பகுதி – 12

“என்னங்க நான் ஏதோ விளையாட்டா பேசினேன். ஆனா நீங்க வெட்டி வீசற மாதிரி பேசுறீங்க. நான் என்ன இப்போ தப்பா கேட்டுட்டேன். அதுக்கு இப்படி ஒரு வார்த்தையை சொல்றீங்க. ஏதோ பார்த்தேன். பிடிச்சது. பேசினேன். அவ்வளவுதான். ரொம்ப ஓவரா பண்ணாதீங்க” எனக் கூறிவிட்டு ஆனந்த் அவன் வழியில் நடக்க.
“ஆனந்தின் செயல் மலருக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. ரொம்ப ஓவரா தான் பேசிட்டேனோ” என நினைத்தாள். “ஹலோ! ஏங்க உங்களைத்தான். நான் எதோ டென்ஷன்ல இருந்தேன். அதான் வேகமா வார்த்தையை விட்டுட்டேன். தப்பா எடுத்துக்காதீங்”க என்று மலர் கூற.
“நல்லா டென்ஷன் ஆனிங்க. போங்க. உங்க கோவத்துக்கு நான் தான் பலிகெடாவா” என்று கூறிவிட்டு ஆனந்த் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
“நமக்கு நம்ம பிரச்சனையே பெருசா இருக்கு. இதுல இவன் வேற” என்று நினைத்துக் கொண்டு மலர், முத்து வீட்டிற்கு நடையைக் கட்டினாள்.
“இங்கு கண்ணன் வீட்டில் பொழுது விடிய தொடங்கும் நேரம் பாட்டி தங்கம்மாவின் குரல் வீட்டெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பொழுது விடியற நேரம் பொட்ட புள்ள வாசக்கூட்டி சாணம் தெளிச்சி ஒரு கோலம் போடனும்னு பழக்கவழக்கம் எல்லாம் இல்ல” என வசை பாடுவது கேட்க.
எழில் எழ முயற்சி செய்தாள். அப்போதுதான் கண்ணனின் கரங்களுக்குள் சிறைப்பட்டு இருப்பதை உணர்ந்தாள். தனது கரங்களை விடுவித்துக் கொண்டு எழுந்தாள்.
“இதுக்கு மேல இருந்தா பாட்டி ரெண்டு பேத்தையும் ஜாடையிலேயே பேசி மானத்தை வாங்கிடுவாங்க. நீ போய் இருக்க வேலைய பாரு” என்று கண்ணன் கூற.
“போகனுமா மாமா” என்று எழில் சிணுங்கினாள்.
“போன்னு நான் சொல்லுவேனா என் செல்லகுட்டி” என்று கண்ணன் புன்முறுவலுடன் அவளைப் பார்க்க.
வெளியே பாட்டியின் குரல் வேகமெடுத்தது. பாட்டி அந்த ஆட்களிடம் சண்டையிட்டுக் கொண்டிருப்பது புரிந்தது. “நீ என்னதான் கழுதைக்கு கறியும் சோறும் ஆக்கி போட்டாலும் அது புத்தி காகிதந் திங்கத்தே போகும். அப்படி இல்லலே இருக்கு உங்க புத்தி” என்று அவர்களை திட்டிக் கொண்டிருந்தாள்.
“அவர்களின் உரையாடல் இவர்களுக்குக் கேட்க எழில், நான் போறேன்” என அவசரமாக தன்னை சரி செய்து கொண்டாள்.
“எழில் போயே ஆகணுமா?” என இப்போது கண்ணன் கேட்க.
“கண்டிப்பா போய்த்தான் ஆகணும் மாமா” என்று எழுந்து வெளியில் வந்தாள்.
“தண்ணி சூடேறி கெடக்குது. முதல்ல தலைமுழுகிட்டு வா” என்று கூற.
எழில் அமைதியாக குளிக்கச் சென்றாள்.
“உங்களுக்கு கூலி கொடுக்கறதுல என்ன கொறைய கண்டீக. ஏன் இங்க வேலைய முடிக்காம பக்கத்து காட்டுக்கு போறீக. இப்படி பண்ற மாதிரி இருந்தா இனிமே நம்ம காட்டு பக்கம் வராதீக” என அவர்களை பாட்டி திட்டி அனுப்பினார்.
