மௌனமே 17

செண்பகம் ஒவ்வொரு நொடியும் ஆனந்தின் வீட்டுக் கதவை நோக்கி பார்க்கத் தொடங்கினாள். பூட்டப்பட்ட கதவுகள் திறக்கப்படவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. “என்ன ஆயிருக்கும். திடீர்னு வீடு பூட்டி இருக்கு” என மனதிற்குள் கேள்வி எழுந்தது.
“ஒவ்வொரு முறையும் சண்டக்கோழியாக அவனிடம் முட்டி மோதிக் கொண்ட நிமிடங்கள் கண் முன்னே வந்து சென்றது. அப்பொழுது எல்லாம் இல்லாத ஒரு இனம் புரியாத இழப்பும், வலியும் இப்பொழுது இதயத்தில் புரண்டு கொண்டு இருந்தது. நான் ஏன் இப்படி இருக்கேன்” என அவளுக்குள்ளாகவே கேள்விகளை கேட்டுக் கொண்டாள். “எங்கே போயிருப்பான். எப்ப வருவான். எதுவுமே தெரியலையே” என மனதளவில் புலம்பித் தவித்துக் கொண்டிருந்தாள்.
“ஒவ்வொரு நிமிடங்களும் யுகங்களாக நகர்ந்தது. சின்ன சின்ன சண்டையிட்ட அந்த நினைவுகள் பட்டாம்பூச்சியாக சிறகடித்து அவளது மனதிற்குள் வட்டமிட்டது. நமக்குள்ள இருக்கு இந்த எண்ணம் அவனோடு மனசுலயும் இருக்குமா?” என நினைத்தாள்.
அதே போலத்தான் மலரும், முத்துவின் நினைவுகளுடன் போராடிக் கொண்டிருந்தாள். என்ன தான் வெளியில் வீராப்பாக பேசினாலும், மலரின் எண்ண அலைகள் முத்துவின் நினைவுகளை தன் இதயம் எனும் தூரிகையைக் கொண்டு வண்ண வண்ண ஓவியங்களாய் மனதிற்குள் படம் வரைந்து கொண்டிருந்தது.
முத்துவை எண்ணி மலரின் இமைகளுக்கு உறக்கம் தடை போட்டது. காதல் எனும் மயக்கம் உருவாகி, அவனை காணாமல் அவளது ஒட்டு மொத்த ஆசைகளும் சருகாகி போனதென கண்விழிகள் கண்ணீர் இன்றி உலர்ந்து போனது. அவனைத் தேடித்தேடி இமைகள் சோர்ந்து போனது. காதல் எனும் கவிதை பரிமாற மாமனவன் வரவை எண்ணி ஏங்கிப் போனாள். கையில் புத்தகங்களை வைத்துக்கொண்டு தனது தனிமைக்கு துணையாக்கிக் கொண்டாள்.
அவன் மேல் கொண்ட காதல் மயக்கமும், அவனில்லாத இந்த தனிமையும் வாழ்க்கையையே சூன்யமாக்கி விடும் போலிருந்தது. காதல் பிரிவின் கொடுமையை இப்போது அனுபவிக்கும் போதுதான் அவளுக்கு, அவன் மேல் வைத்த அந்த பிரமாண்டமான காதல் அவள் உள்ளத்திற்கு முழுதாய் புரிந்தது.
நாட்கள் மட்டும் எதையும் சிந்திக்காமல் நகர்ந்து சென்றது.
முத்து தான் எதிர்பார்த்த அந்த அழகான தருணங்களை கடந்து ஐஏஎஸ் கனவிற்கான இன்டர்வியூவை நூறு சதவீதம் மனநிறைவோடு முடித்துவிட்டு அதே உற்சாகத்துடன் டெல்லியில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தான்.
