Advertisement

காதல் மொழி  – 14

“ஏம்மா என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம அப்பா போய்ட்டாங்க” என்று கேட்க.

“உங்ககிட்ட சொல்லிட்டு தான் அவரு செய்யணுமோ.  இது என்ன புது வழக்கம் மலரு.  பெத்த பிள்ளைக்கு என்ன செய்யணும்னு எங்களுக்கு பாடம் சொல்லித் தருவீகளோ.   எப்போ என்ன பேசணும் என்ன பண்ணனும்னு அவுகளுக்கு தெரியும். ஆடு மாடெல்லாம் பசியோட கெடக்கு.  மாட்டுக்கு சாடில தவுடு, புண்ணாக்கு போட்டு தண்ணீய காட்டி கொண்டு போய் கட்டு. நான்  அந்த வெள்ளாட்ட கூட்டிட்டு போறேன். எவ்வளவு வேலை கெடக்கு மலரு” என்றார்.

“இவங்கல்லாம் பட்டுத்திருந்தற கூட்டம்.  நம்ம சொல்லியா கேக்கப் போறாங்க. எப்படியோ போய் அசிங்கப்பட்டு வரட்டும்” என மலர் அமைதியாக தவிடு, புண்ணாக்கு எடுத்துக்கொண்டு மாட்டு தொழுவத்திற்கு சென்றாள்.

இங்கு, ராசையா தனது தங்கை வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்.  தனது அண்ணனை பார்த்தவுடன் மாரியம்மாள் முகம் முழுவதும் புன்னகையோடு வந்து வரவேற்றார்.

வாங்கண்ணே! என்ற வார்த்தையில்  மகிழ்ச்சியின்  எனும் அலை அடிக்க. மணிவண்ணனும் வந்து வரவேற்றார்.

“மாரியம்மாளோ அண்ணன் வந்துட்டாக.  நல்ல வெடக் கோழியா பிடிச்சு அடிங்க.  நான் குழம்பு வைக்க ரெடி பண்றேன்” என்று கூறி செயலில்  பரபரப்பைக் காட்டினார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா.  ஒரு முக்கியமான விஷயம் பேசதே   வந்தேன். பேசிட்டு நான் போறேன். கண்ணன்,  முத்து ரெண்டு பேரும் எங்கம்மா” என்று கேட்க.

இதற்குள், “எழில் அப்பா” என்று தாங்க முடியாத சந்தோஷத்துடன் ஓடி வந்தாள். “அம்மா எங்கப்பா.  நீங்க மட்டும்தான் வந்தீங்களா?” என  கேட்க.

“நான் மட்டுந்தே  வந்தேம்மா. அவ  வீட்ல இருக்கா.  மலருக்கும் வேலை இருக்கு” என்றார்.

“உங்க மாப்பிள்ளைக  ரெண்டு பேரும் தோட்டத்துக்கு போய் இருக்காங்க. இப்ப  கொஞ்ச நேரத்தில   வந்திடுவாங்கப்பா” என்றாள்.

“பருத்தி விதைப்பெல்லாம் எப்படி இருக்கு” என்று கேட்க.

“அதெல்லாம் நல்லா போகுதுன்னே.  உங்க மருமகனுங்கதே  தங்கமா பாக்கறாகளே. அப்புறம் எங்களுக்கு என்ன கவலை” என்றார் மாரியம்மாள்.

இதற்குள் மணிவண்ணன் நல்ல வெட கோழியாக பிடித்து தீயை மூட்டி கோழியை  அதில் வாட்டி  எடுப்பதற்கான பணியில் இறங்கினார்.

எவ்வளவு சொல்லியும் கேட்காம இப்படி பண்றீகளே. இப்போ கறிவிருந்து வேணுமா? ஏந்தே இப்படி பண்றீக.

“நீ என் கிட்ட பேசிகிட்டு இருங்கண்ணே. கொஞ்ச நேரத்தில குழம்பு வச்சிடுவேன்ல” என்று கூறிய மாரியம்மாள் வேலையில் இறங்க.

