பகுதி – 02
உதட்டை சுழித்து பழிப்புக் காட்டியவள், “பார்த்து வரக் கூடாதா மாமா” என்றாள்.
“பார்த்துகிட்டே தான ஊத்தின. ஒரு சின்ன வித்தியாசம். மஞ்ச தண்ணி ஊத்தாம கழனி தண்ணிய ஊத்திட்ட. என் மேல உனக்கு இன்னும் ஆசை கொஞ்சம் கூட குறையவே இல்லடி தங்கம். எங்க என்ன மறந்திருப்பயோ திரும்ப போராடி காதலை சொல்ல வேண்டி இருக்குமோனு உன்ன நினைச்சு பயந்துட்டே வந்தேன்டி செல்லம். நீ எப்பவும் என் இதயத்தை திருடிய கள்ளி தான்”, என முத்து தனது படபடக்கும் கண்களை சிமிட்ட.
“அப்படி ஒரு ஆசை இருந்தா இத்தோட மறந்திடலாம். உங்கள யாரும் இங்க நெனச்சு தவம் கிடக்கல. ஹீக்கும்” என்று மலர் கூற.
“அங்க யாரு கிட்டடி பேசற” என சரஸ்வதி வந்து எட்டிப் பார்க்க. அடி பாவி மவளே! புள்ள ஊருக்கு வந்ததும் வராததுமா கழனித் தண்ணிய புள்ள மேல இப்படி ஊத்தி வச்சிருக்க. திமுறு புடிச்சவ. “நீ உள்ள வாய்யா” என்று முத்துவை சரசு அழைத்துச் செல்ல.
“நீங்க போங்க அத்தை வரேன்”, என்று முத்து கூற. சரசு உள்ளே போக.
” மலரு.. நான்… உன்ன” என முத்து வார்த்தை தடுமாற…
“அதுக்கு வேற ஆள பாரு” என மலர் உள்ளே போக.
“மலரு முத்துக்கு அந்தத் துண்ட எடுத்து கூடு”, என்று சரஸ்வதியின் குரல் கேட்க.
“இதற்குள் ராசப்பன் முத்துவை கட்டியணைத்து நலம் விசாரிக்க. ஏனுங்க இங்க வாங்களேன்” என அடுப்படியில் இருந்து சரஸ்வதியின் குரல் கேட்டது.
“இதோ வரேன்டி” என ராசப்பன் உள்ளே போனார்.
மலர் துண்டு எடுத்து முத்துவிடம் நீட்ட.
“மைடியர் செல்லம். நான் தான் ஒண்ணுமே சொல்லலையே நான் . சொல்லாமலே அதுக்கு வேற ஆள பாருனு சொல்ற. அப்போ நான் என்ன சொல்ல வந்தேன்னு “உனக்கு புரிஞ்சுதா?” என முத்து கேட்க.
“நான் எதுக்கு அதெல்லாம் யோசிக்கனும். சின்ன வயசுல நீ சொன்னது நெஞ்சில்
ஆழமாக பச்ச குத்திடுச்சி. இந்த மலரு எப்பவும் வீம்ப விட்டுத் தர மாட்டா. ஹீக்கும்” என்றாள்.
ஏய்! நீ இன்னுமா அதையெல்லாம் நினைச்சுட்டு இருக்க. அது அறியாத வயசுல தெரியாம சொன்ன வார்த்தை மலர்.
இந்த பாரு மாமா. நீ அறிஞ்சி சொன்னயோ. அறியாம சொன்னயோ. ஆனா அப்பவே உன் திமிர என் கிட்ட காட்டிட்ட. மறக்குற மாதிரி வார்த்தையா சொன்ன. வேலியில கெடக்குற சீந்தில் கொடிய தாலின்னு கழுத்துல கட்டிட்டு இனி நீ தான்டி என் பின்னால சுத்தி சுத்தி வரனும்னு சொன்ன. தொட்டதுக்கெல்லாம் என்ன அழவச்ச. அப்போ நானும் விவரம் தெரியாம நீ சொன்னதெல்லாம் கேட்டு உன்ன சுத்தி வந்தேன். அதை நான் இன்னும் மறக்கல மாமா. அது அப்போ. இப்போ நான் விவரம் தெரிஞ்சு வளர்ந்த பிள்ள. இனி உன் பின்னாடி நான் வரமாட்டேன் பார்த்துக்கோ என்றாள்.