ஆத்தா ஏதோ வயித்து பொழப்புக்கு போயிட்டோம். விடு ஆத்தா. இனி வேலைய முடிச்சிட்டு போறோம் என அவர்கள் கூற.
“என்னமோ போங்கப்பா” என பாட்டி சலித்துக்கொள்ள.அவர்கள் கிளம்பினார்கள்..
“மாரியம்மா அமைதியாக நிற்க. மணிவண்ணனோ அவங்கள ஏன் பேசுறீக. ஊருக்குள்ள போய் நாலுவிதமா அப்புறம் சொல்லுவாகளே” என்று கூற.
“நீங்க விடுக மாப்பிள்ள. எதுக்கு இங்க வேலைய முடிக்காம அங்க போகணும். இது மாதிரி ஆளுக்கு தான் நல்லதுக்கு றெக்க கட்டறதும், கெட்டதுக்கு கொம்பு சீவறதும்னு திரியுதுக. நறுக்குத் தெரிச்சாப்ல பேசினாதே புத்தி வரும். நீங்க போய் ஆக வேண்டியத பாருங்க” என்று கூற. மணிவண்ணன் மம்பட்டியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு கிளம்பினார்.
எழில் குளித்துவிட்டு வந்த தனது அத்தையுடன் சமையல் வேலையில் உதவி செய்து கொண்டிருக்க. அப்போது மலர் அங்கு வந்து சேர்ந்தாள்.
“மலரை பார்த்தவுடன் எழில் சந்தோஷமாக கட்டிக்கொண்டாள். அக்காவ பாக்காம இருக்க முடியலயோ” என்று பாட்டி கேட்க.
“அக்கா மட்டும் இல்ல. தாத்தாவை எல்லாரையும் தான் பாட்டி. இங்க வந்து நீங்க இங்கேயே இருந்தா என்ன அர்த்தம். நம்ம வீட்டுக்கு வர வேண்டியதுதானே” என பாட்டியிடம் மலர் கேட்க.
“ரெண்டு நாள் போகட்டும். வந்துடுவேண்டா கண்ணு” என பாட்டி அவளிடம் கூற.
“அப்போது தாத்தாவும் அங்கு வர. வாடா கண்ணு” என அன்போடு அழைக்க.
“நீ என்கிட்ட பேசாத தாத்தா” என செல்லமாக கோபப்பட்டால் மலர்.
“என் செல்ல பேத்தி கிட்ட பேசாம நான் எங்கடா போவேன்” என்று கூற.
“சரி.. சரி.. போனா போகுது பேசுறேன்”, என்று இவர்களோடு உதட்டளவில் மட்டும் உரையாட, மனமும், கண்களும் முத்துவை தேடி அலைமோதியது.
“அதை கவனித்த பாட்டி நீ தேடி வந்தது இங்கே இல்லடியம்மா. அது தோட்டத்தில இருக்கும் போய் பாரு” என்று கூற. மலர் வெட்கத்துடன் சிரித்தாள்.
“அதானே பார்த்தேன். நான் கூட என் மேல பாசம் வந்து தான் வந்துட்டாலோன்னு நினைச்சேன்” என்று எழில் கூற.
“அக்கா கூடவே இருந்துட்டு எப்படிக்கா பாக்காம இருக்க முடியும். நிஜமா உன்னைய பார்க்கத்தான் வந்தேன் என்றாள் மலர்.
“சரி மலரு. நீ வந்த வேலையை பாரு. நான் சீக்கிரம் சமையல முடிக்கறேன். சாப்பிட்டு அப்புறம் போவியாம்” என்று எழில் கூற.
சரிக்கா என்ற மலர் துள்ளலுடன் மலர் முத்துவை சந்திக்க தோட்டத்து வீட்டிற்க்கு கிளம்பினாள்.
முத்துவின் விழிகள் புத்தகத்தில் தொலைந்திருக்க. எழில் வருவதை கவனிக்கவில்லை.
மலர் அவனருகில் வர. அவளின் கால் கொலுசின் ஓசை கேட்டு முத்து தலையை நிமிர்த்தி பார்த்தான்.
“ஏய்! மலர். என்ன காலையிலேயே நேரில் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிற” என்றான் முத்து.
