Advertisement

பகுதி  – 16

ஏரிக்காட்டு பொன்னம்மாவின் குரல் ஊரையே தூக்கும் அளவுக்கு ஒலித்துக் கொண்டு இருந்தது. கம்பு, சோளம்னு கருதறுத்து வாயக்கட்டி, வயித்துல ஈரதுணிய கட்டிக்கிட்டு குருவி சேக்கற மாதிரி நாலு பணம் சேர்த்து சின்னதா ஒரு ஆட்டுக்குட்டி வாங்கினேன். போற பக்கம் எல்லாம் காடுகரைன்னு பாக்காம கூட்டிட்டு போவேன். ஒத்த குட்டிய வச்சிக்கிட்டு இப்படி அலையறேன்னு பாக்கறவக ஏச, பல சொல்ல தாங்கி பெத்த புள்ளையாட்டம் பத்துல ஒரு தழையா பாத்து பாத்து இழுத்து போட்டு பக்குவமா கஞ்சி தண்ணீல பதமா புண்ணாக்கும், உப்பும் கலந்து வெச்சி
வகுறு வளத்தேன்.

அடியே ஆத்தா உன் ஆடு வளப்பு நல்லாதே இருக்கு. அதுக்கு இப்பூட்டு நீட்டி கத சொல்லனுமாலே.

வாடியம்மா வம்புக்காரி. போனது என்வூட்டு உசுராச்சே. எனக்கு தான்டி வலிக்கும். இந்த மீச வச்ச ஆளு ஜில்லு கொல்லுனு ஒரு வீணா போன நாயா வளத்து விட்டு ஊருல ஒரு கோழிய, ஆட்ட நிம்மதியா வளக்க முடியால. ஆசையா வளத்த ஆட்ட சொடக்கு போடுற நேரத்துல கழுத்த பிடிச்சி கொன்னுபுடுச்சே என்றாள்.

அப்போது தான் ராசையாவிற்க்கு விவரம் புரிந்தது. ஜில்லுவை திரும்பி முறைத்தார். “எப்போ பாரு ஆடு கோழின்னு பிடிச்சிட்டு ஊரு வம்ப வாங்கிட்டு வர. இன்னைக்கு நீ செத்த” என அருகில் இருந்த விறகு கட்டையை எடுத்தார். இதை ஓரக்கண்ணால் பார்த்த ஜில்லு சிட்டாக பறந்து ஓடி மறைந்தது.

“அப்பா அவன் ஏதோ தெரியாம பண்ணிட்டான் விடுங்கப்பா” என மலர் அவரை சமாதானப்படுத்த.

ராசைய்யா பொன்னம்மாளிடம் ஆட்டுக்குட்டுக்கான பணத்தை கொடுத்து பிரச்சனையை முடித்து அனுப்பினார். கூட்டம் களைய  பொன்னம்மாவும்  அமைதியாக கெளம்ப. ராசைய்யா சோர்ந்து போய் அமர்ந்தார்.

சரசு மெதுவாக அருகில் வந்து, “என்னங்க வீட்ல எல்லாரும் நல்ல இருக்காங்க தானே. போன காரியம் என்னங்க ஆச்சி” எனக் கேட்க.

“எல்லாரும் நல்லாதே இருக்காக சரசு. எல்லாரையும் கூப்பிட்டு வச்சி பேசினேன். எல்லாருக்கும் மகிழ்ச்சிதேன். ஆனா” என ராசைய்யா இழுக்க.

“ஆனா என்னங்க. ஏன் தயங்குறீக” எனக் கேட்க.

“நம்ம முத்து எதுவும் பிடி கொடுத்து பேசல. யோசிச்சு முடிவு சொல்றேன்னு சொன்னதால கொஞ்சம் மனசு கலக்கமா இருக்குலே” என்றார்.

“யோசிச்சு சொல்வாகளா? அவ்வளவு பெரிய மனுஷன் ஆயிட்டாகளா? கேக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு. உங்க தங்கச்சி மவன்னு தலைக்கு மேலே தூக்கி வெச்சிட்டு கொஞ்சம் ஆட்டமா போட்டீக” என்றாள்.

மலரோ, என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம எதுக்குப்பா போனீங்க. சொல்லியிருந்தா காலையிலயே நான் போக வேண்டாம்னு தடுத்து இருப்பேன்.

“என்னம்மா சொல்ற” என அவளைப் பார்க்க.

ஆமாம்பா. அவருக்கும் எனக்கும் சண்டை. இப்போ போய் நீங்க பேசுனா என்ன சொல்லுவாரு.

“குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வரது எல்லாம் சாதாரண விஷயம் தான் கண்ணு. அதுக்கு கல்யாணத்த தள்ளி போட முடியுமா?” என்றார்.

