பகுதி – 13

ஆனந்திற்கு பயங்கரமாக கோபம் வந்தது. “ஏங்க உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே இருக்காதா? இவ்ளோ கேவலமா நடந்துக்கறிங்க. இப்ப நான் என்ன பண்ணிட்டே. தெரியாம தானே இடிச்சிட்டேன். வேணும்னே பண்ண மாதிரி மீதமுட்டையவும் என் கைல வச்சி ஒடைக்கறீங்க. இப்போ உங்களுக்கு சந்தோசம் தானே கிளம்புங்க” என்றான்.
எதுக்கு கிளம்பனும். “உடைஞ்ச முட்டைக்கு காசு கொடுங்க. இல்லையா முட்டைய வாங்கி கொடுங்க. ரெண்டுல ஒன்னு நடக்காம நான் நகர மாட்டேன்” என்றாள் செண்பகம்.
“பகல் கொள்ளை எப்படி அடிக்கிறதுனு உங்ககிட்ட தாங்க ட்ரெய்னிங் எடுத்துக்கணும். நான் கூட கிராமத்து பொண்ணு என்னமோனு நினைச்சேன். நீங்க பயங்கர கேடியா தான் இருக்கீங்க” என்றான் ஆனந்த்.
“இந்த மாதிரி பேசுற வேலை எல்லாம் இங்கே வேண்டாம். நாங்க எல்லாம் உங்கள மாதிரி அரசாங்க வேலை பாக்குறவங்க இல்ல. எல்லாம் கூலி வேலை தான். காசோட அருமை எங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா உங்களுக்கு தெரியாது இல்ல” என்றாள்.
“போதும் மேடம். ரொம்ப பேசி உங்க எனர்ஜி வேஸ்ட் பண்ணாதீங்க. என்கூட கடைக்கு வாங்க. இப்பவே உங்க சொத்த வாங்கி கொடுத்துடுறேன்”, என்று கூறிவிட்டு முறைத்துக் கொண்டு கடையை நோக்கி நகர்ந்தான் ஆனந்த்.
“கடைக்காரரை பார்த்து ஒரு டஜன் முட்டை கொடுங்க” என்று ஆனந்த் கேட்க.
“செண்பகமோ நான் பத்து தானே வெச்சிருந்தேன். எதுக்கு பன்னிரண்டு முட்டை. அடுத்தவங்க சொத்து எனக்கு தேவை இல்லை” என்றாள் செண்பகம்.
“பரவாயில்ல மேடம். மீதி இரண்டு வட்டிக்குனு நினைச்சுக்கோங்க” என்று கூற.
கடைக்காரர் அதற்குள் மூட்டையைக் கட்டிக் கொடுக்க. வாங்கி செண்பகத்தின் கையில் வைத்தான் ஆனந்த்.
“செண்பகம் அதிலிருந்து இரண்டு முட்டைகளை எடுத்து இது உங்க சொத்து நீங்களே வச்சுக்கோங்க. எனக்கு பேராசை எல்லாம் கிடையாது” என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடையை கட்டினாள்.
“திமிர் பிடிச்சவனு தெரியும். ஆனா ரொம்ப ரொம்ப திமிர் பிடிச்சவளா இருக்காளே”, என்று நினைத்துக் கொண்டு தான் வாங்க வந்த பொருட்களை எல்லாம் கடைக்காரரிடம் கூறி வாங்கிக் கொண்டு ஆனந்த் கிளம்பினான்.
இங்கு கிழக்கு காட்டில் பழனிசாமி மற்றும் அவரது மனைவி அன்னமும். மலரின் தந்தை ராஜுவை பார்த்து பேசிக்கொண்டிருந்தனர்.
“சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீக. உங்க பொண்ணு மலரோட நடவடிக்கை கொஞ்ச நாளாவே சரி இல்ல. அந்த தபால் ஆபிசுக்கு புதுசா வந்த தம்பியோட அடிக்கடி வயலுப்பக்கம் தனியா சந்திச்சி பேசுறா. இதை நாங்களே பாத்திருக்கோமே” என்று அன்னம் கூற.