இதுவரை இல்லாத ஒரு உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் காணப்பட்டான். வெற்றி நிச்சயம் என்பது அவனது முகத்திலேயே தெரிந்தது. தனது பெற்றோருக்கு மிகுந்த உற்சாகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினான். இன்று மாலை தான் ஊருக்கு வந்து சேர்வதை தகவலாக கூறினான். அவர்களுடன் பேசி முடித்துவிட்டு அடுத்து மலரின் தொலைபேசி எண்ணிற்கு உயிர் கொடுத்தான்.
ஒவ்வொரு நிமிடமும் அவனுக்காகவே எதிர்பார்த்து காத்திருந்த மலரின் அன்பு உள்ளம் ஏனோ இப்பொழுது அழைப்பினை ஏற்க தயங்கியது. கண்களில் கண்ணீர் மட்டுமே வெளிப்பட்டது. ஒரு வித தயக்கத்துடன் எடுத்து அவள் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருக்க.
முத்துவே பேசத் தொடங்கினான். மலர் உன்னோட மௌனத்துக்கு அர்த்தம் நிச்சயமா எனக்கு புரியும். புரியாம இல்ல. அந்த சூழ்நிலையில் நான் எது சொன்னாலும் நீ நிச்சயமா கேட்க மாட்டேன்னு எனக்கு தெரியும். அதான் ஊருக்கு போகும்போது நான் உன்கிட்ட சொல்லல. என் மேல உனக்கு கோபம் கண்டிப்பா இருக்கும். என்னோட மனசு முழுக்க என்னோட ஐஏஎஸ் கனவு தான் இருக்கு. அதுவும் உனக்கு தெரியும். நம்மளோட உறவு என்னைக்குமே நிரந்தரமானது. அதுவும் உனக்கு தெரியும். எப்பவுமே பேசிக்கிட்டே இருந்தா தான் காதல் என்று அர்த்தமில்ல. மௌனம் கூட காதல்தான் மலர். நான் அன்னைக்கு சொல்லிட்டு கிளம்பி இருந்தா கண்டிப்பா நீ என்ன டென்ஷன் பண்ணி இருப்ப. இன்டர்வியூ என்னால சரியா கூட அட்டென்ட் பண்ண முடியாம போயிருக்கும். அதனாலதான் நான் சொல்லாமலே போனேன். இதெல்லாம் இப்போ உனக்கு புரியாது மலர். ஒருநாள் நிச்சயமா என்னோட மனச நீ புரிஞ்சு புரிஞ்சிக்கிற நேரம் வரும் என்றான்.
மலரிடம் இருந்து கண்ணீர் மட்டுமே பதிலாக வந்தது.
“இன்னும் உன்னுடைய கோபம் குறையலையா?” மலர் என்றான். “என்ன எப்ப தான்டி நீ முழுசா புரிஞ்சுக்குவ” எனக் கேட்க.
“என்னோட மனச எப்ப மாமா உங்களுக்கு முழுசா புரியும். நீங்க ஏன் இப்படி இருக்கீங்க. என்கிட்ட சொல்லிட்டு போனா டென்ஷனா இருக்குமா? இது என்ன மாமா புதுசா இருக்கு. என் மேல இவ்வளவு தான் உங்களுக்கு நம்பிக்கையா? கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா” என்றாள்.
“மலர் இப்பவும் சொல்றேன். கண்டிப்பா என்னை புரிஞ்சுக்க நாள் வரும். ஒன்னு மட்டும் மனசுல ஆழமா வச்சுக்கோ. நீதான் என் பொண்டாட்டி. நீதான் என்னோட உலகம். நீதான் என்னோட வாழ்க்கை. இதை யாராலும் மாத்த முடியாது. சூழ்நிலைகள் எப்படி வேணா இருக்கும். ஆனா இது மட்டும் மாறாது. இது என் அம்மா மேல சத்தியம்” என்றான்.
இப்படி சொல்லி சொல்லியே தான் மாமா என்னை ஒதுக்கி வச்சிருக்கிங்க.
