“மனதில் சில வருத்தங்கள் இருந்தாலும் தன் மகனை மனதார வாழ்த்தினார்கள். போய்ட்டு வர எத்தனை நாள் ஆகும் முத்து” என மாரியம்மாள் கேட்க.
ட்ரெயின்ல தாம்மா போறேன். அங்க போய்ட்டு இன்டர்வியூ முடிச்சிட்டு ஃப்ரண்ட்ஸ பாத்துட்டு அப்புறம் தான் கிளம்பனும். எப்படியும் ஒரு வாரத்துல திரும்பி வந்துடுவேன் என்றான்.
செலவுக்கு பணம் எவ்வளவு ஆகும் முத்து. அம்மாவ தரச்சொல்றேன் என்றார்.
“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேம்பா. எல்லாம் ரெடி பண்ணிட்டேன். நான் போயிட்டு வரேம்பா. நான் கிளம்பறேம்மா” என்றவன் கண்ணனை அழைத்தான்.
“ஊருக்கு போறானே” என மனம் தாங்காமல் கண்ணனும், எழிலும் வெளியே வர.
கண்ணா, “என்னுடைய வாழ்க்கைய எனக்கு முடிவு பண்ண தெரியும். தப்பா எடுத்துக்காத. அப்பா அம்மாவை பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப.
முத்து, “வாழ்த்துக்கள்..வெற்றியோட திரும்பி வா!” என எழில் வாழ்த்துக்கூற.
“நீங்களாவது என்னைய புரிஞ்சிகிட்டீங்களே. தேங்க்ஸ் அண்ணி” என புன்னகையுடன் கிளம்ப.
டேய்! முத்து, எனக்கும் நீ கலெக்டர் ஆகனும்னு மனசு நிறைய ஆசை இருக்குடா. சின்ன கோவம் அவ்வளவு தான். வாழ்த்துக்கள் டா. “மலரு கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்புடா” என கண்ணன் கூற.
“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நான் கிளம்பறேன்” என்று கூறிவிட்டு முத்து கிளம்பினான்.
எழிலுக்கு மனதுக்குள் கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது. மலருக்கு போன் பண்ணி நடந்ததை கூறினாள்..
“மலருக்கு மகிழ்ச்சி ஒரு பக்கம், வருத்தம் ஒரு பக்கமாக இருந்தது. ரொம்ப சந்தோஷம் தான் அக்கா.. அவர் போய்ட்டு வரட்டும் அக்கா. நான் மேல படிக்கலாம்னு இருக்கேன். அதற்கான அப்ளிகேஷன் எழுதி கொடுக்கணும். நீ ஃப்ரீயா இருந்தா கொஞ்சம் கூட வர முடியுமாக்கா” எனக் கேட்க.
“சரி கிளம்பி வரேன். நீ ரெடியா இரு” என்று கூற.
மலரும், ‘சரி’ என்று கூறி போன் இணைப்பை துண்டித்தாள்.
முத்துவிடம் இருந்த ஏதாவது தகவல் வரும் என்று காத்திருந்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இதற்கிடையில் தாத்தாவும், ஆச்சியும் வீடு வந்து சேர்ந்த இருந்தனர். முத்துவின் இன்டர்வியூ விஷயத்தைப் பற்றி மலர் அவர்களிடம் கூற. வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.
இந்த பய, “ஒரு வேள போயிட்டு வந்து சம்மதம் சொல்லலாம்னு இருப்பானோ?” என அவர்கள் மனதிற்குள் அவர்களுக்கு அவர்களாகவே ஆறுதல் சொல்லிக் கொண்டனர்.
எழில், கண்ணனுடன் கிளம்பி வந்து, மலரை அழைத்துக் கொண்டு அவளது எம்.ஃபீல் படிப்பிற்கான அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்து, வீட்டிற்கு கொண்டு வந்து விட்டாள். வேலை இருப்பதாக கூறிவிட்டு உடனே இருவரும் தங்களது வீட்டிற்கு கிளம்பினார்கள்.
அன்றைய இரவு மலருக்கு தூக்கமே இல்லை. “முத்துடம் இருந்து ஒரு குறுஞ்செய்தியாவது வராதா?” என்று எதிர்பார்த்தாள். இமைகள் மூட மறுத்தன.
அதிகாலையில் ஆதவன் காரிருளை கிழித்துக்கொண்டு பூமியை வருடிவிட்ட மகிழ்ச்சியில் பொன்னிறமாக ஜொலித்தான். “மலரின் மனதிலும் உள்ள இருள் அகன்று கவலைகள் அனைத்தையும் நீக்கி தன்னுடைய படிப்பை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்” என்ற முடிவோடு எழுந்தாள். வழக்கம்போல தனது செயல்களில் ஈடுபட்டாள்.
அதேசமயம், “முத்து ட்ரெயினை பிடித்து தனது டெல்லி பயணத்தை தொடங்கி இருந்தான். தனது கடுமையான உழைப்பின் மீது அளவுக்கதிகமான நம்பிக்கையோடு சென்று கொண்டிருந்தான். இந்த முறை வெற்றியுடன் தான் திரும்ப வேண்டும்” என்ற வைராக்கியம் அவனின் மனதிற்குள் ஆழமாக வேரூன்றியிருந்தது. “மனம் முழுக்க தனது கனவுகள் நிஜமாக வேண்டும்” என்ற சிந்தனையோடு சென்றான். “மலரிடம் பேசலாமா? புரிந்து கொள்வாளா? வேணாம். தேவையில்லாம பேசி எதாவது டென்ஷன் பண்ணிடுவா. வந்து பேசிக்கலாம். அவ கோவத்த நிச்சயமா சரி பண்ணிடலாம்” என்று அவனது மனதுக்குள் ஒரு போராட்டமே நடந்தது. “இறுதியில் வேண்டாம்” என்று முடிவெடுத்து தனது பயணத்தை தொடர்ந்தான்.
