Advertisement

 

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் மாமா. எனக்கு என்னோட லட்சியம் தான் முக்கியம். அதுகாக எவ்வளவு வேணாலும் கஷ்டப்படுவேன்.  என் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் உங்க பொண்ண குடுங்க. இல்லனா உங்க விருப்பம் போல பண்ணுங்க மாமா. ஆனா மலர தவிர யாரும் என் வாழ்க்கைல வரமுடியாது மாமா”,   என்று  முத்து கூற

“இந்த மூஞ்சிய யாரு கட்டிக்கிறேன்னு சொன்னாங்க.  அவங்க லட்சியத்தையே கட்டிக்கட்டும்  விடுங்கப்பா”  என்று மலர் கூற.

“மாமா இனி நான் வேலைக்கு போகப் போறது இல்ல.  பூனேல  பார்த்த வேலைய விட்டுட்டு தான் கிளம்பி இங்க வந்திருக்கேன். என்னுடைய கவனம் முழுக்க ஐ.ஏ. எஸ் தேர்வு முடிச்சி நடக்கப்போற இன்டர்வியூக்கு படிக்கறதுல மட்டும் தான் இருக்கு.  நான் கலெக்டர் ஆகிறவரைக்கும் ஓய மாட்டேன் மாமா”  என்று முத்து கூற.

“வேலைக்கு போயிட்டு படிக்கலாமே மருமவனே” என்றார் ராசப்பன்.

“வேலைக்கு போயிட்டு படிக்க முடியல மாமா. இப்போ கடைசியா நடந்த தேர்வில ரெண்டுலயும் பாஸ் ஆகிட்டு தான் திரும்பி வந்து இருக்கேன்.  இன்னும் இன்டர்வியூ மட்டும் தான் இருக்கு மாமா.   இந்த முறை எப்படியாவது ஜெயிக்கணும். இந்த முறையும் தோல்வினா மனசு நிறைய வலியும், வேதனையும் தான் மிஞ்சும். தாங்க முடியாது மாமா”  என முத்து கண்கலங்க.

“ஐய்யா! ராசா,  சின்ன பிள்ள மாதிரி இதுக்கு போய் கண்ணு கலங்கற.  நாங்க எல்லாம் இருக்கோமய்யா.  உனக்கு என்ன பண்ணனும்.  என்ன வேணும் சொல்லு.  நீ எங்கேயும் போக வேண்டாம். நம்ம கரிசகாட்டு பூமி  இருக்கு. பாடுபட  நாங்க கிடக்கோமய்யா.  நீ படிச்சி ஜெயிச்சு மேலே வந்தா போதும்  முத்து”  என ராசு முத்துவை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார்.

“முத்துவின் விழிகள் கலங்கி மடை திறந்த வெள்ளமென கட்டுக்கடங்காது கண்ணீர் வர. அதை பார்த்த மலரும் தன்னை அறியாமல் விழிகள் கலங்கி நின்றாள். மாமா மனசுல லட்சியத்தோட வந்திருக்கு. அது ஜெயிக்க நம்மால முடிஞ்சத நாமும் பண்ணனும்” என நினைத்தாள்.

“மாமா நான் மலருக்கு ஒன்னு கொண்டு வந்தேன்.  அதை நீங்களே கொடுத்துடுங்க” என ஒரு பார்சலை எடுத்து நீட்டினான்.

“நீயே கொடுக்க வேண்டியதுதானே மருமவனே.  எப்பனாலும் மலரு  உனக்கு தானே” என ராசு கூற.

முத்து  தன்னிடமிருந்த பார்சலை  மலரிடம் நீட்ட.

“வாங்கிக்க மலரு. மாமன் ஆசையா  கொடுக்கறான்ல”  என சரஸ்வதியும் கூற. மலர் மௌனமா வாங்கி பிரித்து  பார்த்தாள்.

“அதில் ஒரு சாம்சங் செல்போன் ஒன்று இருந்தது.  எனக்கு இதெல்லாம் வேண்டாம்பா. அவர்கிட்டயே திருப்பிக் கொடுத்துடுங்க”  என மலர் கூற.

“சின்னக் கழுத.  அவன்  ஆசையா வாங்கிட்டு வந்து தரான்.  புள்ள மனச நோகடிக்கற” என ராசு  திட்ட.

மலர் அமைதியானாள்..

“குடு மலரு. சிம் போட்டு ஆன் பண்ணி பார்க்கலாம்”  என முத்து கேட்க.

“அவளிடம் இருந்த புது செல்லை கொடுத்துவிட்டு அவள்   தன்னிடமிருந்த பழைய செல்போனில் உள்ள சிம்மை எடுத்து நீட்டினாள்.  இருக்கிற நம்பருக்கு இது வரைக்கும் ஒன்னும் பேசிக்கல. இரண்டு வார்த்தை வரவே மாமாங்கம் ஆகிடும். இதுல இன்னொரு செல்லு  வேறயா?” என முறைத்தாள்.

