Advertisement

பகுதி – 04

ஏய்!  நில்லுடி ஒரு ஆம்பள தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு கெடக்க.  கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம நீ பாட்டுக்கு உள்ள போறவ.

“ஏன் மாமா இப்படி வண்டி வண்டியா புழுகறீங்க.  உன் பேச்சுக்கு மரியாதை கொடுத்து நீ சொன்னது எல்லாம் கேட்டுட்டு தான உள்ள வந்தேன்”  என்று எழில் கூற.

என்னத்தடி கேட்ட. என்ன மரியாத குடுத்த.

“இதுக்கு மேல இன்னும் என்ன மரியாதை கொடுக்கணும்னு எதிர் பாக்குறீங்க. இப்படியே அமைதியா ஓரமா போய் உட்காருங்க.  அதான் ரெண்டு பேருக்கும் நல்லது” என்று கூறிவிட்டு எழில் கண்ணனின் அறைக்குள் சென்று தான் கொண்டு வந்த துணிகளை எடுத்து கட்டிலில் போட்டாள்.  எங்கு வைப்பதென அந்த அறையை சுற்றி பார்த்தாள்.  அலமாரியில் அடுக்கி வைத்திருந்த அவனது துணிகளை எடுத்து ஒரே செல்ஃபில் வைத்தாள்.  மற்ற இடங்களில் தான்  கொண்டு வந்த துணிகளை அடுக்க தொடங்கினாள்.

இதைப்பார்த்த கண்ணன்,  ஏய்! இப்போ எதுக்கு என்னோடதெல்லாம்  எடுத்து இப்படி கசக்கி வச்சிருக்க.  என்னோட செல்ஃப்ல நீ எதுக்கு வைக்கிற.

பின்ன, “உங்க ரூம்ல உங்க இடத்தில வைக்காம உங்க அப்பா ரூம்லயா  வைக்க முடியும்.  நீதானே என் புருஷன்.  அப்போ நான் இங்கதான வைக்க முடியும்” என்றாள்  எழில்.

“இந்த பசப்பு வார்த்தை கெல்லாம்  நான் மயங்கமாட்டேன்டி.  எப்போ என்னைய ஆம்பளையா மதிக்காம சமூகசேவை அது இதுன்னு வீட்டுப்படி தான்டி போனயோ அப்பவே  உன் மேல இருந்த  பாசம் விட்டுப் போச்சு.  இப்போ இருக்க கண்ணன் வேற  என் கோபத்தை கிளப்பாத” என்றான்.

“இப்போ என்ன தான் உங்க பிரச்சனை.  நான் இங்கே வந்தது தானா?.  இல்ல வேற ஏதாவதா” என்று எழில் கேட்க.

“நீ இங்கே வந்தது தான் பிரச்சனை” என்றான் கண்ணன்.

சரி அப்போ ஒன்னு பண்ணலாம் மாமா.

என்ன பண்ணலாம்.

“நீங்க வேணும்னா வேற கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றாள்.

“என்ன பத்தி என்னடி நெனச்சுக்கிட்டு இருக்க. கோவத்துல நாலு வார்த்த பேசினா இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவாங்களா?.  அப்படிப்பட்ட ஆம்பள நான் இல்லடீ. நீயும் நானும் நினைச்சா மட்டும் அத்துக்கிட்டு போக முடியாது. இது வெறும் மஞ்சக்கயிறு மட்டும் இல்லடீ. அதான் நம்ம  வாழ்க்கையோட அஸ்திவாரம்.  ரெண்டு குடும்பங்கள் இருக்கு அதை யோசிச்சுதான் உன்ன இப்போ சும்மா விடுறேன். இந்த வீட்டில  ஆடு,  மாடு,  நாய்,  கோழி இதுங்க எல்லாம் இங்க இருக்கிற மாதிரி நீயும் ஒரு ஓரமா இருந்துட்டு போ” என்றான்.

“ஹஹஹஹ. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க யாரோ சொன்னாங்க  என்னைய விவாகரத்து பண்றேன்னு.  நீ வீட்டுக்குள்ள வரக்கூடாது அப்படியே திரும்பி போடின்னு.  இப்போ மஞ்ச கயிறு,  வாழ்க்கை,  அஸ்திவாரம்னு  கதை சொல்றாங்க. பெரிய கர்ண பரம்பரை வேற.  ஆடு, மாடு, கோழி கெல்லாம் இடம் கொடுக்குற கண்ணனும் வள்ளல்  போல.  அதான் எனக்கும் ஒரு ஓரமா இடம் கொடுத்துட்டாங்க. பரவால்ல.  இதையாவது  யோசிக்கற  அறிவு இருக்கே. ரொம்ப  சந்தோஷம்.  நீங்க உங்க வேலைய பாருங்க.  நான் என் வேலைய பாக்குறேன்”  என்று அவள் மீதி இருந்த துணிகளை அடுக்கி தொடங்கினாள்.