“ஏம்மா! ஒரு பொண்ணு ஒரு பையன் கூட பேசுறதுல என்னம்மா தப்ப கண்டுபிடிச்சீக. ரெண்டு பேரு பேசினா அதுல என்ன இருக்கு. என் பொண்ண பத்தி எனக்கு தெரியும்” என்று கூற.
“என்னமோய்யா. வயசு புள்ள வீணா போக கூடாதுனு பார்த்தத மனசு கேட்காம உங்க காதுல போட்டேன். அதுக்கு மேல உங்க விருப்பந்தே. நீங்க என்னமோ பண்ணுக. நாள பின்ன ஏன் அண்ணா உனக்குதான் தெரியுமே. நீயாவது என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லன்னு கேட்க கூடாதுல. அதுக்கு தான் இப்பவே சொன்னேன்” என்று பழனிச்சாமி கூற.
“சொல்லியாச்சில்ல. நான் பார்த்துக்குறேன். நீங்க கிளம்புங்க” என்று கூறி விட்டு ராசைய்யா நகர்ந்தார்.
“என்னங்க நான் எம்புட்டு பெரிய விஷயத்தை சொல்லி இருக்கேன். இந்த ஆளு ஒரு சூடு, சொரணையே இல்லாம இப்படி போயிட்டு இருக்காகளே” என்று அன்னம் கேட்க.
“புள்ள விஷயம் எங்க வெளியே தெரிஞ்சிருமோனு மூடி மறைக்கிறாருலே. நீ வா நம்ம பொழப்ப பாக்கனும்லே. யார் எக்கேடு கெட்டு போகட்டுப் போனா நமக்கென்ன” பழனிச்சாமி கூற. அவர்கள் தன் பொழப்பை பார்க்க கிளம்பினார்கள்.
ராசைய்யா மன பாரத்தோடு தனது வீட்டை நோக்கி நடந்தார்.
“வீட்டிற்கு வந்தவர் யாரிடமும் எதுவும் பேசாமல் வெகு நேரமாக அமைதியாகவே தூணில் சாய்ந்து அமர்ந்து இருக்க. இதை பார்த்த சரசு என்னய்யா ஆச்சு. நானும் ரொம்ப நேரமா பார்க்கே. ஏதோ மூஞ்சியெல்லாம் வாடிப்போய் வருத்தமா கிடக்கெய்யா” என்று கேட்க.
“மலரும் வந்து தனது தந்தையின் அருகில் அமர்ந்தாள். ஏம்பா என்னப்பா ஆச்சு. ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க.
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா கொஞ்சம் மனசு சரியில்ல. அவ்வளவுதான்” என்றார்.
“இப்ப மனசுக்கு என்ன ஆச்சு. மனசு சரியில்லாத போற அளவுக்கு என்ன நடந்து போச்சு” என்று சரசு கேட்க.
“பொட்டபுள்ளைய பெத்தவங்களுக்கு எல்லாம் நிம்மதியே கிடையாது போல சரசு. இப்பதான் தெரியுது. பொம்பள பிள்ளைய பெத்தவக ஏன் வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்க மாதிரின்னு சொல்றாகனு” என ராசைய்யா வருந்த.
மேகம் ஒருபக்கம் இருண்டு திரண்டு மெல்ல மெல்ல தனது மகிழ்ச்சியை மழை நீராகக் கொட்ட தொடங்கியது. தாழ்வாரத்தில் சாரலடிக்க அங்கு படுத்திருந்த ஜில்லு அவசரமாக ஓடி வந்து சுவரின் ஓரமாக சாய்ந்துகொண்டான்.
“மலர் தனது தந்தையை உள்ள வந்து உட்காருங்க” என்று கூறி அறையினுள் அழைத்து வந்து அமர வைக்க.
“எனக்கு தெரிய நீங்க எப்படி இருந்ததே இல்ல. இப்போ என்ன ஆச்சு. ஏன் இப்படி பேசறீக” என்று சரசு கேட்க.
மலர் சரசவை அண்ணாந்து பார்த்தாள். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.