“இன்னைக்கு சாயங்காலம் ஊருக்கு வந்து சேர்ந்திடுவேன். வந்து பேசிக்கலாம்” என்று கூறிவிட்டு போனை இணைப்பை துண்டித்தான்.
“மலருக்கு ஏனோ அவனது குரலை கேட்டது மனதை மெல்லிய மயிலிறகால் வருடியதைப் போன்று இதமாக இருந்தது. அப்பொழுதுதான் அவளது முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. ஆனா ஏன் மாமா இப்படி பண்றாரு. அது தான் கஷ்டமா இருக்கு” என நினைத்தாள். அதன்பிறகு மலர் உற்சாகமாக தனது வேலைகளை தொடர்ந்தாள்.
அன்று மாலை தனது சொந்த ஊருக்கு வந்து சேர்ந்திருந்தான். அவன் வந்த அதே பேருந்தில் ஆனந்தும் வந்து இறங்க. இருவரும் தற்காலிகமாக அறிமுகப்படுத்திக் கொண்டு ஒரு நட்புறவை மேற்கொண்டனர். இருவரும் அவரவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
முத்துவின் வரவைக் கண்டு கண்ணன் எழில் அவனது பெற்றோர்கள் அனைவரும் ஏகப்பட்ட மகிழ்ச்சி அடைந்தனர். இந்த முறை வெற்றி நிச்சயம் என்பது முகத்தில் தெரிந்தது.
“இத விட சந்தோஷம் வேறு எதுவுமே இல்லலே” என மணிவண்ணன் கண்கலங்க.
மாரியம்மாள், “என்னங்க இது சின்னபுள்ள மாதிரி கண்கலங்கிட்டு. பொறுமையா இருங்க. எல்லாம் நல்லாதாதே நடக்கும்” என்று கூற.
எழிலோ, “நம்ம ஊருக்கே கலெக்டரா வந்துட்டா கொஞ்சம் எங்களையும் கவனிங்க சார். அப்படியே இந்த சிறு தொழில் மையம் நம்ம ஊருக்கே கொண்டு வந்துட்டா ரொம்ப நல்லா இருக்கும். கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்” என்றாள்.
கண்ணனோ, “இப்பயும் பொது சேவையிலயே தான கண்ணா இருக்க. நமக்குனு எதுவும் கேட்க மாட்டியா” என்றான்.
எனக்கு நீங்க இருக்கீங்க. உங்களுக்கு நான் இருக்கேன். இதுக்கு மேல என்ன வேணும் என்றாள்.
முத்துவோ, “என்ன சித்தப்பானு கூப்பிட ஒரு மகனோ, மகளோ வந்தா போதும்” என்றான்.
எழில் வெட்கத்தால் முகத்தை மூடிக்கொண்டாள்.
“நீ வருவேன்னு உனக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சிருக்கேன். குளிச்சிட்டு முதல்ல வந்து சாப்பிடு” என மாரியம்மாள் கூற.
முத்து உற்சாகத்தோடு தான் கொண்டு வந்த பையை வைத்துவிட்டு ஒரு குளியல் போட்டுவிட்டு சாப்பிட வந்தான்.
இங்கு செண்பகம் தனது விழிகளை ஆனந்தின் வரவிற்காக வழி மீது வைத்து காத்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் நடந்து ஆனந்த் வருவது தெரிந்தது. தன்னையுமறியாமல் கண்கலங்கிய எழுந்து நின்றாள். சுற்றிலும் பார்த்தாள். யாரும் இல்லை. வேலைக்கு சென்ற தனது பெற்றோரும் இன்னும் வரவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, ஆனந்த் அருகில் வர காத்திருந்தாள்.
அருகில் வந்தவன் செண்பகத்தின் கண்களைப் பார்த்து அவளின் மனது உணர்ந்திருந்தாலும், அதை வெளிக்காட்டாமல், “என்னங்க வெளியவே நிக்கிறீங்க. சமைக்கலையா?” எனக் கேட்டான்.