“அவங்க மனசுல என்ன முடிவு வேணாலும் இருக்கும். என்ன வேணா சொல்லட்டும். அதை பத்தி எனக்கு கவலை இல்ல. நான் மேல படிக்கலாம்னு இருக்கேன்பா. அதுக்கு நீங்க அனுமதி கொடுத்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்” என்றாள்.

பொட்ட புள்ள வயசு ஆகிட்டே போவுதேனு நான் கவலைப்படுறேன். நீ என்னடான்னா மேல படிக்கறேன்னு சொல்றியேம்மா.

அப்பா வயசுக்கும், படிப்புக்கும் சம்பந்தமே இல்ல. “நான் மேலே படிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். படிச்சே தீருவேன்” என்றாள்.

தினமும் பஸ் ஏறிப் போய் படிக்கணும்மா. “உன்னால முடியுமா?” என்றார்.

“தினமும் எல்லாம் போகத் தேவையில்ல. அவங்க சொல்லும்போது போனா போதும். இது தொலைதூரக்கல்வினு சொல்வாங்கப்பா. வீட்ல இருந்தே படிக்கலாம். பரீட்சை எழுத மட்டும் போனாப் போதும்” என்றாள்.

சரிம்மா. “உன் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை பண்ணனுமா” என்றார்.

என்னங்க கல்யாணத்த பத்தி பேசுங்கனு சொன்னா, “அவள படிக்க சொல்லி அனுப்புறீக” என சரசு முறைக்க.

சரசு, என் பொண்ணு எப்பவும் சந்தோசமா இருக்கணும். அதான் எனக்கு வேணும். மலரு, “நீ படிக்கிறதுக்கு மேற்கொண்டு என்ன பண்ணனுமோ பண்ணுமா. அக்காவ உதவிக்கு கூப்பிட்டுக்கோ” என்று கூறிவிட்டு, அடியேய்! சரசு, “அந்த ஜில்லு இந்த பக்கம் வந்துச்சுன்னா சொல்லு. வரவர இது ஒரு ஆட்டம் ரொம்ப அதிகமா போயிருச்சு. நாலு காலையும் ஒடச்சுதே தண்ணி தான் ஊத்தனும். இல்லனா நாயே வேணாம். கொன்னே போட்றலாம்” என்று கூறிவிட்டு உள்ளே போனார்.

மலர் தனது அப்பாவின் முன் என்ன தான் மனம் வருத்தப்படாதது போல நடித்து பேசினாலும் தனது அறைக்கு வந்து மனக்குமுறல்களை ஒட்டுமொத்தமாக வெளியே கொட்டினாள்.

“கல்யாணமே வேண்டாம்னு மாமா யோசிக்கிறாங்களா? என் மேல அவ்வளவு வெறுப்பு வந்துடுச்சா? மாமா தானே என்னோட உசுருனு வாழ்ந்துட்டு இருக்கேன். இது அவருக்கு மறந்து போச்சா. என்ன தான் முடிவு பண்ணுவாங்க. அதையும் பார்க்கலாம்” எனத் தனக்குத் தானே ஆறுதல் கூறிக் கொண்டாள்.

“போன் பண்ணி பாக்கலாமா? என கை விரல்கள் மட்டும் முத்துவின் நம்பரை தொட்டாலும், மனம் தடுத்தது. அவரே பண்ணட்டுமே” என வீராப்பாக போனை மெத்தையில் தூக்கி போட்டுவிட்டு அழுது கொண்டே படுத்திருந்தாள்.

முத்துவின் மீது அவள் வைத்திருந்த காதல் அவளுக்குள் வலிகளை கொடுத்தது. காதல் எனும் பொக்கிஷத்தை நினைவுகள் என்னும் மடிப்பில் கலையாமல் தனக்குள் புதைத்துக் கொண்டாள்.

இங்கு கண்ணனின் வீட்டில் தாத்தாவும், ஆச்சியும் வீட்டிற்கு கிளம்ப துணிகளை பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.

இதைப்பார்த்த மாரியம்மாளும், மணிவண்ணனும் பதறிப் போனார்கள். என்னம்மா எங்க மேல எதுவும் கோவமா? “முத்துவ நாம பேசி சரி பண்ணலாம். அதுக்கு நீங்க ஏன் இப்படி ஒரு முடிவு பண்றீக” என கண்கலங்க.

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. வந்து ரொம்ப நாள் இங்கேயே தங்கிட்டோம்லே. அங்க இருக்கிற என் மகனையும் பாக்கணும். என் பேத்தி கூடயும் இருக்கணும் இல்லையா? அதான் கொஞ்ச நாள் அங்கே இருக்கலாம்னு. நீங்க ஒன்னும் வருந்த வேண்டாம்” என தாத்தா கூறினார்.

அப்போது வங்கிக்கு சென்று வேலைகளை முடித்துக்கொண்டு அங்கு வந்த கண்ணன், “ஏன் தாத்தா இங்க இருக்க பிடிக்கலையா?” எனக் கேட்க.

