Advertisement

பகுதி – 11

தன் தேவதையின் வரவிற்காக காத்திருந்தான் கண்ணன்.

எழில் மெல்ல அறையின் கதவைத் திறந்து புன்னகை கலந்த வெட்கத்துடன் உள்ளே நுழைந்து கதைவைத் தாளிட்டாள்.  தன் அழகிய விழிகளால் கண்ணனை பார்த்து முகம் சிவந்தாள்.

‘எழில்’ என கண்ணனின் குரல் ஓசை மெல்லியதாக கேட்க.

அவனது விழிகளை மெல்ல ஏறெடுத்து பார்த்தாள்.

கண்ணனோ அவளை தனக்குள் முழுமையாக உள்வாங்கி கொண்டான். அந்த அழகான ரோஜாப்பூ நிறப்புடவையில் தங்கநிற பார்டர் அவளுக்கு பொருத்தமாக இருந்தது. அவள் புடவைக்கு ஏற்ப காதணிகள், சங்கு கழுத்தில் முத்துமாலை, கைகளில் வளையல்கள், தலைமுடியை வகிடெடுத்து ஓரத்தில் பின் குத்தி அழகாக பின்னி,  தலைநிறைய மல்லிகை சரங்களை வைத்து அழகு தேவதையாய் தெரிந்தாள்.

வெட்கம் கலந்த எதிர்பார்ப்புடன் கண்ணனை  நெருங்கினாள். வார்த்தைகள் அங்கு ஊமையானது.  அவன் நெஞ்சத்தில் தஞ்சம் அடைந்தாள். இனிய இல்லறம் இனிதாக தொடங்கியது.

“இங்கு மலரோ ஒவ்வொரு நொடியும் முத்துவிடம் இருந்த குறுஞ்செய்தி வரும்” என காத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நிமிடமும் யுகமாய் கழிந்தது.  ஆனால் நிமிடங்கள்தான் கரைந்து கொண்டிருந்ததே தவிர முத்துவிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. ஒரு மணிக்கு பிறகாவது ஏதேனும் குறுஞ்செய்தி வரும் என்று காத்திருந்தவள் மணி மூன்று ஆகியும் முத்துவிடம் இருந்து எந்த செய்தியும் வரவில்லை.  கண்களிரண்டும் சிவக்க கண்ணீரோடு தலையணையை தனக்கு ஆறுதலாக அணைத்தபடி விழிகளை மூடிக் கொண்டாள்.  உறக்கம் மட்டும் வரவில்லை. அலைகள் கடந்த பின்பும் நிலத்தில் ஈரம் இருப்பதைப்போல நேரம் கடந்த பின்னும் ஒரு குறுஞ்செய்தியாவது வராதா என்ற நம்பிக்கையுடனும் காதலோடும் காத்திருந்தாள்.  மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்தது.

உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் மாமா.  ஒவ்வொரு நொடியும் உங்க நெனப்போட தான் இருக்கேன். உங்களுக்கு என்னோட நெனப்பு கொஞ்சம் கூட வர்லயா மாமா. ஒரு மணிக்கு பிறகு பேசலாம்னு தான சொன்னிங்க.  ஒருவேளை தூக்கமா? இல்ல பேச விருப்பம் இல்லையா?  கொஞ்சம் கொஞ்சமா விலகிப்போக  தான் இப்படி சொன்னிங்களா?  என பல எண்ணங்கள் அவள் மனதை வாட்டியது. காதல்ங்கறது உயிரோடு கலந்த ஒன்னு மாமா.  உங்களுக்காக தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன். திடீர்னு இப்படி தனியா விட்டுட்டு போயிட்டா என்ன நினைக்கிறது.  இதுதான் காதல் சாபமா?

என் கண்கள் உன்னைக்

காணாத போது தான்

காதலின் ஆழத்தை

என் மனம் உணர்கிறது..

என்று தவிப்போடு உறக்கமின்றி விழிகளோடு போராடிக் கொண்டிருந்தாள் மலர்.

“இங்கு முத்து படித்து முடித்தவன் புத்தகத்தை தன் மார்பின் மீது சுமந்து கொண்டு அப்படியே உறங்கி விட்டிருந்தான்.  திடீரென சேவல் கூவும் சத்தத்தைக் கேட்டு விழித்துப் பார்த்தவன்  பொழுது விடிந்திருந்தது. அப்போதுதான் மலரின் நினைவு வந்தவனாய் தனது செல்போனை எடுத்து இனிய காலை வணக்கம்”  என ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினான்.