“ராசைய்யாவின் குரல் கேட்டு மீசை முருகேசன் தாத்தாவும், ஆச்சியும், வாய்யா! இப்பதான் தங்கச்சிய பார்க்கணும்னு தோணுச்சாலே” எனக் கேட்க.

“உங்களுக்கு மகனை பார்க்கணும்னு நினைப்பே இல்லாமதே   இங்கயே வந்து இருக்கீகளோ.  அங்கு வரணும்னு நினப்பே  இல்லையா? ரெண்டு பேருக்கும்” என்றார்.

ராசு அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைய்யா.  ஒரு பத்து நாள்  இருந்துட்டு வரலாம்னுதே என்றார் மீசை தாத்தா.

“தங்கச்சிதே சொன்னா கேக்க மாட்டேன்னு கோழி அடிச்சிட்டு இருக்கு. நீங்களாவது சொல்லுங்க” என்ற ராசய்யா கூற.

“நம்ம மாரியம்மா கோழி குழம்பு வச்சா எட்டூக்கு மணக்கும்.  அது இந்த ஊருக்கே தெரியும். ஏதோ நீ வந்திருக்கேன்னு  ஆசையா வைக்குது.  இருந்த சாப்பிட்டு போலே” என்று முருகேசன்  கூற.

“இதற்குள் மாரியம்மா, வரமிளகாய், கொத்தமல்லி மண்சட்டியில் மணக்க மணக்க வறுத்து, கொஞ்சம் சோம்பு, சீரகம், மஞ்சள் கொம்பு, வெங்காயம், பூண்டு, இஞ்சி” என அனைத்தும் பக்குவமாய் சேர்த்து, பதமாக அம்மியில் அரைத்து, வழித்து எடுத்து குழம்பு வைக்க அனைத்தையும் எடுத்து வைக்க.

மாணிக்கம் கோழி கறியைத் தனித்தனியாக அறிந்து எடுத்து,  அதில் கொஞ்சம் மஞ்சள் தூள்,  விளக்கெண்ணெய்,  உப்பு போட்டு நன்றாக பிசைந்து தன் பொஞ்சாதி  மாரியம்மாளிடம் நீட்ட.

அவர் ஒரு மண் சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு அரைத்த செலவுகளை ஊற்றி, அதனுடன் கோழிக்கறியையும் போட்டு ஊரே மணக்க  குழம்பு வைத்தாள்.

இதற்குள் கண்ணனும், முத்துவும் வந்து சேர.

“வாங்க மாப்பிள்ளைகளா வாங்க” என ராசய்யா கூற.

“வாங்க மாமா.  திடீர்னு இந்த பக்கம்  தெக்கத்தி காத்து வீசுதே”  என கண்ணன் சிரித்துக் கொண்டே அவரது கைகளை பிடித்துக் கொண்டான்.

எல்லாம் சோலியாதே வீசுது.  எல்லாம் நல்ல விஷயம் பேசதே வந்தேன்.

“என்ன மாமா சொல்லுங்க” என கண்ணன் கேட்க.

“இன்னொரு பொண்ணையும் முத்து கிட்ட கைய புடிச்சு கொடுத்துட்டா என்னோட இன்னொரு கடமையும் தீர்ந்துடும்லே. பொறவு  நிம்மதியா கண்ண மூடுவேன்” என்று கூற.

“ஏண்ணே இப்படி சொல்லுறீக” என மாரியம்மாள் கண்கலங்க.  “நீங்க முதல்ல வந்து ஒரு வாய் சாப்பிடுங்க.  அப்புறம் பேசிக்கலாம்” என்று பிடிவாதமாக கூறி   கைகளை கழுவ தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து,  “சுடச்சுட நெல்லுச் சோறும்,  கோழி கறிக்குழம்பும்  வாழை இலையில் போட்டு சாப்பிடுண்ணே ரொம்ப நல்லா இருக்கும்” என பறிமாற.

