மௌனம் – 15

அந்த சிறிய அழகான கூரை வீட்டில் பூவாயின் குரல் மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்தது. “அடியேய்! செண்பகம்.. செண்பகம்… ஏய்! ராசாத்தி.. அடியேய்! வள்ளி.. எங்குட்டுதே போனாளுக. ஒருத்தியவும் காணல. ஆடு கட்டி கெடக்கு.. அடியேய்!” என பூவாயி கொடுத்த குரலில், “செண்பகம் எதுக்கும்மா இப்படி கத்தற” எனக் கேட்டுக் கொண்டே வர.
ஆடு, மாடெல்லாம் வகுத்து பசியோட கெடக்குதுக. நீ என்னடானா சீவி சிங்காரிச்சி ஒயிலா கொண்ட போட்டு ஒய்யாரமா மேனி நோகாம நடந்து வரவ.
என்னம்மா அதிசயமா பேசற. ஆடு, மாடு பசியா கெடந்தா நான் கொண்ட போட கூடாதா? ஏன் நீங்க என்ன பண்றிங்க. தங்கச்சிங்க என்ன செய்யறாங்க. நானே வந்தாதான் அதுக பசியாருமோ?.
நான் அவளுகள கூட்டிட்டு மேலக்காட்டுக்கு வேலைக்கு போறேன். நீ தான் ஏதோ பரிச்ச படிக்கணும்னு சொன்னயே. இதுகள ஓட்டிட்டு போயிட்டு கீழ காட்டுல கட்டி போடு. அப்படியே போகும் போது அந்த தொரட்டுக்கம்ப எடுத்துட்டுப்போ புள்ள. எதாவது தழதாம்பு ரெண்டு இழுத்து போட்டு அப்புறம் கட்டி போட்டு வா. அப்போ தான் கொஞ்சமாவது வகுறு நெறையும் என்றாள்
சரிம்மா. எனக்கு தெரியும். நான் பாத்துக்கறேன். நீங்க கெளம்புங்க.
செண்பகத்தின் தங்கை ராசாத்தியோ, “அக்கா நானும் உன்கூட இருக்கேன் அம்மாட்ட சொல்லுக்கா” என்றாள்.
இதைக் கேட்ட பூவாயி,” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அக்கா படிக்கட்டும் நீ நெல்லஞ்சோத்த தூக்கு வாளில போட்டு எடுத்துட்டு, மொச்சை சாற ஒரு வாளில ஊத்திகிட்டு கெளம்பு ராசாத்தி” என்று கூற.
‘ஹிக்கும்’ என அம்மா சொன்னபடி ராசாத்தி எடுத்து வைத்துக் கொண்டு மூவருமாக கெளம்பினார்கள்.
செண்பகம் ஆட்டிற்கு தண்ணீர் வைத்து குடிக்க வைத்துவிட்டு தொரட்டுக் கம்பை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து கொண்டு கெளம்பினாள். ஆடுகளையெல்லாம் கீழக் காட்டுக்கு ஓட்டிக்கொண்டு புறப்பட்டாள். போகும் வழியில் வேப்பங்குழையும், , இண்டமுள்ளும், கட்டுக்கொடியும், தொரட்டி கம்பால் இழுத்து போட, அங்கொன்றுமாக இங்கொன்றுமாக ஓடி ஓடி தழைகளை பொறுக்கியது.
ஆடுகளை காட்டில் கட்டிவிட்டு கம்பை எடுத்துக் கொண்டு வாயில் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டு நடந்தாள்.
மாமா உன்னை நினைக்கையிலே
மனசெல்லாம் தவிக்குதடா
தூண்டிலிலே மாட்டிகிட்ட
மீன் போல துடிக்குதடா
என் மனச பத்திரமா
உன் உசுரில் வச்சிக்கடா….
என பாடிக் கொண்டே வந்தவள் எதிரில் வந்த ஆனந்தைக் கவனிக்காமல் முதன் முறையாக தடுமாறி அவன் மேல் விழுந்தாள்.
