Advertisement

மௌனமே 18

“ஊர கூட்டி சத்தம் போட்டு என் பொண்ண அடிச்சு நானே கேவலப்படுத்த விரும்பல. நான் படிக்காதவதே தம்பி.  ஆனாலும் சிந்திக்கிற அளவு கடவுள் அறிவு கொடுத்திருக்கான்.  என் புருஷன் வேணா புரியாம கத்துவாக. இந்த அன்னம் வேற பாத்துட்டு போய்ட்டா. இந்நேரத்துக்கு  ஊர கூட்டி தண்டோரா போட்டு இருப்பா. இதுக்கு மேல நான் உங்கள பிரிச்சு வச்சி என் பொண்ணு சொக்க தங்கம்னு சொன்னாலும் ஊர் வாய மூட முடியாது. பேசறவக பேசியே தீருவாகதே. அதுக்கு என் புள்ள புடிச்சவனோட சந்தோஷமா வாழ்ந்துட்டு போகட்டுமே” என்றாள்.

“அ.. அம்.. அம்மா”  என செண்பகம் பூவாயி காலில் விழ.  “ஆனந்தும் பூவாயி காலில் அத்தை எங்கள மன்னிச்சிடுங்க” என காலில் விழுந்தான்.

“என்னலே பண்றவ. புத்தி பேதலிச்சி போய்டுச்சா” என வரதன் கேட்க.

“இல்லைய்யா. நம்ம வாழ்க்கை. நாமதே சரியான முடிவு எடுக்கனும். நான் சொல்றத மட்டும் கேளுய்யா”  என்றாள்.

தம்பி,  “உங்க வீட்டில இந்த கல்யாணத்துக்கு சம்மதிப்பாகளா? உங்க அப்பா அம்மா கிட்ட உண்மையை சொல்லி பேசி இங்க கூட்டிட்டு வர முடியுமா? முறைப்படி வந்து பொண்ணு கேட்க சொல்ல முடியுமா?” என பூவாயி கேட்டாள்.

“நான் சத்தியமா உங்ககிட்ட இருந்து இவ்வளவு பக்குவமான ஒரு பேச்சு எதிர்பார்க்கல அத்தை” என ஆனந்தின்   கண்களில் இருந்து கண்ணீர் வர.

“காலங்காலமா இது தானே நடக்குது.  இத எதித்து நான் வேற யாருக்காவது அவளை கண்ணாலம் பண்ணி வெச்சா  அவதே  நிம்மதியா வாழ முடியுமா?  இல்ல நாங்கதே நிம்மதியா வாழ முடியுமா?  ஆசைப்பட்ட உன்னோடயே நிம்மதியா  வாழ்ந்துட்டு போகட்டுமே.  நாளைக்கு பொழுது விடியும்போது உங்க அப்பா,  அம்மாவ இங்கே வர சொல்லுக தம்பி.  முறைப்படி எல்லாம் நடத்துவோம்” என்று கூற.

செண்பகம் இதை சற்றும் எதிர்பாராதவளாய்  தன் தாயை கட்டிக்கொண்டு அழுதாள்.

“என்னடீ பண்ணிக்கிட்டு இருக்கவ.  சுய நினைவோடதே  இதெல்லாம் செய்யறியா?” என வரதன் கேட்க.

“நான் நல்லா யோசிச்சிதே செய்யறேன்.  இதுகள பிரிச்சிட்டா மட்டும் நாம என்னய்யா சொகத்த காண போறோம்.  சின்னஞ்சிறுசுக  வாழ்ந்துட்டு போகட்டும். ஊருக்கு பயந்து இதுக  வாழ்க்கைய நாசமாக்க வேணாம்”  என்று கூற.

“நீ முடிவு பண்ணா சரியாத்தே இருக்கும்னு நம்பரவன்டீ நான்.  இதுக்கு மேல நான் எதுவும் பேசமாட்டேன்  புள்ள. உன் முடிவ  நானும் ஏத்துக்கறேன்” என்று வரதன் கூறினார்.

ஆனந்த் மகிழ்ச்சியுடன் அவர்கள் முன்னிலையிலேயே தனது பெற்றோருக்கு தொலைபேசியுடன் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூற.