முத்து  சிம்கார்டை போட்டு ரிங்டோன் வைத்து சரி பார்த்து அவளிடம் நீட்டினான்.

மலர் செல்போனை வாங்க.  அவனது மென்மையான கரங்களால் அவள் விரல்களை தீண்டினான்.  மலர் வெளியில் வெறுப்பைக் காட்டினாலும் உள்ளுக்குள் அளவில்லாத காதலோடு  தான் இருந்தாள்.  அவளது பார்வைகள் ஆயிரம் அர்த்தங்களை சொல்லியது.

இவள் பார்வையில் ஏக்கங்களை முத்துவின் மனம் புரிந்து கொண்டது.

மாமன் மக விரல் தீண்ட
மனம் குளிர  காத்திருந்தேன்
எப்போனு சம்மதம் சொன்னா
பரிசம் போட நானும் வாரேன்
உன்ன நெனச்சு மனசுக்குள்ள
மஞ்ச தாலி ஒன்னு  வாங்கி
மடமடனு கட்டிவிட மச்சான்
நான் காத்திருக்கேன்
தை மாசம் எதிர்பார்த்து.. 

என்று மனதுக்குள் நினைத்தான்.  அவனோட தோல்வியிலிருந்து  அவனை தூக்கி நிறுத்த போகும் இன்னொரு தாயவள் என்றே நினைத்தான் அவளைப் பார்க்கும் போது தோல்வியும் அவனுக்கு மறந்துவிடுகிறது.

“அங்க அத்தை மாமா தேடுவாங்க கிளம்ப சொல்லுங்கப்பா” என்று மலர் கூற.

“எங்களுக்கும்  போக வழி தெரியும்”  மாமா,  “தாத்தா,  பாட்டி எங்கே”, என கேட்க.

“நீ வரேன்னு சொல்லி அவுக நேத்து பொழுது சாயவே   நம்ம வீட்டுக்கு போயிட்டாக மருமவனே.  நீ போனா மட்டும்  போதும். அவுக  பண்ற அட்டகாசத்தை தெரிஞ்சுக்குவ”, என்று ராசு கூற.

“சரிங்க மாமா நான் கிளம்புறேன்” என்று முத்து மலரைப் பார்க்க.

“மலரும் முத்துவைப் பார்க்க.  விழிகள் இரண்டும் காதலெனும் விடியலைத் தேடியது.  இருவருக்கும் ஆழமான காதல் உண்டு. மலரின்  பிடிவாதமும் அடாவடித்தனமும் தான் காதலை சொல்ல மறுக்கிறது.  நான் கிளம்புறேன் மாமா”  என முத்து  கண்ணசைவில் அவளைப் பார்த்துக் கொள்ள.

“ம்ம்ம்” என மலர் தன் இதழ்களை குவித்து கண் விழியாள் பதில் கூற.

முத்து  கிளம்ப மனமில்லை என்றாலும் மெல்ல மெல்ல திரும்பி பார்த்துக் கொண்டே நகர.

மலர் அப்போதுதான் நினைவு வந்தவளாய், “முத்து மாமா கொஞ்சம் நில்லுங்க” என உள்ளே ஓடியவள், ஒரு தூக்குவாளியோடு ஓடோடி வந்தாள். “இந்தாங்க கொண்டு போங்க”  என முத்துவிடம் நீட்ட.

“என்ன மலரு இது” என முத்து கேட்க.

உனக்கு பிடிக்குமேன்னு  அதிரசமும் தட்டையும்  செஞ்சி வச்சேன். எடுத்துட்டு போ மாமா  என்றாள்.

“இதயத்தை திருடிய கள்ளி. என் மேல இம்புட்டு ஆசைய வச்சிக்கிட்டு எதுக்கு மறைக்கனும்.  ரொம்பத்தான் வீம்பு பிடிச்சவ.. உன் காதல உன் வாயால என் கிட்ட சொல்ல வைப்பேன்டி தங்கமயிலே”  என மனதில் நினைத்துக் கொண்டு தூக்குவாளியை வாங்கிக் கொண்டு  முத்து கிளம்பினான். அவன் தெருமுனை  சென்று மறையும் வரை வாசலில் நின்று மலர் பார்த்துக் கொண்டிருக்க.

முத்து  அவளை தவிக்க விட வேண்டுமென்றே திரும்பி பார்க்காமல் போனான்.

“திமிரு ரொம்பத்தான் அதிகம்.  மூஞ்ச பாரு. எனக்கு இத விட  வீம்பு அதிகமா தான் மாமா. நீ தான் என் பின்னால சுத்தனும். நானா என் காதல சொல்லமாட்டேன்”, என நினைத்துக் கொண்டே உள்ளே போனாள்.. இந்த வீண் பிடிவாதமும், வீம்பும் தான் அவளை அழ வைக்கப் போகிறது என்பதை இப்போது அவள் அறிந்திருக்கவில்லை.