“ஹேய்! நீ இன்னுமா அந்த சீந்தில் கொடிய மறக்கல. தென்ன ஓலைல பீப்பீ செஞ்சி வட்டிலயே மோளம் கொட்டி, வேலியோரம் கிடைச்ச பூக்கள பறிச்சி நண்பர்கள அச்சதை தூவ வச்சி அப்பவே நம்ம கல்யாணம் அமர்க்களமா நடந்துச்சி இல்ல. இப்போ நெனச்சாலும் உள்ளுக்குள்ள ஜில்லுனு இருக்கு.. நானும் இன்னும் மறக்கல மலர். அது அப்போ கைல காசு இல்லயா சிம்பிளா சீந்தில் கொடியில தாலிய கட்டினேன். இப்போ உன் மாமன் கலெக்டர் ஆகிடுவேன்ல. தங்கத்துல தாலி செஞ்சி போடுறேன் ஏன் வருங்கால பொண்டாட்டிக்கு” என்று முத்து கூற..
நீ ஜில்லாவுக்கு கலெக்டர் ஆனா மட்டும் மயங்கி உன் பின்னால வந்துடுவனா. நான் தான் வரமாட்டேனு சொல்லிட்டனே மாமா.
“ஏன் மாமன் பெத்த ரத்தினமே இந்த மாமனுக்கு நீ தான் மொத்தமுமே. மறக்கமாட்டேன், வரமாட்டேன்னு சொன்னதுக்கும் ரொம்ப சந்தோஷம் மலரு” என்று முத்து கூற.
இதுக்கு சந்தோஷமா? உனக்கு கொழுப்பு தான் இப்போ அதிகமா இருக்குல்ல. ஏன் சொல்லமாட்ட.
ஏய்! எப்பவும் நான் சொல்றத முழுசா கேட்கிறதே இல்ல. அப்பவும் சரி. இப்பவும் சரி. நான் இன்னும் முழுசா சொல்லியே முடிக்கல. என்றான் முத்து.
சொல்லித்தொலை. இதையெல்லாம் நான் கேட்கணும்னு இருக்கு என்றால் பொய்யான கோபத்தை காட்டி.
“என்னைய புடிக்கல. நான் உன் மனசுக்குள்ள இல்ல அப்படின்னு வெளியே காட்டிட்டு மாமா மாமான்னு சொல்லி சொல்லி பேசுறியே தங்கமே. அது ஒன்னு போதாதா நீ இன்னும் என்ன மறக்கலனு நான் புரிஞ்சிக்க. இந்த மனசு இருக்கே மனசு. அதுக்கு பொய் பேசத் தெரியாதாம் மலரு. அது அரிச்சந்திரனோட வம்சா வழியில வந்து இருக்கு போல. பார்த்து மலரு. பக்குவமாய் பதமாய் மாமன்கிட்ட உன்னோட வீம்ப காட்டு. இல்லனா உன் மனசுல இருக்கற மொத்தத்தையும் தன்னால வெளியே கொண்டு வந்துடுவான் உன் முத்து மாமா” என்று முத்து கூற.
“மாமான்னு சொல்றது நம்மளோட பண்பாடு, கலாச்சாரம். நீங்க எனக்கு மாமா முறை. மாமாவ மாமானு கூப்பிடாம வேற எப்படி கூப்பிடுவாங்க. அதான் கடமைக்கு கூப்பிட வேண்டி இருக்கு. வேற எந்த மண்ணாங்கட்டியும் இல்ல. நீங்க வந்த வேலைய மட்டும் பார்க்கலாம்” என்று மலர் கூற.
நான் வந்த வேலைய தான் சரியா பாக்குறேனே. மலர் விளையாட்டு போதும். சின்ன வயசுல நடந்தது வச்சிட்டு கோபப்படுற மாதிரி நடிக்காத. நான் உன் மனசுல இருக்கேன்னு எனக்கு மட்டும் இல்ல இந்த ஊருக்கே தெரியும். என் மனசு முழுக்க நீ தான் இருக்கேன்னும் உனக்கும் நல்லா தெரியும்.