செண்பகம் பதில் பேச முடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க. அவள் பேசாவிட்டாலும் விழிநீர் பேசி கண்ணீரால் காட்டிக்கொடுத்தது.
“ஏங்க கண்கலங்கறிங்க. என்ன ஆச்சு?” ஆனந்த் கேட்க.
“ரொம்ப நடிக்காதிங்க. சொல்லாம கொள்ளாம எங்க போனீங்க. உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா?” என்றாள்.
நடிக்கிறேனா? எங்க அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு போன் வந்தது. அதான் சொல்ல முடியல அவசரமா கிளம்பி போய்ட்டேங்க. அதுக்கு ஏங்க திட்டுறீங்க.
“எனக்கு உங்களை பார்த்த உடனே திட்டனும்னு வேண்டுதல்” என்றாள்.
ஆனந்தால் அவளது மனதை நன்றாக உணர முடிந்தது. அவனுடைய ஆழ்மனதில் செண்பகம் ஏற்கனவே அடித்தளம் இட்டு அமர்ந்து இருக்க. அதை மறைத்துக் கொண்டு, “நான் போனா உங்களுக்கு என்ன? நீங்க அழனும். என்ன கண்டாலே உங்களுக்கு கோபம் தான் வரும்” என்றான்.
அதான் சொன்னேன்ல. வேண்டுதல்னு. “ஒருவேள நாம மட்டும் தான் நினைக்கிறோமோ. இவன் மனசுல அப்படி எதுவும் இல்லையோ?” என மனதுக்குள் சிறு குழப்பத்துடன் செண்பகம் சிந்திக்க. கண்ணீரை துடைத்துக்கொண்டே, ஒன்னும் இல்ல. நீங்க போங்க என்றாள்.
“ஒன்னுமே இல்லையா?” என்றான் ஆனந்த்.
செண்பகம் மௌனமாக அவனைப் பார்க்க.
“நீங்கதான சொல்லுவீங்க. ஒன்னும் இல்லன்னா ஏதோ இருக்குன்னு அர்த்தம்னு. அப்போ என்னமோ இருக்கு சொல்லுங்க” என்றான்.
அவனின் குறும்பு பார்வையில் அவனுக்கும் தன் மீது காதல் இருப்பதை உணர்ந்து கொண்டவள், “அது உங்களுக்கே தெரியும். நான் ஏன் சொல்லணும்” என்றாள்.
“சத்தியமா எனக்கு தெரியாதுங்க. நீங்களே சொல்லுங்க” என்றான்.
தெரியாமலே இருக்கட்டும். கிளம்புங்க.
ஐயோ! ஏங்க மறுபடியும் ஃபர்ஸ்ட்ல இருந்தா. என்னால முடியாதுங்க. நீங்க இறங்கி வரும் போதே நான் சொல்லிடணும். அதான் சரி. நான் நினைச்சது சரியான்னு தெரில. தப்பா இருந்தா திட்டுங்க, அடிங்க. ஆனா ஊரைக் கூட்டிடாதீங்க. ஆனந்த் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு செண்பா ‘ஐ லவ் யூ’ என்றான்.
“செண்பகத்திற்கு சந்தோஷத்தில் கண்ணீர் அருவியாய் கொட்ட. வார்த்தை வராமல் நா.. நான்.. நானும் தான்” என்றாள்.
“நானும் தான்னு சொன்னா. எனக்கு புரியலையே” என்றான்.
போங்க. எனக்கு வெட்கமா இருக்கு.
செண்பா, ஒரே ஒரு முறை சொல்லு. ‘ப்ளீஸ்’ என்றான்.
செண்பகம், “வெட்கத்தால் முகம் சிவக்க, ‘ஐ லவ் யூ’ ஆனந்த்” என முகத்தை மூடிக்கொண்டாள்.