“அம்மா கைப்பக்குவம் அப்படியே இருக்கு  என் தங்கச்சிக்கு” என்று மனமும் வயிறும் நிறைய சாப்பிட்டு முடித்தார். வெளியில் வந்து கைகளை கழுவிக் கொண்டிருந்த ராசய்யாவுக்கு, மாரியம்மாள் ஒரு துண்டை  கொடுத்து,  “கைய தொடச்சிட்டு  போங்கண்ணே”  என்றார்.

ராசைய்யா கைகளை  துடைத்துக்கொண்டு  திண்ணையில் வந்து அமர.  அனைவரும் அவரை சுற்றி அமர்ந்தனர்.

“மாரியம்மாளோ, வெற்றிலை, பாக்கு, அதனுடன் சுண்ணாம்பையும் கொண்டு வந்து ராசுக்கு கொடுத்துவிட்டு அருகில் அமர்ந்தார். என்னண்ணே இவ்வளவு வெள்ளன வந்திருக்கீக.  காரணமில்லாம எதையும் செய்யமாட்டீகளே” என்று மெதுவாக வார்த்தையை வாங்க.

“அதான் சொன்னனேம்மா. காரணமாதே  வந்தேன்.  மலருக்கும் வயசு ஆகிட்டேபோகுதுலே. ஊர்ல நாலு பேர் நாலுவிதமா பேசறதுக்கு முன்னாடி முத்து மாப்பிள்ளை கையில புடிச்சுக் கொடுத்துட்டா மனசுக்கு நிம்மதியா இருக்கும்.  ஒரு முடிவு எடுத்துட்டுதே  வந்தேன்.  கல்யாணத்த வர தை மாசமே வெச்சிடலாம்னு நான் நினைக்கிறேன்.  நீங்க எல்லாரும் என்ன சொல்லுதீக.  உங்க முடிவை சொன்னா தேதிய முடிவு பண்ணலாம்” என்றார்.

“இப்போதே ஒரு நல்ல முடிவுக்கு வந்திருக்கிக” என மாரியம்மாள் கூற.

“ரொம்ப நல்லதா போச்சு.  வர தை மாசமே வச்சுக்கலாம்” என முருகேசன் தாத்தா கூற. ஆச்சியோ  ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’  னு  சொல்லுவாக.  மலருக்கு தை மாசந்தேனு கடவுள் முடிவு பண்ணிட்டாரு போல.  அப்படியே வச்சிடலாம். நீங்க ரெண்டு பேரும் என்ன சொல்றீக.  எங்க பையன் சார்பில் இருந்து நாங்கள் கேட்கிறோம் என்றார்.

மாரியம்மாள்  மணிவண்ணனைப்  பார்த்துக் கேட்க.

“நாங்க சொல்றதுக்கு என்ன இருக்கு.  முத்துவுக்கு மலர்தான்,  கண்ணனுக்கு எழில் தான்னு சின்ன வயசுலயே பேசி வச்சது தானே.   ஏற்கனவே முடிவு பண்ணுனது தை மாசம் முடிச்சிடலாம்” என மணிவண்ணன்  கூற.

கண்ணனும், எழிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.  கண்ணன், முத்துவை தோளில் இடித்தான்.  “என்னடா எல்லாரும் உன் கல்யாணத்தை பத்தி தான் பேசிட்டு இருக்காங்க.  நீ அமைதியாவே நிக்கிற.  மாமா கேட்கிறார்ல.  பதில் சொல்லு” என்று கூற.