அவர்களும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. உன்னோட ஆசைக்கு நாங்க எப்பவும் குறுக்க நிக்கலடா.  “நாளைக்கு வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் தான். நிச்சயதார்த்தமே பண்ணிடலாம்”  என்று கூற.

அதை கேட்டு வரதனும் கூட  மகிழ்ச்சியடைந்தான். “ பரவால்ல கால் காசுனாலும் கவர்மெண்ட் மாப்பிள்ளைதே.  நம்ம பொண்ணுக்கு நல்ல காலந்தே” என்று  மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

“மறுநாள் காலை தன் பொண்ணுக்கும், ஆனந்திற்கும் நிச்சயதார்த்தம்” என பூவாயி ஊருக்குள் அழைப்பு விடுக்க. அன்னம் வாயடைத்துப் போனாள்.

பொழுது புலர்ந்தது. வெள்ளிக்கிழமை ஆனந்தின் பெற்றோர் நிச்சயம் பண்ண தாம்பூல தட்டோடு வந்து சேர்ந்தனர்.

செண்பகம் பச்சை வர்ணத்தில் தங்கநிற சரிகை கொண்ட பட்டுப்புடவை கட்டி, கழுத்தில் ஒரு சிறிய செயின், கையில் கண்ணாடி வளையல் குலுங்க, நேர்வகிடெடுத்து தலைவாரி அழகாக பின்னலிட்டு மல்லிகை சரத்தினை வைத்து, நெற்றியில் சிறிய வட்டமான பொட்டும், கீற்றாக திருநீறும், காதில் சிறிய ஜிமிக்கியும் பார்க்க அழகான தேவதை போலத்தான் இருந்தாள்.

இவர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் முன்னிலையில்  அவர்கள் சக்திக்கு ஏற்ப நிச்சயதார்த்தம் மிகச் சிறப்பாக நடத்தி முடித்தனர்.

“அனைவருக்கும் ஆச்சரியம் தான்.  நம்ம ஊரு பிள்ளைக்கு கவர்மெண்ட் மாப்பிள்ளை. பரவால செண்பகம்  கொடுத்து வச்சவதே”  என பேசினார்கள்.

மறுநாள் அதிகாலை  வேளையில் யாருமே எதிர்பாராத வண்ணம் முத்து,  மலரின் வீட்டில்  வந்து நின்றான்.  அனைவருக்கும் ஆச்சரியம் தான்.

“வாங்க மாப்ள” என ராசைய்யா உள்ளே அழைத்தார்.

“என்னடா இப்பத்தேன் புத்திக்கு உரச்சதோ.  இப்பயாவது நல்ல முடிவோடதே வந்திருக்கியா? தைமாசம் தேதி வெச்சிடலாமா?” என தாத்தா கேட்க.

ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் வந்தேன் தாத்தா.

“என்னடா பேராண்டி. சொல்லு” எனக் கேட்க.

“நான் இன்டர்வியூல செலக்ட் ஆகிட்டேன் தாத்தா.  எல்லா பரிச்சைலயும் பாஸ் ஆகிட்டேன்.   இனி கலெக்டராக ட்ரெயினிங் மட்டும் போகனும் தாத்தா” என்றான்.

“அப்படியா? முருகா” என கைகளை தலைக்கு மேலாக உயர்த்தி கும்பிட்டார். “நான் கும்பிட்ட சாமி நம்மள கைவிடலய்யா. நம்ம குடும்பத்தில இருந்து நம்ம தலைமுறையிலயே முதல்  முறையா நீதானய்யா உசந்த பதவிக்கு போகப்போற. நீ நல்லா இருப்படா என் சாமி” என தாத்தா முத்துவை கட்டிக் கொண்டார்.

ஆச்சியோ,  “முத்துவை அரவணைத்து உச்சி முகர்ந்தார். என் தங்கம்” என கன்னத்தை நீவி நெட்டி முறிக்க.

ராசைய்யாவிற்கும், சரசுவுக்கும் சந்தோஷம் தாளவில்லை.. “நம்ம மாப்ள கலெக்டர் ஆகப் போறாரு. மலர் இனி கலெக்டர் பொண்டாட்டி” என ராசைய்யா சொல்லிக் கொண்டார்.