“கஞ்சித்தண்ணி எதுவும் குடிக்கறீகளா?” என சரசு கேட்க.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சரசு. இப்படி உட்காரு. கொஞ்சம் மனசு விட்டுப் பேசனும்” என்று கூற.
சரசுவும் அவரின் அருகில் அமர்ந்தாள்.
“என்னப்பா. எதுவா இருந்தாலும் மனசு விட்டு பேசுங்கப்பா. எல்லாம் சரியாப் போகும்” என்று மலர் கூற.
“பேசித்தானே ஆகணும். நாம பேசலனா ஊர்ல இருக்கவன் நம்மள வேற மாதிரி பேசுவான்” என்று கூற.
“என்னப்பா சொல்றீங்க. விடுகதை எல்லாம் போடுறீங்களே” என்று மலர் கேட்க.
“நான் கிழக்குக் காட்டிலிருந்து வந்துக்கிட்டு இருந்தேன். அங்க பழனிச்சாமியும் அவன் பொஞ்சாதி அன்னத்தையும் பார்த்தேன்” என்று கூற.
“அந்த வாயாடியா? அவளுக்கு இருக்கு. வாயாடி சிரிக்கி ஏதாவது பேசி உங்க மனசுல ஊனம் பண்ணிட்டாளா?. அவள வஞ்சாத்தான் மனசு ஆறும்” என்று சரசு கோபப்பட.
“அப்படி எல்லாம் இல்ல சரசு. நாம பொண்ண பெத்தவங்க. ஊர்ல நாலு பேர் பேசுறதுக்கு முன்னாடியே புள்ள கல்யாணத்தை முடிக்கணும் அவ்வளவுதான். அவங்க பேசு நாம ஏன் இடம் கொடுக்கணும். மாப்பிள்ளை முத்துதான் வந்தாச்சு. மாரியம்மா வீட்டுல போயி பேசி முடிச்சிடலாம்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற”, என்று ராசய்யா கேட்க.
மலருக்கு உள்ளூர மகிழ்ச்சி பொங்கியது. சிறகில்லாமலே வானத்தை தொடுவதை போல உணர்ந்தாள்.
“இப்போ என்ன ஆச்சுன்னு இந்த முடிவுக்கு வந்தீக. அப்படி அந்த வெளங்காதவ என்னதான் சொன்னா. அதை முன்ன சொல்லுங்க” என்று சரசு கேட்க.
“ராசைய்யா தலை குனிந்து கொண்டே நம்ம மலரு புதுசா தபால் ஆபீசுக்கு வந்த பையனோட அடிக்கடி வயலுப்பக்கம் நின்னு பேசுறதா சொன்னாக. அதான் அங்க அவுகள பேசிட்டு வந்துட்டேன் புள்ள. ஆனாலும் மனசு கேட்கல. ஊருக்குள்ள போய் இது மாதிரி இன்னும் நாலு பேரு கிட்ட சொன்னா மாப்ள என்ன நினைப்பாரு. ஊரு தான் நம்மள என்ன நினைக்கும். பாக்குறவக தப்பா தான் பேசுவாக” என்று கண்கலங்க.
“மலருக்கும் கோபம் வந்தது. இப்ப தான்பா நீங்க தப்பு பண்றீங்க. பேசிட்டு வந்திருக்க கூடாது. அங்கேயே நாளு அறஞ்சிட்டு வந்து இருக்கணும். உங்களுக்கு தெரியாதாப்பா என்ன பத்தி. நான் மாமா மேல உசுரையே வெச்சிருக்கேன். மாமாவும் அப்படித்தான். இது எல்லாருக்குமே தெரியும். அடுத்தவங்க ஆயிரம் பேசுவாங்க. அதையெல்லாம் நீங்க ஏன் காது கொடுத்து கேக்குறீங்க. இதை முத்து மாமாகிட்டயே சொன்னாலும் கூட அவரு நம்ப மாட்டார். இதை பத்தி எல்லாம் எனக்கு கவலை கிடையாது. இதெல்லாம் குப்பையில தூக்கி போட்டுட்டு நீங்க நிம்மதியா இருங்கப்பா” என்று மலர் கூற.