“ஐயோ! என் பெயர் எல்லாம் வேற நினைவிருக்கா. அதிசயமா இருக்கு சார்”, என்று மலர் கூற. விட்டுட்டு போயிடுவிங்கனு நினைச்சேன் என்றாள் மலர்.
அடியேய்! மக்கு பொண்டாட்டி.. லூசாடி நீ. பேசாம இருந்தா விட்டுட்டு போய்டுவாங்கனு அர்த்தமா.
“என்ன மக்கு பொண்டாட்டியா. அப்படியே தழைய தழைய புது மஞ்சள் வாங்கி கழுத்தில தாலி கட்டிட்டீங்க பாருங்க. அதிகாரம் மட்டும் கொடி கட்டி பறக்குது” என மலர் முறைக்க.
“ஏன்டி! எத்தனை தடவ சொன்னாலும் புரிஞ்சிக்கவே மாட்டியா மலரு. நீ சத்தியமா மக்கு தான்டி. இதோ பாரு திரும்ப திரும்ப நீ கோடி தடவ கேட்டாலும் இத தான் சொல்லுவேன். நான் பேசினாலும் பேசாம போனாலும், பாத்தாலும் பாக்காம போனாலும், உன் கழுத்துல தாலி இப்போதைக்கு கட்டலனாலும் நீ தான்டி என் அழகு பொண்டாட்டி. என் செல்ல பொண்டாட்டி. என் லட்டு பொண்டாட்டி போதுமா தேவியாரே. இதுக்கு மேலயும் என்னைய நம்பறதும் நம்பாம அழுதுட்டு சண்ட போடுறதும் உன்னோட விருப்பம் தான் மலரு” என்றான் முத்து.
இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. இப்படி பேசியே தான மயக்கிட்டீங்க.
உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா. உங்க பிரச்சினை தான் என்ன மாமா. நான் பேசறது தானா? எனக்குள்ளயும் உங்க கிட்ட பேசனும்னு ஆசை இருக்கும்ல மாமா. அது ஏன் உங்களுக்கு புரியமாட்டேங்குது.
“இந்த பேச்ச விடு மலர். நான் பேசுவேன் அவ்வளவு தான். இனி பேசலனா ஏன்னு கேளு” என முத்து கூற.
மலருக்கு மகிழ்ச்சி பொங்க, “மாமா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள்.
ஆமா சொல்ல வேண்டியத சொல்லாத. இத மட்டும் சொல்லு என்று முத்து மலரை நெருங்க. அப்போது முத்துவின் தந்தை மணிவண்ணன் அங்கு வந்தார்.
“என்னம்மா மலரு. காலையிலேயே காத்து இந்த பக்கம் வீசுது” என கேட்க.
“சும்மாதான் மாமா. அக்காவ பாக்கலாம்னு” என்று மலர் தடுமாற.
“அக்கா வீட்டில தான இருந்தாக” என்று மணிவண்ணன் கூற.
“அக்காவ பார்த்திட்டு இப்படியே மாமாவையும் பாக்கலாம்னு” என்று மலர் வார்த்தைகளால் இழுக்க.
“சரிம்மா. அங்க எல்லாரும் உனக்காக காத்துகிட்டு இருப்பாக. நீ வீட்டுக்கு போ” என்று கூற.
“சரிங்க மாமா” என முத்துவை பார்த்து தலையசைத்து விட்டு கிளம்ப.
முத்து தந்தையைப் பார்த்தான். என்னடா பார்வ. இப்போ தான் ரெண்டு பரிச்சைல பாஸ் ஆகி இருக்கே. அது என்னவோ வாய்ல கூட வரல. இந்த முறை ஒழுங்கா எப்படியாவது மீதிய முடிசிருலே. இன்னும் எத்தன பரிச்சைலே இருக்கு.
பிரிலிமினரினு ஒன்னும், மெயின் எக்சாம்னு ஒன்னும் முடிசிட்டேன். அடுத்து இன்டர்வியூ தான் இருக்குப்பா.
“எப்படியாவது படிச்சு பாஸ் ஆகுற வேலைய பாருலே. ஊருல நாம தலைநிமிர்ந்து நிக்கனும்லே. நாலு பேருக்கு நம்மால முடிஞ்ச உதவிய பன்னனும்லே. என் மவன் இந்த ஜில்லாவுக்கே கலெக்டர்னு ஊரு மெச்ச மார்தட்டி பெருமையா சொல்லிக்கனும்லே முத்து” என்றார்.