மலருக்கு உள்ளூர மகிழ்ச்சி தான்.. ஆனாலும் மாமனவன் மனம் அறிந்தவளாயிற்றே. அவன் எண்ண ஓட்டத்தை கண்களில் உணர்ந்தவாய் கண்கலங்கி நின்றாள்.

“முத்து ஊருக்கு போய்ட்டு எப்படா வருவ” என தாத்தா கேட்க.

ட்ரெயினிங் முடிஞ்சி வர நாலு வருஷம்  ஆகும் தாத்தா. ட்ரெயினிங் உத்ர்காண்ட்ல இருக்க  முசோரில நடக்குது.  ட்ரெய்னிங் முடிஞ்சா தான் திரும்ப  ஊருக்கு வருவேன். நாளைக்கு காலையில ட்ரெயின் கிளம்புறேன் தாத்தா.  நீங்க எல்லாரும் வந்து என்னை வாழ்த்தி வழி அனுப்பி வைக்கணும் என்று கூறினான்.

அனைவருக்கும் மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், நாளைக்கு கிளம்ப வேண்டும் என்றவுடன்  மகிழ்ச்சியைவிட  அதிர்ச்சியே  அதிகமாகவே இருந்தது.

மலர்களிலிருந்து கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.  கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.

அதைப் பார்த்த முத்து, ‘மலர்’ என்று அழைத்தவனின் குரல் அடித்தொண்டையிலிருந்து அதற்கு மேல் எழவில்லை.. அவளது ஈரவிழிகளை பார்க்க சக்தியற்றவனாய் நின்றான். அனைத்திலும் வெற்றி பெற்றவன் மலரின் கண்ணீருக்கு முன்பாக தோற்று போய் நின்றான்.

முத்து எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் அவனது நாக்கு  வார்த்தைகளை உச்சரிக்க  ஒத்துழைப்புத் தர மறுத்தது.  அவன் கண்களில் கண்ணீர் துளிகள் மெல்ல கரைந்தது.  உதடுகள் துடித்தது.  துன்பப்பட்டு மீண்டும் அவளது பெயரை உச்சரிக்க முயற்சித்தான்.

“ம… மலர்…  மலர்” என்று கூறியவனின் குரல் அவனுக்குள் மட்டுமே கேட்டது. “அவன் விழிகள்  கரை உடைந்து கண்ணீர் துளிகள்  மெல்ல எட்டிப் பார்த்தது. இப்படி ஒரு சம்பவம் நடக்க கூடாதுன்னு நினைச்சி தான மெஸேஜ் கூட பண்ணாம இருந்தேன். எது நடக்கக் கூடாதுனு நினச்சனோ அதுவே இப்ப சரியா நடக்குதே. கடவுளே! எனக்கு இந்த வலிய தாங்கிக்கற சக்திய கொடு”  என மனதில் வேண்டிக் கொண்டான். “மனதை ஒரு நிலைப்படுத்து” என அவனது ஆழ்மனம் கட்டளையிட்டது.   மனதை  கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தான். மலரின் கண்ணீர் அவனை விடவில்லை.

தாத்தாவோ,  ஐயா முத்து!  “நீ கலெக்டர் ஆகறது என்னமோ எங்களுக்கு சந்தோஷந்தே. ஆனா போறதுக்கு முன்னாடி  இந்த புள்ள கழுத்தில  ஒரு மஞ்சகயித்த  கட்டிட்டு போய்யா.  நீ போய்ட்டு வர நாலு வருஷம் ஆகும்னு சொல்ற.  இந்த புள்ள மனசு நெனச்சு பாத்தியாடா. இவ கண்ணீர பாக்க எங்களால முடியாதுய்யா” என தாத்தா கண்கலங்க.

ஆச்சியோ,  “இதுதே நீ  யோசிச்சி எடுக்குற முடிவாலே.  கேக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்குலே. நீ எங்க வேணாம் போடா.  எத்தனை வருஷம் கழிச்சு வேணாலும் வாடா.  நான் வேண்டாம்னு சொல்லல.  என் பேத்தி கழுத்தில் ஒரு மஞ்சக்கயித்த கட்டிட்டு போடா.  அந்த புள்ள உன்னையே நினைச்சுட்டு கிடக்கும்.  அவளுக்கு யாருடா ஆறுதல் சொல்வாக” என ஆச்சி ஒரு புறம் கண்கலங்க.