“இந்த இடம் ஒன்னும் உனக்காக இல்லடீ.  அத்தை மாமாவ யோசிச்சி தான்.  அதை மனசுல வெச்சுக்கிட்டு சொல் பேச்சு கேட்டு வாழ்ற  வழிய பாருடீ”  என்று கூறியவன், “அம்மா!  அம்மா” என தனது தாயை கூப்பிட்டு கொண்டே  வெளியில்  போனான
“டேய்! கண்ணா!  அங்க என்னடா சத்தம்” என்று ஆச்சி கேட்க.

ஒன்னும் இல்ல ஆச்சி.  அம்மாவ தேடுறேன் என்றான்.

“பொண்டாட்டிதே வந்துட்டாலே.  அப்புறம் என்ன அம்மாவ தேடுற.  போய் அவகிட்ட பக்கத்துல உட்கார்ந்து நாலு வார்த்தை பேசுடா”  என்று ஆச்சி கூற.

“அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை” என விரைத்துக் கொண்டு நின்றான் கண்ணன்.

“சும்மா முறுக்கிக்கிட்டு நீக்காதலே. நீ இப்படி பண்ணினா உங்க மாமா மனசு நோகும்லே. ஏன்டா இப்படி பண்ற.  நீங்க சந்தோசமா இருந்தாதே  நாங்க நிம்மதியா இருக்க முடியும்.  புரிஞ்சுக்கோலே” என்று ஆசி கூற.

சரிங்க ஆச்சி. நான் அவகிட்ட சண்டை எல்லாம் எதுவும் போடல.  சொன்ன பேச்சு கேட்கலனு   அவ மேல  எனக்கு கோவம் தான்.  நான் பாத்துக்குறேன் ஆச்சி என்றான்.

அவள சாப்பிட கூப்பிடுய்யா..

அதெல்லாம் என்னால முடியாது ஆச்சி என்றான்.

“ஆச்சி சொன்னா கேட்கனும். போ கண்ணு” என்று கூற.

‘ம்ம்ம்ம்’ என்ற கண்ணன் தனது அறைக்கு போனவன், ஏய்! ஆச்சி சாப்பிட கூப்டாங்க. போ என்றான்.

ஏன் நீங்க கூப்பிட மாட்டீங்களோ. கூப்ட்டா உங்க கௌரவம் தேய்ஞ்சிடுமோ.

நான் எதுக்குடீ கூப்பிடனும்.

அது என்ன.  எப்போ பாரு டீ .. டீ ..  னு சொல்லிகிட்டு.. ஆணாதிக்க தோரணமோ. பதிலுக்கு பொம்பளைங்களும் டா..  டா .. னு சொல்லலாமா என்றாள்.

“ஏய்! நான் ஆம்பள. உனக்கு தாலி கட்டின புருஷன்டீ. நான் சொல்லலாம்.. நீ என் பொண்டாட்டி.. அப்படி தான்டீ சொல்லுவேன்” என்றான்.

“ஓஹோ! அப்படியா. நான் உன்கிட்ட  தாலி கட்டிக்கிட்ட  பொண்டாட்டி.  நானும் அப்போ உன்ன டா ன்னு  சொல்லலாம்.  சொல்லட்டுமா?” என்றாள் எழில்.

எதுவும் பேசாமல் அவளைப் பார்த்து முறைத்தான்..

“பயப்படாதீங்க.  நான் அப்படி எல்லாம் சொல்ல மாட்டே.  நம்ம பண்பாடுன்னு ஒன்னு இருக்கு.  அத எப்பவுமே நான் மதிக்கிறேன். நீங்க போங்க நான் வரேன்” என்றாள்.
“ஏன் மாமா என் மேல உங்களுக்கு கொஞ்சம் கூட ஆசையே இல்லையா?” என அவன் கைகளைப் பிடிக்க.

“யாருக்குடீ ஆசை. அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. போடீ” என்றவன் மிகவும் கஷ்டப்பட்டு தனது கரங்களை விடுவிப்பது போல நடித்து இழுத்துக் கொண்டான்’ கண்ணன்..

“ஆசை இல்லனா நான் உங்க கைய பிடிச்ச உடனே தட்டி விடு வேண்டியது தானே. ஏன் ரொம்ப கஷ்டப்பட்டு  பிரிக்க முடியாம பிரிச்சிங்க மாமோய்” என  தன் பட்டு இதழ் பிரியாமல் எழில் சிரிக்க.