ஆனந்த் தவிர்க்க முயற்சி செய்தும் முடியாமல் அவளைத் தாங்கிப் பிடிக்க. இருவரும் வரப்பில் உருண்டு விழ. அவளது கண்ணாடி வளையல் உடைந்து காயம்பட்டு ரத்தம் வந்தது. இதை ஆனந்த் கவனிக்கவில்லை. அவன் சட்டையிலும், கைகளிலும் ரத்த துளிகள் பட்டது.
இதை தூரத்தில் இருந்து பார்த்த அன்னம் “இது என்ன கூத்தா இருக்கு. இவன் இதே வேலையா சுத்துவானோ. என்ன கர்மமோ” என பழனிச்சாமியிடம் கூற.
அடியேய்! “உனக்கு இத விட்டா வேற என்னதாம்லே தெரியும். எப்போ பாரு எதையாவது பாத்து வசை பாடிட்டு ஊரு வம்ப இழுத்துட்டு வரது. உளுந்து போடுற வேலைய பாருலே” என அதட்ட.
‘ஹிக்கும்’ “எப்போ பாரு மாமோய் என்னை திட்றதுதே உங்களுக்கு பொழப்பு” என உதட்டைப் பிதுக்கி பழித்து காட்ட.
அப்போது, “அங்கு செண்பகத்தின் அப்பா வரதன் வர. இவர்கள் நிலை கண்டு துடித்துப் போய் நிற்க. கண்களில் அனல் பறக்க செண்பகம்” என கத்தினார்.
“அப்பாவைப் பார்த்த செண்பகம் பயத்தில் உறைந்து போய் அ.. அப்.. அப்பா” என வார்த்தை தடுமாறி எழ முயற்சித்தாள்.
அவளது கைகளில் கண்ணாடி வளையல்கள் உடைந்து குத்தியிருந்ததை அப்போது தான் கவனித்தாள். காயம்பட்டு ரத்தம் ஆனந்தின் சட்டைகளில் சொட்டுச் சொட்டாய் வழிந்து கொண்டிருந்தது.
செண்பகத்தால் உடனே கைகளை ஊன்றி எழ முடியாமல் தட்டுத் தடுமாறி மெதுவாக எழுந்தாள். ஆனால் இவளின் தாமதம் செண்பகத்தின் அப்பாவிற்கு மேலும் கோபத்தை மூட்டியது.
ஆனந்த் செய்வதறியாது அசைய முடியாமல் அப்படியே கீழே படுத்து கிடக்க. செண்பகம் மெதுவாக எழுந்து, ‘அ.. அப்.. அப்பா’ என மீண்டும் குரல் உடைந்து நா தழுதழுக்க. விழிகளில் கண்ணீர் மடை திறந்த வெள்ளமாய் ஓட. பயத்துடன் அவரை நோக்கி மெதுவாக அருகில் வந்தாள்.
செண்பகம் தனது அப்பாவின் அருகில் வந்து நிற்க.
அவரோ அவள் வந்து நின்ற வேகத்தில் அவள் கன்னங்களில் மாறி மாறி ‘பளார்’ என அறைந்து முடியை கொத்தாக பிடித்து கோபத்தின் உச்சம் தீராமல் வார்த்தைகளை வக்கிரமாக கொட்டினார்.
செண்பகம் புழுவாய் துடித்து நிற்க.
ஆனந்த் அங்கு நடக்கும் விபரீதத்தை உணர்ந்து வேகமாக எழுந்து, “ஐயா! உங்க பொண்ணு மேல எந்த தப்பும் இல்ல. தயவு செய்து இங்கே என்ன நடந்துச்சுன்னு” என்று அவன் வார்த்தைகளை சொல்ல வரும் போதே ஆனந்தையும் அடுத்து ஓங்கிய கை மாறாமல் ‘பளாரென’ அறைந்தார்.
ஒரு நிமிடம் மெளனமாக நின்றான். ஆனந்த் தனது கரங்களால் கன்னங்களை பிடித்துக்கொண்டு வார்த்தை வராமல் அப்படியே தடுமாறி நின்றான்.
இதை பார்த்த செண்பகம், “அப்பா ரொம்ப தப்பு பண்றீங்க. அவரை எதுக்கு இப்போ அடிச்சிங்க” என்று கேட்க.