அப்பா! “இந்த வார்த்தையை கேட்க எத்தனை திட்டு, எத்தனை முறைப்பு” என அவளது கை விரல்களோடு தனது விரல்களை கோர்த்துக் கொண்டான்.
“சொல்லாம திடீர்னு போய்ட்டிங்க. சண்டை போடும் போது ஒன்னும் தெரில. ஆனா நீங்க இல்லாதப்போ மனசு பட்டபாடு இருக்கே. உங்கள பாக்காம துடிச்சி போய்ட்டேங்க” என்றாள்.
மனசுல இவ்வளவு ஆசைய வச்சிகிட்டு பாக்கும் போதெல்லாம் முறச்சியே செண்பா. அதெல்லாம் நடிப்பா?
அதெல்லாம் உண்மை தான். நீங்க இங்கயே இருந்து சண்டை போட்ட வரைக்கும் ஒன்னும் தெரில. நீங்க இல்லாத இந்த நாட்கள்ல தான் நீங்க எனக்குள்ள வந்ததையே உணர்ந்தேன்.
அப்போ ஊருக்கு போகாம இங்கயே இருந்திருந்தா இன்னமும் என்கிட்ட சண்டை போட்டுட்டு தான் இருந்திருப்ப போல. அடிப்பாவி. நானும் ஊருக்கு போன பிறகு தான் செண்பா உன் மேல இருக்க காதல உணர்ந்தேன். உன்ன பாக்காத இந்த நாட்கள் தான் எனக்குள்ள நீ இருக்கனு புரிய வச்சது. உன்ன பாக்காம ஒரு நாள் கூட இருக்க முடியாது செண்பா என்றான்.
ஆனந்த் இதெல்லாம் சரியா வருமா? நாம இருக்கிறது கிராமம். இவங்க நம்ம காதலை ஏத்துக்க வாய்ப்பு இருக்கா? எனக்கு பயமா இருக்கு.
அதெல்லாம் நான் உங்க வீட்டில பேசி புரிய வைக்கிறேன் செண்பா. நீ மட்டும் அமைதியா இருந்தா போதும்.
“என்னோட பேர இதுவரைக்கும் செண்பானு யாருமே சொன்னதேயில்லை. ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.
“அதான் நான் சொல்லிட்டேன்ல. எனக்கு அதான் ரொம்ப பிடிச்சிருக்கு” என்று கூறிக் கொண்டிருக்க.
யாரோ வரும் காலடியோசை கேட்க. “நீங்க போங்க. அப்பறம் பேசிக்கலாம்” என்றாள்.
செண்பகத்தை பிரிய மனமில்லை என்றாலும், சூழ்நிலை கருதி தனது வீட்டை நோக்கி நடந்தான்.
அன்று இரவு, “மலர் முத்துவிடம் இருந்து குறுஞ்செய்தி வரும்” என ஆவலுடன் எதிர்பார்த்தாள். ஆனால் வரவில்லை. இவளே குறுஞ்செய்தி ஒன்று ‘மாமா’ என அனுப்பினாள். அதற்கும் பதில் இல்லை. “இந்த மாமாவை புரிஞ்சுக்கவே முடியல. ஏன் இப்படி பண்றாரு” என நினைத்தாள். தூக்கமின்றி தவித்துக் கொண்டு இருந்தாள்.
மலரின் குறுஞ்செய்தி பார்த்து முத்துவின் மனம் படபடத்தது. பதில் அனுப்ப கைகள் துடித்தது. ‘மலர்’ என உச்சரிக்கும் போதே கண்களில் கண்ணீர் வழிந்தது. “நம்மோட எதிர்காலத்துக்காக இந்த சோதனைகள நாம கடந்து தான் ஆகனும். உன்னோட பிரிவு எனக்கும் தாங்க முடியாத வலி தான் மலர். இந்த கடினமான பயணத்த கடந்து வந்துட்டா வாழ்நாள் முழுவதும் மொத்த காதலையும் கொட்டி கொடுத்து என்னோட உயிரா உன்ன இதயத்துல சுமப்பேன்டீ என் தங்கமயிலு. என் உயிரே நீதானே மலர். உன்கிட்ட இப்போ பேசினா கண்டிப்பா ஒரு அடி கூட என்னால இங்கிருந்து நகர முடியாது. அதனால மௌனமா இருப்பதே சிறந்தது. என்னைய மன்னிச்சிடு மலர்” என அழுது துவண்டு போனான்.