“சரசு அதற்கும் ஒருபடி மேலே போய் இந்த அன்னத்தை சும்மா விடமாட்டேன்லே. அவள ஆய்ஞ்சி புடுறேன்” என்று கோவமாக எழுந்தாள்.
“ஆமா ஊருக்குள்ள போய் பேசி நீயே சிரிக்க வைக்கப் போறியா? அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். அமைதியா இரு புள்ள. விடியட்டும் மொத வேலையா மாரியம்மா வீட்டுக்கு போறேன். முத்துவுக்கும், மலருக்கும் கல்யாணத்த பேசி முடிச்சிடுவோம்” என்று ராசைய்யா கூற.
“அதுவும் சரிதான். நம்ம வீட்டு கதவை தான் நாம சாதிக்கணும். ஊர் வாய மூட முடியாது. முதல்ல அந்த வேலையை பாருங்க. நான் போயி சமையல முடிக்கிறேன்” என்று கூறிவிட்டு சரசு நகர.
“நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கப்பா. எல்லாம் சரியா போகும்” என்று கூறிவிட்டு மலரும் தனது அறைக்கு வந்தாள். வந்தவள் பலமுறை முத்துவுக்கு இந்த தகவலை சொல்ல முயற்சி செய்தும் முத்து போனை எடுக்கவே இல்லை.
முத்து தோட்டத்தில் உள்ள தனது அறையிலேயே மொபைலை வைத்து விட்டு வாழை தோப்பிற்குள் சென்றிருந்தான். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வந்த பார்த்தவன் மீண்டும் மலருக்கு அவனே போன் பண்ணினான்.
மலர் எடுத்து பழனிச்சாமியும், அன்னமும் தனது தந்தையிடம் பேசிய விஷயத்தை கூறி அழுதாள்.
“அடி லூசு பொண்டாட்டி. நீ எதுக்குடி அழற நீ எனக்குத் தான். நான் உனக்குத்தான். இது ரெண்டு பேருக்குமே தெரியும். ஊர்ல யாரோ என்னமோ பேசிட்டு போறாங்க. இதெல்லாம் நீ ஏன் கண்டுக்கற. மாமாவ நிம்மதியா இருக்க சொல்லு. ஏன்டி உன் மனசு எனக்கு தெரியாதா?. நீ யார் கூட பேசினாலும் நான் வருத்தப்பட மாட்டேன். அது வெறும் வார்த்தையா மட்டும் தான் அங்க இருக்கும். உன்னுடைய மனசு முழுக்க எங்கிட்ட இருக்கு. விட்டுத்தள்ளு மலரு. ஊருகுள்ள நாலு பேர் இப்படித்தான் இருப்பாங்க. இது எல்லாம் பார்த்தா நாம வாழவே முடியாது” என்று ஆறுதல் கூறினான். ‘சாப்பிட்டியா?’ என்று கேட்டான்.
“இன்னும் இல்ல மாமா” என்று மலர் கூற.
“நான் சாப்பிட்டு வரேன். நீயும் சாப்பிட்டு வா. இன்னைக்கு கொஞ்சம் பேசலாம். இன்னிக்கு விடியவிடிய உன்கிட்ட தான் பேச போறேன்” என்றான்.
“இதைவிட சந்தோசம் எனக்கு என்ன மாமா இருக்கு என்றவள், நான் இப்பவே சாப்பிட்டு வரேன். நீங்களும் வாங்க” என்று கூறினாள்.
சரி என்று முத்து தொலைபேசி இணைப்பைத் துண்டித்து சாப்பிடச் சென்றான்.
மலரும் இரவு உணவை முடித்துக் கொண்டு முத்துவின் குறுஞ்செய்திக்காக காத்திருந்தாள். மணி இரவு பதினொன்றை தான்டியது. மலர் பல குறுஞ்செய்திகளை அனுப்பிய பிறகு இரவு பதினொன்று முப்பதுக்கு மேலாக, “சாரி மலர் படிச்சுட்டு இருந்தேன். நாம நாளைக்கு பேசலாமே. இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு” என்று கூற.