செண்பகம் தான் எழுதப்போகும் புதிய தேர்விற்காக தீவிரமாகப் படிக்கத் தொடங்கி இருந்தாள்.
ஆனந்த் எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கும் செண்பகத்தைப் பார்த்து அப்படி என்னதான் படிச்சிட்டு இருக்கா” என்று மனதுக்குள் நினைத்தான். சுற்றிலும் பார்த்தான். வீட்டில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. செண்பகத்தின் அருகில் சென்றான்.
“என்னங்க. எப்ப பாத்தாலும் ஏதோ படிச்சிட்டு இருக்கிங்க. அப்படி என்னதான் படிக்கிறீங்க” எனக் கேட்க.
ஏன் நீங்க மட்டும் தான் கவர்மெண்ட் வேலைக்கு வரனுமா?. நாங்கள்லாம் வரக்கூடாதா? அதான் முயற்சி பண்ணலாம்னு என்றாள்.
நீங்க தாராளமா முயற்சி பண்ணலாமே. என்ன எக்ஸாமுக்கு படிக்கிறீங்க. அத கேட்டேன்.
‘விஏஓ’ எக்ஸாம் தாங்க.
“சூப்பர். வாழ்த்துக்கள். ரொம்ப சந்தோஷம் என்றான். மேற்கொண்டு என்ன பேசுவது” என்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க.
செண்பகத்திற்கு தர்மசங்கடமாக இருந்தது. “வேற எதாவது சொல்லனுமா?” என்றாள்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க” என தயங்கி நின்றான்.
“இல்லன்னு சொல்லும்போதே ஏதோ இருக்குன்னு தெரியுது” என்றாள்.
“இருக்குங்க. ஆனால் பயமாயிருக்கு” என்றான்.
“பரவால்ல கேளுங்க” என்றாள்.
“இல்லங்க… அது… வந்து… நீங்க… இல்ல. நான்” என ஆனந்தின் வாயில் வார்த்தைகள் வராமல் தடுமாற.
“ஹஹஹஹஹ… என்னங்க உயிரெழுத்து மெய்யெழுத்து எதுவும் புதுசா கத்துக்கறீங்களா? நான் எதாவது சொல்லி தரனுமா?” என்றாள்..
“ஆனந்த், அவளைப் பார்த்து முறைத்தான். இதெல்லாம் எனக்கு தேவதான். நான் நேரா விஷயத்துக்கே வரேன். நேத்து.. நேத்து.. நீ.. நீங்க.. என் மேல விழுந்த மாதிரி.. நா.. நான்” என அவளையே பார்த்து நின்றான்.
“செண்பகம் அப்படியே புத்தகத்தை கீழே வைத்துவிட்டு எழுந்து நின்றாள். அதுக்கு இப்போ பண்ணனும் சார்” என்றாள்.
அதுக்கு ஒன்னும் இல்லங்க.. ஒரு நியாயம் கேட்கலாம்னு தான்.
இப்போ என்ன நியாயம் கேட்கனும்.
“நீங்க என்மேல விழுந்த மாதிரி நான் உங்க மேல விழுந்திருந்தா, நீங்க சும்மா விடுவீங்களா மேடம். தெரியாம இடிச்சதுக்கே அந்த பேச்சு பேசுனிங்க. இப்போ நீங்களே வந்து என் மேல விழுந்ததுக்கு பேச மாட்டீங்களா?” என்றான்.
அது.. அது.. வந்து.. நான். தெரியாம தான் விழுந்தேன்.
அதே தாங்க. “நானும் தெரியாம தானே இடிச்சி இருப்பேன். அப்ப மட்டும் திட்றிங்க. இப்ப உங்கள யார் திட்றது” என்றான்.
“அது வேற. இது வேறங்க. அதுக்கு தண்டனையா தான் கைல இருக்க வளையல் உடஞ்சி காயம்பட்ருச்சே” என்றாள்.
“என்னங்க, எல்லாம் ஒன்னு தான்” என்றான்.
“சரி, இப்ப அதுக்கு என்ன பண்ணனும் சொல்லுங்க” என்றாள்.
ஒன்னும் பண்ண வேண்டாம். இப்ப மட்டும் நீங்க எதுவும் திட்டாம இருந்தீங்களே. அதான் கேட்டேன்.
வேணும்னா நீங்க என்னைய திட்டிக்கோங்க.
“ஒன்னும் வேண்டாம். நீங்க படிங்க” என்றான்.
இங்கயே நின்னு பேசிட்டே இருந்தா நான் எப்படிங்க படிக்கிறது.
“நீங்க போடானு சொல்றதுக்கு முன்னால நானே போயிடுறேங்க” என ஆனந்த் அவளை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
ஆனந்த் தபால் நிலையத்திற்கு சென்று தனது அலுவலக பணிகளை தொடர்ந்து கொண்டிருந்தான். ஆனால் ஏனோ அவன் மனம் முழுவதும் செண்பகத்தின் நினைவுகள் மட்டுமே ஊஞ்சலாடியது.
செண்பகமே கண்கள் மட்டும் புத்தகத்தில் இருந்தாலும், மனம் முழுக்க ஆனந்தை சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
மாலை நேரம் முடிந்து கொண்டிருக்கவே செண்பகம் சமையல் வேலையைத் தொடங்கி இருந்தாள்.