மீண்டும் செண்பகத்தின் கன்னத்தில் வரதனின் கைகள் பதிந்தது. அவனுக்கு வக்காலத்து வாங்கற கழுத. “அந்த அன்னம் வேற ஊர்ல எல்லாம் போய் சொல்லிட்டுதே மூச்சே விடுவா. ஊரு முன்னாடி இப்படி தலைகுனிய வெச்சுட்டியே. இதுக்கா உன்னை இம்புட்டு கஷ்டப்பட்டு படிக்க வெச்சி வளர்த்தேன்” என தலையில் அடித்து கொண்டு அழுதார்.
“என்ன நடந்துச்சுன்னு தெரியாம ஏம்பா இப்படி பேசுறீங்க” என்று கூற.
“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின. இங்கேயே வெட்டி புதச்சிட்டி போய்டுவேன். மருவாதையா கிளம்பு” என அவளது கூந்தலை கற்றையாக பற்றி தள்ளிவிட.
“சார்! ‘ப்ளீஸ்’ ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க” என ஆனந்த் குறுக்கே நின்று தனது இரு கைகளையும் நீட்டி வழி மறைக்க.
வரதனுக்கு மேலும் கோபம் அதிகமானது. “மொதல்ல நீ யாருடா? நீ சொல்றத நான் எதுக்கு கேட்கணும்” என அவனை வேகமாக தள்ளிவிட்டார்.
இதனால் ஆனந்த் வரப்பிலிருந்து தடுமாறி கீழே விழ.
செண்பகமோ, தெரியாமல் நடந்த ஒரு தப்பினால் ஆனந்த் கேவலப்படுவதைப் பார்த்து துடித்து போனாள்.
இவர்கள் இருவரும் சொல்வதை வரதன் காது கொடுத்துக் கேட்கவே தயாராக இல்லை. “ஏலே தபால்காரா, இதுக்கு மேல ஒன்ன என் பொண்ணு இருக்குற பக்கம் பாத்தேன்னா. அவ்வளவு தான். ஒன் ஒடம்புல உசுரே தங்காதுலே” என்று, அவனை மிரட்டி விட்டு தன் மகளை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.
வீட்டிற்கு வந்த வேகத்தில் செண்பகத்தை வீட்டிற்குள் தள்ளிவிட்டு, கோவமாக
திண்ணையில் அமர்ந்தார்.
“நாங்க பட்ட கஷ்டம் நீ பட வேண்டாமுன்னுதே நாலு எழுத்து படிக்க வச்சேன். கழுத அது ரொம்ப தப்புனு எனக்கு பாடம் புரிய வச்சிட்டலே. நான் பண்ண தப்புக்கு நான்தே பரிகாரம் பண்ணனும். உங்க ஆத்தா வரட்டும் அதுவரைக்கும் பச்சைத்தண்ணி கூட பல்லுல படாது” என்று கோபமாக இருந்தார்.
செண்பகம் கூற வந்த எதையுமே வரதன் சொல்ல விடவில்லை. வார்த்தை அம்பால் அவளை வலிக்க வலிக்க துளைத்தார்.
செண்பகம் மனமுடைந்து அழுதுகொண்டே வீட்டிற்குள் அமர்ந்து இருந்தாள்.
வரதனோ எதிரில் வந்த கந்தனிடம், ஏலே! “என் பொஞ்சாதி மேல காட்டுக்கு வேலைக்கு போயிருக்காலே. கொஞ்சம் அவள உடனே வீட்டுக்கு வர சொல்லுப்பா” என சொல்லி அனுப்பினான்.
அவன் போய் சிறிது நேரத்திற்கெல்லாம் பூவாயி தனது இரு பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
வரதன் கோபமாக திண்ணையில் அமர்ந்து இருப்பதை பார்த்துவிட்டு கண்டுகொள்ளாமல் உள்ளே போக. அங்கு செண்பகம் அழுது கொண்டிருந்ததைப் பார்த்தாள்.