முத்துவோ சற்றுத் தயங்கித் தயங்கி “மாமா நிச்சயமா மலர் தான் எனக்கு மனைவி. இதுல எந்த மாற்றமும் இல்ல.  யாராலயும் மாத்தவும் முடியாது.  இந்த முறையாவது ஐ,பி,எஸ் முடிச்சி  ஒரு கலெக்டரா  இருக்கணும்னு ஆசைப்படுறேன்.  அதுக்கு எப்படியும் இன்னும் நாலு வருஷம் ஆகும்.  என்னுடைய இலட்சியமும் அதுதான். எனக்காக கொஞ்சம் பொறுத்துக்க முடியுமா?” என்று கேட்க.

அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “என்ன மாப்ள. கல்யாணத்துக்கும்  படிப்புக்கும் என்ன சம்பந்தம்.  நீங்க உங்க படிப்ப பாருங்க.  நீங்க தாராளமா உங்க லட்சியத்த நிறைவேத்துங்க.  நிச்சயமா மலர் அதுக்கு  உதவியா  இருப்பா மாப்ள” என்றார்.

“அதுக்கு இல்ல மாமா. முதல்ல வேலை.  அப்புறம்  தான் கல்யாணம்னு  முடிவு பண்ணிருக்கேன். அதுவும் தவிர எனக்கு இன்டர்வியூக்கு ஆர்டர் எப்படியும் இந்த வாரத்தில வந்துடும்”  என முத்து கூற.

அனைவருக்குமே முத்துவுடைய  பதில்  சற்று கோபத்தை வரவழைத்தது.

“அவன் கிடக்கிறான்.  சின்ன பையன்.  நீங்க சொன்ன மாதிரியே நம்ம பண்ணுவோம் அண்ணே” என மாரியம்மாள் கூற.

“அம்மா! “‘ப்ளீஸ்’அவசரப்படாதீங்க.  இது என்னோட வாழ்க்கை.  நிச்சயமா மலர நான்  தான் கல்யாணம் பண்ணிப்பேன்.  ஆனா நான் கலெக்டர் ஆன  பிறகு” என்று முத்து மீண்டும் பிடிவாதமாக கூற.

ராசய்யாவின்  மனம் சற்று வேதனை அடைந்தது.  “உங்க மேல இருக்க நம்பிக்கையிலதான் நான் உங்க அத்தை கிட்ட வீட்ல சொல்லிட்டு கிளம்பினேன். இப்ப இப்படி சொல்றது ரொம்ப வருத்தமா இருக்குலே.  இப்பவும் சொல்றேன் மாப்ள. உன்னோட வெற்றிக்கு நிச்சயமா என் பொண்ணு  தடையா இருக்க மாட்டா. ஊருக்குள்ள தேவையில்லாம வதந்தி எல்லாம் கிளப்புறாக.  அதையெல்லாம் காதுல கேட்டுட்டு என்னால உசுரோட இருக்க முடியாது மாப்ள”  என்று கூற.

ஊருல இருக்கிறவங்க  பேச்சை கேட்டு  அவசரமா முடிவெடுக்காதீங்க  மாமா. “மலரை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்.  என்ன பத்தி அவளுக்கும்  தெரியும்.  ஊருல இருக்குறவகள பத்தி யாரும் கவலைப்படாதீங்க. பேசறவங்க பேசிட்டு போகட்டும்” என்றான்.

“அப்போ இதுதான் உங்க முடிவா மாப்ள.  வயசுக்கு வந்த பிள்ளையை இன்னும் நாலு வருஷத்துக்கு வீட்டுல வச்சிட்டு  இருக்க முடியுமா?  பார்க்கிறவக எல்லாம் அவள  பேசியே கொன்னுடுவாக மாப்ள.  என்னோட நிலைமைய  புரிஞ்சுக்கோ மாப்ள. அவ பொம்பள புள்ள.  வாழ வேண்டிய வயசுல காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வச்சு அவளை வாழ வைக்கிற கடமை எனக்கு இருக்கு.  இன்னும் நாலு வருஷம்னா பொட்டபுள்ள  வயசு அதிகமாயிட்டே போகுதுலே” என  ராசய்யா கண்கலங்க.