பகலவன் தனது பணிகளை இனிதே தொடர்ந்திருக்க. இதற்கு மேலாவது முத்துவிடமிருந்து ஏதாவது நல்ல பதிலாக வரும் என்று மலரின் குடும்பத்தார் காத்துக்கொண்டிருந்தனர். ஆனாலும் முத்து வீட்டிற்கு வரவில்லை. முத்துவின் பதிலும் வரவில்லை.
“என்னதான் ஆச்சு இந்த பயலுக்கு” என பொறுமை இழந்த தாத்தா, “அவனுக்கு ஒரு போன் போட்டு குடுங்கல. நானே ரெண்டுல ஒன்னு கேக்கிறேன்லே” என்று கூற.
மலரோ, “அதெல்லாம் வேண்டாம் தாத்தா. அவர் மனசுல என்ன இருக்கோ. அதன்படி அவரும் நடக்கட்டும். யாரும் அவரைக் கட்டாயப் படுத்த வேண்டாம்” என்று கூறிவிட்டாள்.
“கண்ணனின் வாழ்க்கை ஒரு புறம் தோட்ட வேலை, சிறு தொழில் மையம், பிறருக்கு உதவுவது” என அருமையாக செல்லத் தொடங்கியது. கண்ணனும், எழிலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அவர்களது வாழ்க்கை அழகாக நகரத் தொடங்கியது.
எலியும் பூனையுமாக இருந்த இவங்களோட வாழ்க்கை இன்னிக்கு எவ்ளோ அழகா இருக்கே என மாரியம்மாளும், மணிவண்ணனும் பூரித்துப் போயினர்.
முத்து தனது திருமணத்தை பற்றிய எந்த பேச்சும் எடுக்காமல், யாருக்கும் பிடி கொடுக்காமல் தனது தந்தையுடன் தோட்ட வேலைகளை பகிர்ந்து கொண்டிருந்தான். வீட்டில் பலமுறை திருமண பேச்சு எடுத்தும் பிடி கொடுக்காமலேயே இருந்தான். நாட்கள் மட்டும் நகர்ந்து கொண்டே இருந்தது.
இந்த இடைப்பட்ட வேளையில் செண்பகம் ஆனந்தின் காதல் நன்றாக வளர்ந்து கொண்டிருந்தது. செண்பகம் வி.ஏ.ஓ தேர்வு எழுதி முடித்திருந்தாள்.
செண்பகமும், ஆனந்தும் தாங்கள் வழக்கமாக சந்திக்கும் கரும்பு தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
தற்செயலாக வரதனும் பூவாயும் தோட்ட வேலைகளை முடித்துவிட்டு அந்த வழியாக வர. அவர்களோடு அன்னமும், பழனிச்சாமியும் வந்தனர்.
அப்போது செண்பகம், ஆனந்த் இருவரையும் அவர்கள் பார்க்க நேர்ந்தது. வரதனுக்கு வந்த கோபத்திற்கு எல்லையே இல்லை.
இவர்களைப் பார்த்தவுடன் பதறிப்போய் இருவரும் எழுந்து நின்றனர்.
“குடும்ப மானத்தையே சந்தி சிரிக்கவச்சிட்டியே பாவிமகளே!” என அடிக்க கை ஓங்கினார்.
ஆனாலும் பூவாயி வரதனை அடக்கி தன் மகளை வீட்டுக்கு கிளம்ப சொன்னாள்.