“என்ன ஆச்சு? ஏன் ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு பக்கம் மூஞ்ச தூக்கி வெச்சுட்டு இருக்கீக. வேலைக்கு போனவளையும் வர சொல்லிட்டாக” எனக் கேட்க.
செண்பகம் எதுவும் கூறாமல் அழுதுகொண்டே இருந்தாள்.
அப்போது உள்ளே வந்த வரதன், “உன் புள்ள ஊரு முன்னாடி நம்பள தலைகுனிய வெச்சிடுவா போல இருக்குடி. இதையெல்லாம் நான் என் கண்ணால பாக்கணும்னு அந்த படச்சவன் எழுதி வெச்சிட்டான் பாரு. எந்த அப்பனும் பார்க்க கூடாத காச்சி எல்லாம் என் கண்ணுக்குதே தெரியுது” என தலையில் வைத்துக் கொண்டு மூளையில் அமர்ந்தார்.
என்ன ஆச்சுனு சொல்லாம இப்படி வார்த்தையை அடுக்கிக்கிட்டே போனா நான் என்னய்யா சொல்லுவேன்.
“அத ஒன் மவகிட்டயே கேளுடீ” என்றார்.
“என்ன நடந்ததுனு நீயாவது சொல்லி தொலையேன்டீ” என பூவாயி கேட்க.
செண்பகம் மௌனத்தையே பதிலாக கொடுக்க.
அவ எப்படி சொல்லுவா. சொல்ற மாதிரி காரியமா செஞ்சி இருக்கா? “நம்ம ஊருக்கு புதுசா வந்து இருக்கானே தபால்காரன். அவங்கூட வாய்க்கா வரப்புனு கூட பார்க்காம அவ மேல படுத்து உருண்டு கெடக்கா. இந்த கருமத்த என் கண்ணால வேற பாத்துட்டு வந்து நிக்கே புள்ள” என்று குரல் உடைந்து கூற.
தே மூதேவி. வாய மூடுய்யா. கண்டதெல்லாம் காச்சி. கொண்டதெல்லாம் கனவுன்னு நெனச்சி வாய்க்கு வந்தபடி பேசாத. அவ நம்ம வளர்ப்பு. நிச்சயம் தப்பு பண்ண மாட்டா. என்ன நடந்துச்சினு கேட்காம இப்படி வாய்க்கு வந்தபடி பேசாத.
“அந்த நினைப்பில் தான் மண்ணள்ளிப் போட்டுட்டாலே. நானு மட்டும் பாத்து இருந்தா பரவால்ல. அந்த அன்னமும், பழனிச்சாமியும் வேற பாத்து தொலஞ்சிட்டாங்கடீ. அவ இந்நேரம் ஊர் எல்லாம் போய் மோளம் இல்லாமயே வாயால தண்டோரா போட்டு சொல்லி இருப்பா. இதுக்கு மேல நான் இந்த உசுர வச்சுக்கிட்டு இருக்கனுமா புள்ள” என்றார்.
பூவாயி கோபத்தின் உச்சத்திற்கே சென்றவள், “இந்தா பாருய்யா உலக்கை பக்கத்துலதான் இருக்கு. அப்படியே எடுத்து இடிச்சேன்னு வச்சிக்கோ, ஒரே அடியில நானே உன்ன கொன்னுபோடுவேன். ஊர்ல ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க. நம்ம புள்ளைய நாமலே தப்பா பேசலாமாய்யா. அவ நாலு எழுத்து படிச்சவ. புரிஞ்சி நடந்துக்கற புள்ளைய்யா. என்ன நடந்ததுனு தெரியாமல் கண்டத மட்டுமே வெச்சிட்டு இப்படி தப்பு கணக்கு போடாதைய்யா. வானம் பார்த்த நடந்த வாங்க வழி தெரியாம போயிடுவாங்கனு சும்மாவா பெரிவக சொன்னாக. என்ன நடந்துச்சுன்னு முதல்ல புள்ள கிட்ட கேட்டியாய்யா” என்றாள்.
மௌனமாக, “வரதன் இல்லை” என்று தலையசைக்க.