“என்ன விடிய விடிய படிக்க போறீங்களா? இன்னைக்கு பேசலாம்னு தானே சொன்னீங்க. இதுக்கு மேலே இன்னும் என்ன மாமா படிக்கணும். வெறும் இன்டர்வியூ மட்டும் தானே. அதுக்கு என்ன படிக்க வேண்டி இருக்கு. ஏற்கனவே படிச்சது தானே மாமா. நானும் சாப்பிட்டு வந்து உங்களுக்காக ஆசையா காத்துகிட்டு இருக்கேன் இல்ல” என்று கூற.
“ஆமா. அப்ப சொன்னேன். இப்போ கொஞ்சம் மனசு சரியில்ல. அதனால கொஞ்ச நேரம் ஏதாவது கதை படிக்கலாம்னு நினைச்சு ஒரு கதை தொட்டுட்டேன். பாதியில வைக்கிறதுக்கு மனசே வரல. அத படிச்சா கொஞ்சம் மனசு நிறைவாய் இருக்கும்னு நினைக்கிறேன்.
ஏன் மாமா என்கிட்ட பேசுனா உங்க மனசு சரி ஆகாதா?.
“நான் ஒன்னு பேசினா நீ ஒன்னும் பேசி கடைசியா சண்டை போட்டு அழுதிட்டு போவ. ஏற்கனவே எனக்கு மனசு சரி இல்ல. இதுல நீயும் கடுப்பேத்தி இன்னும் டென்ஷன் அதிகமாகிடும். அதனால நாளைக்கு பேசுவோம். புரிஞ்சுக்கோ மலரு” என்று கூற.
அப்ப எதுக்கு இரவு முழுக்க பேசலாம்னு சொன்னீங்க.
அப்ப மனசு சரியா இருந்துச்சி. உன்கிட்ட பேசணும்னு சொன்னேன் தான். இப்போ மனசு சரியில்லாம போயிடுச்சு.
“ரொம்ப சந்தோஷம். என்னைக் கண்டாலே இப்போதெல்லாம் பேச பிடிக்கல. வெறுப்பு தான வருது” என்று மலர் அழத் தொடங்கினாள்.
“மலர் என்னோட மனசு கொஞ்சமாவது புரிஞ்சுக்கோ. இப்படி சண்டை பண்ணாதே” என்று கூற.
“போதும் சாமி. நல்லா தெரிஞ்சுகிட்டேன். உங்களுக்கு என்கிட்ட பேச பிடிக்கல. அவ்வளவுதானே. இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசாதீங்க. மெசேஜ் வந்துச்சி கைல மொபைல் இருக்காது. கண்டிப்பா உடச்சிடுவேன். குட் நைட்” என்று போட்டு நெட்டை கட் பண்ணிவிட்டு படுத்துக் கொண்டாள் மலர்.
“முத்து இதற்குமேல் பேசினாலும் அவள் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை”, என்று மிகவும் வருத்தப்பட்டான். ஒரே ஒரு குறுஞ்செய்தியை மட்டும் அனுப்பி விட்டு, அவன் கையில் வைத்திருந்த வாணி அரவிந்த் எழுதிய நாவலான “இதழில் ஒரு யுத்தம்” என்ற கதையை மீதியும் வாசிக்கத் தொடங்கினான். கதை முடியும் வரை ஆர்வத்துடன் படித்து விட்டு அப்படியே உறங்கியும் போனான் முத்து.
மறுநாள் அதிகாலை..
வாழத் தெரியாத சிலருடன்
சேர்த்து வைத்து
வாழத் தெரிந்தவர்களையும்
தண்டித்து விடுகிறது
இந்த வாழ்க்கை…
என்ற முத்துவின் குறுஞ்செய்தி பார்த்து மலர் மேலும் கோவமடைகிறாள்..
“வாழத்தெரிஞ்சவங்களோடயே சந்தோஷமா வாழுங்க. என்ன விட்றுங்க. பை” என அனுப்பினாள்.
“முத்துவோ, ஏய்! நீ தான்டி குட் நைட் போட்ட. அதுக்கு தான் நான் இத போட்டேன். என்னவோ ரொம்ப ஓவரு பண்ற” என அனுப்ப .