அப்படி எல்லாம் இல்ல கண்ணா. மலரும் எங்களுக்கு பேத்திதே. அங்கேயும் கொஞ்சநாள் இருக்கனும்லே.

“முத்து பய பேசினத மனசுல வெச்சுக்கிட்டு தானே கிளம்புறீங்க. எனக்கு தெரியும் தாத்தா. அவன்கிட்ட நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன்” என கண்ணன் கூற.

“அவன் வளர்ந்து பெரிய மனுஷன் ஆயிட்டான். அவனோட முடிவுகளை எடுக்க அவனே பழகிட்டான். இதுக்கு மேல அவனைக் கட்டாயப்படுத்தி சம்மதிக்க வெக்க நமக்கு உரிமை இல்ல கண்ணா. நாங்க கிளம்பறோம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

கண்ணனும், எழிலும் மேற்கொண்டு பேசமுடியாமல் நின்றனர்.

அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் முத்து வீட்டிற்கு வந்தான். அனைவரும் ஆளுக்கு ஒரு பக்கம் வாடிய முகத்துடன் இருந்ததை கண்டு, “என்ன ஆச்சு? ஏன் எல்லாரும் எப்படி இருக்கீங்க?” எனக் கேட்க.

கண்ணனுக்கு பயங்கர கோபமாக வந்தது. எல்லாம் உன்னால தான்டா. தாத்தாவும், ஆச்சியும் ஊருக்கு கிளம்பிட்டாங்க. “நாங்க இங்க இருக்கலாமா? இல்ல நாங்களும் வெளிய போய்டனுமானு சொல்லிடுங்க சார். நீங்க மட்டும் உங்கள் லட்சியத்த கட்டிக்கிட்டு சந்தோசமா இருங்க சார்” என்று கூற.

முத்துவோ கண்கலங்கி நின்றான். “என்னோட நிலைமய நீ கூட புரிஞ்சுக்கலனா வேற யாரு கண்ணா புரிஞ்சிக்குவாங்க. நீயும் இப்படி பேசுறயே” என வருந்தினான்.

நான் எதுக்காக இத்தனை நாள் காத்துகிட்டு இருந்தேன். அந்த இன்டர்வியூ போறதுக்கு நான் செலக்ட் ஆகிட்டேன். லிஸ்ட் வந்துடுச்சி. இன்னிக்கி ஈவினிங் நான் டெல்லி கிளம்புறேன். சர்ப்ரைஸா சொல்லனும்னு ஆசைப்பட்டேன். அது கூட இப்போ தப்புனு நினைக்கிறேன்.

இதுல என்னடா சர்ப்ரைஸ். மாமா கிட்ட சொல்லி இருந்தா எவ்வளவு சந்தோஷமா போய் இருப்பாரேடா. போதும்டா சாமி. “நீ கலெக்டர் ஆக என்ன வேணா பண்ணிக்கோ. கடைசியா திரும்பிப் பார்க்கும் போது உன் பதவி மட்டும்தான் உன்கூட இருக்கும். நாங்க யாரும் இருக்க மாட்டோம். சந்தோசமா இருடா. வாழ்த்துக்கள் முத்து” என அவனது கைகளை பற்றி குலுக்கி விட்டு, “வா எழில்” என அவளை உள்ளே இழுத்து சென்றான்.

மாரியம்மாளும், மணிவண்ணனும் பேச சக்தி இன்றி அமைதியாக சுவரோடு சாய்ந்து அமர்ந்தனர். “சந்தோஷபடுறதா வருத்தப்படுறதானு கூட தெரிலயேப்பா. திடீர்னு டெல்லி போகனும்னா எப்படி முத்து” என மணிவண்ணன் கேட்க.

முத்துவிற்கு இந்த சூழ்நிலை மிகவும் வருத்தம் அளித்தது. இதானேப்பா விதியோட விளையாட்டு. “கடவுள் ஒருத்தருக்கு தண்டனை கொடுக்கனும்னா அவங்களோட சிந்தனைக்கு திரையிடுவாங்களாம். இதான் இப்போ உங்களுக்கும் நடக்குது. என்ன நடந்தாலும் நான் தெளிவா தான் இருக்கேன்” என்று உள்ளே போனவன் ஒரு பையுடன் வெளியே வந்தான்.

“இதை பார்த்த மாரியம்மாள் பதறிப்போனார். என்ன பண்ற முத்து” என எழுந்து வந்து அவனது கைகளைப் பிடித்துக் கொள்ள.

ஒன்னும் பதட்டப்பட வேண்டாம்மா. இன்டர்வியூல கலந்துக்க செலக்ட் ஆகி இருக்கேன். அதுக்காக தான் கிளம்புறேன். சந்தோஷமா எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்பலாம்னு ஆசைப்பட்டேன். அது இப்படித்தான் நடக்கணும்னு விதி இருக்கு போல. நீங்க ரெண்டு பேருமாவது என்னை ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி வைங்க என்றான்.

Advertisement