“ஊரு உலகம் சொல்றதுக்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது மாமா. யாரும் என் மனசுல இல்ல” என்று அவள் இதழ்கள் மட்டுமே மறுப்பு தெரிவித்தது. “மலரின் திராட்சை விழிகளோ அவனது கூறிய விழிகளை நோக்கி நீ மட்டும் தான் மாமா இருக்க, என விழிகளால் காதல் மொழி பேச.
“கண்ணுலயே பதில் தெரியுதடி என் கண்ணழகி”, என மலரை முத்து நெருங்க. அவன் விழிகளை சந்திக்க முடியாமல் தவித்தாள். அவளுக்குள் ஒரு இனம்புரியாத உணர்வு முத்துவை தடுக்க முடியாமல் விக்கி நிற்க. முத்துவின் கரங்கள் மலரின் மென்மையான விரல்களை தொட. அப்போது மலரின் வீம்பு எட்டிப் பார்க்க. அவனை வேகமாக தள்ளி விட்டாள்.
அப்போது, முத்து சாப்பிட வாய்யா” என சரஸ்வதியின் குரல் கேட்டது.
இரு விழிகளின் கூர்மையான பார்வையும் மின்னலென வெட்டிக் கொண்டது.
தலைவாழை இலை போட்டு மாமனும், அத்தையும் சேர்ந்த முத்துவிற்கு கறி விருந்து படைக்க. வயிறும் மனமும் நிறைய மகிழ்வுடன் சாப்பிட்டு முடித்தான் முத்து.
ராசப்பன் மெல்ல முத்துவிடம் பேச்சு கொடுத்தார். “ஏம்பா! மருமவனே திடுதிப்புனு ஊரு பக்கம் காத்து வீசுது. ஏதோ பெரிய வேலைக்கு போற. கலெக்டருக்கு படிக்கிறேன்னு ஊரெல்லாம் என் தங்கச்சி அருமை பெருமையா சொல்லிட்டு இருக்கு. நீ என்னமோ ஊருக்கு வந்த நிக்கிறியே” என்றார்.
அம்மா சொன்னது உண்மைதான் மாமா. நான் பூனேல தான் வேலை பார்த்தேன். கலெக்டர் ஆகுற என்னோட லட்சியம் நம்ம ஊருக்கே தெரிஞ்ச விஷயம்தான். அம்மா, அப்பாவோட ஆசைக்காக எஞ்சினியரிங் படிச்சேன். கொஞ்ச நாள் வேலைக்கும் போயிட்டேன். என்னோட ஆசைக்காக ஒரு டிகிரியும் படிச்சுட்டேன். எதுக்காகவும் என்னுடைய லட்சியத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன் மாமா முத்து கூற.
“அதெல்லாம் சரிதான் மருமவனே. நீ கலெக்டர் ஆனா நமக்கும் நம்ம ஊரு மண்ணுக்கும் பெருமதே. அதுக்கு செய்யற வேலைய விட்டுட்டு வந்து இந்த கருசகாட்டு மண்ணுல என்ன பண்ண போற. ஏற்கனவே என் பெரிய மருமகன் காட்டுல கஷ்டப்படுறது பத்தாதா. உன் அண்ணிதான் அதான் என் பெரிய பொண்ணு எழில் கல்யாணம் முடிஞ்ச கையோட ஊருக்கு சேவை செய்யறேன், பெண்கள் முன்னேற்றம் அது இதுனு பயிற்சி எடுக்கிறேன்னு உங்க அண்ணன கல்யாணம் பண்ணின கையோட கிளம்பி போயிட்டா. யாருக்கும் அடங்காத கழுத சொன்ன பேச்சக் கேட்காம போயிட்டா. அவ நாளைக்கு ஊருக்கு வரா. இவங்கள எப்படி சரி பண்றது ஒன்னு சேர்க்கிறதுனே தெரியல. மலருக்கும் வயசு ஆகுது. உங்களுக்கும் மலருக்கும் கண்ணாலம் முடிஞ்சிட்டா பரவால்லனு நான் நினைச்சா செய்யற வேலையை வுட்டுபுட்டு வந்து இப்படி நிற்கிறீகளே” என புலம்பினார்.