அவரின் கண்களைப்  பார்க்க முடியாமல்,  “மாமா எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் கொடுங்க.  நான் உங்களுக்கு ஒரு ரெண்டு நாள் கழிச்சு பதில் சொல்றேன்.  ‘ப்ளீஸ்’ மாமா. அவசரப்படாதீங்க” என்று  முத்து கூற.

ராசைய்யாவோ,  வார்த்தைகள் வராமல் இறுகிப்போன அவரின் மௌவுனம் மாரியம்மாளை தவிக்கவிட்டது. “மாமா இவ்வளவு தூரம் சொல்றாங்க. திரும்பத் திரும்ப எதுத்து பேசுற.  இது என்ன புது வழக்கம்” என முத்துவை கடிந்தார்.

தாத்தாவோ,  “எல்லாரும் அமைதியா இருங்க. ஒரு ரெண்டு நாள்ல ஒன்னும் மாறப்போறதில்லலே.  அவன் போக்கில அவன்  யோசிக்கட்டும்.  தை மாசம் கண்ணாலம் கண்டிப்பா நடக்கும்.  யாரும் கவலப்படாதீக.  அவங்கவங்க வேலைய பாருங்கலே” என கூற.

ராசு மன இறுக்கத்துடன் அனைவரிடமும் கூறி விட்டு விடை பெற்று கிளம்பினார்.

தந்தையின் மனவருத்தம் எழிலுக்கு வேதனையளித்தது. ஆனாலும், ” முத்துவின் முடிவு நல்லதாக இருக்கும்”  என நம்பிக்கை வைத்தாள்.

அவர் சென்ற பிறகு முத்துவை அமரவைத்து அவனைச்சுற்றி தங்களால் முடிந்தவரை அறிவுரைகளை அனைவரும் வழங்கினார்கள். அப்போது  வெளியில் யாரோ அழைக்கும் குரல் கேட்க.  எழிலும்,கண்ணனும் வெளியில் வந்து  பார்த்தார்கள்.

அங்கு ஒரு பத்து பேர் கொண்ட ஒரு குழு வந்து நின்றது. கூட்டத்தில் இருந்த ஒரு பெண்,  “தாயி  நீங்க சொன்ன மாதிரி  நாங்க சிறுதொழில் செய்ய முடிவு பண்ணிட்டோம்.  நீங்க அதுக்கு என்ன பண்ணனும் எப்படி செய்யணும்னு விவரங்களைச் சொல்லி எங்களை சேர்த்து விடுங்க” என்றுது ஒரு குரல்.

கூட்டத்திலிருந்த கண்ணம்மா,  “தனது மகனின் மேல் படிப்பிற்காக வங்கியில் லோன் வாங்கி தர சொல்லி கேட்டு” நின்றார்.

அவர்களது பேச்சும், எழில் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையும் பார்த்து கண்ணன்  மெய் சிலிர்த்து போனான்.

அவர்களுக்காக இவள் செய்யும் உதவியைக் கண்டு  கண்ணனின் மனதில் ஏனோ அவள் ஒரு தேவதையாகவே தெரிந்தாள்.  “இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? இத்தனை பேருக்கு உதவி செய்ய முடியுமா?  இது தெரியாம  நாம இவள எப்படியெல்லாம் திட்டி இருக்கோமே.  எத்தனை குடும்பம் இவளால வாழப்போவுது. நமக்கு இதைவிட புண்ணியம் வேறு என்ன இருக்க முடியும். நிச்சயமாக எழிலுக்கு நாமளும் உதவியா இருக்கணும்” என்ற முடிவிற்கே கண்ணன் வந்துவிட்டான்.

சிறுதொழில் மையத்திற்கு நான் போன் பண்ணி பேசிட்டு, “நாளைக்கு உங்கள அங்க கூட்டிட்டு போய் சேர்த்துவிடறேன் அக்கா.  சிறு தொழில் சம்பந்தமா பேங்க்ல லோன் வாங்க என்ன செய்யனுமோ  அதையும் நானே ஏற்பாடு பண்ணி தரேன்” என்ற எழில்  கூற.