ராசைய்யா  மகளின் கண்ணீரைப் பார்க்க திராணியற்றவராய் அப்படியே சுவரில் சாய்ந்து கீழே அமர்ந்தார்.  அதை பார்த்த சரசு  அவர் அருகில் வந்தாள். ஏனுங்க என்றாள்.

“ஒன்னும் இல்ல சரசு” என கையசைத்தார்.  “எம்மவ கலங்கி நிக்கறத என்னால பாக்க முடியாது மாப்ள.  ஒரு நல்ல முடிவா எடுத்துட்டு போனா நல்லா இருக்கும்” என்று கூற.

முத்து, “அவர்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான்.  என்னோட மனசு கண்டிப்பா மலருக்கு புரியும்னு நான் நம்புறேன் மாமா.  நிச்சயமாக அவ  எனக்காக காத்திருப்பா. என்னோட லட்சியத்துக்காக என்னோட காதல  கண்கலங்க  வச்சிட்டு தான் போறேன்.
மலரு  உனக்கு நம்ம காதல் மேல நம்பிக்கை இருக்கு தானே. சொல்லு மலர்” என்றான்.

“நம்ம காதல் மேல முழுநம்பிக்கை இருக்கு மாமா.  அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும் சொல்லுவேன்.. காதல்ங்கிறது வெறும் வார்த்தைகள்ல இல்ல மாமா. அடி மனசுல ஆழமா பதிஞ்சி இருக்கு. நீங்க என்ன விட்டு பிரிஞ்சி போகல. லட்சியத்துக்காக  நமக்குள்ள வரப்போற ஒரு சின்ன இடைவெளி. அவ்வளவு தான மாமா” என்றாள். முத்து ஆழ்மனதில் இருந்த எண்ண ஓட்டங்களை  அப்படியே கூறினாலே தவிர,  மலரின் மனதில் பிரிவின் தீராத வலிகள் இருக்கத்தான் செய்தது.

அதுக்கு பேர் இடைவெளி இல்ல மலர்.

இடைவெளி என்பது
காட்சிகளின் தூரம் மட்டுமே
காதலிக்கும் இதயத்திற்கு அல்ல…
தொலைதூரம் என்பது
ஆகாயத்திற்கு மட்டுமே
காதலின் நினைவுகளுக்கு அல்ல..

ஆறுதல் வார்த்தைகள் ஆயிரம் சொல்லலாம் மாமா.. ஆனா.. ஆனா.. மாமா.. உங்கள விட்டு எப்படி மாமா…

“இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பல.  நாளைக்கு காலையில எல்லாரும் ஸ்டேஷனுக்கு வந்து என்னை வழியனுப்பி வைக்க நிச்சயமாக வருவீங்கனு  என்ன நம்பறேன்”  என்று மலரைப் பார்த்தான்.

மலரின் கன்னங்களில்  கண்ணீர் வழிந்து கொண்டிருக்க.  வார்த்தைகள் வராமல் தவித்தாள்.  கண்ணீரை மட்டுமே அவனுக்கு பதில் ஆக்கினாள்.

“மலர் நான்” என்று அவளைப் பார்க்க.

அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாதவளாய் தனது அறைக்கு ஓடினாள்.  தன்னால் முடிந்தவரை அவளது அழுகையை  கொட்டித் தீர்க்க.

அதை பார்க்க முடியாதவனாய் அந்த இடத்தை விட்டு வேகமாக கடந்து வெளியில் செல்ல.  அப்பொழுது  ஜில்லு அவனை சுற்றி வளைத்து போக விடாமல் தடுத்து, அவன் மேல் தாவியது.

“உன்னோட பாசத்துக்கு நான் என்ன செய்யப் போறேன்டா.  நான் வர வரைக்கும் நீ உன் அக்காவ பாத்துக்கோ”  என்று ஜில்லுவை  தடவிக் கொடுத்து விட்டு சென்றான்.

தொடரும்…..

Advertisement