“ஆமா ஆசையா பேச வந்தா நான் கதைபடிக்க போறேன். ஒரு கதைய தொட்டுட்டேன் படிக்காம வைக்க முடியல. நீ தூங்கு மார்னிங் பேசிக்கலாம்னு சொல்லும் போது இல்ல இல்ல என்னைய கொஞ்சுனு நான் கெஞ்சனுமா. கிடைக்கிற கொஞ்ச நேரமாவது நாலு வார்த்தை பேச மாட்டிங்களானு நான் ஏங்குறேன். ஆனா நீங்க நேரம் கிடச்சும் கத படிக்கனும் நீ தூங்குனு சொல்றிங்க. யாருக்கு வாழ தெரில. உங்களுக்கா எனக்கா? எனக்கு அப்பவே தெரியும். உங்களுக்கு என்கிட்ட பேசி போர் அடிச்சிடுச்சி. விலகி போக நான் தான் உங்க வாட்ஸப் குரூப் படிப்புனு ஒரு கதைலாம் சொல்றிங்க. இன்டர்வியூக்கு கூட நைட்டு முழுக்க தூங்காம படிக்கறது நீங்களா தான் இருக்கும். பேச பிடிக்கலனா நேரடியா எனக்கு உங்கிட்ட பேச பிடிக்கல போடீனு சொல்லுங்க. அத விட்டுட்டு எதுக்கு இப்படி வேஷம் போடனும். இனி நான் பேசல. என்னைய விட்ருங்க. பை” என மலர் அனுப்ப.
“ஏன்டி, லூசா நீ. இதுக்கு ஏன்டீ இப்போ இவ்வளவு பெரிய கட்டுரை எழுதற. அதான் நேத்து நேர்லயே பாத்து பேசினோம்ல. அப்புறம் என்ன. 24 மணி நேரமும் உன்கிட்ட கொஞ்சிகிட்டே இருக்கனுமா. எனக்குனு சில பொழுது போக்குகள், சந்தோஷங்கள் இருக்கக் கூடாதா. நீ இப்படி தான் புரிஞ்சிட்டு சண்டை போடுவனா அது உன்னோட இஷ்டம். நீ என்னமோ பண்ணு மலர். எனக்கு கடுப்பாகுது. பை” என முத்து அனுப்பிவிட்டு நெட் கட் பண்ணிவிட்டு அவன் வேலையை தொடங்கினான்.
மலரோ இதானா காதல். இதானா புரிதல். என்கிட்ட கொஞ்ச நேரம் மாமா பேசனும்னு நான் எதிர்பார்த்தது தப்பா? நானும் உயிருள்ள மனுஷி தான. எனக்குள்ள ஆசைகள் இருக்காதா? இதெல்லாம் எனக்கு தேவை தான்.. ஒருத்தர் விலகி போக தொடங்கறாங்கனு தெரிஞ்சா அவங்க நம்மள ஒதுக்கறதுக்கு முன்னாடி நாம “அவங்கள ஒதுக்கிட்டு விலகி போய்டனும். ‘ச்ச்சீ’ என்ன வாழ்க்கை இது. இதுக்கு மேல இந்த மொபைல் வேணுமா? தூக்கி வீசிடலாமா?” என பல எண்ணங்கள் மலரின் மனதில் ஓடியது.. “முதல்ல இதுல இருந்து நான் வெளிய வரனும். என்ன பண்றது” என யோசித்தாள் மலர். “நாம ஏன் மேல படிக்கக் கூடாது .. எம்.பில் படிக்கலாமே. அப்பா கிட்ட பேசி பாக்கலாம்” என்று முடிவெடுத்தவள் செல் போனை அங்கேயே போட்டுவிட்டு தனது தந்தையை தேடி வந்தாள்.
“அப்பா… அப்பா” என அழைக்க….
“உங்கப்பா காலம்பறவே கெளம்பிட்டாருடீ. உன் முத்து மாமனுக்கு உன்ன பேசி முடிக்கத்தே” என்று சரசு கூற.
“அது ஒன்னு தான் இப்ப குறச்சல்.போய் மூக்கு அறுபட்டு தான் வரப்போறாங்க” என்று மலர் நினைத்துக் கொண்டாள்.
தொடரும்…..