அன்னமோ, அடி ஆத்தே! இங்க பாருடியம்மா கூத்த. நல்ல கவர்மெண்ட் மாப்ளையா இல்ல வளச்சி போட்டிருக்கா. எத்தன நாளா இந்த திருட்டுத்தனம் நடக்குதோ. அன்னைக்கே சொன்னேன். நம்ம பேச்சதே யாரும் மதிக்கறதில்லையே என்றாள்.
அன்னம், “உனக்கு ஊரு வம்ப வாங்கறதே பொழப்பா போகுது. வாயமூடிகிட்டு வீட்டுக்கு வாடீ” என அன்னத்தை இழுத்துக்கொண்டு போனார்.
அய்யோ! இந்த அன்னம் வேற பாத்துட்டாளே. இனி சொல்லவா வேணும். தலைல இடிய இறக்கிட்டாளே. நான் என்ன செய்யப்போறேன். ஊருக்குள்ள இனி எப்படி தலகாட்டுவேன். இனியும் உசுரோட இருக்கனுமா? என புலம்பினார்.
“யோவ்! இதுக்கு மேல தான் நாம தலநிமிந்து நிக்கனும். முதல்ல வீட்டுக்கு வா” என வீட்டுக்கு மகளையும் சேர்த்து இழுத்து வந்தனர்.
வீட்டிற்கு வந்த பூவாயி வரதனை எதுவும் பேச விடாமல் அடக்கி உட்கார வைத்தார். ஊருக்கு முன்னாடி நீங்களே உங்க மகள கேவலப்படுத்தாதீக.
“அவ நாலெழுத்து படிச்சவ. அவளுக்கே புரியனும். நம்ம வயசுக்கு நாமளும் பக்குவமா நடந்துக்கனுமய்யா. அதான் நமக்கு மருவாதை” என்று கூறியவள் ‘விறுவிறு’ வென வெளியே வந்தாள். ஆனந்த் வீட்டு வாசலில் நிற்க.
“தம்பி! இங்க வாங்க” என தனது வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
“அடியேய்! உனக்கு கிறுக்கு பிடிச்சிருக்காலே. பைத்தியக்காரி. என்னடீ பண்றவ” என வரதன் கோவத்தில் கொந்தளிக்க.
இது கிராமந்தே. நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இங்கே நடக்காது. அதை இந்த ஊர் உலகமும் ஏத்துக்க போறது இல்ல. எப்படி ஏசுவாகனு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். இதெல்லாம் நடக்குமானு கூட படிச்சவக நீங்க யோசிச்சு இருக்க மாட்டீகளா?
ஆனந்த் தலை குனிந்து மௌனமாக நின்றவன், “ஊர் உலகத்த பத்திலாம் எனக்கு கவலையில்லங்க. உங்க பொண்ண எனக்கு கட்டிகொடுங்க. ராணி மாதிரி வச்சிப்பேன். எனக்கு உங்க ரெண்டு பேரோட சம்மதம் மட்டும் போதும்” என்றான்.
“செண்பகமோ என்ன நடக்கப்போவுதோ?” என மனதளவில் துடித்துக் கொண்டு இருந்தாள்.
தொடரும்…
அன்பு நெஞ்சங்களுக்கு
இதுவரை எங்குமே வெளிவராத எனது புதிய நாவல் ” காதலாய் உன்னில் கரைந்திடுவேன்” நேற்று ( 07 / 02 / 2022 ) அருணோதயம் பப்ளிகேஷன் மூலமாக வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களில் யாராவது புத்தகம் வாங்க விரும்பினால் இன்பாக்ஸில் தொடர்பு கொள்ளவும். புத்தகவிலை 100 ரூபாய் மட்டுமே…
Gpay, or phonepeor, paytm no 7200836063 pay pannanum. Unga address kudutha anupiduvaanga chellams..
எனது கதையை தொடர்ந்து படித்து ஆதரவு கொடுக்கும் அன்பு உள்ளங்களுக்கு நன்றிகள் பல.