“மருதுவுக்கும், செவத்தாம்மாளுக்கும் தண்ணி காட்டானும்.  சாடில  தவிடு புண்ணாக்கு கலந்துவை சரசு.  குடிச்சதுகனா  அப்படியே  புளியந்தோப்புக்கு ஓட்டிட்டு  போயி கட்டிப் போடலாம்.  பொழுது சாய கூட்டிட்டு வரலாம்”  என்று ராசு  கூற.

சரஸ்வதியும்  சாடியில தவிடு புண்ணாக்கு கலந்து வைத்தாள்.

மருது தண்ணீர் குடிக்காமல் கொஞ்சம் முரண்டு பிடித்தான். தாயிடம் சென்று மெல்ல ஒரு உரசல் விட்டு கொஞ்ச. தாயும் தனது பிள்ளையை நாவால் தடவி கொஞ்சியது..

“கொஞ்சிகிட்டு கெடக்க நேரத்த பாரு”   என ராசு கயிறை சுண்டி இழுத்து மாடுகளை ஓட்ட. சரசு அவர் பின்னால் மருதுவை பிடித்துக் கொண்டு போக ஜில்லுவும் கூடவே கிளம்பினான்.. எவ்வளவு துரத்தி விட்டும் விடாப்பிடியாக ஜில்லு கூட போனான்.

“மாடுகளைத் தோப்பில் கட்டிவிட்டு ராசு திரும்பிப் பார்க்க.  ஜில்லுவை காணவில்லை. அடங்காப்பிடாரி இப்ப பின்னாடி தான வந்துச்சு. அதுக்குள்ள  எங்கடி  போய் தொலஞ்சது” என ராசு கேட்க.

“இங்கதே இருந்தான். அதுக்குள்ள காங்கலயே”  என சரசு தன் கருவண்டு
விழிகளை சுழல விட்டு தேட.

“கெரகமடி. இன்னிக்கு எவன் கையில  என்ற குடுமிய பிடிச்சி  கொடுக்க போவுதோ  தெரியலையே”,  என   ராசு சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஜில்லு  ஒரு  முழுக்கோழியை  துள்ள துள்ள கவ்விக் கொண்டு  இவர்களை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தான்.

“பாருடி. சனியன வம்ப வாங்கிட்டு ஓடுற ஓட்டத்த பாரு. நான் எந்த சென்மத்தில செஞ்ச பாவமோ. இந்த சென்மத்தில வந்து வசூல் பண்ணுது.  நான் அப்பவே நெனைச்சேன். இன்னைக்கு எவ்வளவு தண்டம் கட்டணுமோ,  எவன் வாசப்படியில வந்து  வசவுப்பாடி கழுவி ஊத்த போறானோ தெரியலையே. நல்ல வெட கோழியா பிடிச்சிட்ட ஓடுதே. நானே இப்படி சாப்பிட்டது இல்லடி.  இன்னைக்கு வீட்டு பக்கம் வரட்டும். நாய  வாலப் பிடிச்சி  சுவத்துல அடிச்சி  வீதில விசிறி போட்டு தலமுழுவரேன்”  என்று கோபமாக போனார்.

“அது வாயில்லா சீவனுங்க. அது என்ன பண்ணும்.  கொஞ்சம் பொறுமையா இருங்க” என சரசு சொல்லிக் கொண்டே பின்னால்  போக.

“ஆமாடி. வாயில்லாம தான் நல்ல வெடக்கோழியா பாத்து கவ்விட்டு போவுதோ. அதுக்கு சாதகமா பேசாத. வரட்டும் இன்னைக்கு. நீ தான வளத்த. உன்ன தான் முதல்ல மிதிக்கனும்டி” என்றார் ராசு.

சரசு வாயடைத்து ராசுவுடன் வீட்டிற்கு சென்றார்.

முத்து மலரும் நினைவுகளோடும்,  தனது கலெக்டர் கனவுகளோடும் பரந்து விரிந்த பச்சை வயல் வெளிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தான்.  கால்கள் மட்டுமே தனது வீட்டை நோக்கிச் சென்றது.  மனமோ மலரின் நினைவுகளுக்குள் புதைந்து  கொண்டு வெளியே வர மறுத்தது.

திடீரென, முத்து வரப்பிலிருந்து தடுமாறிய கீழே விழப் போக. இரு கரங்கள் அவனைத் தாங்கிப் பிடிக்க முயற்சி செய்து தோற்றுப் போய்  இருவருமாக சேர்ந்து சேத்தில் விழ. இருவரும் சேத்தில் கட்டி புரண்டு விழுந்து கிடந்தனர்.

“முத்து கண்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டு தன்னைத் தாங்கிப் பிடித்த அந்த கரங்கள் யாருடையது”   என பார்த்தான்.  அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘கலகல’வென  சேறு என்றும்  பாராமல் விழுந்து விழுந்து சிரித்தான்.

எதிர்பக்கம் சேற்றில் கிடந்த அந்த உருவம் கண்கள் சிவக்க முத்துவைப் பார்த்து முறைத்து விட்டு சேத்தை வாரி அவன் மேல் போட்டது.

மொழி பேசும்……

Advertisement