“இரவு முழுக்க உறங்காமல் கண்கள் சிவக்க காத்திருந்த மலருக்கு அந்த குறுஞ்செய்தி என்னவோ மனதிற்கு ஒருபுறம் இனிமையாக இருந்தாலும் இனி ஒவ்வொரு நாளும் இப்படித்தானோ” என உள்ளுக்குள் வருத்தத்தையும் கொடுத்தது. “பதில் அனுப்புவதா? வேண்டாமா?” என்று கூட மனம் தடுமாறத் தொடங்கியது. ஆனாலும், ‘காலை வணக்கம்’ என்ற ஒரு செய்தியை கடமைக்கு அனுப்பினாள்.

“அவளின் கோபத்தை அந்த செய்தியின் மூலமாக முத்துவால் உணரமுடிந்தது.  நான் தான் நேத்து உங்கிட்ட சொன்னேனே மலர்.  படிக்கப் போறேன்னு.  நேரம் கிடைக்கும் போது நான் உன் கிட்ட பேசுறேன்னு.  முதல் நாளே இப்படி கோபப்பட்டா எப்படி என்னோட லட்சியம் என்னவாகும்”  என கேட்க.

“லட்சியம் என்ற வார்த்தை அவளை சிந்திக்க வைத்தது.  நீங்க தாராளமா படிங்க மாமா.  நான் வேண்டாம்னு சொல்லலயே.  ஆனா நீங்க தானே சொன்னீங்க.  இரவு ஒரு மணிக்கு மேல பேசலாம்னு.  முடியாதுன்னு ஒரு வார்த்தை அனுப்பி இருந்தா கூட நான் நிம்மதியாக தூங்கி இருப்பேன்ல. எந்த பதிலும் சொல்லாம விட்டா நான் என்ன நினைக்கிறது மாமா”  என்று மலர்  பதில் அனுப்ப.

இதற்குள் முத்துவின் தந்தை தோட்டத்து வீட்டிற்கு வந்து முத்துவை  வாழைத்தார் வெட்டுவதற்காக அவனை அழைத்து சென்றார்.  முத்துவோ, மலரின் கேள்விக்கு பதில் அனுப்ப முடியாதவனாய் தந்தையின் சொல்லுக்கு மறுப்பு கூற முடியாதவனாய் தந்தையோடு உடனே கிளம்பினான்.

“நீண்டநேரம் முத்துவின் பதிலுக்காக காத்திருந்த மலர் மனதளவில் உடைந்து போனாள்.  முத்துவின் சூழ்நிலை அவனை வாட்டியது.  மலரின் மனநிலையோ அவளது எண்ணத்தை தடம் மாற்றிய புரட்டிப்போட்டது. இனி இப்படி தான் நம்ம வாழ்க்கைய ஒவ்வொரு நாளும் போராட வேண்டி இருக்குமோ” என்ற சிறிய அச்சம் அவளை ஆட்கொண்டது. தனது தாய் சரசு கூப்பிடுவது கூட கேட்காமல் ஒரு ஜடமாக அமர்ந்திருக்க.

“அருகில் வந்த சரஸ்வதி   என்னம்மா உடம்புக்கு ஏதும் முடியலையா?” எனக் கேட்க.

“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.  நல்லாத்தான் இருக்கேன் என்ற”  மலரின் குரலில் ஒரு தொய்வு இருக்க.

“இல்லையே முகமே சரியில்ல.  ராவெல்லாம் தூங்கல போல.  இந்த செல்லுடப்பாவ தூக்கி வீசினா தான் நீ சரிப்பட்டு வருவேன்னு நினைக்கிறேன்”  என சரஸ்வதி மலரைத் திட்டிக்  கொண்டு போக.

“ராசு மகளிடம் வந்தவர் குடும்பம்னா சின்ன சின்ன பிரச்சனைகள் வரும் தான்.  அதை எல்லாம் கடந்து தான் வரணும்.. எல்லாமே பழகிக்கணும். என்ன நடந்ததுனு எனக்கு தெரியாதுலே.  ஆனாலும் பொறுமை ரொம்ப முக்கியம்மா.  வாழ்க்கையில எதுவா இருந்தாலும் என்ன நடந்தாலும் ரெண்டு பேரும் மனசு விட்டு பேசினா சரியா போகும் பார்த்துக்கோம்மா”  என்று கூறிவிட்டு வெளியில் போனார்.

“மலர் தந்தை சொன்னதை மனதில் கொண்டு வீட்டுக்கு போய் முத்துவ பார்த்து நேர்லயே பேசிடுவோம் என்ற முடிவிற்கு வந்து எழுந்து சில வேலைகளை முடித்துக்கொண்டு குளித்துவிட்டு அம்மா அக்காவை பாக்கணும் போல இருக்கு நான் போய் பார்த்துட்டு வரவா” என கேட்டாள்.