ஏய்! நான் ஒன்னும் அப்படி இல்ல.. எனக்கு ரோசம் அதிகம்டீ.. நானா  உன் பக்கத்தில வரமாட்டேன். நீயும் என் பக்கத்தில வராத என்றான்..

ஏன் மாமா. அவ்வளவு பயமா என் மேல..  இன்னைக்கு இராத்திரி பாத்துடுவோம் உங்க வீராப்ப என்றாள் எழில்..

“நல்லா பாருடீ. என் நிழல கூட நீ நெருங்க முடியாது” என்று கூறிவிட்டு கண்ணன் அமைதியாக வெளியில் வந்தான். எழில் துணிகளை அடுக்கி வைத்துவிட்டு வெளியே வந்தாள்.

கண்ணன் மௌனமாக அமர்ந்திருக்க.

“எழில் அவனுக்கு சோத்தை எடுத்து வை” என ஆச்சி கூற.

“அண்ணி எனக்கும்” என முத்துவும் வந்து அமர.

“வா முத்து என்றவள் சாதம், குழம்பு” என ஒவ்வொன்றாக கொண்டு வந்து வைக்க.

கண்ணன் வேகமாக அங்கிருந்து எழுந்தான். ஆச்சி நீங்களோ இல்ல அம்மாவோ வந்து போடுங்க.  இவ போட்டா  எனக்கு சாப்பாடு வேண்டாம் என்றான்.

“ஏன்டா! கட்டினவ போட்டா சோறு இறங்காதா? இதெல்லாம் திமிருதாம்லே.   நான் தான் போடுதே வா” என கண்ணனின் கையை பிடித்து ஆச்சி உட்கார வைத்தார்.

எழில் அவன்  முகத்தையே  முறைத்துப் பார்த்தாள். முத்துவிற்கு மட்டும் பரிமாறிவிட்டு தானும் சாதத்தைப் போட்டு குழம்பை ஊற்றிக்கொண்டு சாப்பிட தொடங்கினாள்.

“என்ன பிறவிடா இவ.  புருசங்காரன் சாப்பிடாம இருக்கே.  கொஞ்சம் கூட அக்கறை இல்லாம அள்ளிக் கொட்டிக்கற” என்று கண்ணன் மனதில் நினைத்தான்.

“எவ்வளவு கோபம் வந்தாலும் சாப்பிடாம மட்டும் இருக்க மாட்டேனுங்க. சாப்பிட்டு தெம்பா சண்டை போடலாம். நீங்களும் சாப்பிடுங்க மாமோய்”  என்று எழில் கூற.

“நீ வில்லங்கம் புடிச்சவனு தான்  சின்ன வயசுல இருந்தே தெரியுமே” என்றான் கண்ணன்.

தெரிஞ்சு தானே கல்யாணம் முடிஞ்சிங்க. அப்புறம் என்ன மாமா..

“ஆமா. ஆமா.. தெரிஞ்சே தான் வேலியில போற ஓணான  வேட்டில பிடிச்சு விட்ட கதையா நானே தேடிக்கிட்டேன்”  என்றான் கண்ணன்.

“நீங்க பிடிச்சி விட்டது ஓணானா இல்ல உங்கள் வாழ்க்கையை மாத்த வந்த வசந்தமானு கூடிய சீக்கிரம் புரிஞ்சிக்க தான் போறீங்க மாமா” என எழில் கூற.

“வசந்தம் வீசலனாலும் பரவாயில்ல.  வம்பு இழுக்காம இருந்தா அதுவே போதும்” என்று சாப்பிட்டு முடித்ததும் கையை கழுவினான் கண்ணன்.

“ஆச்சி  காட்டுல பருத்தி விதைப்புக்கு ஆளுகள வர சொன்னேன்.  நான் போய் பார்த்துட்டு வேலைய முடிச்சுட்டு வரணும். விதைக்க நிலக்கடலை வாங்கி வச்சேன். அதை எடுத்துக் கொடுங்க ஆச்சி” என்றான் கண்ணன்.

“உனக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டாலே.  இதுக்கு மேல நீ அவகிட்ட வேலை வாங்கலே.  எனக்கும் வயசு ஆகுதில்ல”  என ஆச்சி கூற.

“விடுங்க ஆச்சி.  நான் அம்மா கிட்ட சொல்றேன்”  என கண்ணன்  தாய் மாரியம்மாளை கூப்பிட்டு நிலக்கடலையை கொண்டு வரச் சொன்னான்.

Advertisement