அப்புறம் எதுக்குய்யா புள்ளைய இப்படி வார்த்தையால கொட்டற. நாக்கை இழுத்து வச்சு அறுத்திடுவேன். “இந்தா புள்ள என்ன நடந்துச்சு. நடந்தத முதல்ல சொல்லு” என கேட்க.
செண்பகம் வார்த்தை வராமல் விக்கித்து நின்றாள். “அ. அம்.. அம்மா.. அம்மா” என குரல் உடைந்து தேம்பி அழுதாள்.
“நீ படிச்ச புள்ள தான. இப்படி பொம்பள புள்ளையா அழுதுட்டு நிக்கதே ஒன்ன படிக்க வெச்சேனா. கண்ண தொடைச்சுக்கிட்டு நடந்தது என்னன்னு சொல்லு” எனக் கேட்க.
செண்பகம் நடந்தவற்றை முழுவதும் கூறினாள்.
அதைக் கேட்ட பூவாயி, அவளது கைகளை பிடித்துப் பார்க்க. கண்ணாடி வளையல் கிழித்து காயம்பட்டு ரத்தம் வழிந்து உறைந்திருந்தது. “அடிப்பாவி மவளே! ஊர்ல எவன் என்ன சொன்னா நமக்கென்ன. நம்ம மனசு தங்கந்தே. அது நமக்கு தெரிஞ்சா போதும். பார்க்கிறவகளுக்கு நாம சொக்கத்தங்கந்தேன்னு மெய்பிக்க வேண்டிய அவசியமே இல்லடீ. ஏய்! ராசாத்தி கொல்லப்பக்கம் போயி அந்த அருவாமன பூண்டு இலைய பிச்சிட்டு வாடீ” என்று சொல்லிவிட்டு அவள் கையிலிருந்த காயங்களை தன் முந்தானையால் துடைத்தாள்.
ராசாத்தி அரிவாள்மனைப் பூண்டை பறித்து கொண்டு வந்து கொடுக்க.
அதைக் கசக்கி காயம் பட்ட இடங்களில் அந்த சாறைப் பிழிந்து விட்டாள்.
செண்பகம் எரிச்சலில் உதட்டை சுழிக்க.
“கொஞ்சம் வலிக்கத்தே செய்யும். வாழ்க்கையில நாம பார்க்காத வலியா? எல்லாம் சரியாப் போகும்” என்று அவளது கண்ணீரை துடைத்து விட.
“அ. அம்… அம்மா” என செண்பகம் தனது தாயை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்.
இப்போ எதுக்கு புள்ள அழற.
நீங்களாவது நடந்த உண்மையை கேட்டு என் மனச புரிஞ்சி பேசனீங்களே. அதுக்கு தாம்மா என்றாள்.
“போதும் செண்பகம். காலம் காலமா பொம்பளைங்க பட்ட துன்பமெல்லாம் போதும். இனியும் அது நடக்கக் கூடாதுன்னு தான் இவளுகளையும் படிக்க சொன்னேன். இதுக ரெண்டும் அவங்க அப்பனோட சேர்த்து வீணா போகணும்னு முடிவு பண்ணி வச்சிட்டாளுக. படிக்க மாட்டேன்னு புழுதிகாட்டுல சின்னபடுதுக. நீயாவது படிச்சு மேல வந்து இவுக ரெண்டு பேத்தையும் காப்பாத்து” என்று கூற.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வரதன் தன் தவறுகளை உணர்ந்தவனாய், “செண்பகம் என்ன மன்னிச்சிடுதாயி. நான் அவசரப்பட்டு வார்த்தைய கொட்டிபுட்டேன். வாழ்க்கைல பெரிய பாவத்த பண்ண பாத்தேன். மன்னிச்சிடும்மா” என்று கூற.
“அப்படி சொல்லாதீங்கப்பா. அந்த சூழ்நிலையில உங்க இடத்துல யாரா இருந்தாலும் அப்படிதான் பண்ணி இருப்பாங்க. நீங்க புரிஞ்சுக்கிட்டுதே எனக்கு சந்தோசம்தான்” என அப்பாவின் கரங்களைப் பற்றிக் கொண்டு அழுதாள்.