“ஏன்டி!  நெசமாத்தான் அக்கா மேல நினைப்பு வந்துடுச்சா.  இதைய நான் நம்பனுமா” எனக் கேட்க.

“உண்மையா தாம்மா” என மலர் முறைக்க.

“சரி..  சரி..  போ.  போயிட்டு வா”,  என்று சரசு கூற.

மலர்  மகிழ்ச்சியாக கிளம்பினாள்.

“ஏய்!  கொஞ்சம் சாப்பிட்டு போடி”  என சரசு கூப்பிட.

“அதெல்லாம் அக்கா வீட்டில சாப்பிடுறேன்ம்மா” என்று கூறிவிட்டு முத்துவை பார்த்து பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பினாள். கிழக்கு காட்டு வழியாகப் போனால் பக்கம் என்று மனதில் ஆயிரம் ஆசைகளோடு நடை போட்டாள்.

“ஆனந்த் ஊருக்கு புதியவன் என்பதால் காலையிலேயே ஊரை சுற்றிப் பார்க்கலாம்”, என கிளம்பி வந்து கொண்டிருந்தான். “ பத்து மணிக்கு தான் வேலை.  வந்து ஏதாவது லைட்டா சமைக்கலாம்” என்று  நினைத்துக் கொண்டு மலர் வந்த வழியாகவே அவனும் வர.  தற்செயலாக மலரை பார்த்தவன், “எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் போல இருக்கு. திரும்பியும் இவங்கள பாக்குறேனே” என்று மனதிற்குள் ஏதோ ஒன்று இறக்கை கட்டி பறக்க தொடங்கியது . “முதல் நாள் பார்த்த போதே மனசுக்குள்ள ஏதோ ஒன்னு  தோணுச்சு. இப்ப திரும்ப பாக்குறேன்னா கண்டிப்பா ஏதோ ஒன்னு இருக்கு என்று தனக்குள் நினைத்துக் கொண்டவன்,  ஹலோ! மலர்” என்று கூப்பிட்டான்.

“ஹலோ! என்னங்க.  ஏதோ நாப்பது  வருஷம் பார்த்து பழகின மாதிரி பேர சொல்லி கூப்பிடுறிங்க.  ரொம்பத்தான் கொழுப்பு” என்று முறைக்க.

“கூப்பிட தானங்க பேரு.  இதுல என்னங்க இருக்கு.  எப்ப பார்த்தாலும் சண்ட கோழி மாதிரியே சண்டை போடணும்னு முடிவோட இருப்பீங்களா?” என்று ஆனந்த் கேட்க.

“ஆமா. உங்க கிட்ட சண்டை போடணும்னு எனக்கு வேண்டுதல் பாருங்க.  அதான் வழியை விடுங்க” என்றாள்.

“நான் எங்க வழிமறிச்ச.  நீங்க வேணா வாய்க்கால்ல கீழே இறங்கி போங்களேன்” என்று  ஆனந்த் கூற.

அவளே  கீழே இறங்க.

“ஏங்க போன்னு சொன்னா உடனே போய்டுவீங்களா?  அவ்வளவுதானா?   எதுவும் பேச மாட்டீங்களா?” என்று  ஆனந்த் கேட்க.

“ஏற்கனவே கோபத்தில் இருந்த மலர், உங்க வேலை என்னவோ அதை பாத்துட்டு போங்க.  நான் ஏற்கனவே கோவத்துல இருக்கேன்”,  என்று கூற.

“அந்த கோபத்துக்கு நான் ஏன் மருந்தா இருக்கக்கூடாது” என்று சட்டென வார்த்தையை விட்டான் ஆனந்த்.

“என்ன வார்த்தை தடுமாறுது.  வாய் ரொம்ப நீளமா போகுது.  கொஞ்சம் குறைச்சிக்கிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன்”  என்று  மலர் கூற.

“ஆனந்த், ஆமா ரொம்ப அவசரப்பட்டு இப்படி வார்த்தைய விட்டுட்டேனே ஏன் அப்படி சொன்னேன்” என்று அவனுக்குள் கேள்வி கேட்டுக் கொண்டவன் அது என்னமோ தெரியலைங்க.  உங்கள பாத்த உடனே தோணுச்சு கேட்டுட்டேன். எனக்கு எதையும் மூடி மறச்சிலாம் பேசத் தெரியாதுங்க. மனசல பட்டத பட்டுனு சொல்லிடுவேங்க என்றான்.

“உங்கள பார்த்தா கூட தான் இப்போ எனக்கு அரையனும் போல தோணுது. அரையட்டுமா?” என்றாள்.

இதைக்கேட்ட ஆனந்திற்கு கோபம் தலை தூக்கியது.

தொடரும்….

Advertisement