“கண்ணம்மாக்கா நீங்க மட்டும் பதினொரு   மணிக்கே கிளம்பி இங்க வாங்க.  வரும் போது பையனையும் கூட்டிட்டு வாங்க.  படிப்புக்காக லோன் எப்படி வாங்கணும்.  அதை  எப்படி ரெடி பண்ணனும்னு சொல்லி தரேன். லோனும்  ரெடி பண்ணி தரேன்”  என்று கூற.

கண்ணனும் தன் பங்கிற்கு எதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தவன், “ஆமாக்கா.  கண்டிப்பா நாங்க ரெடி பண்ணித்தறோம்.  நீங்க கிளம்பி வாங்க” என்றான்.

கண்ணனை,  எழில்  ஆச்சரியத்துடன் புருவங்களை உயர்த்தி திரும்பிப் பார்த்தாள்.

என்ன எழில் அப்படி பாக்கற. இத்தனை நாளா,  “நீ பண்ற விஷயத்தில இருக்கற நல்லது எதுவும்  நான் புரிஞ்சுக்கல எழில்.  நாம மத்தவங்களுக்கு  உதவி செஞ்சா நம்மளால பத்து குடும்பங்கள் வாழும் அப்படின்னா நிச்சயமா நாம எந்த அளவு வேணாலும் உதவி செய்யலாம்.  உனக்கு பக்கத் துணையா  இனி இந்த மாமா கூடவே இருப்பேன்”  என்று அவளது கரங்களைப் பற்றினான்.

எழிலுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அந்த நிமிடத்தில் நடந்த சம்பவத்தை அவளால் நம்பவே முடியவில்லை.  “நிஜமாவே நீங்கதான் பேசுறீங்களா மாமா” என்று கண்ணனிடம் கேட்க.

“உன்னை நம்பி ஊர்ல பத்து பேர் வரும் போது, கட்டின நான் உனக்கு துணையா இல்லனா எப்படி எழில்.  புருஷன் நானே உன்னை நம்பலனா எப்படிம்மா. எப்போதும் இனி  நான் உனக்கு துணையாய்  இருப்பேன் எழில்”  என்று கூற.

அங்கு இருந்தவர்களோ, ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்.  கடவுள் உங்களை நல்லா வச்சிருப்பார்னு  சொல்லி  அவர்கள் நன்றி கூறி  புது தெம்புடனும், மனநிறைவுடனும் கிளம்பினார்கள்.

அவர்கள் கிளம்பிய பிறகு முத்துவிடம் கண்ணன் பேச்சு கொடுக்க. முத்துவோ, “கண்ணா! வாழ்க்கை என்னோடது. மலர் என்னோட சொத்து. எனக்கு நீங்க அறிவுரை சொல்லி தான் புரியவைக்கனும்னு இல்ல. கொஞ்சம் என்னைய தனியா விடுங்க” என்றான்.

“இதுக்கு மேல ஒன்னும் பேச வேணாம். உங்க பொழப்ப பாருங்க”  என தாத்தா கூற.

அவரது பேச்சிற்கு மதிப்பு கொடுத்து அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க சென்றனர்.

முத்துவின் மனதில் ஏனோ ஒரு இனம்புரியாத வலி இதயம் முழுவதும் மென்மையாக ஊடுருவியது. மலரின் ஆம்பல் பூ போன்ற மென்மையான  முகம் முத்துவின் மனக்கண் முன் வந்து போனது. முத்துவின் அனுமதி இன்றி இமைகளுக்குள் கட்டுண்டு இருந்த கண்ணீர் துளிகள் மடைதிறந்த வெள்ளமென உடைந்து விழியோரத்தில் வழிந்தது. தனது கரங்களால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஒரு தீர்க்கமான முடிவோடு தனது அறைக்குள் சென்றான்.

தொடரும்….

Advertisement