“சரிங்க அப்பா. கண்டிப்பா நீங்க ஆசை படுறது நடக்கும்பா. நடத்திக் காட்டுவேன்” என முத்து புத்தகத்தில் கண்களை மேய விட. மணிவண்ணன் அங்கேயே அமர்ந்தார். தன மகனின் தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார். நல்லா படிடா ராசா. அதில் அவரது பாசத்தினை முத்துவால் உணர முடிந்தது.
“மலர் முத்துவை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, ‘ஹிக்கும்’ இதுல பாஸ் ஆனா மட்டும் போதுமா? வாழ்க்கை பாடத்துல எப்போதும் முட்டை தானே” என நினைத்துக் கொண்டு அங்கிருந்து வீட்டிற்க்கு கிளம்பினாள்.
“ஆனந்த் பணியில் சேர்ந்த முதல் நாள் அங்கு அருகில் இருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி விட்டு மகிழ்ச்சியோடு தனது இருக்கையில் அமர்ந்து பணிகளை தொடங்கினான். ஆனால் முதல்நாள் பணியை தொடங்கினாலும் பெரிதாக அவனுக்கு அங்கு ஒன்றும் வேலை இருப்பதாக தோன்றவில்லை. இது என்னடா ஒரு மனுச மக்கள் கூட இந்த பக்கம் வர மாட்டேங்குறாங்க. யாருமே பணம் போட மாட்டாங்க. எடுக்க மாட்டாங்களா? பெருசா ஒன்னும் வராது போல இருக்கு. இதுக்கு ஒரு வேலை. இது ஒரு ஆபீஸ் வேற” என்று சலித்துக் கொண்டான்.
“ஒருவேளை கிராமம்னா இப்படித்தான் வேலை பெருசா இருக்காதோ என்றும் நினைத்தான். மேலோட்டமான சில தினசரி வேலைகளை மட்டும் முடித்துக் கொண்டான். மணி இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனாலும் யாரும் தபால் நிலையம் பக்கமே வரவில்லை. இந்த ஊர் மக்களுக்கு அஞ்சலகம்னா என்னன்னு முதல்ல புரிய வைக்கணும் போல இருக்கு. இதுக்கு ஊர் தலைவர் கிட்ட சொல்லி ஒரு மீட்டிங் வைக்கணும் போல. ஒரு வேளை இன்னைக்கு தான் யாரும் வரலையா?. இல்ல எப்பவுமே வரமாட்டார்களா?” என்று தெரியலையே வேற. பக்கத்து வீட்டில கேட்டு பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு ஆனந்த் மணியை பார்த்தான். மணி இரண்டு தொட்டிருந்தது.
“காலையில் சேமியாவை மட்டும் போட்டு காலை உணவாக செய்துவிட்டு சாப்பிட்டு மீதி வைத்து விட்டு வந்திருந்தான். இப்போ மதியம் என்ன பண்றது. கடை எங்க இருக்குன்னு கேட்டு அரிசி, பருப்பு வாங்கி கொஞ்சம் சாதம் வைக்கலாம்” என்று நினைத்துக்கொண்டு அஞ்சலகத்தை பூட்டிக்கொண்டு அருகில் கடை இருக்கும் இடத்தை விசாரித்துக் கொண்டு மளிகை கடை இருக்கும் இடத்தை நோக்கி சென்றான். புதிய ஊர் என்பதால் அக்கம் பக்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டே ஆனந்த் நடந்துவர. எதிரில் சின்ன பசங்க பம்பரம் விளையாடிக் கொண்டிருக்க. அதை உற்சாகத்தோடு பார்த்துக் கொண்டு வந்தவன், செண்பகம் எதிரில் வந்ததை பார்க்காமல் இடித்துவிட.
“அவள் கையில் வாங்கி வந்திருந்த முட்டைகள் சில உடைய. கோபம் கொண்ட செண்பகம் மீதி இருந்த முட்டையையும் அவன் உள்ளங்கையில் வைத்து அழுத்தி உடைத்துவிட்டு இது மட்டும் எதுக்கு இதையும் வச்சுக்கோ” எனக் கோபத்துடன் முறைத்துக்கொண்டு நின்றாள்.
தொடரும்….