்றினு  நான் நினைக்கிறேன் மலர்.  நீ என் கூட இல்லைனா தான் மலர் என்னோட வாழ்க்கை சூனியமாகும்.  இதை  முதல்ல புரிஞ்சுக்கோ. உன்னுடைய கண்கள் எப்போதும் பொய் சொல்லாது.  எனக்கு தெரியும் மலர்.  அதுக்கு சாட்சி உன்னோட கண்ணீர்தான்.  உன் மனசுல நீ என்ன நினைக்கிறனு  எனக்கு நல்லாவே தெரியும்.  ஆனாலும் நீயே ஒரு முறையாவது காதல என் கிட்ட சொல்ல மாட்டியானு  தான் இவ்வளவு தூரம் ஏங்கி தவிக்கிறேன்.  பரவால்ல மலர்.  உன்னோட மனசுல அந்த காதலை மௌனமாவே பூட்டு வெச்சுக்கோ.  என்னோட உண்மையான பாசத்தை எப்போது  முழுசா புரிஞ்சிக்கிறியோ  அன்னைக்கு நான் கேட்காமலேயே உன்னுடைய மௌனம் உடைந்து காதல் என்னும் வார்த்தை என் காதில ஒலிக்கும்.  அந்த நாளுக்காக நான் காத்திருப்பேன் மலர் என்றவன்,  மலரின் பூங்கரங்களை பற்றினான்.

மலரால்  மறுக்க முடியவில்லை.  மனதிற்குள் பூட்டி வைத்த காதல் கண்ணீராக அவனது கரங்களில் சிந்தி வெளிப்படுத்தினாள். முத்துவின் கைகளைப்பற்றி தனது விழிகளை மூடிக்கொண்டாள்..

மலர், நீ  உன் காதல மனசுக்குள்ள வச்சி மறைக்கலாம். அது வீண் பிடிவாதம். ஆனா  என்னால  என் காதல மறைக்க முடியாது. எனக்கு மறைக்கவும் தெரியாது.

மலர் “நான் உன்னை நேசிக்கிறேன்” என்று கூறியவன், அவளது சிவந்த கன்னங்களை தனது கைகளில் ஏந்திநான். மலரைத் தன மார்போடு இழுத்து அணைத்துக் கொண்டான். .

முத்துவின் அந்த இதமான ஸ்பரிசத்தால் நிலைகுலைந்த மலர் தஞ்சம் புகுந்த சிறு பறவையாய் அவனது மார்புக்குள் அடைக்கலமானாள்.  விழிகளில் இருந்த கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் மட்டும் வந்து கொண்டே இருக்க.

முத்து அவளது அழுகை அடங்கும் வரை அவள் போக்கிலேயே அழவிட்டு  அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டு ஒரு கையால் அவளது கேசத்தை வருடி கொடுத்தான்.

மலருக்கு மயிலின் மென்மையான தோகையால்   வருடுவது போன்ற ஒரு இதமான உணர்வு. கண்ணீரை மட்டுமே அவனுக்கு பதிலாக கொடுத்தது. இதழ்களில் வார்த்தை வராமல் ஒரு வித தவிப்பும்,  துடிப்பும் இரண்டும் சேர அவள் காதலை வெளிப்படுத்தியது..

ஜில்லு அவர்களை சுற்றி சுற்றி வந்து அவர்கள் மீது தாவினான்.

“இவன் வேற நேரம் காலம் தெரியாம.  உங்க முதலாளியம்மாவ  நான் ஒன்னும் பண்ணலடா.  கொஞ்சம் தள்ளி நில்லுடா சாமி”  என்று கூற. ஜில்லு  வாலை ஆட்டிக்கொண்டு மரத்தடி நிழலில் போய் படுத்துக் கொண்டான்.

மலர், “இந்த நாள்  நம்முடைய வாழ்க்கையில எப்போதும் மறக்க முடியாத நாளாக இருக்கும். ஏன்னா என்னோட மனசுல இருக்கு காதல நான் உன்கிட்ட முதன் முதலா சொன்ன நாள் இதுதான்” என்று அவளது விரல்களை மென்மையாகப் பற்றினான் முத்து.

தன் பூப்போன்ற இதழ்கள்  மென்மையாக பிரிய சிரித்தாள்.  அவளது விழிகளில் ஈர்ப்பும், இதழ்களின் துடிப்பும் வெகு அழகாய் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவளின் முகம் பூவாய் மலர்ந்திருந்தது.

“மாமா…  எனக்கு ஒரு சந்தேகம்” என்று மலர் கேட்க.

“என்ன மலர் கேளு” என்றான் முத்து.

“இப்போ எல்லாருமே காதல வெளிப்படுத்த நாகரீகமா ஆங்கிலத்தில தான் சொல்றாங்க. நீங்க மட்டும் என்ன வித்தியாசமா தமிழ்ல சொல்றீங்க” என கேட்டாள்.

ஆங்கில வார்த்தை எல்லாம் வெறும் நாகரீகம் மட்டும்தான் மலரு.  ஆதியில இருந்து வந்தது நம்ம தமிழ் தானே.  தமிழ்ல சொல்லி பாரு அந்த வார்த்தைக்கு எத்தனை அழகுனு புரியும்.  அதுவும் தவிர தமிழ்னா  எனக்கு உயிருனு  உனக்கு தெரியாதா? என்றான் முத்து.

“கேட்க நல்லா தான் மாமா இருக்கு. எவ்வளவு உயரம் போனாலும் நம்ம தமிழ் மொழிய மறக்கக்கூடாது. எனக்கும் தமிழ் தானே பிடிக்கும் என்றவள், மாமா நான் எப்போதும் உங்க கூடவே தான் இருப்பேன். நீங்க படிச்சி உங்க லட்சியத்தில ஜெயிக்கனும். அதான் எனக்கு வேணும். அதுக்காக என்ன வேணாலும் பண்றேன் மாமா”  என முத்துவின் கரம் கோர்க்க…

Advertisement